
குறள் – ௱௮௰௧ . (அச்சில் உள்ளவாறு.)
“அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது.”
அல்ல = முறையற்ற.
புறங்கூறல் = இகழ்ந்து கூறல்.
“ஒருவன் அறங்கூறான் அல்ல செயினும் = ஒருவன் அறனென்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச்செய்யுமாயினும்; புறங்கூறான் என்றல் இனிது = பிறனை புறங்கூறானென்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று” என்றவாறு பரிமேலழகனாரின் உரை விளக்குகின்றது. இவ்வுரையில் ‘ஒருவன் அறங்கூறான்’ எனும்போதே முற்றுப்பொருள் கிட்டுகிறது. அவ்வொருவனே அல்ல செய்யினும் என்றவாறு மீண்டும் எழுவாயுடன் சென்று பொருந்தி பொருள் கொள்ளவேண்டும். இருசெயல்களையும் செய்பவன் ஒருவனே. எனவே ‘அறங்கூறானொருவன்’ எனும் நெடுந்தொடரெழுவாய் மேலே சொன்ன பொருள் கொள்ளை எளிதாக்குகிறது.
“அறங்கூறானொருவன் அல்லசெயினும் புறங்கூறானென்றல் இனிது“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அல்ல’ என்பது ‘அல்லன’ என்பதைக்குறிக்கும் பெயர்ச்சொல். இப்பெயர்ச்சொல் செயினும் எனும் வினையெச்சத்துடன் புணராது. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘செயினும்’ என்பது ‘செயின்’ எனும் வினையெச்சத்துடன், ‘உம்’ எனும் இழிவுச்சிறப்பும்மையும் பெற்ற சொல். உம்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்ற லினிது.”
குறள் – ௱௮௰௨. (அச்சில் உள்ளவாறு.)
“அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை.”
அறனழீஇ = அறத்தை அழித்து.
அல்லவை = முறையற்றவை.
புறனழீஇ = புறங்கூறி.
நகை = நகைத்தல்.
“புறனழீஇப்பொய்த்து நகை அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“புறங்கூறி பொய்யுரைத்து நகைத்தல், அறத்தையழித்து முறையற்றனசெய்தலில் தீமையானதே” என்பதாம்.
‘அழீஇ’ எனும் வினையெச்சம் ‘அல்லவை’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘செய்ததின்’ என்பதில் ‘இன்’ எனும் ஏழாம்வேற்றுமைவுருபு பெயரெச்சத்துடன் புணர்ந்து தன்பணியை முடித்தது. இதே வேற்றுமைவுருபு மீளவும் ‘தீது’ எனும் பெயருடன் புணராது. ஒரே வேற்றுமைவுருபு வினைக்கு பின்னொட்டாகவும் பெயர்க்கு முன்னொட்டாகவும் வராது.
செம்மைவடிவம் —
“அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.”
குறள் – ௱௮௰௩. (அச்சில் உள்ளவாறு.)
“புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறங்கூறு மாக்கந் தரும்.”
‘பொய்த்து’ எனும் வினையெச்சம் ‘உயிர்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘வாழ்தலின்’ என்பதில் ‘இன்’ எனும் ஏழாம்வேற்றுமைவுருபு தொழிற்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்தது. இதே வேற்றுமைவுருபு மீளவும் ‘சாதல்’ எனும் தொழிற்பெயருடன் புணராது. ஒரே வேற்றுமைவுருபு இரு தொழிற்பெயர்க்கு பின்னொட்டாகவும் முன்னொட்டாகவும் வராது.
‘சாதலறம்‘ என்றவொரு அறம் இல்லை. சாதல் (சாவது) அறத்தின் பயனைத்தரும் என்பது கருத்து. எனவே சாதல் என்னுமிடத்தில் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“புறங்கூறி பொய்த்து*உயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறு மாக்கந் தரும்.”
*குற்றியலுகரமாம் துகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகுபெறாது.
குறள் – ௱௮௰௪. (அச்சில் உள்ளவாறு.)
“கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.”
கண்ணின்று = கண்முன் நின்று.
கண்ணற = கண்ணோட்டமின்றி.
முன்னின்று → ( முன்+இன்று) = எதிரே இல்லாதபோது.
பின்னோக்கா = பின்விளைவு கருதா.
“கண்ணின்று கண்ணறச்சொல்லினும், முன்னின்று பின்னோக்காச்சொல் சொல்லற்க”
என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.
குறள் – ௱௮௰௫. (அச்சில் உள்ளவாறு.)
“அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.”
அன்மை = அல்லாமை.
புன்மை = இழிநிலை.
‘சொல்லும்’ என்பது ‘செய்யும்’ எனும் எதிர்காலவாய்பாட்டுப்பெயரெச்சம். உடன்பாட்டுப்பெயரெச்சத்தில் காலங்காட்டுமிடைநிலை நீங்காது; நீங்கின் ஏவல்வினையாக மயங்கும்.
‘புன்மையால்’ என்பதில் ‘ஆல்’ எனும் மூன்றாம்வேற்றுமைவுருபு வினைமுற்றுடன் புணருமென்றாலும் புணராது நின்றால் பொருள்தெளிவு கிட்டுவதைக்காணீர்.
“அறத்தினைச்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறத்தினைச்சொல்லும் புன்மையால் காணப்படும்” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“அறஞ்சொல்லும் நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்.”
குறள் -௱௮௰௬. (அச்சில் உள்ளவாறு.)
“பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்.”
பழி = குற்றம்.
உள்ளும் = ஆகும்.
திறன் = தன்மை.
“பிறன்மீது பழிகூறுவான் (இவ்வாறே) தன்பழியும் ஆகுந்தன்மையைத்தெரிந்து கூறவேண்டும்” என்பதாம்.
‘தன்’ என்பது மறுபெயர்ச்சொல். மறுபெயர்ச்சொல் முன்பின் புணராது தனித்து நிற்கும். ‘கூறுவான்றன்’ என்பதில் ‘தன்’ எனும் மறுபெயர்ச்சொல் இடைச்சொல்லாகிவிடும்.
‘உள்ளும்’ என்பது பெயரெச்சம். இதன் முடிக்குஞ்சொல் ‘திறன்’ என்பது. ‘பழி’ என்பது இயல்புப்பெயர்ச்சொல். இயல்புப்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்.”
குறள் – ௱௮௰௭. (அச்சில் உள்ளவாறு.)
“பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாட றேற்றா தவர்.“
பக (பகுத்தல் → பிரித்தல்) = பிரிய
கேளிர் = உறவினர்.
நக = மகிழ.
நட்பாடல் = நட்பாகுதல்.
தேற்றாதவர் = அறியாதவர்.
‘சொல்லி’ என்பது வினையெச்சம். இவ்வினையெச்சம் ‘கேளிர்’ எனும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘கேளிர்ப்பிரிப்பர்’ என்பது ‘கேளிரைப்பிரிப்பர்’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகை. ஆகும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது. இங்கு வல்லினம் ஏன் மிகுந்தது. ‘கேளிர்ப்பிரிப்பர்’ என்பதை ‘கேளிரையும் பிரிப்பர்’ என பரிமேலழகனார் விரிக்கிறார். சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது என்கின்றார். கேளிரையும் பிரிப்பர் என்ற கருத்தான் அயலாரோடும் என்பது வருவித்து உரைக்கப்பட்டது. புறங்கூறுவார்க்கு யாவரும் பகையாவார் என்பது கருத்தென முடிக்கின்றார்.
“நகச்சொல்லி நட்பாடலைத்தேற்றாதவர் பகச்சொல்லி கேளிர்ப்பிரிப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“பகச்சொல்லி கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாட றேற்றா தவர்.“
குறள் – ௱௮௭௮. (அச்சில் உள்ளவாறு.)
“துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
ரென்னைகொ லேதிலார் மாட்டு.”
துன்னியார் = நெருங்கியவர் (துன்னு = நெருங்கு).
ஏதிலார் = அயலார்.
‘குற்றமும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘தூற்றும்’ என்பது செய்யும் எனும் வாய்பாட்டுப்பெயரெச்சம். இப்பெயரெச்சத்தின் விகுதி உம்மின் ஈறு கெடுமானால் ‘தூற்று’ எனும் ஏவல்வினையாக மயங்கும்.
‘என்னை’ எனும் வினாச்சொல் முன்பின் புணராது தனித்து நிற்கும்.
‘கொல்’ எனும் அசைச்சொல் ‘என்னை’ எனும் வினாவுக்குரியது. அவ்வசைச்சொல் ஏதிலார்க்குரியதன்று.
செம்மைவடிவம் —
“துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.”
குறள் – ௱௮௭௯. (அச்சில் உள்ளவாறு.)
“அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொல் லுரைப்பான் பொறை.”
ஆற்று = பொறு. (ஆற்றுதல் = பொறுத்தல்).
பொறை = சுமை.
கொல்= அசைச்சொல்.
புன்சொல் = பழிச்சொல்.
“ஒருவன் இல்லாதபொழுது அவன்மீது பழிச்சொல்லினை உரைப்பானது சுமையை அறத்தினைக்கருதி வையகம் பொறுக்கின்றதுபோலும்” என்பதாம்.
நான்காஞ்சீரில்வரும் ‘நோக்கி’ என்பது வினையெச்சம். இவ்வினையெச்சம் ‘புன்சொல்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
“புறனோக்கி
புன்சொல்லுரைப்பான்பொறை வையம் அறனோக்கியாற்றுங்கொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கி
புன்சொல் லுரைப்பான் பொறை.”
குறள் – ௱௯௰. (அச்சில் உள்ளவாறு.)
“ஏதிலார் குற்றம்போற் றங்குற்றம் காண்கிற்பிற்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு.”
ஏதிலார்= அயலவர்.
மன்னும் = நிலைக்கும்.
‘போல்’ எனும் உவமவுருபு எதனுடனும் புணராது.
‘தன்’ எனும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.
‘காண்கிற்பின்’ என்பது செயின் எனும் வாய்பாட்டுவினையெச்சம். ‘பின்’ என்பது காலத்தைச்சுட்டிநிற்கும் காலயிடப்பெயர்ச்சொல். வினையெச்சம் பெயருடன் புணராது.
“அயலாரது குற்றத்தைப்போல் தமது குற்றத்தையும் காணுவாராயின் அதன்பின் நிலைக்கும் உயிர்க்கு தீமையும் உண்டோ” என்பதாம்.
“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம்காண்கின் மன்னும் உயிர்க்கு பின் தீதுண்டோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கின்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.”
நன்றி.
எழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.



