இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு - ௬௰௨. ஆள்வினையுடைமை (செயலை ஆளும் திறம்).

குறள் – ௬௱௰௧ (அச்சில் உள்ளவாறு).

“அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.”

அருமை = அரியது, அருஞ்செயல்.
அசாவாமை = தளராமை.
பெருமை = சிறப்பு.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“செய்தற்கு அரியதென்று மனந்தளராமை வேண்டும். முயற்சி செயலை முடித்து அதற்குரிய பெருமையைத்தரும்” என்பதாம்.

‘என்று’ என்னும் இடைச்சொல் ‘உடைத்து’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“அருமை யுடைத்தென்று* அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.”

*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௬௱௰௨ (அச்சில் உள்ளவாறு).

“வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை
தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு.”

வினைக்குறை = செயல் முடியாமை.
வினை = செயல்.
கெடல் = கெடுதல்.
ஓம்பல் = விலக்கல்.
தீர்ந்தாரின் = முடித்தாரின்.
தீர்ந்தன்று = முடிவதன்று.

“வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு வினைக்கண் வினைகெடல் ஓம்பல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“வினைக்குறையை முடிப்பாரை உலகு விடாது. செயலை முழுமையாக முடிப்பாரை உலகு சிறப்பிக்கும். எனவே செய்யும் செயல் முடியாமையை விலக்குக. தொடங்கிய செயலை செய்து முடிப்பாரை உலகு சிறப்பிக்கும்” என்பதாம்.

‘தீர்ந்தாரின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘தீர்ந்தார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘தீர்ந்தன்று’ என்பதன்கண் வந்த ‘அன்று’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று* உலகு.”

* குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௬௱௰௩ (அச்சில் உள்ளவாறு).

“தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே
வேளாண்மை யென்னுஞ் செருக்கு.”

தாளாண்மை = ஊக்கம், விடாமுயற்சி.
தகைமை = உயர்குணம்.
தங்கிற்றே = பொருந்தியதே.
வேளாண்மை = உதவுதல்.
செருக்கு = மேன்மை.

“வேளாண்மையென்னும் செருக்கு தாளாண்மையென்னும் தகைமைக்கண் தங்கிற்றே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“உதவுதலென்னும் மேன்மை விடாமுயற்சியென்னும் உயர்குணத்தின்கண் பொருந்தியதே” என்பதாம்.

‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘தாளாண்மை’, ‘வேளாண்மை’ என்னும் பெயர்களுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘தகைமைக்கண்’ என்பதில் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘தகைமை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“தாளாண்மை யென்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை யென்னும் செருக்கு.”

 

குறள் – ௬௱௰௪ (அச்சில் உள்ளவாறு).

“தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.”

தாளாண்மை = விடாமுயற்சி, ஊக்கம்.
வேளாண்மை = உதவுதல்.
பேடி = வீரமற்றவன்.
வாளாண்மை = போரிடுதல்.
கெடும் = இல்லையாகும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“விடாமுயற்சியற்றவனது உதவுதல் வீரமற்றவன் போரிடுதலைப்போல இல்லையாகும்” என்பதாம்.

‘போல’ என்னும் உவமச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போல கெடும்.”

 

குறள் – ௬௱௰௫ (அச்சில் உள்ளவாறு).

“இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றுந் தூண்.”

விழையான் = விரும்பான்.
விழைவான் = விரும்புவோன்.
கேளிர் = சுற்றம்.
துடைத்து = நீக்கி.
ஊன்றும் = தாங்கும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“இன்பத்தை விரும்பாது செயலை விரும்புவோன் தனது சுற்றத்தாரின் துன்பங்களை நீக்கி அவரைத்தாங்கும் தூணாவான்” என்பதாம்.

‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது. வினைவிழைவான், தன் ஆகிய இருசொற்கிடையில் எதுவும் தொகவில்லை.

‘துடைத்தூன்றும் தூண்’ என்னும் பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றும் தூண்.”

 

குறள் – ௬௱௰௬ (அச்சில் உள்ளவாறு).

“முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
யின்மை புகுத்தி விடும்.”

முயற்சி = ஊக்கம்.
திரு = செல்வம் உள்ளிட்ட மேன்மைகள்.
ஆக்கும் = உருவாக்கும்.
முயற்றின்மை = ஊக்கமின்மை.
இன்மை = வறுமை உள்ளிட்ட இல்லாமை.

“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மைபுகுத்திவிடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஊக்கம் செல்வம் உள்ளிட்ட மேன்மைகளை உருவாக்கும். ஊக்கமின்மை வறுமை உள்ளிட்ட இல்லாமைகளுள் தள்ளிவிடும்” என்பதாம்.

‘ஆக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

“முயற்றின்மை” என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.”

 

குறள் – ௬௱௰௭ (அச்சில் உள்ளவாறு).

“மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான்
தாளுளா டாமரையி னாள்.”

மடி = சோம்பல்.
உளாள் → உள்ளாள் = வாழ்கிறாள்.
மாமுகடி = பெரியவள், மூதேவி (ஒருபெயர்ப்பன்மொழி).
தாள் → தாளாண்மை = விடாமுயற்சி, ஊக்கம்.
தாமரையினாள் = திருமகள்.

“மடியுளாள் மாமுகடி மடியிலான் தாளுளாள் தாமரையினாள் என்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“சோம்பலின்கண் மூதேவி வாழ்கிறாள். சோம்பலில்லா விடாமுயற்சியில் தாமரைமலரில் வீற்றிருக்கும் திருமகள் வாழ்கின்றாளென சான்றோர் கூறுவர்” என்பதாம்.

‘தாளுளாள்’ (தாளாண்மைக்கண் உள்ளாள்) என்பதன்கண் வந்த ‘உள்ளாள்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.”

 

குறள் – ௬௱௰௮ (அச்சில் உள்ளவாறு).

“பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவந்
தாள்வினை யின்மை பழி.”

பொறி = முன்வினைப்பயன், ஊழ், விதி.
பழியன்று = குற்றமன்று.
அறிவறிந்து = அறியவேண்டியதை அறிந்து.
ஆள்வினை = விடாமுயற்சி, ஊக்கம்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“மேன்மைக்கு ஏதுவாகிய முன்வினைப்பயன் இல்லாமை யார்க்கும் குற்றமன்று. அறியவேண்டியதை அறிந்து விடாமுயற்சியுடன் செய்யாமையே குற்றமாகும்” என்பதாம்.

‘பழியன்று’ என்பதன்கண் வந்த ‘அன்று’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘அறிந்து’ என்னும் வினையெச்சம் ‘ஆள்வினை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“பொறியின்மை யார்க்கும் பழியன்று* அறிவறிந்து*
ஆள்வினை யின்மை பழி.”

*குற்றியலுகரங்களாகிய றுகரமும் துகரமும் அலகுபெறா.

 

குறள் – ௬௱௰௯ (அச்சில் உள்ளவாறு).

“தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.”

தெய்வத்தான் = ஊழ்வினையான்.
ஆகாது = கருதிய பயன் கிட்டாது. மெய்வருத்த = உழைப்புக்கு, பட்டபாடிற்கு.
கூலி = பயன்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“செய்யும் வினை ஊழ்வினையான் கருதிய பயனைத்தாராது போனாலும் முயற்சியுடன் உழைத்த உழைப்புக்குரிய பயனைத்தரும். எனவே ஊழ்வினையைக்கருதாது முயல்க” என்பதாம்.

‘தெய்வத்தான்’ என்பதன்கண் வந்த ‘ஆன்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியையேற்று ‘தெய்வம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘எனினும்’ என்பதன்கண் வந்தது தெரிநிலைவும்மை. தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

‘மெய்வருத்தக்கூலி’ என்பது ‘குடிக்கூலி’ என்பதுபோன்ற இனமன்று. ‘வருத்த’ என்னும் வினையெச்சம் ‘கூலி’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்.”

 

குறள் – ௬௱௨௰ (அச்சில் உள்ளவாறு).

“ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்.”

ஊழ் = முன்வினைப்பயன்.
உப்பக்கம் = புறம்.
உலைவின்றி = கலங்காது, ஊக்கங்குன்றாது.
தாழாது = தளராது.
உஞற்றுபவர் = முயல்பவர்.

“உலைவின்றி தாழாது உஞற்றுபவர் ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஊக்கங்குன்றாது தளராது முயல்பவர் முன்வினைப்பயனையும் புறங்காண்பர் (முன்வினைப்பயனையும் கடப்பர்)” என்பதாம்.

‘ஊழையும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

‘காண்பர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘இன்றி’ என்னும் வினையெச்சம் ‘உலைவு’ என்னும் பெயரைத்தழுவி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘தாழாது’ என்னும் வினையெச்சம் ‘உஞற்றுபவர்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றி
தாழாது* உஞற்று பவர்.”

 

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button