இலக்கணம்சொல்விளக்கம்தமிழ்

குறளெண் ௧,௨,௩௯௧ ஆகியவற்றிலுள்ள புணர்ச்சிகள்

“அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு.” 

கு. எண் – ௧.
இச்செய்யுளில் அமைந்துள்ள புணர்ச்சிகளைக்காண்போம்.
செய்யுளில் ஒருகருத்து முடியும்வரை அக்கருத்தினை வெளிப்படுத்தும் சொற்கள் விதிகளின்படி புணர்த்தப்படுவது பொதுவழக்கு. இக்குறளில் முதன்மூன்றுசீர்களில் ஒருகருத்தும், அடுத்துவரும் நாற்சீர்களில் வேறொருகருத்துமாக இருகருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.
முதலிருசீர்களுக்கிடையில் மகரம் நீங்கி ஒருபுணர்ச்சி நிகழ்ந்தது. இரண்டாம் மூன்றாம் சீர்களுக்கிடையில் வகரவுடம்படுமெய் வந்து இரண்டாம்புணர்ச்சி நிகழ்ந்தது. மூன்றாஞ்சீரில் எழுத்து+எல்லாம் என்ற இருசொற்களுக்கிடையில் உக்குறள் நீங்கி மூன்றாவதாக குற்றியலுகரப்புணர்ச்சி நிகழ்ந்தது.
ஆதிபகவன் எனும் முழுச்சொல் இருசீர்களாக நிற்கின்றது (4, 5ஆம் சீர்கள்). ஐந்தாஞ்சீரின் ஈற்றுனகரமெய்யும் (ன்), ஆறாஞ்சீரின் மகரமுதலும் (மு) புணர்வதற்கு விதியில்லை. ஆறாஞ்சீரின் ஈற்றேகாரமும் (ஏ), ஏழாஞ்சீரின் முதலுயிரும் (உ) யகரவுடம்படுமெய்பெற்று புணர்ந்தன. இரண்டாங்கருத்தினைச்சொல்லும் பின்நாற்சீர்களும் ஒரேயொரு புணர்ச்சியைப்பெற்றன.
ஒருகருத்து முடிந்து அடுத்தகருத்து தொடங்குமுன் ஒரு விட்டிசை நிகழ்ந்து கருத்துத்தெளிவை நல்கும். ஆனால் பதிப்பித்தோர் இரண்டாங்கருத்தினை முதற்கருத்துடன் புணர்த்தி ‘மாதி’ என்றாக்கிவிட்டனர். புணர்ச்சி நிகழ்ந்துவிட்டால் புணர்ச்சியின் உடனாயவிளைவாக தொடரொலிப்பும் நிகழுமன்றோ. அவ்வாறானால் இக்குறளை எவ்விடத்து விட்டிசைக்கவேண்டும். இரண்டாங்கருத்தின் இடையில் விட்டிசைத்தால் அக்கருத்து உடைபடும். அது நிகழக்கூடாதெனில் விட்டிசையின்றி ஏழ்சீர்களையும், அதாவது இருகருத்துகளையும், தொடர்ந்த ஒலிக்க வேண்டும். அவ்வாறு ஒலித்தால் ‘மாதிபகவன்’ என்றே ஒலிக்கநேரும். இது கேட்போர்க்கு ஆதிபகவன் எனும் பொருளை உணர்த்துமா.
செய்யுள் இசைக்கானது என்றால் இசையும் பொருளுணர்ச்சிக்கு உட்பட்டதே. பாட்டுக்குத்தான் மெட்டு.
இசையில் மெய்களும் நெட்டெழுத்துகளுமே நீண்டொலிக்கும். இக்குறளை இசையுடன்பாடுங்கால் மூன்றாஞ்சீரின் மகரம் நீண்டொலித்து ஒலியடங்க, நான்காஞ்சீரின் ஆகாரம் உயர்ந்தெழுந்தொலித்துத்தொடரும். இது நிகழ்கையில் கருத்துணர்ச்சி தானேநிகழும்; இசையும் கெடாது.
தமிழில் ஓரெழுத்தை அதனொலியில்தான் ஒலிக்கவேண்டும்; வேறொருயெழுத்தினொலியில் ஒலிக்கக்கூடாது. ‘மா’ என்ற எழுத்தின் மகரவொலியியை நீக்கி ஆகாரமாக ஒலிக்கமுடியாது. மறுதலையாக சொல்வதானால் மகரவொலி(ம்) எல்லாம் எனும் சொல்லுக்குரியது; ஆதிபகவன் எனும் சொல்லுக்குரியதன்று. இக்குறளில் இரண்டு எழுவாய்கள் உள. ஒன்று அகரம்; மற்றொன்று ஆதிபகவன். எல்லாம் எனும் பெயர்ப்பயனிலை அகரயெழுவாய்க்குரியது. உலகு எனும் பெயர்ப்பயனிலை ஆதிபகவற்குரியது. ஒரு எழுவாயின் பயனினிலையை உடைத்தால் அது முற்றுப்பொருளை இழந்துவிடும்; அவ்வெழுவாயும் பொருள்முடிவினை இழந்துவிடும். இவ்வாறிருக்க மாதி எனும் புணர்ச்சி எவ்வாறு பொருந்தும்.
மகரமும் (ம்), ஆகாரமும் (ஆ) புணர்வதற்கு முறையுள்ளன. மகரயீற்றுச்சொல்லும் ஆகாரமுதற்சொல்லும் பொருளால் ஒன்றையொன்று தழுவுவதாக இருந்தால்மட்டுமே அம்முறை அவ்விடத்து செயல்படும்; புணரும். செய்யுளோ உரைநடையோ
மொழியின் முதன்மையான, தலையாய நோக்கம் பொருளுணர்ச்சியே. எல்லாமுறைகளும் இசையுட்பட அதற்கு கட்டுபட்டனவே. நெறிகளும், நெறிவிலக்குகளும் பொருளுணர்ச்சிக்கானவையே. நெறிவிலக்குகள் நெறிகளை மறுப்பவையன்று; நெறிகளை வலிமைப்படுத்துவன.
குறளில் பொருளுணர்ச்சி – ௨.
குறளெண் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.
பரிமேலழகர் விளக்கம்.
“ ‘கற்பவை கசடு அறக் கற்க’ – ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க. அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. (‘கற்பவை’ என்றதனான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவனவன்றி, பிறபொருள் உணர்த்துவனவும் என்பது பெற்றாம்).”
இரண்டாம் மூன்றாஞ்சீர்களை புணர்த்துங்ககரமெய் விளைவிக்கும் மயக்கங்களைக்காண்போம்.
‘கற்க கசடறக் கற்பவை’ குறளில் அச்சிடப்பட்ட இப்பகுதி, கசடறக்கற்கவேண்டியவற்றை கற்க எனும் பொருளைத்தருகிறது.பரிமேலழகரது விளக்கத்தில் ‘கற்பவை கசடு அறக் கற்க’ என்கிறார். இங்கே கற்பவை என்பது பொதுவாக நின்று உறுதிப்பொருள் உணர்த்துவன, பிறபொருள் உணர்த்துவன எனும் இருபிரிவுகளை உள்ளடக்குவதாக உரையெழுதின்றார். இவ்வாறு கொண்டுகூட்டவேண்டுமானால் ‘கசடறக்கற்பவை’ எனப்புணர்த்தக்கூடாது. அப்போதுதான் கொண்டுகூட்டமுடியும்.
‘கசடறக்கற்பவை’ எனும் புணர்மொழியைப்பிரிக்கமுடியாது; பிரித்து கொண்டுகூட்டினால் ககரமெய் நீங்கிவிடும். செய்யுளில் சொற்கள் இடம்மாறிநின்று உணர்த்தும்பொருளும், இடம்மாறிநின்றசொற்களை கொண்டுகூட்டி உணரும் பொருளும் ஒன்றாகயிருக்கவேண்டும்.
கசடறக்கற்பவை என்றவொன்று இருக்குமானால், அது நீங்கலாக மற்றவற்றை கசடுடன் கற்கலாமா.
குறளில் இருகட்டளைகள் / செய்திகள் சொல்லப்படுகின்றன. எவ்வாறு கற்கவேண்டுமென்பது ஒன்று; கற்றபின் எவ்வாறு செயலாற்றவேண்டுமென்பது மற்றொன்று. கற்க, நிற்க எனும் இருவியங்கோள்வினைமுற்றுகள்உள்ளன. கற்க கசடற என்ற அளவிலேயே முற்றுப் பொருள் கிட்டிவிட்டது. கசடற கற்க என்பது ஒரு கட்டளை. ‘கற்பவை கற்றபின் அதற்குத்தக நிற்க’ என்பது இரண்டாவது கட்டளை.
ஒரு வினைமுற்று நிற்கும் இடத்தில் கருத்து முற்றுப்பெறுமென்பது தமிழிலக்ககணம். இது செய்யுளுக்கும் பொருந்தும். எவற்றைக்கற்கவேண்டுமென தெய்வப்புலவர் வரையறுக்கவில்லை. பொதுவாக கற்பதைக்கூறுகிறார். ‘செய்வன திருந்தச்செய்’ என்பதுபோன்றதே இதுவும். அல்லனவற்றை, தீயனவற்றைப்பிரித்துக்கூறாதவரை நன்மைகளையே கூறுவதாக கொள்ளுதல் மரபு. இவ்வெளியமரபைமறந்து உறுதிப்பொருள்கள், பிறபொருள்கள் என்றவொரு பாகுபாட்டை பரிமேலழகர் நுழைக்கின்றார். இது வேண்டாது; இதனை அடியொற்றி எழுதப்பட்டவுரைகளும் பொருத்தாதவை.
குறளில் புணர்ச்சி –.
குறளெண் - ௨.

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.”
இவ்வாறே தேவநேயப்பாவாணரின் ‘திருக்குறள் தமிழ்மரபுரை’ எனும் நூலில் அச்சிடப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சிட்டதால் பொருளுணர்ச்சி என்னவாகிறதெனக்காண்போம்.
ஒரு பெயர்ச்சொல் திரிபடையாமல் தனித்து நின்றால் அது தன்னைச்சுட்டுவதாக இருக்கும். ஒரு பெயர்ச்சொல் திரிபடையாமல் ஒரு வாக்கியத்தில் நின்றால் அது எழுவாயாக/ வினைமுதலாக/ பெயர்ப்பயனிலையாக நிற்கும். பெயர்ப்பயனிலையாகாத, திரிபடையாத பெயர்ச்சொல் ஒரு வாக்கியத்தில் நின்றால் அது எழுவாயாக/ வினைமுதலாக செயல்படும். திரிபடையாத பெயர்ச்சொலை முதல்வேற்றுமை என்போம். ஒரு பெயர்ச்சொல்லினீறு திரிபடைந்து தனது இயல்புப்பொருளிலிருந்து வேறுபடுவதையே திரிபுறுதல் என்கிறோம்‌.
அச்சிடப்பட்ட திருக்குறளை மீண்டும் படிக்கவும். வாலறிவன் என்றிருப்பதால் இது திரிபில்பெயர்ச்சொல்லாகும். திரிபில்பெயர்ச்சொல்லானதால் இக்குறளில் எழுவாயாகும். எழுவாயாகும் வாலறிவன் யாருடைய நற்றாளைத்தொழுவாரெனும் வினா எழும். இவ்வினாவுக்கு விடை கிட்டாது. வாலறிவனது நற்றாளைத்தொழவேண்டியவர் நாமென்பது நமக்கு எவ்வாறு சரியாக புரிந்தது. தமிழ் நமது தாய்மொழியானதால் நமக்கு புரிந்தது. தாய்மொழியில் சொல்லப்பட்டதாலும், வாலறிவன் யாரென்பது நமக்கு முன்னமே தெரிந்திருந்ததாலும் இலக்கணப்பிழை நமது புரிதலைக்கெடுக்கவில்லை. நமக்கு பொருள்புரிந்ததால் இலக்கணப்பிழை நீங்கிவிடவில்லையென நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.
‘ஒருவன்’ என்பதனை தோன்றாயெழுவாக வைத்து இக்குறளை தெய்வப்புலவர் யாத்துள்ளார். இக்குறளை நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை அவர்கள் எவ்வாறு அச்சிட்டுள்ளாரெனக்காண்போம்.
“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றாள் தொழாஅ ரெனின்.”
வாலறிவன்+ நற்றாள் → வாலறிவன்+ னற்றாள் → வாலறிவ+னற்றாள் → வாலறிவனற்றாள். இதன் பொருள் ‘வாலறிவனது நற்றாள்’ என்பது. இதனை ஆறாம்வேற்றுமைத்தொகை என்போம். இது பாவாணர் அறியாததன்று. நற்றாள் எனும் புணர்மொழி பின்வருமாறு உருவாகின்றது. நன்மை+தாள் → நன்+தாள் (மை விகுதி நீங்கியது) → நற்+தாள் ( வல்லினம் வந்ததால் னகரம் றகரமாக திரிந்தது) → நற்+றாள் (னகரம் றகரமாக திரிய, தகரம் றகரமாக திரிந்தது) → நற்றாள். இதேபோல் வாலறிவன்+நற்றாள் → வாலறிவனற்றாள் என்றாகும். செய்யுளில் ஒருகருத்துமுடியும்வரை அதனைவெளிப்படுத்துஞ்சொற்கள் விதிகளுக்குட்பட்டு புணர்ந்தே நிற்கும். ‘வாலறிவனது நற்றாள் தொழாரெனின் கற்றதலாய பயனென்’ எனும் ஒருகருத்துமட்டுமே இக்குறளில் கூறப்பட்டது. ‘கொல்’ என்பது அசைச்சொல். ‘ஒருவன்’ என்பது தோன்றாயெழுவாய். இவ்விலக்கணம் பாவாணர் அறியாதன்று. அவ்வாறானால் இம்மயக்கத்தை பாவாணர் ஏன் செய்தார். அவர்காலத்து உரைநடைவழக்கும் நம்மீது கொண்ட இரக்கத்தாலும் இலக்கணமயக்கத்தைச்செய்தார்.
இன்றைக்கு இரண்டுசொற்களுக்குமேலுள்ள புணர்மொழிகள் புரியாதென தமிழாசிரியர் முடிவுகட்டிவிட்டனர். அதனால் இலக்கணத்தையும் பலிகொடுக்க துணிந்தனர். இது இக்காலத்தில் தமிழுக்கு நேர்ந்த சாபக்கேடு. என் செய்ய. வாலறிவன்+நற்றாள் ஆகியன புணர்ந்து ஆறாம்வேற்றுமைத்தொகையாகவேண்டுமென்பதை ஏதேனுமொருவழியில் பாவாணர் உணர்த்தியிருந்தால் இப்புணர்ச்சிப்பிழையும் பொருண்மயக்கமும் நேர்ந்திரா.
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவ(ன்)
நற்றாள் தொழாஅர் எனின்.” என்றவாறு னகரத்தை பிறைக்குறிகளிட்டு புணருமென்பதைச்சுட்டியிருக்கலாம்.
நன்றி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button