
குறள் – ௮௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு).
“வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார்மேல் மேக பகை.”
மாறேற்றல் = மாறுபடுதலை ஏற்றல், எதிர்த்தல்.
ஓம்புக = விலக்குக.
ஓம்பா = பேணாத, விரும்பாத.
மேவுக என்பதன் இடைக்குறை → மேக = விரும்புக.
“வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக. பகையோம்பா மெலியார்மேல் மே(வு)க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தம்மினும் வலியாரை எதிர்தலை விலக்குக. தம்மிடம் பகையை விரும்பாத மெலியாரை விரும்புக” என்பதாம்.
‘ஓம்புக’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“வலியார்க்கு மாறேற்ற லோம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.”
குறள் – ௮௱௬௰௨ (அச்சில் உள்ளவாறு).
“அன்பில னான்ற துணையிலன் றான்துவ்வா
னென்புரியு மேதிலான் றுப்பு.”
இலன் = இல்லான்.
ஆன்ற = சிறந்த.
துவ்வான்= வலிமையிலான்.
என்புரியும் = யாது செய்யும்.
ஏதிலான் = பகைவன்.
துப்பு = வலிமை.
“அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான் ஏதிலான்றுப்பு என்புரியும்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“சுற்றத்தின்மேல் அன்பு இல்லான், சிறந்த துணையும் இல்லான், தானே வலிமையும் இல்லான் பகைவரது வலிமையை யாது செய்யும்; யாதும் செய்கிலன்” என்பதாம்.
‘அன்பிலன்’, ‘துணையிலன்’ இவற்றின்கண் வந்த ‘இலன்’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘துவ்வான்’, ‘புரியும்’ என்பன வினைமுற்றுகள். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்புரியும் ஏதிலான் றுப்பு.”
குறள் – ௮௱௬௰௩ (அச்சில் உள்ளவாறு).
“அஞ்சு மறியா னமைவில னீகலான்
தஞ்ச மெளியன் பகைக்கு.”
அஞ்சும் = அஞ்சுவான்.
அறியான் = அறியவேண்டியது அறியான்.
அமைவிலன் = பொருந்தான்.
ஈகலான் = கொடையிலன்.
தஞ்சமெளியன் (ஒருபொருட்பன்மொழி) = எளியன்.
பகைக்கு = பகைவர்க்கு.
“அஞ்சும், அறியான், அமைவிலன், ஈகலான் பகைக்கு தஞ்சமெளியன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அச்சமுடையான், அறியவேண்டியது அறியான், யாரோடும் பொருந்தான், கொடை கொடான் ஆகிய இப்பண்புள்ளானை பகைவர் வெல்லல் எளிது” என்பதாம்.
அஞ்சும், அறியான், அமைவிலன், ஈகலான் ஆகியன வினைமுற்றுகள். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்ச மெளியன் பகைக்கு.”
குறள் – ௮௱௬௰௪ (அச்சில் உள்ளவாறு).
“நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது.”
நீங்கான் = கைவிடான்.
வெகுளி = சினம்.
நிறையிலன் = முதிர்ச்சியிலன்.
எஞ்ஞான்றும் = எப்போதும்.
யாங்கணும் = எல்லாயிடத்தும்.
எளிது = (வெல்லல்) எளிது.
“வெகுளிநீங்கான் நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க
“சினத்தைக்கைவிடானை, முதிர்ச்சி இல்லானை எப்போதும் எல்லாயிடத்தும் யார்க்கும் வெல்லல் எளிது” என்பதாம்.
‘நிறையிலன்’ என்பதன்கண் வந்த ‘இலன்’ குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘யார்க்கும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.”
குறள் – ௮௱௬௰௫ (அச்சில் உள்ளவாறு).
“வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.”
வழிநோக்கான் = நெறிகளைக்கருதான்.
வாய்ப்பன = தனக்குற்ற வினைகள்.
பழிநோக்கான் = பழிக்கு அஞ்சான்.
பண்பிலன் = நன்னடத்தை இலான்.
பற்றார்க்கு = பகைவர்க்கு.
இனிது = எளிது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“நெறிகளைக்கருதான், தனக்குற்ற வினைகளைச்செய்யான், தானுறும் பழிக்கு அஞ்சான், நன்னடத்தை இலான் அவனை பகைவர் வெல்லல் எளிது” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௮௱௬௰௬ (அச்சில் உள்ளவாறு).
“காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.”
காணா = (காரணத்தை) அறியாத.
கழிபெருங்காமத்தான் = சிற்றின்பவெறியன்.
பேணாமை = பொருட்படுத்தாமை.
பேணப்படும் = ஒழுகப்படும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“காரணத்தை அறியாது சினப்பவனை, சிற்றின்பவெறியனை பொருட்படுத்தாமை ஒழுகப்படும்”
என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௮௱௬௰௭ (அச்சில் உள்ளவாறு).
“கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.”
கொடுத்தும் = வலிந்தும், விரும்பியும்.
மன்ற = உறுதியாக, தெளிவாக.
அடுத்திருந்து = உடனிருந்து.
மாணாத = மாண்பற்ற.
“அடுத்திருந்து மாணாத செய்வான்பகையை கொடுத்தும் கொள்ளவேண்டும் மன்ற” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உடனிருந்து மாண்பற்றன செய்வானது பகையை கொடுத்தும் கொள்ளவேண்டும் உறுதியாக” என்பதாம்.
‘கொடுத்தும்’ என்பது எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
‘வேண்டும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘மன்றவடுத்திருந்து’ என்னும் புணர்மொழியின் புணர்ச்சியை நீக்கினாலன்றி ‘அடுத்திருந்து’ என்னுஞ்சொற்பொருளை உணரமுடியாது. புணர்ச்சியை நீக்கி பொருளுணர்வதானால் புணர்த்த வேண்டா. மேலும் இவ்விரண்டும் தழுவுஞ்சொற்களன்று.
செம்மைவடிவம் —
“கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.”
குறள் – ௮௱௬௰௮ (அச்சில் உள்ளவாறு).
“குணமிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனா மேமாப் புடைத்து.”
குணமிலனாய் = நற்குணமில்லானாய்.
மாற்றார்க்கு = பகைவர்க்கு.
இனனிலன் = சுற்றமில்லான்.
ஆம் = ஆகும்.
ஏமாப்பு = காவல்.
உடைத்து = உடையது.
“குணமிலனாய் குற்றம் பலவாயின் இனன் இலனாம். மாற்றார்க்கு ஏமாப்புடைத்து” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நற்குணமில்லானாய் பல குற்றங்களை உடையானாய் சுற்றம் இல்லானாய் ஆகுந்தன்மை பகைவர்க்கு காவலைத்தரும்” என்பதாம்.
‘குணமிலனாய்’ என்பதன்கண் வந்த ‘ஆகி’ என்னும் பொருள்படும் ‘ஆய்’ என்னும் உருவகயிடைச்சொல் ‘இலன்’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘மாற்றார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘இனம்’ என்னும் வினையைச்சாராது பொருள்தரும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘இனனிலனாம்’ என்னும் புணர்மொழியில் ‘இனன் → இனம்’ என்பது எழுவாய்த்தன்மையது. எழுவாய் எதனுடனும் புணராது.
‘இலனாம்’ என்பதன்கண் வந்த ‘ஆம்’ (ஆகும்) என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“குணமிலனாய் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு*
இனன்இலனாம் ஏமாப் புடைத்து.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௮௱௬௰௯ (அச்சில் உள்ளவாறு).
“செறுவார்க்குச் சேணிகவா யின்ப மறிவிலா
வஞ்சும் பகைவர்ப் பெறின்.”
செறுவார்க்கு = பொருதுவார்க்கு.
சேண் = நெடுங்காலம்.
இகவா= நீங்கா.
அறிவிலா = அறிவிலாத.
அஞ்சும் = அச்சப்படும்.
பெறின் = பெற்றால்.
“அறிவிலா அஞ்சும் பகைவர்பெறின் செறுவார்க்கு சேணின்பம் இகவா” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அறிவில்லாது அச்சமும் உறும் பகைவரைப்பெறின் அவரொடு பொருதுவார்க்கு நெடுங்காலயின்பம் நீங்காது கிட்டும்” என்பதாம்.
‘செறுவார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமையுருபேற்ற சொல் ‘சேண்’ என்னும் வினையைச்சாராது பொருள்தரும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘இன்பம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘அறிவிலாவஞ்சும்’ என்னும் புணர்மொழியின் புணர்ச்சியை நீக்கினாலன்றி ‘அஞ்சும்’ என்னும் சொற்பொருளை உணரமுடியாது. புணர்ச்சியை நீக்கி பொருளுணர்வதாயின் புணர்த்த வேண்டா.
‘பகைவர்ப்பெறின்’ என்பது ‘பகைவரைப்பெறின்’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகை. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும்; இடைவெளிநீங்கி ஒருசொன்னீர்மையாகி தொகையாற்றலை அறிவிக்கும்.
செம்மைவடிவம் —
“செறுவார்க்கு சேணிகவா யின்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர் பெறின்.”
குறள் – ௮௱௭௰ (அச்சில் உள்ளவாறு).
“கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று
மொல்லானை யொல்லா தொளி.”
கல்லான் = கற்கான்.
வெகுளும் = சினக்கும், சினப்போன்.
எஞ்ஞான்றும் = ஒருபொழுதும்.
ஒல்லான் = உதவான்.
ஒல்லாது = பொருந்தாது.
ஒளி = பெருமை.
“கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒளி ஒல்லாது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கற்காதானை, சினப்போனை, சிறுபொருளையும் ஒருகாலத்தும் கொடுத்து உதவானை பெருமை பொருந்தாது” என்பதாம்.
‘சினப்போன்’ என்னும் பொருள்தரும் ‘வெகுளும்’ என்பது புணராது தனித்துநின்று தன்பொருளை வெளிப்படுத்தும்.
‘எஞ்ஞான்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கல்லான் வெகுளும் சிறுபொரு ளெஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது* ஒளி.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




