
குறள் – ௲௩௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு).
“இல்லை தவறவர்க் காயினு மூடுதல்
வல்ல தவரளிக்கு மாறு.”
அவர்க்கு = கணவரிடத்து. நான்காம்வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
ஊடுதல் = புலத்தல், பிணங்குதல்.
அளிக்குமாறு = அன்புசெய்யுமாறு.
வல்லது = வலிமையுள்ளது.
இது தலைமகள்கூற்று.
“தவறு அவர்க்கு இல்லையாயினும் ஊடுதல் அவர் அளிக்குமாறு வல்லது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கணவரிடத்து தவறு இல்லையானாலும் பிணங்குதல் அவரை உயர்ந்த அன்பினைச்செய்விக்கும் வல்லமையுடையது” என்பதாம்.
‘தவறு’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
எதிரது தழீஇய எச்சவும்மையைப்பெற்ற ‘ஆயினும்’ என்னும் காரணப்பொருள்வினையெச்சம் புணரின் எச்சவும்மைப்பொருட்செறிவு குன்றும். எச்சவும்மை எதனுடனும் புணராது.
‘வல்லது’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இல்லை தவறு*அவர்க் காயினும் ஊடுதல்
வல்லது* அவரளிக்கு மாறு.”
*குற்றியலுகரங்களாகிய றுகரமும் துகரமும் அலகுபெறா.
குறள் – ௲௩௱௨௰௨ (அச்சில் உள்ளவாறு).
“ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.”
ஊடலில் = புலத்தலில், பிணங்கலில்.
சிறுதுனி = சிறுதுன்பம்.
நல்லளி = நல்லன்பு.
வாடினும் = வாடாது என்னும் பொருள்தரும் எதிர்மறைவும்மை.
பாடு = பெருமை, பெரும்பயன்.
பெறும் = தரும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஊடல் காரணமாக தோன்றும் சிறுதுன்பத்தால் நல்லன்பு வாடினும் பெரும்பயன் தரும்” என்பதாம்.
‘ஊடலின்’ என்பதன்கண் ஏதும் பொருளில் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘ஊடல்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தோன்றும் சிறுதுனி‘ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.”
குறள் – ௲௩௱௨௰௩ (அச்சில் உள்ளவாறு).
“புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து.”
புலத்தலில் = ஊடலில், பிணங்கலில்.
புத்தேணாடு (புத்தேள் நாடு) = இன்பந்தரும் தேவருலகம்.
இயைந்து = கலந்து ஒன்றிய.
அன்னாரகத்து = அத்தன்மையரிடத்து.
“நிலத்தொடு நீர் இயைந்து அன்னாரகத்து புலத்தலில் புத்தேணாடு உண்டோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நிலத்தொடு நீர் கலந்து ஒன்றியதுபோல் தம்மோடு கலந்து ஒன்றிய கணவரிடம் ஊடுவது துன்பந்தராது இன்பந்தரும். அத்தகு இன்பந்தரும் தேவருலகம் உண்டோ” என்பதாம்.
‘புலத்தலில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘புலத்தல்’ என்னும் தொழிற்பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘உண்டோ’ என்னும் வினாப்பெயர் வருமொழியாகி புணரின் வினாப்பொருண்மை குன்றும். வினாச்சொல் புணராது தனித்துநின்று வினாப்பொருளை உணர்த்தும்.
‘நீர்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘இயைந்தன்னார்’ என்பது வேண்டா வன்புணர்ச்சி. புணர்ச்சியைப்பிரிக்காமல் ‘அன்னார்’ என்னும் உவமச்சொல்லை உணரவியலாது. புணர்ச்சியை பிரித்து பொருளுணர்வதாயின் புணர்த்த வேண்டா.
செம்மைவடிவம் —
“புலத்தலில் புத்தேணாடு* உண்டோ நிலத்தொடு
நீர்இயைந்து* அன்னா ரகத்து.”
*குற்றியலுகரங்களாகிய டுகரமும் துகரமும் அலகுபெறா.
குறள் – ௲௩௱௨௰௪ (அச்சில் உள்ளவாறு).
“புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்
னுள்ள முடைக்கும் படை.”
புல்லி = தழுவி, புணர்ந்து.
விடாஅ → விடா = விடாத.
புலவி உள் = புலத்தல் உள்ள, ஊடல் உள்ள.
தோன்றும் = உருவாகும்.
உள்ளம் = நெஞ்சம்.
உடைக்கும் = தகர்க்கும்.
படை = காதலரின் கீழ்ப்படிதல், அன்புமொழி முதலான படைக்கலன்கள்.
“புலவி உள் என்னுள்ளமுடைக்கும் படை புல்லி விடாஅ (புல்லலில்) தோன்றும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
புல்லலில் என்பது சொல்லெச்சம்.
“ஊடல் உள்ள எனது நெஞ்சத்தை தகர்க்கும் படைக்கலன்கள் காதலரது நீங்காத தழுவலில் தோன்றும். காதலரது கீழ்ப்படிதல், அன்புமொழிகள் முதலான ஊடலை நீக்கும்படைக்கலன்கள்” என்பதாம்.
‘புலவியுள்’ என்பது பொருண்மயங்குபுணர்ச்சி. இதன்கண் வந்த உள் என்பது உள்ளது என்னும் குறிப்புவினையெச்சம். புலவி என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘தோன்றும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“புல்லி விடாஅப் புலவிஉள் தோன்றும்என்
னுள்ள முடைக்கும் படை.”
குறள் – ௲௩௱௨௰௫ (அச்சில் உள்ளவாறு).
“தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ
ளகறலி னாங்கொன் றுடைத்து.”
இலராயினும் = இல்லாதவராயினும்.
தாம்வீழ்வார் =தாம் விரும்புவார்.
மென்றோள் = மென்மையான தோள்கள்.
அகறலின் = நீங்கலின் .
ஆங்கு = அப்பொழுது.
ஒன்றுடைத்து = இன்பம் ஒன்றுள்ளது.
தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது,
இது தலைமகன்கூற்று.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“தவறு இல்லாதபோதும் தாம் விரும்பும் தலைமகளின் மென்மையான தோள்களை நீங்கி இருப்பதில் ஓர் இன்பம் உள்ளது” என்பதாம்.
எதிர்மறைவும்மைபெற்ற ‘ஆயின்’ என்னும் காரணப்பொருள்வினையெச்சம் புணராது தனித்துநின்று தனது காரணப்பொருளை உணர்த்தும். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
‘அகறலின்’ என்பதன்கண் நீங்கற்பொருளில் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘அகறல்’ என்னும் தொழிற்பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஆங்கு’ என்னும் சுட்டிடைச்சொல் புணராது தனித்துநின்று தனது சுட்டுப்பொருளை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோ
ளகறலின் ஆங்கு*ஒன் றுடைத்து.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௩௱௨௰௬ (அச்சில் உள்ளவாறு).
“உணலினு முண்ட தறலினிது காமம் புணர்தலி னூட லினிது.”
உணலினும் = உண்பதிலும்.
அறல் = செரித்தல்.
இனிது = நன்மையானது, இன்பந்தருவது.
காமம் → காமத்திற்கு. அத்துச்சாரியையும் நான்காம்வேற்றுமைவுருபும் தொக்கு நின்றன = காதலுக்கு.
புணர்தலினும் = கலவியினும்.
ஊடல் = புலத்தல், பிணங்கல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உண்பதிலும் முன்னுண்டது செரித்தல் இன்பந்தருவது. அதுபோல் காமத்திற்கு கலவியினும் ஊடல் இன்பந்தருவது. பசித்து உண்ணல் உணவிற்கு சுவைகூட்டும். அதுபோல ஊடி கூடல் காமத்திற்கு சுவைகூட்டும்” என்பதாம்.
இறந்தது தழீஇய எச்சவும்மையை ஏற்ற ‘உணலினும்’ என்னுஞ்சொல் புணரின் எச்சவும்மைப்பொருட்செறிவு குன்றும். எச்சவும்மை எதனுடனும் புணராது.
‘புணர்தலின்’ என்பதன்கண் ஒப்புப்பொருளில் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘புணர்தல்’ என்னும் தொழிற்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
அறல், ஊடல் ஆகியன வினைமுற்றெச்சங்கள். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“உணலினும் உண்ட தறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.”
குறள் – ௲௩௱௨௰௭ (அச்சில் உள்ளவாறு).
“ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னும்
கூடலிற் காணப் படும்.”
ஊடலில் = புலத்தலில், பிணங்குவதில்.
மன்னும் = மன், உம் என்பன அசைநிலைகள்.
கூடலில் = புணர்ச்சியில், கலவியில்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“புலத்தலில் தோற்றவர் வென்றவராவர். அது புணர்ச்சியில் அறியப்படும். ஊடலைக்கைவிட்டு தோற்பதால் புணர்ச்சி நிகழ்ந்து ஊடலின் நோக்கம் ஈடேறி வென்றார்” என்பதாம்.
ஊடலில், கூடலில் என்பனவற்றின்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ஊடல், கூடல் ஆகிய தொழிற்பெயர்களுடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தம்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘வென்றார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.”
குறள் – ௲௩௱௨௰௮ (அச்சில் உள்ளவாறு).
“ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் றோன்றிய வுப்பு.”
ஊடி = புலந்து, பிணங்கி.
பெறுகுவம் = பெறுவோம்.
கொல்லோ = கொல் என்பது ஐயயிடைச்சொல். ‘ஓ’ என்பது அசைநிலை.
நுதல் = நெற்றி.
வெயர்ப்ப = வியர்க்க.
கூடலில் = புணர்ச்சியில், கலவியில்.
உப்பு = இனிமை.
இது தலைமகன்கூற்று.
“நுதல் வெயர்ப்ப கூடலில் தோன்றிய உப்பு ஊடிப்பெறுகுவங்கொல்லோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நெற்றி வியர்க்க புணர்ச்சியில் தோன்றிய இனிமையை இன்னுமொருமுறை இவள் ஊடி யாம் பெறுவோமா” என்பதாம்.
‘நுதல் வெயர்ப்பக்கூடலில்’ என்னும் சொற்றோடரை இயல்பாக ஒலிக்க ‘வெயர்ப்ப’ என்னுஞ்சொல்லையடுத்து விட்டிசை நிகழ்கிறது. விட்டிசைக்குமிடம் புணராது.
‘கூடலில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘கூடல்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தோன்றிய உப்பு’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்ப
கூடலில் தோன்றிய உப்பு.”
குறள் – ௲௩௱௨௰௯ (அச்சில் உள்ளவாறு).
“ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ விரா.”
ஊடுக = புலக்க, பிணங்குக.
மன்னோ = ‘மன்’ என்பது மிகுதி என்னும் ஆக்கப்பொருளில் வந்த இடைச்சொல். ‘ஓ’ என்பது அசைநிலை.
ஒளியிழை = ஒளிரும் அணிகலன்களை அணிந்தவள்.
யாம் இரப்ப = யாம் வேண்ட.
நீடுக = நீள்க.
இரா = இரவுப்பொழுது.
இது தலைமகன்கூற்று.
“ஒளியிழை ஊடுகமன் யாம் இரப்ப இரா நீடுகமன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒளிரும் அணிகலன்களை அணிந்த இவள் மேலும் ஊடுவாளாக. யாம் வேண்டி ஊடலைத்தணிக்கும்பொருட்டு இரவுப்பொழுது மேலும் நீள்வதாக” என்பதாம்.
‘ஓ’ என்னும் அசைநிலை ‘மன்’ என்னும் இடைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் ‘ஒளியிழை’ என்னும் வருமொழியுடன் புணராது.
‘யாம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘ஓ’ என்னும் அசைநிலை ‘மன்’ என்னும் இடைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் ‘இரா’ என்னும் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.”
குறள் – ௲௩௱௩௰ (அச்சில் உள்ளவாறு).
“ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.”
ஊடுதல் = புலத்தல், பிணங்குதல்.
காமத்திற்கு = காதலுக்கு.
அதற்கு = ஊடலுக்கு.
முயங்கப்பெறின் = புணர்ந்தால், புல்லினால்.
“ஊடுதல் காமத்திற்கு இன்பம். கூடி முயங்கப்பெறின் அதற்கு இன்பம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஊடல் காதலுக்கு இன்பந்தருவது. அந்நூலின் அளவறிந்து நீக்கிப்புணர்வது ஊடலுக்கு இன்பந்தருவது” என்பதாம்.
‘காமத்திற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினைசாராது இயல்புப்பொருள்தரும் ‘இன்பம்’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘அதற்கு ’என்னும் சுட்டுப்பெயர் வருமொழியாகி புணராது தனித்துநின்று தனது சுட்டுப்பொருளை உணர்த்தும்.
‘அதற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினைசாராது இயல்புப்பொருள்தரும் ‘இன்பம்’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“ஊடுதல் காமத்திற்கு* இன்பம் அதற்கு*இன்பம்
கூடி முயங்கப் பெறின்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
கற்பியல் முற்றிற்று.
காமத்துப்பால் முற்றிற்று.
திருக்குறளுரை முற்றிற்று.
தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.



