
குறள் – ௲௩௱௰௧ (அச்சில் உள்ளவாறு).
“பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
பெண்ணியலார் = பெண்மைக்குரிய பண்புகள் இல்லாது உடலியற்கையால் பெண் எனப்படுவோர்.
கண்ணில் பொதுவுண்பர் = விரும்பிக்காண்பதால் காட்சியளவான் புணர்வர்.
நண்ணேன் = விரும்பேன்.
பரத்தமை = மனையாளுடன்மட்டும் நில்லாது பிற பெண்டிரைப்புணர்தல்.
பரத்த = பரத்தமையுள்ளோன். பொதுமகளிரைப்புணர்வோனே.
இது தலைமகள்கூற்று.
“பரத்த பெண்ணியலார் எல்லாரும் கண்ணில் பொதுவுண்பர் நின்மார்புநண்ணேன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பரத்த நின்னை பெண்மைக்குரிய பண்புகள் இல்லாது உடலியற்கையால் பெண் எனப்படுவோரெல்லாரும் விரும்பிக்கண்டு காட்சியளவான் பொதுவாக புணர்வதால் நினது மார்பினைத்தழுவ விரும்பேன்” என்பதாம்.
தலைமகள் தலையினை நோக்கி இன்புற்றவாறே உடலியற்கையால் பெண் எனப்படுவோரும் நோக்கி இன்புறுவரென கருதி அவர்பால் பொறாமைகொள்வதால், புலவிநுணக்கமாயிற்று.
‘பெண்ணியலார்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘எல்லாரும்’ என்பது முற்றும்மைச்சொல் புணரின் முற்றும்மைப்பொருட்செறிவு குன்றும். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘கண்ணில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு மூன்றாம்வேற்றுமைப்பொருளில் வந்து ‘கண்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பெண்ணியலார் எல்லாரும் கண்ணில் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.”
குறள் – ௲௩௱௰௨ (அச்சில் உள்ளவாறு).
“ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.”
ஊடல் = புலத்தல், பிணங்குதல்.
இருந்தேமா = இருந்தோமா.
யாம்தம்மை = எம்மை.
நீடுவாழ்க= நெடிதினிது வாழ்க.
என்பாக்கு அறிந்து = என்பாரென அறிந்து.
இது தலைமகள்கூற்று.
“ஊடியிருந்தேமா யாந்தம்மை
நீடுவாழ்க என்பாக்கு அறிந்து தும்மினார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“யாம் பிணங்கியிருந்தோமா தும்முவோரை வாழ்த்தும் மரபறிந்த கணவர் தும்மினால் பிணக்குநீங்கி தம்மை வாழ்த்துவாளென்பதை அறிந்து தும்மினார்” என்பதாம்.
இயற்கையாக வந்த தும்மலை தனது ஊடலைக்கைவிட்டு மரபின்வழி வாழ்துவாளென கருதி தலைமகன் தும்மியதாக கூறுவது புலவிநுணக்கம்.
‘ஊடியிருந்தேமாத்தும்மினார்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. ‘ஊடல்’ தலைமகள்வினை, ‘தும்மல்’ தலைமகன்வினை. இருவேறு வினைமுதல்களின் வினைகள் புணரா.
செம்மைவடிவம் —
“ஊடி யிருந்தேமா தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.”
குறள் – ௲௩௱௰௩ (அச்சில் உள்ளவாறு).
“கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருத்தியைக்
காட்டிய சூடினீ ரென்று.”
கோட்டுப்பூ = மரக்கிளைகளில் மலரும் பூ. தலைமகன் வாழும் நிலத்திற்குரிய பூ இது அன்றெனக்ககருதலாம்.
சூடினும் = அணிந்தாலும்.
காயும் = வெகுளும், சினக்கும்.
ஒருத்தியை = பிறளொருத்திக்கு. இரண்டாம்வேற்றுமைவுருபு நான்காம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
காட்டிய = காட்ட.
இது தலைமகன்கூற்று. “கோட்டுப்பூசூடினும் ஒருத்தியைக்காட்டிய சூடினீரென்று காயும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நான் கோட்டுப்பூவினை அணிந்தாலும் நும் காதலிக்கு இப்பூவணியைக்காட்ட சூடினீரென்று வெகுளும்” என்பதாம். தலைமகன் இயல்பாக பூவணிதலும் (மலர்வளை) தனக்காக அல்லயென தலைமகள் புலப்பது புலவிநுணுக்கம்.
‘கோட்டுப்பூவினைச்சூடினும்’ என்னும் விரிநிலையின் தொகைநிலை ‘கோட்டுப்பூசூடினும்’ என்பது. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும். இடைவெளிநீக்கமும் ஒருசொன்னீர்மையும் தொகையாற்றலை உணர்த்தும்.
‘காயும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஒருத்தியை’ என்பது ‘ஒருத்திக்கு’ எனப்பொருள்தரும். இரண்டாம்வேற்றுமைவுருபு நான்காம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
செம்மைவடிவம் —
“கோட்டுப்பூ சூடினுங் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீ ரென்று.”
குறள் – ௲௩௱௰௪ (அச்சில் உள்ளவாறு).
“யாரினுங் காதல மென்றேனா வூடினாள்
யாரினும் யாரினு மென்று.”
யாரினும் = யாவரினும்.
காதலம் = அன்புடையேம்.
என்றேனா = எனச்சொன்னேனா.
ஊடினாள் = பிணங்கினாள், புலந்தாள்.
யாரினும் யாரினுமென்று = யாரைவிட யாரைவிடயென.
இது தலைமகன்கூற்று.
“யாரினும் காதலமென்றேனா யாரினும் யாரினுமென்று ஊடினாள்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையேமென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது நீர் அன்புகொண்டார் பலருள்ளும் யாரினும் யாரினும் அன்புடையீரென்று சொல்லி ஊடினாள்” என்பதாம். தலைமகன் அன்பின் மிகுதியால் சொன்னதற்கு வேறுபட்டு புலப்பது புலவிநுணுக்கம்.
‘யாரினும் (யாவரினும்)’ என்னும் முற்றும்மைச்சொல் புணரின் முற்றும்மைப்பொருட்செறிவு குன்றும். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘என்றேனாவூடினாள்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. ‘என்றேன்’ என்பது தலைமகன்வினை. ஊடல்’ தலைமகள்வினை. இருவேறு வினைமுதல்களது வினைகள் புணரா. மேலும் ‘என்றேனா’ என்னும் வினாப்பெயர் புணராது தனித்துநின்று தனது வினாப்பொருளை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“யாரினும் காதல மென்றேனா ஊடினாள்
யாரினும் யாரினு மென்று.”
குறள் – ௲௩௱௰௫ (அச்சில் உள்ளவாறு).
“இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.”
இம்மைப்பிறப்பில் = இப்பிறவியில்.
பிரியலம் = பிரியேன்.
என்றேனா = எனச்சொன்னேனா.
கண்ணிறைநீர் = கண்களில் நிறைந்த கண்ணீர்.
இது தலைமகன்கூற்று.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இப்பிறவியில் உன்னைப்பிரியேனென சொன்னேனா அவ்வாறெனில் அடுத்துவரும் பிறவிகளில் பிரியக்கருதுகிறாரென நினைத்து கண்களை கண்ணீரால் நிறைத்தாள். கணவருடன் வாழ்தல் எழுபிறவிக்குமானது” என்பதாம்.
‘பிறப்பில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பிறப்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘என்றேனா’ என்னும் வினாச்சல் புணரின் வினாப்பொருட்செறிவு குன்றும். வினாச்சொல் புணராது தனது பொருளை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“இம்மைப் பிறப்பில் பிரியல மென்றேனா
கண்ணிறை நீர்கொண் டனள்.”
குறள் – ௲௩௱௰௬ (அச்சில் உள்ளவாறு).
“உள்ளினே னென்றேன்மற் றென்மறந்தீ ரென்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.”
உள்ளினேன் = நினைத்தேன்.
மற்று = வினைமாற்றுப்பொருளில் வந்த இடைச்சொல்.
என் = ஏன்.
புல்லாள் = தழுவாள். ‘புல்லாள்’ என்னும் எதிர்மறைவினைமுற்று முற்றெச்சமாகி ‘புல்லாது’ என்னும் வினையெச்சப்பொருளைத்தரும்.
புலத்தக்கனள் = புலத்தலுக்கு, பிணங்குதலுக்கு அமைந்தாள்.
இது தலைமகன்கூற்று.
“உள்ளினேனென்றேன் மற்று என் மறந்தீரென்று என்னைப்புல்லாள் புலத்தக்கனள்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நான் தலைமகளிடம் உன்னை நினைத்தேனென்றேன். மறந்ததாலன்றோ நினைத்தீரென கூறி ஏன் மறந்தீரென தழுவாது பிணங்கினாள்” என்பதாம்.
‘என்’ என்னும் வினாச்சொல் வருமொழியாகி புணரின் வினாப்பொருட்செறிவு குன்றும். வினாச்சொல் புணராது தனித்துநின்று தனது வினாப்பொருளை உணர்த்தும்.
‘என்று’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘மறந்தீர்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உள்ளினே னென்றேன்மற்று* என்மறந்தீ ரென்று*என்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௩௱௰௭ (அச்சில் உள்ளவாறு).
“வழுத்தினா டும்மினே னாக வழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீ ரென்று.“
வழுத்தினாள் = வாழ்த்தினாள்.
அழித்தழுதாள் = வாழ்த்தியதை மறுத்து அழுதாள்.
யாருள்ளி = யாரை நினைத்து.
இது தலைமகன்கூற்று. “தும்மினேனாக வழுத்தினாள் அழித்து யாருள்ளி தும்மினீரென்று அழுதாள்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“யான் தும்மினேனா வாழ்த்தும் மரபுபற்றி எம்மை வாழ்த்தினாள். உடனே வாழ்த்தினை மறுத்து யார் நினைத்ததால் தும்மினீரென்று அழுதாள்” என்பதாம். தான் நினைத்ததால் கணவர் தும்மினாரென்பதை மறைத்து யாரோ ஒருத்தி நினைக்க கணவர் தும்மியதாக புலத்தற்கு காரணந்தேடுவது புலவிநுணுக்கம்.
‘வழுத்தினாள்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் ‘தும்மினேன்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதனை உருவகப்படுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘யாருள்ளித்தும்மீரென்று’ என்பது பொருளில்லாப்புணர்ச்சி. ‘உள்ளுதல்’ ஒருத்திவினை. ‘தும்முதல்’ தலைமகன்வினை. இருவேறு வினைமுதல்களது வினைகள் புணராது.
செம்மைவடிவம் —
“வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளி தும்மினீ ரென்று.“
குறள் – ௲௩௱௰௮ (அச்சில் உள்ளவாறு).
“தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள
லெம்மை மறைத்திரோ வென்று.”
தும்மு = தும்மலை.
செறுப்ப = அடக்க.
நுமருள்ளல் = நும்மை நினைப்பாரை. எம்மை = எமக்கு.
இது தலைமகன்கூற்று.
“தும்மு செறுப்ப நுமருள்ளல்
எம்மை மறைத்திரோவென்று அழுதாள்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“இவள் நெஞ்சம் நோகலாகாதென யான் தும்மலை அடக்க நும்மை நினைப்பாரை எமக்கு மறைத்திரோயென்று அழுதாள்” என்பதாம்.
‘தும்முசெறுப்ப’ என்பது ‘தும்மலைச்செறுப்ப’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகை. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும். இடைவெளிநீக்கமும் ஒருசொன்னீர்மையும் தொகையாற்றலை உணர்த்தும்.
‘செறுப்பவழுதாள்’ என்பது வேண்டா வன்புணர்ச்சி. புணர்ச்சியை நீக்காது ‘அழுதாள்‘ என்னும் வினைமுற்றை உணரயியலாது.
‘அழுதாள்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘உள்ளல்’ என்னும் தொழிற்பெயர் ‘எம்மை’ என்னும் தன்மைப்பெயருடன் புணராது.
‘மறைத்திரோவென்று’ என்பதன்கண் வந்த வகரவுடம்படுமெய் பொருண்மயக்கமும் ஒலிப்பெளிமையும் இல்லாதது. ‘மறைத்திரோயென்று’ என்னும் யகரவுடம்படுமெய்ப்புணர்ச்சி இக்குறைகளை நீக்கும்.
செம்மைவடிவம் —
“தும்மு செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ யென்று.”
குறள் – ௲௩௱௰௯ (அச்சில் உள்ளவாறு).
“தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ
ரிந்நீ ராகுதி ரென்று.”
தன்னை = என்னை.
உணர்த்தினும் = (அன்பை) தெளிவித்தாலும்.
காயும் = வெகுளும், சினக்கும்.
பிறர்க்கும் = ஏனையோர்க்கும்.
இந்நீரர் = இத்தன்மையர். ஆகுதிரென்று (ஆகுதிர்+என்று) = ஆவீரென்று.
இது தலைமகன்கூற்று.
“தன்னை உணர்த்தினும் பிறர்க்கும் இந்நீரர் நீர் ஆகுதிரென்று காயும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க
“இவள்மாட்டு தலைமகன் தனது அன்பினை உணர்த்தினும் நீவிர் ஏனையோர்க்கும் இத்தன்மையர் ஆவீரென்று எம்மை சினப்பாள்” என்பதாம்.
‘பிறர்க்கும்’ என்னும் எதிரது தழீஇய எச்சவும்மைச்சொல் புணரின் எச்சவும்மைப்பொருட்செறிவு குன்றும். எச்சவும்மை எதனுடனும் புணராது.
‘நீர்’ என்பது எழுவாயாகும். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதி ரென்று.”
குறள் – ௲௩௱௨௰ (அச்சில் உள்ளவாறு).
“நினைத்திருந்து நோக்கினும் காயு மனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீ ரென்று.”
நினைத்திருந்து= அவளையே மனதார நினைத்திருந்து.
நோக்கினும் = காணினும்.
காயும் = வெகுளும், சினக்கும்.
அனைத்தும் = அவயங்கள் அனைத்தும்.
யாருள்ளி = யாரைநினைத்து.
நோக்கினீரென்று = கண்டீரென்று.
இது தலைமகன்கூற்று.
“நினைத்திருந்து நோக்கினும் அனைத்தும் நீர் யாருள்ளி நோக்கினீரென்று காயும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“யாது சொல்லினும் செய்யினும் ஊடுகிறாளென சொல்லற அவளை மனமார நினைத்து நோக்கினாலும் யாருடன் என்னை ஒப்பிட்டு நோக்கினீரென்று வெகுள்வாள்” என்பதாம். ஒப்பிடக்கூடாத தன்னை மற்றொருத்தியுடன் ஒப்பிட்டு நோக்குவதாக கருதுவது புலவிநுணுக்கம்.
‘காயும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீ ரென்று.”
தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.


