இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு - ௫௨. தெரிந்து வினையாடல்.

குறள் – ௫௱௰௧ (அச்சில் உள்ளவாறு).

“நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த
தன்மையா னாளப் படும்.”

நாடி = ஆராய்ந்து.
நலம் = நன்மை.
தன்மையான் = இயல்பினான்.
ஆளப்படும் = வினை ஒப்படைக்கப்படும்.

“ஒருவரது நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து அவரது நலமிகுதியால் அவ்வினை ஒப்படைக்கப்படும்” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது. எனவே ‘தீமையும்’ என மவ்வீறு பெற்றுவரும்.

‘தன்மையான்’ என்பதன்கண் வந்த ‘ஆன்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘தன்மை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“நன்மையுந் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.”

 

குறள் – ௫௱௰௨ (அச்சில் உள்ளவாறு).

“வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
யாராய்வான் செய்க வினை.”

வாரி = வருவாய்.
உற்றவை = நேரும் இடையூறுகள்.
வளம்படுத்து = வளம்படுத்த. படுத்து என்பது படுத்த என்னும் பொருளது.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் வினை செய்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“வருவாயைப்பெருக்கி வளம்படுத்த அதற்கு நேரும் இடையூறுகளை ஆராய்வான் வினை செய்க” என்பதாம்.

‘உற்றவைகளை’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைவிரி ‘ஆராய்வான்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“வாரி பெருக்கி வளம்படுத்து* உற்றவை
ஆராய்வான் செய்க வினை.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௰௩ (அச்சில் உள்ளவாறு).

“அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு
நன்குடையான் கட்டே தெளிவு.”

தேற்றம் = உறுதி.
அவாயின்மை = பொருள்மீது பற்றின்மை.
கட்டே = கண்ணே (ஏழாம்வேற்றுமைவுருபு).
தெளிவு = ஐயமின்மை.

“அன்பு, அறிவு, உறுதி, பொருள்மீது பற்றின்மை ஆகிய இந்நான்கும் நலத்துடன் உடையான்கண்ணே வினைத்தெளிவு கொள்க” என்பதாம்.

வெவ்வேறு பண்புகளை அடுத்தடுத்து சொல்லும்போது பொருள்மயக்கமின்றி புணர்த்துக.

‘அவாவின்மை’ என்பதினும் ‘அவாயின்மை‌’ என யகரவுடம்படுமெய்பெறுதல் ஒலியொப்புமையுள்ளது. ‘உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்’ என்பது தொல்காப்பியம்.

‘இந்நான்கும்’ என்னும் முற்றும்மையின் மவ்வீறு நீங்காது. முற்றும்மை எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அன்பு*அறிவு தேற்றம் அவாயின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.”

*குற்றியலுகரமாகிய புகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௰௪ (அச்சில் உள்ளவாறு).

“எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்.”

எனைவகையால்= எவ்வழியால்.
தேறியக்கண்ணும் = தெளிந்தவிடத்தும்.
வேறாகும் = மாறுபடும்.

“எவ்வழியால் ஆராய்ந்து தெளிந்தகண்ணும் வினைபுரியும்வகையால் மாறுபடும் மாந்தர் பலர்” என்பதாம். எவரும் தத்தம் இயில்பிலேயே (functional style) வினைபுரிவர்.

‘எனைவகையால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘வகை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘வேறாகும்’ என்பதன்கண் வந்த ‘ஆகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.”

 

குறள் – ௫௱௰௫ (அச்சில் உள்ளவாறு).

“அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று.”

ஆற்றி = செய்து.
செய்கிற்பாற்கு = செய்பவர்க்கு.
அல்லால் = தவிர.
ஏவற்பாற்று = ஒப்படைப்பது.
அன்று = ஆகாது.

“அறிந்தாற்றி செய்கிற்பாற்கு அல்லால் சிறந்தானென்று வினைதான் ஏவற்பாற்றன்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“செய்யும் வினையை அறிந்து நேரும் இடையூறுகளைப்பொறுத்து ‌வினைமுடிக்கவல்லானை அல்லாமல் சிறந்தவன் என்பதற்காக ஏவுவது தக்கதன்று” என்பதாம்.

‘ஆற்றி’ என்னும் வினையெச்சம் ‘செய்கிற்பாற்கு’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘சிறந்தானென்று’ என்பதன்கண் வந்த ‘என்று’ என்னும் இடைச்சொல் ‘சிறந்தான்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“அறிந்தாற்றி செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென்று* ஏவற்பாற் றன்று.”

*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௰௬ (அச்சில் உள்ளவாறு).

“செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.”

நாடி = ஆராய்ந்து.
எய்த = பொருந்த.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“வினைசெய்வானை ஆராய்ந்து, வினையின் இயல்பினை ஆராய்ந்து காலப்பொருந்த உணர்ந்து செய்க” என்பதாம்.

‘நாடி’ என்னும் வினையெச்சம் ‘காலம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘காலத்தோடு’ என்பதன்கண் வந்த ‘ஓடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘காலம்’ என்னும் பெயரோடு அத்துச்சாரியைபெற்று புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“செய்வானை நாடி வினைநாடி காலத்தோடு*
எய்த வுணர்ந்து செயல்.”

*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௰௭ (அச்சில் உள்ளவாறு).

“இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல்.”
விடல் = ஒப்படைத்தல்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“இவ்வினையை இக்கருவியால் இவன் முடிப்பனென்று ஆராய்ந்து அவ்வினையை அவனிடம் ஒப்படைக்க” என்பதாம்.

‘இதனை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபு ‘இதன்’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘ஆய்ந்து’ என்னும் வினையெச்சம் ‘அதன்’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘அதனை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபு ‘அவன்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“இதனை இதனான் இவன்முடிக்கு மென்றாய்ந்து*
அதனை அவன்கண் விடல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௰௮ (அச்சில் உள்ளவாறு).

“வினைக்குரிமை நாடிய பின்றை யவனை
யதற்குரிய னாகச் செயல்.”

வினைக்குரிமை = வினைபுரிவான்.
நாடிய = ஆராய்ந்த.
பின்றை = பின்பு.
உரியனாக = பொறுப்பாளனாக.
செயல் = ஆக்குக.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“வினைபுரிவானை ஆராய்ந்து தேர்ந்தபின்பு அவனை அவ்வினைக்கு பொறுப்பாளனாக ஆக்குக” என்பதாம்.

‘பின்பு’ என்னும் காலயிடப்பெயர் ‘நாடிய’ என்னும் வினையெச்சத்தை விளக்கியதால் ‘அவனை’ என்னும் பெயருடன் புணராது.

‘அவனை’ என்பதன்கண் வந்த இரண்டாம்வேற்றுமைவுருபு ‘அதற்கு’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘உரியனாக’ என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாக செயல்.”

 

குறள் – ௫௱௰௯ (அச்சில் உள்ளவாறு).

“வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.”

வினைக்கண் = வினை நிகழும்போது.
கேண்மை = உறவு, கண்ணோட்டம்.
வேறாக = மாறாக.
திரு = சிறப்புகள்.

“வினைக்கண் வினையுடையான்கேண்மைவேறாக
நினைப்பானை திரு நீங்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“வினை நிகழும்போது அவ்வினைக்கு உரியனது உறவுகுறித்து மாறுபாடாக நினைப்பவனை சிறப்புகள் நீங்கும்” என்பதாம்.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

 

குறள் – ௫௱௨௰ (அச்சில் உள்ளவாறு).

“நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.”

நாடோறும்= நாள்தோறும்.
நாடுக = ஆராய்க.
கோடாமை = நெறியின்கண் நீங்காமை, நடுநிலைநீங்காமை.

“வினைசெய்வான்கோடாமை உலகு கோடாது. (வினைசெய்வான்கோடாமை) மன்னன் நாள்தோறும் நாடுக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘வினைசெய்வான்கோடாமை’ என்பது ஈரிடத்தும் சென்றுபொருந்தும்.

“வினைசெய்வானது நெறிநீங்காமையால் உலகு நெறியின்கண் நீங்காது. எனவே வினைசெய்வானது நெறிநீங்காமையை மன்னன் நாள்தோறும் ஆராய்க” என்பதாம்.

‘நாள்தோறும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.

‘கோடாது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.”

தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button