இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — அறத்துப்பால். இயல் — துறவறவியல். தலைப்பு - ௨௰௯. கள்ளாமை.

குறள் – ௨௱௮௧. (அச்சில் உள்ளவாறு.)

“எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு.”

எள்ளாமை = இகழப்படாமை.
கள்ளாமை = களவாடாமை, கவராமை.

‘இகழப்படாமையை விரும்புவான் எப்பொருளையும் களவாடும் எண்ணம் தன்னெஞ்சில் தோன்றாமல் காக்க’ என்பதாம்.

‘எள்ளாமைவேண்டுவானென்பான்’ என்பது நெடுந்தொடரெழுவாய். எழுவாய் வேற்றுமைவுருபேற்று திரியாநிலையில் எதனுடனும் புணராது. பெயர்ச்சொல்லின் இந்நிலை திரிபில்பெயர்ச்சொல் எனப்படும். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘எனைத்தொன்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

“எள்ளாமைவேண்டுவானென்பான் தன்னெஞ்சு எனைத்தொன்றும் கள்ளாமை காக்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு.”

குறள் – ௨௱௮௨. (அச்சில் உள்ளவாறு.)

“உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்.”

உள்ளல் = கருதுதல்.
கள்ளம் = கரவு (உரியவர் அறியாமல் கவர்தல்).
எனல் = என்று.

‘பிறரது பொருளை அவர் அறியாமல் களவாடுவோமென்று உள்ளத்தால் கருதுதலும் தீதே’ என்பதாம்.

‘பிறன்பொருளை கள்ளத்தால் கள்வேமெனல் உள்ளத்தால் உள்ளலும் தீதே’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘உள்ளலும்’ என்பது எதிர்மறைச்சிறப்பும்மைச்சொல். உம்மைச்சொல் எதனுடனும் புணராது.

‘பொருளை’ என்பதில் வந்த இரண்டாம்வேற்றுமை ‘கள்ளம்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘கள்ளம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வே மெனல்.”

குறள் – ௨௱௮௩. (அச்சில் உள்ளவாறு.)

“களவினா லாகிய வாக்க மளவிறந்
தாவது போலக் கெடும்.”

ஆகிய = உண்டான.
ஆக்கம் = பொருள், செல்வம்.
அளவிறந்து = எல்லையின்றி
ஆவது = வளர்வது.

“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவதுபோல கெடும்” என்றவாறு ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘களவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஆகிய ஆக்கம்’ என்பது பெயரெச்சம். பெயரெச்சத்தில் முடிக்குஞ்சொல்லான ‘ஆக்கம்’ பெயரெச்சத்துடன் புணராது தனித்து நிற்கும்.

‘ஆக்கம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘போல’ என்னும் உவமச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்
தாவது போல கெடும்.”

குறள் – ௨௱௮௪. (அச்சில் உள்ளவாறு.)

“களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.”

கன்றிய காதல் = மிகுந்த வேட்கை.
வீயா = நீங்கா.
விழுமம் = இடும்பை, துன்பம்.

‘களவாடுதலின்கண் தோன்றிய மிகுந்த விருப்பத்தின் விளைவுகள் நீங்காத்துன்பத்தைத்தரும்’ என்பதாம்.

‘கண்’ என்னும் வேற்றுமைவுருபு ‘களவு’ என்னும் பெயருடன் ‘இன்’ சாரியைபெற்றுப்புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மை வடிவம் —
“களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.”

குறள் – ௨௱௮௫. (அச்சில் உள்ளவாறு.)

“அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.”

பொச்சாப்பு = மறத்தல், கவர்தல்.
பார்ப்பார். = எதிர்ப்பார்பவர்.

”பொருள்கருதி பொச்சாப்பு பார்ப்பார்கண் அருள்கருதி அன்புடையராதல் இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பிறர்பொருளைக்கவர்ந்து தனதாக்கிக்கொள்ளக்கருதி அவரது சோர்வை (ஏமாறுங்காலத்தை) பார்ப்பார்மாட்டு அருளினது உயர்வை அறிந்து அதன்மேல் அன்புடையராதல் உண்டாகாது” என்பது பரிமேலகழகனாரது உரை.

‘கருதி’ என்னும் வினையெச்சம் ‘அன்பு’ என்னும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கருதி’ என்னும் வினையெச்சம் ‘பொச்சாப்பு’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கண்’ என்னும் வேற்றுமைவுருபு ‘பார்ப்பார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதி
பொச்சாப்பு பார்ப்பார்கண் இல்.”

குறள் – ௨௱௮௬. (அச்சில் உள்ளவாறு.)

“அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர்.”

அளவு = வரம்பு, எல்லை, வரைமுறை.
களவு = திருட்டு.
கன்றிய = மிக விரும்பிய.
காதலவர் = வேட்கையினர், விரும்பினோர்.

‘களவின்கண்
கன்றிய காதலவர் அளவின்கண் நின்று ஒழுகலாற்றார்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘திருட்டின்கண் மிகுந்த விருப்பமுடையவர் வரைமுறையறிந்து அதன்கண் நின்று வாழாதார்’ என்பதாம்.

‘கண்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ என்னும் சாரியைபெற்று ‘அளவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கண்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ என்னும் சாரியைபெற்று ‘களவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.”

குறள் – ௨௱௮௭. (அச்சில் உள்ளவாறு.)

“களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில்.”

கார் = தகாத (இருண்ட, கருமை).
அறிவாண்மை = அறிவுடைமை.
ஆற்றல் = திறம்.
புரிந்தார் = தெளிந்தார், அறிந்தார்.

‘வரைமுறை என்னும் ஆற்றலை அறிந்தார்கண் களவு என்னும் தகாத அறிவு இருக்காது’ என்பதாம்.

“அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் களவு என்னும் காரறிவாண்மை இல்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘காரறிவாண்மை’ என்பது திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது. மேலும் ‘காரறிவாண்மை’ என்பது களவுடன் தொடர்புடையது. பொருள்தொடர்புள்ள சொற்களே புணரும்.

‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘களவு’ என்ற பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘அளவு’ என்ற பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கண்’ என்னும் வேற்றுமைவுருபு ‘புரிந்தார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மை வடிவம் —
“களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.”

குறள் – ௨௱௮௮. (அச்சில் உள்ளவாறு.)

“அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு.”

அளவு = வரம்பு, வரைமுறை, எல்லை.
கரவு = களவுசிந்தனை.

“அளவறிந்தார்நெஞ்சத்தறம்போல களவறிந்தார்நெஞ்சில் கரவு நிற்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘நிற்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘இல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘நெஞ்சு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.”

குறள் – ௨௱௮௯. (அச்சில் உள்ளவாறு.)

“அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.”

அளவல்ல = வரைமுறையல்ல.
வீவர் → வீழ்வர் = கெடுவார்.
மற்றைய = ஏனைய.
தேற்றாதவர் = தெளியாதவர், அறியாதவர்.

“களவல்ல மற்றைய தேற்றாதவர் அளவல்ல செய்து ஆங்கே வீழ்வர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

குறள் – ௨௱௯௱ (அச்சில் உள்ளவாறு.)

“கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.”

தள்ளும்= தவறும், நீங்கும்.
தள்ளாது = தவறாது, நீங்காது.

“கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும். கள்ளாதார்க்கு புத்தேளுலகு தள்ளாது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘களவு செய்வார்க்கு உயிர்நிலை தவறும். களவு செய்யாதார்க்கு புத்தேளுலகு தவறாது’ என்பதாம்.

‘தள்ளும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.”

தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.

நன்றி.
வாழ்க தமிழ்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button