இலக்கணம்தமிழ்

தொடரொலிப்பும் பொருள்மாற்றமும்.

புணர்ச்சியிலக்கணம்.

தொடரொலிப்பும் பொருள்மாற்றமும்.

தொடரொலிப்பு என்பது புணர்ச்சியின் உடனாயவிளைவு. சொல்லுக்குள் நிகழும் அகப்புணர்ச்சியானாலும் இருசொற்களின் புணர்ச்சியானாலும் தொடரொலிப்பும் இடைவெளியின்மையும் புணர்ச்சியின் அடிப்படைப்பண்புகள்.

★ ‘உடல்மேல் உயிரொன்றுவது இயல்பு’ என்பது ஒரு புணர்ச்சிமுறை (விதி என்ற பிறமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொல்லையே இங்கு முறையெனக்குறிப்பிட்டுள்ளோம்.) இம்முறையின் செயல்பாட்டைக்காண்போம்.

• உயிர்+எழுத்து → உயிரெழுத்து. நிலைமொழியின் ஈற்றுரகரமெய்யின்மேல் வருமொழியின் எகரவுயிர் ஏறியது. இப்புணர்ச்சிக்குப்பின் பொருள்மாற்றம் நிகழ்ந்தது அன்றோ. புணராதிருந்தால் பெயர்ப்பயனிலைபெற்ற எழுவாய்த்தொடராகும். புணர்ந்ததால் புதியபொருள்தரும் பெயர்ச்சொல்லாகி முற்றுப்பொருளைத்தந்தது.

• முருகன்+அடிமை → முருகனடிமை.

நிலைமொழியின் ஈற்றுனகரமெய்யின்மேல் வருமொழியின் அகரவுயிர் ஏறியது. புணராதிருந்தால் பெயர்ப்பயனிலைபெற்ற எழுவாய்த்தொடராகும். புணர்ந்ததால் ‘முருகனுக்கு அடிமை’ எனும் பொருள்தரும் நான்காம்வேற்றுமைத்தொகையாகி யார் முருகனடிமை எனும் வினாவினைத்தோற்றுவித்து முற்றுப்பொருளை இழந்தது. ‘கிருபானந்தவாரியார் முருகனடிமை’ என்றவாறோ வேறுவகையிலோ ஒரு கருத்தாவை அவாவிநிற்கும் அன்றோ.

• அகரவுயிர்+ஏறியது → அகரவுயிரேறியது.

நிலைமொழியின் ஈற்றுரகரமெய்யின்மேல் வருமொழியின் ஏகாரவுயிர் ஏறியது. இங்கே புணர்ச்சிக்கு‌ முன்னும் பின்னும் பொருள்மாற்றம் நிகழவில்லை.

முறை ஒன்று; நிலை இரண்டு. எனவே நாம் கருதும்பொருள் மயங்குமானால் புணர்த்தக்கூடாது. நாம் கருதும்பொருள் மயங்காதாயின் முறைகளின்வழி புணர்த்தலாம்.

தொடரொலிப்பு என்பது புணர்ச்சியின் உடனாயவிளைவு. சொல்லுக்குள் நிகழும் அகப்புணர்ச்சியானாலும் இருசொற்களின் புணர்ச்சியானாலும் தொடரொலிப்பும் இடைவெளியின்மையும் புணர்ச்சியின் அடிப்படைப்பண்புகள்.

★ ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்பது ஒரு புணர்ச்சிமுறை. இம்முறையின் செயல்பாட்டைக்காண்போம்.

• விட்டு+ஓடும் → விட்(ட்+உ)+ ஓடும் → விட்(ட்)+ஓடும் → விட்+(ட்+ஓ)+டும் → விட்+டோ+டும் → விட்டோடும்.

உக்குறளான குற்றியலுகரம் வருமுயிர்க்கு இடந்தந்து தானேறிநின்றமெய்யினை  நீங்கியது. இதனை குற்றியலுகரப்புணர்ச்சி என்போம். முற்றியலுகரமும் சிலயிடங்களில் இவ்வாறு நீங்கும். இங்கே பொருள்மாற்றம் எதுவும் நிகழவில்லை. இது ஒலியின் கூட்டியல்பினால் தானாகவே நிகழும் தொடரொலிப்புப்புணர்ச்சி. இப்புணர்ச்சியைத்தவிர்த்தால் தொடரொலிப்பு அறும்; பொருள் மாறாது.

குற்றியலிகரப்புணர்ச்சியும் இவ்வாறே. குற்றியலிகரப்புணர்ச்சி செய்யுள்வழக்காயிற்று.

★ இரண்டு உயிர்களை உடம்படுத்த யகரமோ வகரமோ வருமெனும் உடம்படுமெய்ப்புணர்ச்சியின் செயல்பாட்டைக்காண்போம்.

• இடைவெளி+இன்மை → இடைவெ(ள்+இ)+இன்மை → இடைவெளி+ய்+இன்மை → இடைவெளி+(ய்+இ)+ன்மை →

இடைவெளி+யி+ன்மை →

இடைவெளியின்மை.

இங்கே பொருள்மாற்றம் எதுவும் நிகழவில்லை. இப்புணர்ச்சி ஒலியின் கூட்டியல்பினால் தானாகவே நிகழும் தொடரொலிப்புப்புணர்ச்சி. இப்புணர்ச்சியைத்தவிர்த்தால் தொடரொலிப்பு அறும்; பொருள் மாறாது.

• ‘மணி அடித்தான்’ என்னும் தொடர் எழுவாய்த்தொடராகும். இத்தொடர் ‘மணியடித்தான்’ என உடம்படுமெய்பெற்று புணர்ந்தால் ‘மணியை அடித்தான்’ என்னும் பொருள்தரும் இரண்டாம்வேற்றுமைத்தொகையாகி முற்றுப்பொருளை இழந்து ஒரு கருத்தாவை அவாவிநிற்கும். ‘வளவன் மணியடித்தான்’  என்றவாறோ வேறுவகையிலோ ஒரு  கருத்தாவைப்பெற்று பொருள்முடிவினைப்பெறும்.

முறை ஒன்று; நிலை இரண்டு. எனவே நாம் கருதும்பொருள் மயங்குமானால் புணர்த்தக்கூடாது. நாம் கருதும்பொருள் மயங்காதாயின் முறைகளின்வழி புணர்த்தலாம்.

தொல்காப்பியனார் ‘உடம்படுமெய் உருபுகொளல் வரையார்’ என்கிறார். ஒலியியல்புக்கு மாறாக நன்னூலார் உடம்படுமெய் உருபுகொளலை வரையறுத்தார். இது தவறு. ஒலிகூட்டியல்பில் இயற்கையாக தோன்றும் யகரத்தையோ வகரத்தையோ நீவீர் இடுக.

இன்றைக்கு நாம் காணும் திருக்குறள் பதிப்புகளிலெல்லாம் நன்னூலார் வரையறுத்த உடம்படுமெய்கள் இடம்பெறுகின்றன. திருவள்ளுவனார் நன்னூலாரின் காலத்திற்கு முற்பட்டவர். அவர் தொல்காப்பியவிதிகளையே ஆண்டிருப்பார் அன்றோ.

தொடரொலிப்பு என்பது புணர்ச்சியின் உடனாயவிளைவு. சொல்லுக்குள் நிகழும் அகப்புணர்ச்சியானாலும் இருசொற்களின் புணர்ச்சியானாலும் தொடரொலிப்பும் இடைவெளியின்மையும் புணர்ச்சியின் அடிப்படைப்பண்புகள்.

★ முன்னின்றமெய் திரிதல்.

• புல்+கள் → புற்கள் (பன்மை).

• கல்+சிலை → கற்சிலை (கல்லாலான சிலை).

• வாள்+கண் → வாட்கண் (வாள்போன்ற கண்).

• பொன்+குடம் → பொற்குடம் (பொன்னாலாகிய குடம்)

• தன்+ நாடு → தன்னாடு (தனது நாடு).

• தம்+நலம் → தந்நலம் (தமது நலம்).

• மண்+குடம் → மட்குடம் (மண்ணாலாகிய குடம்).

• செம்மை+தமிழ் → செம்+தமிழ் → செந்தமிழ் ‌(செம்மையாகிய தமிழ்).

• நாகம்+பாம்பு →நாகப்பாம்பு. (இருபெயரொட்டுப்பண்புத்தொகை).

இவ்வாறாக லகர ளகரத்திரிபுகள், ணகர நகர னகரத்திரிபுகள், மவ்வீறு கெடுதல் முதலானவற்றில் நிலைமொழியீறோ வருமொழிமுதலோ திரியும்போது புதுப்பொருள் தோன்றுகிறது.  எனவே பொருணோக்கிலேயே புணர்ச்சிகள் நிகழ்வதை உணர்க.

தழுவுஞ்சொற்களே புணரும்.

ஒன்றையொன்று அவாவிநிற்கும் சொற்களை தழுவுஞ்சொற்கள் என்போம். இவைகட்குள் பொருட்டொடர்பு இருக்கும். இவ்வாறு பொருட்டொடர்புபெற்ற சொற்களே புணரும்.

எ-டு: ‘புலி பாய்ந்தெனப் பாய்ந்தான்.’ ‘என’ என்னும் இடைச்சொல் உவமைப்பொருளில் வருவதற்கான எடுத்துக்காட்டுத்தொடர். இத்தொடரில் ‘என’ என்னும் இடைச்சொல் எச்சொல்லைத்தழுவுகிறது. ‘பாய்ந்து’ என்னும் வினையெச்சத்தைத்தழுவி அதுபோல் என்னும் உவமப்பொருளைத்தருகிறது. இவ்வுவமப்பொருளைத்தந்ததுடன் அதன்பணி முடிந்ததன்றோ. அதன்பின்னும் ஒரு பகரமெய்யிட்டு ‘பாய்ந்தான்’ என்னும் வினைமுற்றுடன் புணர்த்துவதற்கான இன்றியமையாமை எதுவுமில்லை. ஓர் இடைச்சொல் வினையெச்சத்திற்கு பின்னொட்டாகவும் வினைமுற்றுக்கு முன்னொட்டாகவும் வராது. மாறாக சொல்வதானால் ஓர் இடைச்சொல் ஒன்றனையே சிறப்பிக்கும். இத்தொடரில் ‘பாய்ந்தான்’ என்னும் வினைமுற்றை உவமயிடைச்சொல்  சிறப்பிக்கவில்லை.

அவ்வாறாயின் இப்புணர்ச்சி ஏன் செய்யப்பட்டது. பொருளுணர்ச்சி என்னும் கருத்தின்றி, தழுவாச்சொற்கள் புணராயென்பதையும் கருதாது நிலைமொழியீறு வருமொழிமுதல் என்னும் இடத்தடிப்படை ஒன்றனையே கருதிப்புணர்த்தியதால் இப்புணர்ச்சி செய்யப்பட்டது.

• இலக்கணநூல்களில் ‘மைந்தன் பிறந்தானெனத் தந்தையுவந்தான்’ என்னும் எடுத்துக்காட்டு தரப்பட்டுள்ளது. இத்தொடரில் ‘என’ என்பது ‘பிறந்ததால்’ என்னும்  பொருள்படவரும் ஓர் இடைச்சொல். இவ்விடைச்சொல் ‘பிறந்த’ என்னும் வினையெச்சத்துடன் புணர்ந்து அதனை சிறப்பித்து தன்பணியை முடித்தது. அதன்பின் ‘தந்தை’ என்னும் திரிபில்பெயர்ச்சொல்லுடன் புணர்வதற்கான இன்றியமையாமை இல்லை. அவ்வாறாயின் இப்புணர்ச்சி ஏன் செய்யப்பட்டது. பொருளுணர்ச்சி என்னும் கருத்தின்றி, தழுவாச்சொற்கள் புணராயென்பதையும் கருதாது நிலைமொழியீறு வருமொழிமுதல் என்னும் இடத்தடிப்படை ஒன்றனையே கருதிப்புணர்த்தியதால் இப்புணர்ச்சி செய்யப்பட்டதன்றோ.

• ‘முருகனிடம் பணத்தைப்பெற்றுக் கண்ணனிடம் கொடுத்தான்.’ இத்தொடரில் ‘பெற்று’ என்பது வினையெச்சம். இவ்வினையெச்சம்  வன்றொடர்க்குற்றியலுகரச்சொல்.  இதனையடுத்து நிற்கும் ‘கண்ணன்’ என்பது திரிபில்பெயர்ச்சொல். ஒரு வினையெச்சம் வினையெச்சத்துடனும் பெயரெச்சத்துடனும்  வினைமுற்றுடனும் புணருமேயன்றி திரிபில்பெயர்ச்சொல்லுடன் புணராது. அவ்வாறாயின் இப்புணர்ச்சி ஏன் செய்யப்பட்டது. வன்றொடர்குற்றியலுகரத்தின்பின் வல்லினம் மிகுமென்ற பாடம் நமக்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் அவ்வருமொழி தழுவுசொல்லா தழுவாச்சொல்லாயென கருதவேண்டுமன்றோ.

எனவே தழுவுஞ்சொற்களுக்கிடையே முறைகளின்வழி புணர்ச்சி நிகழுமெனக்கூறி இத்தொடரை நிறைவுசெய்கிறோம்.

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.

நன்றி.

வாழ்க தமிழ்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button