
குறள் – ௬௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு).
“இடுக்கண் வருங்கா னகுக வதனை
யடுத்தூர்வ தஃதொப்ப தில்.”
இடுக்கண் = இடையூறு.
அடுத்து = கடந்து.
ஊர்வது = செல்வது.
ஒப்பது = இணையானது.
“இடையூறு வருங்கால் அதனைக்கண்டு நகுக. அதனைக்கடந்து செல்ல நகுவதுபோன்றவழி வேறெதுவுமில்லை” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘வருங்கால் நகுக’ என்பது ‘வருங்கானகுக’ என்றவாறு வலிந்து புணர்த்தப்பட்டுள்ளது. இப்புணர்ச்சியில் புதிய பொருள் எதுவும் தோன்றவில்லை. ‘வருங்கானகுக’ என்னும் புணர்மொழியைப்பிரிக்காமலும் பொருணர இயலாது. எனவே இப்புணர்ச்சி வலிந்த புணர்ச்சி; வேண்டாப்புணர்ச்சி.
‘நகுக’ என்பது வியங்கோள்வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஊர்வது’ என்னும் வினையெச்சம் ‘அஃது’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
இடப்பொருளில் வரும் ‘அடுத்து’ என்னும் பெயர்ச்சொல்லுடன் இரண்டாம்வேற்றுமை புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும். ‘அதனை’ என்பது நகுதலைக்குறிக்கும். ‘அடுத்து’ என்பது ‘இடுக்கணையடுத்து’ எனத்தழுவும். தழுவுஞ்சொற்களே புணரும்.
‘ஒப்பது இல்(லை)’ என்பது ‘ஒப்பதில்’ என்றவாறு புணர்த்தப்பட்டுள்ளது. ‘இல்’ (இல்லை) என்னும் குறிப்புவினைமுற்று ‘ஒப்பதில்’ எனும் புணர்ச்சியில் வேற்றுமைவுருபாக மயங்கும். பொருள்மயங்குபுணர்ச்சி மொழியில் இல்லை.
செம்மை வடிவம் —
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது* அஃதொப்பது* இல்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௬௱௨௰௨ (அச்சில் உள்ளவாறு).
“வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும்.”
வெள்ளம் = அளவிறந்த, கரையில்லா, கரைகடந்த.
அனைய = ஒத்த, போன்ற.
இடும்பை = துன்பம்.
உள்ள = நினைக்க, முயல.
கெடும் = நீங்கும்.
“அறிவுடையானுள்ளத்தின் உள்ள வெள்ளத்தனைய இடும்பை கெடும்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அறிவுடையானது உள்ளத்தின் முயற்சியால் அளவிறந்த துன்பங்கள் நீங்கும்” என்பதாம்.
‘ வெள்ளத்தனைய இடும்பை’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தின் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்; ‘வெள்ளத்தனையவிடும்பை’ என புணராது.
‘அறிவுடையார்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘உள்ளத்தின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘உள்ளம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையா
னுள்ளத்தின் உள்ளக் கெடும்.”
குறள் – ௬௱௨௰௩ (அச்சில் உள்ளவாறு).
“வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும்.”
வெள்ளம் = அளவிறந்த, கரையில்லா, கரைகடந்த.
அனைய = ஒத்த, போன்ற.
இடும்பை = துன்பம்.
உள்ள = நினைக்க, முயல.
கெடும் = நீங்கும்.
“அறிவுடையானுள்ளத்தின் உள்ள வெள்ளத்தனைய இடும்பை கெடும்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அறிவுடையானது உள்ளத்தின் முயற்சியால் அளவிறந்த துன்பங்கள் நீங்கும்” என்பதாம்.
‘ வெள்ளத்தனைய இடும்பை’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தின் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்; ‘வெள்ளத்தனையவிடும்பை’ என புணராது.
‘அறிவுடையார்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘உள்ளத்தின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘உள்ளம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையா
னுள்ளத்தின் உள்ளக் கெடும்.”
குறள் – ௬௱௨௪ (அச்சில் உள்ளவாறு).
“மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.”
மடுத்தல் = இடையூறு எதிர்படுதல்.
மடுத்த = இடையூறு எதிர்பட.
பகடு = எருது.
அன்னான் = போன்றவன்.
உற்ற = அடைந்த.
இடுக்கண் = துன்பம்.
இடர்ப்பாடு = தொல்லை
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இடையூறு எதிர்ப்பட்ட இடமெல்லாம் எருது முயன்று சுமைவண்டியை இழுத்துச்செல்லும். அதுபோன்ற முயற்சியுடையானை அடைந்த துன்பம் துன்பமடையும்” என்பதாம். மடுத்தவாயெல்லாம் என்பன மேடு, பள்ளம், மணல், சேறு முதலியனவாம்.
‘அன்னான்’ என்ற உவமச்சொல் எதனுடனும் புணராது.
‘உற்ற இடுக்கண்’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தின் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘உற்ற இடுக்கண்’ என்பது எழுவாய் ஆகும். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.”
குறள் – ௬௱௨௰௫ (அச்சில் உள்ளவாறு).
“அடுக்கி வரினு மழிவிலா னுற்ற விடுக்க ணிடுக்கட் படும்.”
அழிவிலான் = மனங்கலங்கான்.
இடுக்கண் = துன்பம்.
இடுக்கண்படும் = துன்பப்படும்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“அடுத்தடுத்து வரினும் மனங்கலங்கானை அடைந்த துன்பம் துன்பப்படும்” என்பதாம்.
‘அடுக்கிவரினும்’ என்பது தெரிநிலையும்மைச்சொல். தெரிநிலையும்மை எதனுடனும் புணராது.
‘அழிவிலான்’ என்பது எழுவாய் ஆகும். எழுவாய் எதனுடனும் புணராது.
‘உற்ற இடுக்கண்’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தின் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘உற்ற இடுக்கண்’ என்பது எழுவாய் ஆகும். எழுவாய் எதனுடனும் புணராது.
‘இடுக்கண்படும்’ என்பது ‘இடுக்கணைப்படும்’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் பெயர்ச்சொல் புணராது இயல்பாகும். எனவே ‘இடுக்கட்படும்’ எனப்புணராது.
செம்மைவடிவம் —
“அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும்.”
குறள் – ௬௱௨௰௬(அச்சில் உள்ளவாறு).
“அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புத றேற்றா தவர்.”
அற்றேம் = இழந்தோம்.
அல்லல் = துயரம்.
படுபவோ = படுவரோ.
ஓம்புதல் = மகிழ்தல்.
தேற்றாதார் = அறியாதார்.
“ஒன்றனைப்பெற்றோமென்று மகிழ்தலை அறியாதார் ஒன்றனை இழந்தோமென்று துன்புறுவரோ; துன்புறார்” என்பதாம்.
‘என்று’ என்னும் இடைச்சொல் ‘அற்றோம்’, ‘பெற்றோம்’ ஆகிய வினைமுற்றுகளுடன் புணர்ந்து அவற்றின் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“அற்றேமென்று* அல்லற் படுபவோ பெற்றேமென்று*
ஓம்புத றேற்றா தவர்.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௬௱௨௰௭ (அச்சில் உள்ளவாறு).
“இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்.”
இலக்கம் = இலக்கு, குறி.
கையாறு = ஒழுகும் நெறி.
கையாறா = ஒழுக்கநெறியாக.
கொள்ளாது ← கொள்ளாதது என்பதில் இடையெழுத்து குறைந்து நின்றது.
ஆம் = ஆகும்.
மேல் = மேன்மை.
“இடும்பைக்கென்று உடம்பு இலக்கம். மேலாம் கலக்கத்தை கையாறாக்கொள்ளா(த)து” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“துன்பங்களுக்கான இலக்கம் உடம்பாகும். ஆதலால் கலக்கத்தை ஒழுகும் நெறியாக கொள்ளாதது மேன்மையாம்” என்பது பொருள்.
செய்யுளில் ‘உடம்பு’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருள்தரும் முடிக்கும் சொல்லாம். முடிக்குஞ்சொல் எதனுடனும் புணராது. மேலும் ‘இலக்கம் உடம்பு’ என்பது பெயர்ப்பயனிலைபெற்ற எழுவாய்த்தொடர். பெயர்ப்பயனிலைபெற்ற எழுவாய்த்தொடர்களில் பெயர்ச்சொற்கள் புணரா.
‘கலக்கத்தை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘ஒழுக்கநெறி’ என்னும் பொருள்படும் ‘கையாறு’ என்னும் பெயர்ச்சொல்லுடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
‘கொள்ளாது ஆம் மேல்’ என்பது ‘கொள்ளாதாமேல்’ எனப்புணர்த்தப்பட்டுள்ளது. ‘ஆ(கு)ம்’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘கையாறா’ என்பது ‘கையாறாக’ என்பதன் ஈற்றெழுத்துகுறைந்த சொல். ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் எதனுடனும் புணராது.
‘ஆகும்’ என்னும் வினைமுற்று ‘மேல்’ என்னும் சொல்லைத்தழுவி ‘மேலாம்’ என்றாகும். தழுவுஞ்சொற்களே புணரும்.
செம்மைவடிவம் —
“இலக்கம் உடம்பு*இடும்பைக் கென்று கலக்கத்தை
கையாறா கொள்ளாது*ஆம் மேல்.”
*குற்றியலுகரங்களாகிய புகரமும் துகரமும் அலகுபெறா.
குறள் – ௬௱௨௰௮ (அச்சில் உள்ளவாறு).
“இன்பம் விழையா னிடும்பை வியல்பென்பான்
றுன்ப முறுத லிலன்.”
விழையான் = விரும்பான்.
இயல்பு = இயற்கை.
உறுதல் = அடைதல்.
உறுதலிலன் = அடையான்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இன்பத்தை விரும்பான், துன்பத்தை இயற்கையென்பான் துன்பமடையான்” என்பதாம்.
‘விழையான்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘இயல்பென்பான்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இன்பம் விழையான் இடும்பை வியல்பென்பான்
துன்ப முறுத லிலன்.”
குறள் – ௬௱௨௰௯ (அச்சில் உள்ளவாறு).
“இன்பத்து ளின்பம் விழையாதான் துன்பத்துட்
டுன்ப முறுத லிலன்.”
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இயற்கையாகவோ தன்முயற்சியாலோ தனக்கு இன்பம் வந்தவிடத்து அதனை நுகர்ந்தும் உள்ளத்தால் இன்புறாதவன் அவ்விருவழியிலும் துன்பம் வந்தவிடத்து அதனை நுகர்ந்தும் மனத்தால் துன்பமுறான்” – தேவநேயப்பாவாணர்வுரை.
‘இன்பத்துள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு அத்துசாரியைபெற்று ‘இன்பம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘விழையாதான்’ என்பது எதிர்மறையெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘துன்பத்துள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு அத்துசாரியைபெற்று ‘துன்பம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுத லிலன்.”
குறள் – ௬௱௩௰ (அச்சில் உள்ளவாறு).
“இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.”
ஒன்னார் = பகைவர்.
விழையும் = விரும்பும்.
“இன்னாமையின்பமென கொளின் தன்னொன்னார் விழையும் சிறப்பு ஆகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“துன்பங்களை இன்பமென கொண்டால் அவ்வியல்பு தனது பகைவரும் விரும்பும் சிறப்பு ஆகும்” என்பதாம்.
‘என’ என்னும் இடைச்சொல் ‘இன்பம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஆகும்’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘தன் ஒன்னார்’ என்பதன் இடையில் ‘அது’ என்னும் வேற்றுமையுருபு தொக்குள்ளது. வேற்றுமைத்தொகை ஒருசொன்னீர்மையாகும்; பிரிந்துநில்லா. ‘தன்னொன்னார்’ என்றாகும்.
‘விழையுஞ்சிறப்பு’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் ‘சிறப்பு’ என்னும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“இன்னாமை யின்ப மெனகொளின் ஆகும்தன்
னொன்னார் விழையும் சிறப்பு.”
அரசியல் முற்றிற்று.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி
நன்றி.
வாழ்க தமிழ்.




