
குறள் – ௭௱௰௧ (அச்சில் உள்ளவாறு).
“அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
றொகையறிந்த தூய்மை யவர்.”
அவை = அறிஞர்குழு.
தொகை = தொகுதி, தொகுப்பு.
தூய்மையவர் = நேரியர்.
“சொல்லின்தொகையறிந்த தூய்மையவர் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தொகுத்துச்சொல்லுவதை அறிந்த நேரியர் அவையின் தன்மையை அறிந்து ஆராய்ந்து சொல்லுக” என்பதாம்.
வினையெச்சங்கள் தம்முள் புணருமாயினும் பிரித்து பொருளறிவதாயின் புணரா. புணர்மொழி புணர்ந்தநிலையிலேயே பொருள்தரும்; பிரிந்து பொருள்தரா. ‘அறிந்தாராய்ந்து’ என்னும் இருவேறுவினைகள் புணராது தத்தம் தனிப்பொருளைத்தரும்.
செம்மைவடிவம் —
“அவையறிந்து* ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
றொகையறிந்த தூய்மை யவர்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௰௨ (அச்சில் உள்ளவாறு).
“இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லி
னடைதெரிந்த நன்மை யவர்.”
இடை = காலம், பொருத்தமான சூழல்.
நடை = வழக்காறு.
நன்மையவர் = நன்மைவிழைபவர், நல்லறிஞர்.
“சொல்லினடைதெரிந்த நன்மையவர் இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“சொற்களின் வழக்காறுகளைத்தெரிந்த நல்லறிஞர்/நன்மைவிழைபவர் பொருத்தமான சூழலும் காலமும் தெரிந்து நன்குணர்ந்து சொல்லுக” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௭௱௰௩ (அச்சில் உள்ளவாறு).
“அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉ மில்.”
சொல்லன் → சொல்வதன் → சொல்வதை.
சொல்லின் வகை = சொல்லின் கூறுபாடு.
வல்லதூஉம் → வல்லதும் = கற்று தேர்ந்ததும்.
இல் = இல்லை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“தாம் பேசும் அவையின் தன்மையை அறியாது பேச துணிபவர் சொற்கூறுபாடுகளை அறியார். மேலும் அவர் கற்றுத்தேர்ந்ததும் இல்லாதாகும்” என்பதாம்.
‘வல்லதூஉம்’ என்னும் அளபெடையை விட்டிசைக்க கருத்து சிறக்கும். ‘வல்லதூஉமில்’ என்னும் புணர்மொழியில் இல் (இல்லை) என்னும் குறிப்புவினைமுற்றை அறிவதாயின் புணர்ச்சியைப்பிரிக்காமல் இயலாது. புணர்மொழியின் புணர்ச்சியை நீக்கி பொருளறிவதாயின் புணர்த்தவேண்டா.
செம்மைவடிவம் —
“அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.”
குறள் – ௭௱௰௪ (அச்சில் உள்ளவாறு).
“ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.”
ஒளியார் → ஒள்ளியார் என்பதன் இடைக்குறை.
ஒள்ளியார் = தெள்ளிய அறிவுடையோர்.
வெளியார் → வெள்ளையர் = தெள்ளிய அறிவற்றோர்.
வான்சுதை வண்ணம் = சுண்ணாம்பின் வெண்மை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“தெள்ளிய அறிவுடையோர்குழாத்தில் தெள்ளிய அறிவுடையோர் ஆகுக. தெள்ளிய அறிவற்றோர்குழாத்தில் சுண்ணாம்பின் வெண்மைநிறம்போல் ஒத்திருக்க” என்பதாம்.
‘ஒ(ள்)ளியார்முன்’ என்பதன்கண் வந்த ‘முன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘ஒள்ளியார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.”
குறள் – ௭௱௰௫ (அச்சில் உள்ளவாறு).
“நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.”
நன்று = நன்மை.
முதுவருள் = ஆன்றோர்க்குழுவினுள்.
முந்து = முற்பட்டு.
கிளவா = பேசா.
செறிவு = முதிர்ச்சி.
“முதுவருள் (ஆன்றோர்க்குழுவினுள்) முந்து கிளவாச்செறிவு நன்றென்றவற்றுள்ளும் நன்றே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஆன்றோரது அவையின்கண் அவரினும் முற்பட்டு பேசா முதிர்ச்சி நன்மையென்று சொல்லப்பட்டவைகளுள்ளும் நன்மையானது” என்பதாம்.
‘அவற்றுள்ளும்’ என்பது தொகுப்பும்மை. தொகுப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.”
குறள் – ௭௱௰௬ (அச்சில் உள்ளவாறு).
“ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல
மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு.”
ஆற்றின் = செய்யின்.
தளர்ந்த = இழந்த.
அற்றே = ஒத்ததே.
வியன் = அகண்ட.
வியன்புலம் = பேரறிவு.
இழுக்கு = குற்றம்.
“வியன்புலம் ஏற்றுணர்வார்முன்னர் இழுக்காற்றின் நிலை தளர்ந்தற்றே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பேரறிவினால் உணர்வார்முன்னர் குற்றஞ்செய்யின் செய்வார் தந்நிலையிழந்தை ஒக்கும்” என்பதாம்.
‘ஆற்றின்’ என்னும் வினையெச்சம் ‘நிலை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘முன்னர்’ என்னும் இடயிடைச்சொல் ‘உணர்வார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புல
மேற்றுணர்வார் முன்னர் இழுக்கு.”
குறள் – ௭௱௰௭ (அச்சில் உள்ளவாறு).
“கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச்
சொற்றெரிதல் வல்லா ரகத்து.”
கசடற = குற்றமற.
சொற்றெரிதல் = சொற்களைத்தேர்தல்.
வல்லாரகத்து = இயலுவாரிடத்து.
“கசடற சொற்றெரிதல் வல்லாரகத்து கற்றறிந்தார்கல்வி விளங்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“குற்றமற்ற சொற்களைத்தெரிவுசெய்ய இயலுவாரிடத்து கற்றறிந்தாரது கல்வி விளங்கும்” என்பதாம்.
‘விளங்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘கசடற’ என்பதன்கண் வந்த ‘அற’ என்னும் வினையெச்சம் ’சொல்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடற
சொற்றெரிதல் வல்லா ரகத்து.”
குறள் – ௭௱௰௮ (அச்சில் உள்ளவாறு).
உணர்வதுடையார் = தாமே உணரவல்லார்.
வளர்வதன் = வளரும் (பயிர்).
சொரிதல் = நீரூற்றுதல்.
அற்று = போன்றது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“தாமே உணரவல்லார்முன் ஒன்றனைச்சொல்லல் வளரும்பயிருள்ள பாத்தியுள் நீர்சொரிந்ததைப்போன்றது. பயிர் செழித்து வளரும்” என்பதாம்.
‘உடையார்முன்’ என்பதன்கண் வந்த ‘முன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘உடையார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பாத்தியுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பாத்தி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.”
குறள் – ௭௱௰௯ (அச்சில் உள்ளவாறு).
“புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு
ணன்கு செலச்சொல்லு வார்.”
புல்லவை → புல்லோரது அவை = கல்லாரது அவை.
பொச்சாந்தும் = மறந்தும்.
செல = ஏற்குமாறு.
“நல்லவையுள் நன்கு செலச்சொல்லுவார் புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நல்லோரது அவையில் நன்கு ஏற்குமாறு சொல்லுவார் கல்லாரது அவையில் மறந்தும் சொல்லற்க” என்பதாம்.
‘புல்லவையுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘புல்லவை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நல்லவையுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நல்லவை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பொச்சாந்தும்’ என்பது எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்.”
குறள் – ௭௱௰௨௰ (அச்சில் உள்ளவாறு).
“அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த
ரல்லார்முற் கோட்டி கொளல்.”
அங்கணத்துள் = கழிவுநீரில, .
உக்க = ஊற்றிய.
அற்று = போன்றது.
ஆல் = அசைச்சொல்.
தங்கணத்தர் = தம்மையொத்தார்.
கோட்டி கொளல் = அவையின்கண் பேசுதல்.
“தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல் அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தம்மையொத்தார் அல்லார்முன் அரும்பொருள்சொல்லல் கழிவுநீரில் அமிழ்தத்தை ஊற்றியதைப்போன்றது” என்பதாம்.
‘அங்கணத்துள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அங்கணம்’ என்னும் பெயருடன் அத்துச்சாரியைபெற்று புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘உக்க அமிழ்து’ என்னும் பெயரெச்சத்தொடரில் ‘அமிழ்து’ என்னும் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘அல்லார்முன்’ என்பதன்கண் வந்த ‘முன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அல்லார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அற்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்த
ரல்லார்முன் கோட்டி கொளல்.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




