
குறள் – ௬௱௯௰௧ (அச்சில் உள்ளவாறு).
“அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.”
அகலாது = விலகாது.
அணுகாது = நெருங்காது.
இகல்வேந்தர் = மாறுபடுந்தன்மையுள்ள வேந்தர்.
“இகல்வேந்தர்சேர்ந்தொழுகுவார் அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மாறுபடுந்தன்மையுள்ள வேந்தரைச்சேர்ந்தொழுகுவார் தீயினின்று மிக விலகாமலும் மிக நெருங்காமலும் குளிர்காய்வார்போல் ஆகுக” என்பதாம்.
வினையெச்சங்கள் தம்முள் புணருமாயினும் அகலாது, அணுகாது என்னும் வேறுவேறு வினைகள் பொருள்மயங்குமாறு புணரா. குற்றுகரம் உயிர் வந்தால் மெய்விட்டோடியே ஆகவேண்டியதில்லை. புணர்ந்ததைப்பிரித்து பொருளறிவதாயின் புணர்த்த வேண்டா.
‘போல்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘வேந்தர்ச்சேர்ந்து’ என்னும் புணர்மொழி ‘வேந்தரைச்சேர்ந்து’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகை ஆகும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வலி மிகாது.
செம்மை வடிவம் —
“அகலாது* அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர் சேர்ந்தொழுகு வார்.”
*குற்றியலுகரமாகிய ஆகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௬௱௯௰௨ (அச்சில் உள்ளவாறு).
“மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய வாக்கந் தரும்.”
விழைப = விரும்புவன.
விழையாமை = விரும்பாமை.
மன்னிய = நிலைத்த.
ஆக்கம் = மேன்மை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“மன்னர் துய்க்க விரும்புவனவற்றை விரும்பாமை (விரும்பாதார்க்கு) மன்னரிடம் நிலைத்த மேன்மையைப்பெற்றுத்தரும்” என்பதாம்.
‘மன்னியவாக்கம்’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் பெயரெச்சத்துடன் புணராது தனித்து நிற்கும்.
செம்மை வடிவம் —
“மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும்.”
குறள் – ௬௱௯௰௩ (அச்சில் உள்ளவாறு).
“போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்
றேற்றுதல் யார்க்கு மரிது.”
போற்றின் = காத்துக்கொள்வதாயின்.
அரியவை = அரிய (பிழைகள்).
போற்றல் = காக்க.
கடுத்தபின் = ஐயுற்றபின்.
தேற்றுதல் = தெளிவித்தல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“காத்துக்கொள்வதாயின் அரிய பிழைகளைச்செய்யாது காக்க. ஐயுற்றபின் (அரசனை) தெளிவித்தல் யார்க்கும் அரிது” என்பதாம்.
‘போற்றின்’ என்னும் வினையெச்சம் ‘அரியவை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘கடுத்தபின்’ என்பதன்கண் வந்த ‘பின்’ என்னும் காலயிடைச்சொல் ‘கடுத்த’ என்னும் வினையெச்சத்துடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘யார்க்கும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.”
குறள் – ௬௱௯௰௪ (அச்சில் உள்ளவாறு).
“செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக
லான்ற பெரியா ரகத்து.”
செவிச்சொல் = காதொடு பேசுதல்.
நகை = சிரிப்பு.
அவித்து = அழித்து.
ஆன்ற = மாட்சிமையுள்ள, மேன்மையான.
அகத்து = இடத்து.
ஒழுக = செய்க, நடக்க.
“ஆன்ற பெரியாரகத்து செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மாட்சிமையுள்ள பெரியாரிடத்து ஒருவர் காதொடு பேசுவதையும் பிறரொடு சேர்ந்து நகைப்பதையும் அழித்து ஒழுகுக” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. ‘சேர்ந்த நகையும்’ இறுதியெண்ணும்மை புணராது.
‘பெரியார்’ என்னும் பெயர்க்குரிய ‘ஆன்ற’ என்னும் பெயரடையுடன் ‘ஒழுகல்’ என்னும் வினைமுற்று புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.”
குறள் – ௬௱௯௰௫ (அச்சில் உள்ளவாறு).
“எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை.”
ஓரார் = கேளார்.
மற்று = வினைமாற்றுப்பொருளில் வந்த இடைச்சொல்.
விட்டக்கால் = வெளிப்படுத்தியபோது.
மறை = பிறர் அறியாதவாறு பேசுதல், மறைத்துப்பேசுதல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒருவர் (அரசர்) மறைத்துப்பேசுவது எப்பொருளானாலும் அதனைக்கேட்க விரும்பக்கூடாது. மறைபொருளை கேட்டவரைத்தொடர்புகொண்டு அதனை அறியக்கூடாது. பேசியவரே மறைபொருளை வெளிப்படுத்தும்போது அதனைக்கேட்கலாம்” என்பதாம்.
‘எப்பொருளும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘விட்டக்கால்’ என்னும் வினையெச்சம் விட்டிசைத்து ‘கேட்க’ என்னும் ஏவல்வினையைச்சிறப்பிக்கும். ‘விட்டக்கால்’ என்னும் வினையெச்சம் குறிக்கும் வினைமுதலும், ‘கேட்க’ என்னும் வினைமுற்று குறிக்கும் வினைமுதலும் வேறுவேறு. வேறுவேறுவினைமுதல்களின் வினைகள் புணரா.
செம்மைவடிவம் —
“எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.”
குறள் – ௬௱௯௰௬ (அச்சில் உள்ளவாறு).
“குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.”
குறிப்பறிந்து = உள்ளத்தின் நிலையறிந்து.
காலங்கருதி = ஏற்ற காலத்தைக்கருதி.
வெறுப்பில = வெறுக்காதன.
வேண்டுப = வேண்டியன.
வேட்ப = விரும்ப.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒருவரது (மன்னரது) உள்ளத்தின் நிலையறிந்து, ஏற்ற காலத்தையும் கருதி, வெறுக்காதனவும் வேண்டுவனவும் விரும்புமாறு சொல்க” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௬௱௯௰௭ (அச்சில் உள்ளவாறு).
“வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங்
கேட்பினுஞ் சொல்லா விடல்.”
வேட்பன = விரும்பும் பயன்தருவன.
வினையில = பயனிலா வினை.
எஞ்ஞான்றும் = எக்காலத்தும்.
“வேட்பன சொல்லி வினையிலகேட்பினும் எஞ்ஞான்றும் சொல்லா விடல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“விரும்பும் பயன்தருவன சொல்லி பயனிலா வினைகளைக்கேட்பினும் எஞ்ஞான்றும் சொல்லாது விடுக” என்பதாம்.
‘இல’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘எஞ்ஞான்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘கேட்பினும்’ என்பது எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.”
குறள் – ௬௱௯௰௮ (அச்சில் உள்ளவாறு).
“இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற
வொளியோ டொழுகப் படும்.”
இளையர் = அகவையில் இளையவர்.
இனமுறையார் = இன்னவகை உறவினர்.
இகழார் = தாழ்வாக கருதார்.
நின்ற ஒளியோடு = ஒருவர்தம் மதிப்புமிக்க நிலையோடு.
ஒழுகுதல் = செயல்படல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒருவர் (அரசர்) அகவையில் தமக்கு இளையவர் உறவுமுறையில் இன்ன உறவினரென தாழநினையாது அவர்தம் மதிக்கத்தக்க நிலையொடு பொருந்தி செயல்படல் வேண்டும்” என்பதாம்.
எண்ணப்படும் நிலைகள் தத்தம் பொருள் மயங்குமாறு புணராது தனித்துநின்று தத்தம் நிலையை அறிவிக்கும். இளையர், இனமுறையர் என்னும் வேறுவேறு நிலைகள் புணரா.
‘என்று’ என்னும் இடைச்சொல் முன்னின்ற பெயர்களுடன் சென்றுபொருந்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நின்றவொளி’ என்னும் பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘ஓடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘ஒளி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“இளையர் இனமுறைய ரென்று*இகழார் நின்ற
ஒளியோடு* ஒழுகப் படும்.”
*குற்றியலுகரமாகிய றுகரமும் டுகரமும் அலகுபெறா.
குறள் – ௬௱௯௰௯ (அச்சில் உள்ளவாறு).
“கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.”
கொளப்பட்டேம் = ஏற்றுக்கொள்ளப்பட்டோம்.
எண்ணி = கருதி.
கொள்ளாத = ஏற்கயியலாதன, பொருந்தாதன.
துளக்கற்ற = அசையாத, நிலைத்த.
காட்சியவர் = அறிவர், அறிஞர்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒருவரால் (அரசனால்) ஏற்றுக்கொள்ளப்பட்டோமென்று எண்ணி அவரால் ஏற்கயிலாதவற்றை/பொருந்தாதவற்றை நிலைத்த அறிவினர் செய்யார்” என்பதாம்.
‘எண்ணி’ என்னும் வினையெச்சத்தையடுத்து விட்டிசைக்க பொருட்டெளிவு கிட்டும். ‘எண்ணிக்கொள்ளாத’ என்பது ‘எண்ணாமல்’ என்றும் பொருள்படும். புணருவதற்கு விதியிருப்பதனால் புணர்த்த வேண்டா. புணர்ச்சி பொருளுணர்ச்சிக்கானது.
செம்மைவடிவம் —
“கொளப்பட்டே மென்றெண்ணி கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.”
குறள் – ௭௱ (அச்சில் உள்ளவாறு).
“பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.”
பழையம் = பழைய உறவு, நெடுநாள் உறவு.
கெழுதகைமை = உரிமை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒருவர்க்கு நெடுநாள் உறவெனக்கருதி பண்பல்லன செய்யும் உரிமை கேட்டினைத்தரும்”
என்பதாம்.
‘என’ என்னும் இடைச்சொல் ‘பழையம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கருதி’ என்னும் வினையெச்சம் ’பண்பு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘செய்யும் கெழுதகைமை’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்; ‘செய்யுங்கெழுதகைமை’ என்றவாறு புணராது.
செம்மைவடிவம் —
“பழைய மெனகருதி பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




