இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௱௭. இரவச்சம் (இரத்தலுக்கு அஞ்சுவது).

 

குறள் – ௲௬௰௧ (அச்சில் உள்ளவாறு).

“கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு
மிரவாமை கோடி யுறும்.”

கரவாது = மறைக்காது.
உவந்து = விரும்பி.
ஈயும் = வழங்கும்.
கண்ணன்னார்கண்ணும் = கண்களைப்போன்றாரிடத்தும்.
இரவாமை = பொருள்கேளாமை.
கோடியுறும் = அளவிறந்த நன்மைதரும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“தம்மிடமுள்ளதை மறைக்காது வேண்டும்போதே வழங்கும் கண்கள்போன்று சிறந்தாரிடத்தும் பொருள்கேளாமை அளவிறந்த நன்மைதரும்” என்பதாம்.

‘கரவாது’ என்னும் வினையெச்சம் தனித்து நின்று விட்டிசைப்பதே உணர்ச்சியைத்தரும். ‘உவந்து’ என்னுஞ்சொல் ‘ஈயும்’ என்னும் வினைக்கு அடையாகும்.

‘ஈயும் கண்ணன்னார்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு உயர்வுச்சிறப்பும்மைபெற்று ‘கண்ணன்னார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“கரவாது* உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௬௰௨ (அச்சில் உள்ளவாறு).

“இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்.”

இரந்தும் =ஈயென வேண்டியே.
வேண்டின் = அவ்வாறாயின்.
பரந்து = அலைந்து திரிந்து.
கெடுக = அழிக.
உலகியற்றியான் = உலகைப்படைத்தவன், இறைவன்.

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் உலகியற்றியான் பரந்து கெடுக“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பிறரை ஈயென வேண்டியே உயிர்வாழ்வதாயின் உலகைப்படைத்தவன் அலைந்து திரிந்து அழிக” என்பதாம்.

‘இரந்தும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘வேண்டிற்பரந்து’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. இருவேறு வினைமுதற்குரிய வினைகள் புணரா.

‘கெடுக’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

 

குறள் – ௲௬௰௩ (அச்சில் உள்ளவாறு).

“இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.”

இன்மை = இல்லாமை.
இடும்பை = துன்பம்.
இரந்து = வேண்டி.
வன்மை = தீமை.
வன்பாடு = ஆராயாது செய்து நிற்றல்.
இல் = இல்லை.

“இல்லாமையென்னும் துன்பத்தை வேண்டிப்பெறுவதால் தீர்ப்போமென்னும் தீயையின் ஆராயாது செய்து நிற்றல் இல்லை” என்பதாம்.

‘இல் (இல்லை)’ என்னும் குறிப்புவினைமுற்று வருமொழியாகி புணர்ந்தால் வேற்றுமைவுருபாகவும் மயங்கும். எனவே புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்டது* இல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௬௰௪ (அச்சில் உள்ளவாறு).

“இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்
காலு மிரவொல்லாச் சால்பு.”

இடமெல்லாம் = இடமெனப்படும் உலகெல்லாம்.
கொள்ளாத்தகைத்தே = முழுதும் ஏற்க இயலாத அளவினது.
இடமில்லாக்காலும் = வழியில்லாதபோதும்.
இரவு = வேண்டல்.
ஒல்லா = உடன்படாத.
சால்பு= சான்றாண்மை.

“இடமில்லாக்காலும் இரவொல்லாச்சால்பு இடமெல்லாம் கொள்ளாத்தகைத்தே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“வழியில்லாதபோதும் ஈயென வேண்ட உடன்படாத சான்றாண்மை இடமெனப்படும் உலகெல்லாம் ‌முழுதும் ஏற்க இயலாத அளவினது” என்பதாம்.

‘இடமெல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.

‘தகைத்தே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.

‘இடமில்லாக்காலும்’ என்பது ‘இடமுண்டு’ என்னும் பொருளில் வந்த எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.”

 

குறள் – ௲௬௰௫ (அச்சில் உள்ளவாறு).

“தெண்ணீ ரடுபுற்கை யாயினுந் தாடந்த
துண்ணலி னூங்கினிய தில்.”

தெண்ணீர் = தெளிந்த நீர்.
அடு = ஆக்கு.
அடுபுற்கை = ஆக்கிய கூழ், கஞ்சி சோறு.
தாள் = முயற்சி.
ஊங்கு = மிக, அதனைவிட.
இல் = இல்லை.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“தெள்ளிய நீர்போலும் அடர்வில்லாத கூழாயினும் தமது முயற்சியால் அடைந்ததாயின் அதனை உண்ணலின் மிகச்சிறந்தது இல்லை” என்பதாம்.

‘புற்கையாயினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘தாடந்தது’ என்னும் புணர்ச்சில் இடையில் எதுவும் தொகவில்லை. ‘முயற்சி தந்தது’ என்னும் பொருள்தரும் இத்தொடரில் ‘தாள்’ என்பது எழுவாயாகும். எழுவாய் எதனுடனும் புணராது.

‘உண்ணலின்’ என்பதன்கண் ஒப்புப்பொருளில் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘உண்ணல்’ என்னும் தொழிற்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘இனியதில்’ என்பதன்கண் வந்த ‘இல் (இல்லை)’ என்னும் குறிப்புவினைமுற்று வருமொழியாகி புணர்ந்தால் வேற்றுமைவுருபாகவும் மயங்கும். பொருண்மயங்குபுணர்ச்சி நிகழாது.

செம்மைவடிவம் —
“தெண்ணீ ரடுபுற்கை யாயினும் தாள்தந்த
துண்ணலின் ஊங்கினியது* இல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௬௰௬ (அச்சில் உள்ளவாறு).

“ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிளிவந்த தில்.”

இரப்பினும் = வேண்டினும்.
இரவின் = வேண்டலின்.
இளி = இழிவு.
இல் = இல்லை.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“ஆவிற்கு வேட்கைதணிக்க பிறரிடம் ஈயென நீரை வேண்டினும் நாவிற்கு அவ்வேண்டலின் இழிவானது இல்லை” என்பதாம்.

‘என்று’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘நீர்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘இரப்பினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘நாவிற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘இரவு’ என்னும் வினைசாராது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

‘வந்ததில்’ என்பதன்கண் வந்த ‘இல் (இல்லை)’ என்னும் குறிப்புவினைமுற்று புணர்ச்சியால் வேற்றுமைவுருபாகவும் மயங்கும். பொருண்மயங்குபுணர்ச்சி நிகழாது.

செம்மைவடிவம் —
“ஆவிற்கு நீரென்று* இரப்பினும் நாவிற்கு*
இரவின் இளிவந்தது* இல்.”

*குற்றியலுகரங்களாகிய றுகரமும் குகரமும் துகரமும் அலகுபெறா.

 

குறள் – ௲௬௰௭ (அச்சில் உள்ளவாறு).

“இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற்
கரப்பா ரிரவன்மி னென்று.”

இரப்பன் = வேண்டுவன்.
இரப்பாரை = பொருள்வேண்டுவாரை.
இரப்பின் = வேண்டின்.
கரப்பார் = மறைப்பார்.
இரவன்மின் = வேண்டன்மின்.
என்று = என.

“இரப்பின்
கரப்பாரிரவன்மின்னென்று இரப்பாரையெல்லாம் இரப்பன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“வேண்டின் மறைப்பாரை வேண்டாதீரென்று ஈயென வேண்டுவோரையெல்லாம் (யான்) வேண்டுவன்” என்பதாம்.

‘இரப்பன்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.

‘இரப்பின்’ என்னும் வினையெச்சம் ‘கரப்பார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“இரப்பன் இரப்பாரை யெல்லாம் இரப்பின்
கரப்பா ரிரவன்மின் னென்று.”

 

குறள் – ௲௬௰௮ (அச்சில் உள்ளவாறு).

“இரவென்னு மேமாப்பிற் றோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.”

இரவு = வேண்டல்.
ஏமாப்பு = காவல்.
இல் = இல்லாத.
தோணி = படகு.
கரவு = மறைத்தல்.
பார் = பாறை.
பக்கு = பிளவு.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“ஈயென வேண்டலென்னும் காவலில்லாப்படகு மறைத்தலென்னும் பாறையால் தாக்கப்பட பிளவுறும்” என்பதாம்

‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘இரவு’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஏமாப்பில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்பது எதிர்மறைக்குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இரவென்னும் ஏமாப்பு*இல் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.”

*குற்றியலுகரமாகிய புகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௬௰௯ (அச்சில் உள்ளவாறு).

“இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள
வுள்ளதூஉ இன்றிக் கெடும்.”

இரவு = வேண்டல்.
உள்ள = நினைக்க.
கரவு = மறைத்தல்.
உள்ளதூஉம் → உள்ளதும் = இருப்பதும்.
இன்றி = இல்லாது.
கெடும்= அழியும்.

“ஈயென வேண்டுவதை நினைக்க உள்ளம் உருகும். மறைத்தலை நினைக்க உருகும் உள்ளமும் இல்லாது அழியும்” என்பதாம்.

‘உள்ள’ என்னும் வினையெச்சம் ‘உள்ளம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘உள்ள’ என்னும் வினையெச்சம் ‘உள்ளதும்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘உள்ளதூஉமின்றி’ என்னுமிடத்தில் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடம் புணராது.

செம்மைவடிவம் —
“இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉ மின்றி கெடும்.”

 

குறள் – ௲௭௰ (அச்சில் உள்ளவாறு).

“கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர்
சொல்லாடப் போஒ முயிர்.”

கரப்பவர் = மறைப்பவர்.
யாங்கொளிக்கும் = எவ்விடத்து ஒளிந்து நிற்கும்.
கொல், ஓ = அசைநிலைகள்
இரப்பவர் = வேண்டுபவர்.
சொல்லாட = இல்லையென்று சொல்ல.
போஒம் → போம் = போகும்.

“கரப்பவர் சொல்லாட இரப்பவருயிர் போஒம் கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘கரப்பவர்’ என்பது முன்னின்றும் பொருள்தரும்.

“மறைப்பவர் இல்லையென ஈயென வேண்டுபவரது உயிர் நீங்கும். அவ்வாறிருக்க இல்லையென்று மறைப்பவரது உயிர் எவ்விடத்து சென்று ஒளிந்து நிற்கும்” என்பதாம்.

‘கரப்பவர்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘யாங்கு’ என்னும் வினைசாராது இயல்புப்பொருள்தரும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

‘கொல், ஓ’ என்னும் அசைநிலைகள் ‘ஒளிக்கும்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

போஒம் (போம்) என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கரப்பவர்க்கு* யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button