
குறள் – ௭௱௪௰௧ (அச்சில் உள்ளவாறு).
“ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.”
ஆற்றுபவர் = செய்பவர். அதிகாரமுறையான் பிறர்மேல் படையெடுப்பவர்.
அரண் = காவல், கோட்டை.
பொருள் = தலைமையானது, இன்றியமையாதது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பிறர்மேல் படையெடுப்பவர்க்கும் அரண் இன்றியமையாதது. அப்படையெடுப்புக்கு அஞ்சி தன்னைக்காத்துக்கொள்வார்க்கும் அரண் இன்றியமையாதது” என்பதாம்.
‘ஆற்றுபவர்க்கும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
‘பொருள்’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருளைத்தருகிறது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘அஞ்சி’ என்னும் வினையெச்சம் ‘தற்போற்றுபவர்’ (தன்னை போற்றுபவர்) என்பதன்கண் வந்த ‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சிதற்
போற்று பவர்க்கும் பொருள்.”
குறள் – ௭௱௪௰௨ (அச்சில் உள்ளவாறு).
“மணிநீரு மண்ணு மலையு மணிநிழற்
காடு முடைய தரண்.”
மணிநீர் = மணிகளைப்போலும் தெள்ளிய நீரையுடைய அகழி.
மண் = வெற்றுநிலம் அல்லது மண்திட்டுகளையுடைய நிலம்.
அணிநிழற்காடு = செறிந்த நிழலையுடைய அடர்ந்தகாடு.
அரண் = காவல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘மணிகளைப்போலும் தெள்ளிய நீரையுடைய அகழியும், வெற்று அல்லது மண்திட்டுகளையுடைய நிலமும், மலைகளும், செறிந்த நிழலையுடைய அடர்ந்தகாடும் உடையது காவல்’ என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் புணருமாயினும் வேறுவேறு குணங்களைக்கொண்டவற்றைப்பிரித்து அறியவேண்டின் புணர்த்தவேண்டா. இறுதியெண்ணும்மை எதனுடனும் புணராது.
‘உடையதரண்’ என்பது ‘உடையது அரண்’ என்னும் முன்பின்னாக மாறிய வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது* அரண்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௪௰௩ (அச்சில் உள்ளவாறு).
“உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கி
னமைவர ணென்றுரைக்கு நூல்.”
உயர்வு = உயரம்.
திண்மை = உறுதி.
அருமை = கட்டுமான நுட்பங்கள்.
“உயர்வு அகலம் திண்மை அருமை இந்நான்கினமைவு அரணென்று நூல் உரைக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இகரச்சுட்டு ‘நான்கு’ என்னும் எண்ணுப்பெயர்க்கானது. ‘அருமை’ என்னும் பெயருடன் இகரச்சுட்டு புணராது. தழுவும் சொற்களே — ஒன்றனை அவாவி நிற்கும் சொற்களே — புணரும்.
‘நான்கினமைவு’ என்பதையடுத்து விட்டிசைக்க பொருட்டெளிவு கிட்டும். ‘நான்கினமைவரண்’ என்னும் புணர்மொழியைப்பிரிக்காமல் அரணென உணரமுடியாது. பிரித்துப்பொருளறிவதாயின் புணர்த்தவேண்டா. புணர்மொழி புணர்ந்தநிலையிலேயே பொருள்தரும்.
‘என்று’ என்னும் இடைச்சொல் ‘அரண்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் பயனிலையை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘உரைக்கும் நூல்’ என்பது வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“உயர்வு*அகலம் திண்மை அருமைஇந் நான்கி
னமைவு*அர ணென்று†உரைக்கும் நூல்.”
*முற்றியலுகரமாம் வுகாரம் குற்றியலுகரமாம் தன்மையில் அலகுபெறாது.
†குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௪௰௪ (அச்சில் உள்ளவாறு).
“சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்.”
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“சிறுகாவலில் பேரிடத்தைக்காப்பதாகி உற்றபகையின் ஊக்கத்தை அழிப்பது காவல்” என்பதாம்.
‘சிறுகாப்பின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘காப்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஆகி’ என்னும் உருவகயிடைச்சொல். அத்துச்சாரியைபெற்று ‘பேரிடம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அழிப்பதரண்’ என்பது ‘அழிப்பது அரண்’ என்று முன்பின்னாய் மாறிய வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை
யூக்க மழிப்பது* அரண்.”
* குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௪௰௫ (அச்சில் உள்ளவாறு).
“கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார்
நிலைக்கெளிதா நீர தரண்.”
கொளற்கு அரிதாய் → கொள்வதற்கு அரியதாய் = வெற்றிகொள்ள அரியதாய்.
கொண்டகூழ் = உணவு உள்ளிட்ட நுகர்பொருள்கள்.
அகத்தார் = அரணிற்கு உள்ளிருப்போர்.
நிலைக்கெளிதாம் = நிலைத்துநிற்க இயலுவதாம்.
நீரது = தன்மையது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பகைவர்க்கு வெற்றி கொள்ள இயலாததாய், உள்ளிருப்போர்க்கு வேண்டிய நுகர்பொருள்களை உடையதாகி நிலைத்துநிற்க இயலுவதாம் தன்மையுள்ளது அரண்” என்பதாம்.
‘பகைவர்க்கு கொளற்கரிதாய்’ என்பது புறத்தாரைச்சுட்டும் தன்மை, ‘கொண்டகூழ்த்தாகி’ என்பது அகத்தார்க்கு உரிய வளம். இவ்விரு நிலைகளையும் தெள்ளிதின் உணர புணராது தனித்துநிற்கும்.
‘ஆகி’ என்னும் வினையெச்சம் ‘அகத்தார்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘எளிதாநீர’ என்னும் புணர்மொழி ‘எளிதாகும்நீரது’ எனவிரியும். இதன்கண் வந்த ‘ஆம்’ (ஆகும்) என்பது முற்றெச்சம். முற்றெச்சம் எதனுடனும் புணராது.
‘நீரதரண்’ என்பது ’நீரது அரண்’ என்ற முன்பின் மாறிய வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கொளற்கரிதாய் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது* அரண்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௪௰௬ (அச்சில் உள்ளவாறு).
“எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவு
நல்லா ளுடைய தரண்.”
இடத்து = வேண்டியயிடத்து.
நல்லாள் = நல்ல வீரர், தக்கார்.
அரண் = காவல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“அரணிற்குள் இருப்போர்க்கு வேண்டிய எல்லாப்பொருள்களும் உள்ளதாய், வேண்டியயிடத்து வேண்டியதைச்செய்யும் தக்காரும் உடையது காவல்” என்பதாம்.
‘எல்லாப்பொருளும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.
‘உடைத்தாய்’ என்னுமிடத்தில் கருத்துமாற்றம் நிகழ்கின்றது. கருத்துமாற்றம் நிகழுமிடங்கள் புணராது விட்டிசைக்கும்.
‘உதவுநல்லாள்’ என்பது ‘உதவும் நல்லாள்’ என்னும் செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘உடையதரண்’ என்பது ‘உடையது அரண்’ என்ற முன்பின் மாறிய வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லா ளுடையது* அரண்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் -௭௱௪௰௭ (அச்சில் உள்ளவாறு).
“முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்.”
முற்றியும் = முற்றுகையிட்டும்.
முற்றாதெறிந்தும் = முற்றுகையை முறியடித்தும்.
அறைப்படுத்தும் = அரணிற்குள் உள்ளாரைக்காத்தும்.
பற்றற்கரிய = கைப்பற்றுதற்கு இயலாத.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“முற்றுகையிட்டும் முற்றுகையை முறியடித்தும் உள்ளுள்ளாரை மறைத்து காத்தும் கைப்பற்றற்கு இயலாததாம் அரண்” என்பதாம்.
‘முற்றியும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
‘அரியதரண்’ என்பது ‘அரியது அரண்’ என்ற முன்பின் மாறிய வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது* அரண்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௪௰௮ (அச்சில் உள்ளவாறு).
“முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்.”
முற்றாற்றி = முற்றுகையை முறியடித்து.
முற்றியவரையும் = முற்றுகைசெய்தாரையும்.
பற்றாற்றி = சிறைப்படுத்தி.
பற்றியார் = காவலை உடையார்.
“முற்றாற்றி முற்றியவரையும் பற்றியார் பற்றாற்றி வெல்வது அரண்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“முற்றுகையை முறியடித்து முற்றுகைசெய்தாரையும் சிறைப்படுத்தி வெல்வர் அரணினை உடையார்”
‘ஆற்றி’ என்னும் வினையெச்சம் ‘பற்றியார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘வெல்வதரண்’ என்பது ‘வெல்வது அரண்’ என்ற முன்பின் மாறிய வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றி
பற்றியார் வெல்வது* அரண்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௪௰௯ (அச்சில் உள்ளவாறு).
“முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.”
முனைமுகத்து = போரின் தொடக்கத்தில்.
மாற்றலர் = பகைவர்.
சாய = சாவ, இறக்க.
வினைமுகத்து = போரின்கண்.
வீறு = ஆற்றல்.
மாண்டது = சிறப்புற்றது.
அரண் = காவல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“போரின் தொடக்கத்திலேயே பகைவர் இறக்குமாறு போரின்கண் ஆற்றலெய்தி சிறப்புற்றது அரண்” என்பதாம்.
‘மாண்டதரண்’ என்பது ‘மாண்டது அரண்’ என்ற முன்பின் மாறிய வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது* அரண்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௫௰ (அச்சில் உள்ளவாறு).
“எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
யில்லார்க ணில்ல தரண்.”
எனை = எத்துணை.
மாட்சி = சிறப்பு.
வினைமாட்சி = மாண்புறுவினைத்திறம்.
“எனைமாட்சித்தாகியக்கண்ணும் வினைமாட்சியில்லார்கண் அரண் இல்லது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எத்துணைச்சிறப்புற்றிருந்தும் மாண்புறுவினைத்திறம் இல்லாதார்கண் அரண் பயனற்றது” என்பதாம்.
‘இல்லார்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இல்லார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இல்லதரண்’ என்பது ‘இல்லது அரண்’ என்ற முன்பின் மாறிய வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
யில்லார்கண் இல்லது* அரண்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




