
குறள் – ௩௱௯௧ (அச்சில் உள்ளவாறு).
“கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக.”
கசடற = குற்றமற.
“கற்பவை கசடறக்கற்க கற்றபின் அதற்குத்தக நிற்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘கசடற’ என்னும் வினையெச்சம் ‘கற்க’ என்னும் வினைமுற்றையே முடிக்குஞ்சொல்லாக கொள்ளும். ‘கசடறக்கற்பவை’ என்னும் புணர்மொழி மயக்கத்தைத்தரும். கற்பதை கசடறக்கற்க என்பதே குறளின் கருத்து.
‘கற்றபின்’ என்பதில் வந்த ‘பின்’ என்னும் இடைச்சொல் ‘கற்ற’ என்னும் வினையைச்சிறப்பித்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நிற்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.”
குறள் – ௩௱௯௨ (அச்சில் உள்ளவாறு).
“எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.”
எண் = கணக்கு.
ஏனை = ‘மற்றை’ என்னும் பொருளில் வந்த இடைச்சொல்.
எழுத்து = மொழி.
வாழுமுயிர் = சிறப்புகருதி மாந்தர் என்பார்.
“எண் எனப்படுவதும் அத்துடன் எழுத்து எனப்படுவதுமாகிய இவ்விரண்டும் வாழும் உயிர்க்கு கண்களெனப்படும்” என்பதாம்.
‘ஏனை’ என்னும் சொல் ‘எழுத்து’ என்னும் சொல்லுக்கானதால் அதனுடனே புணரும். தழுவுஞ்சொற்களே புணரும்.
‘இவ்விரண்டும்’ என்பதில் வந்த இகரம் சுட்டு. சுட்டுச்சொல் வருமொழியாக புணராது.
செம்மைவடிவம் —
“எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.”
குறள் – ௩௱௯௩ (அச்சில் உள்ளவாறு).
“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.”
“கற்றோர் கண்ணுடையவரென்பவர் கல்லாதார் முகத்திரண்டு புண்ணுடையர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
காணும் காட்சிகளால் கற்பதே கண்களின் பயன். அது நிகழாவிடத்து அக்கண்கள் வெறுக்கப்படும் புண்களாம். கல்லாதாரின் புன்மை கண்களின்மேல் வைக்கப்பட்டது.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௩௱௯௪ (அச்சில் உள்ளவாறு).
“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரித
லனைத்தே புலவர் தொழில்.”
உவப்ப = மகிழ.
தலைக்கூடி = குழுமி.
உள்ள = பிரிவாற்றாது.
அனைத்தே = அத்தன்மையதே.
புலவர் = கற்றோர், சான்றோர்.
தொழில் = செயல்.
“மகிழுமாறு ஒன்றுகூடி வருந்துமாறு பிரிதலை ஒத்ததே புலவோர்தம் செயல்” என்பதாம்.
‘உவப்ப’ என்னும் வினையெச்சம் ‘தலை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘உள்ள’ என்னும் வினையெச்சம் ‘பிரிதல்’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“உவப்ப தலைக்கூடி உள்ள பிரித
லனைத்தே புலவர் தொழில்.”
குறள் – ௩௱௯௫ (அச்சில் உள்ளவாறு).
“உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.”
உடையார் = (கல்வியறிவு) உடையவர்.
ஏக்கற்றும் = அவாவினால் தாழ்ந்தும்.
கடையர் = கடைப்பட்டவர்.
“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கல்லாதார் கடையரே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“செல்வர்முன் இல்லாதார் ஏக்கற்று நிற்பதுபோல் கற்றோர்முன் ஏக்கற்றுநின்று கற்றவரே உயர்ந்தோர். கல்லாதார் இழிந்தோர்” என்பதாம்.
‘உயர்ந்தோர்’ என்பது சொல்லெச்சம்.
‘உடையார்முன்’ என்பதில் வந்த ‘முன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘உடையார்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘போல்’ என்னும் உவமவுருபு ‘இல்லார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.”
குறள் – ௩௱௯௬ (அச்சில் உள்ளவாறு).
“தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு.”
மணற்கேணி = மணலின்கண் கேணி.
கேணி = கிணறு.
தொட்டனைத்து = தோண்டிய அளவிற்கு.
ஊறும் = சுரக்கும்.
கற்றனைத்து = கற்ற அளவிற்கு.
“மணற்கேணி தொட்டனைத்து ஊறும் மாந்தர்க்கு கற்றனைத்து அறிவு ஊறும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மணலின்கண் அமைக்கும் கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் சுரப்பது(போல்) மாந்தர்க்கு கற்குமளவிற்கு அறிவு பெருகும்” என்பதாம்.
‘மாந்தர்க்கு’ என்னுமிடத்தில் விட்டிசைக்க ஒப்பீடும் கருத்தும் சிறக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
செய்யுமென்னும் வாய்பாட்டுவினைமுற்றான ‘ஊறும்’ என்பது ‘அறிவு’, ‘மணற்கேணி’ என்னும் பெயர்களுடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.
வினைமுற்றின் ஈற்றுமகரத்தை வருமொழிவுயிருடன் புணர்த்தி ஊறுமணற்கேணி, ஊறுமறிவு என்றாக்கினால் இவை செய்யுமென்னும் வாய்பாட்டுவினையெச்சங்களாகும். இதனால் குறளில் வினைமுற்று இருக்காது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு*
கற்றனைத் தூறும் அறிவு.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௩௱௯௭ (அச்சில் உள்ளவாறு).
“யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.”
யாதானும் = எந்த இடமானாலும்.
நாடாம் = நாடு ஆகும்.
ஆல் = அசைச்சொல்.
ஊராம்= ஊர் ஆகும்.
ஆல் = அசைச்சொல்.
என் = ஏன்.
சாந்துணையும் = இறக்கும்வரையும்.
கல்லாதவாறு = கற்காதவாறு.
“எந்த இடமானாலும் நாடாகும் ஊராகும். அவ்வாறிருக்க ஒருவன் இறக்கும்வரையும் கற்காமல் இருப்பது ஏன்” என்பதாம்.
‘யாதானும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
நாடாமால், ஊராமால் என்பனவற்றின்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘ஆம்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘என்’ என்னும் வினாச்சொல் வருமொழியாகி புணராது வினாப்பொருளைத்தரும்.
‘சாந்துணையும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.”
குறள் – ௩௱௯௮ (அச்சில் உள்ளவாறு).
“ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையு மேமாப் புடைத்து.
ஒருமை = ஒருபிறப்பில்.
எழுமையும் = எழுபிறப்பிலும்.
ஏமம் = காவல், காப்பு.
உடைத்து = உடையது.
“ஒருபிறப்பின்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுபிறப்பின்கண்ணும் காவலுடையது“ என்பதாம்.
‘ஒருமைக்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் வேற்றுமைவுருபு ‘ஒருமை’ என்னும் பெயருடன் புணர்ந்து அதனைச்சிறப்பித்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தான்’ என்னும் திரிபிலல்மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.
‘கற்ற கல்வி’ என்னும் பெயரெச்சத்தொடர் ‘ஒருவற்கு’ என்னும் திரிபுபெயர்ச்சொல்லுடன் புணராது.
‘ஒருவற்கு’ என்னும் குவ்வுருபேற்றசொல் ‘எழுமை’ என்னும் இயல்புப்பொருள்தரும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசாரும்பெயருடன்மட்டுமே புணரும்.
‘எழுமையும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு*
எழுமையும் ஏமாப் புடைத்து.
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௩௱௯௯ (அச்சில் உள்ளவாறு).
“தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.”
காமுறுவர் = விரும்புவர்.
“தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு கற்றறிந்தார் காமுறுவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கல்வியால் தாம் இன்புறுவதுடன் உலகம் இன்புறக்கண்டு கற்றறிந்தார் மேலும் கற்கவிரும்புவர்“ என்பதாம்.
எழுவாயாம் ‘தாம்’ என்னும் திரிபில்மறுபெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
எழுவாயாம் ‘உலகு’ என்னும் திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘தாம் இன்புறுவது’ ஒரு கருத்து. ’உலகு இன்புறக்காண்பது’ அடுத்த கருத்து. கருத்துமாற்றம் நிகழுமிடங்கள் புணராது விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
செம்மைவடிவம் —
“தாம்இன் புறுவது* உலகு*இன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.”
*குற்றியலுகரமாகிய துகரமும் குகரமும் அலகுபெறா.
குறள் – ௪௱ (அச்சில் உள்ளவாறு).
“கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.”
கேடில் = அழியாத.
விழுச்செல்வம் = சீரிய செல்வம்.
மாடல்ல = செல்வமல்ல.
“கேடில் விழுச்செல்வம் கல்வி மற்றயவை ஒருவற்கு மாடல்ல” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அழியாத சீரிய செல்வம் கல்வி.
மற்றையவை ஒருவற்கு செல்வமல்ல” என்பதாம்.
‘கல்வி’ என்பது முற்றுப்பொருள்தரும் பெயர்ப்பயனிலை. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.”
தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!




