
குறள் – ௩௫௧ (அச்சில் உள்ளவாறு).
“பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு.”
பொருள் = மெய்ப்பொருள்.
மருளான் = மயக்கத்தால், தெளிவின்மையால்.
ஆம் = ஆகிய, உண்டான.
மாணாப்பிறப்பு = சிறப்பில்லாதப்பிறப்பு.
“மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருளென்று உணரும் மயக்கத்தினால் சிறவாப்பிறப்பு உண்டாகும்.”
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘அல்லவற்றை’ என்பதில் வந்த இரண்டாம்வேற்றுமை ‘பொருள்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை பெயர்ச்சொல்லுடன் புணராது.
‘உணரும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சம் பெயரை முடிக்கும் சொல்லாக கொள்ளும்; பெயருடன் புணராது.
‘மருளான்’ என்பதில் வந்த ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘மருள்’ என்ற பெயருடன் புணர்ந்து அதன் பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பொருளல் லவற்றை பொருளென் றுணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.”
குறள் – ௩௫௨ (அச்சில் உள்ளவாறு).
“இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.”
இருள் = துன்பம்.
மருள் = மயக்கம்.
மாசு = குற்றம்.
அறு = நீங்கிய.
காட்சியவர்க்கு = தெளிந்தவர்க்கு.
“மருள் நீங்கி மாசறு காட்சியவர்க்கு இருள் நீங்கி இன்பம் பயக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘இருள்’, ‘மருள்’ என்பன எழுவாயாகும் திரிபில்பெயர்ச்சொற்கள். திரிபில்பெயர்ச்சொற்கள் எதனுடனும் புணராது.
‘நீங்கி’ என்னும் வினையெச்சம் ‘இன்பம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘பயக்கும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.”
குறள் – ௩௫௩ (அச்சில் உள்ளவாறு).
“ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.”
ஐயம் = தெளிவின்மை.
வையம் = நிலவுலகம்.
வானம் = வானுலகம்.
நணி = அண்மை, அருகு (அருகில்).
“அறியாமையிலிருந்து நீங்கி தெளிவடைந்தார்க்கு நிலவுலகத்தினும் வானுலகம் அடைதற்குரிய அண்மையில் இருக்கும்” என்பதாம்.
‘ஐயத்தின்’ என்பதில் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘ஐயம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நீங்கி’ என்னும் வினையெச்சம் ‘தெளிந்தார்க்கு’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது.
‘வானம்’ என்பது தான் இன்னதென்று அறிவிக்கும் முற்றுப்பொருள்தரும் பெயர்ச்சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.”
குறள் – ௩௫௪ (அச்சில் உள்ளவாறு).
“ஐயுணர் வெய்திய கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.”
ஐயுணர்வு = ஐந்துவகை உணர்வு. தொடுவுணர்வு முதலியன.
பயம்→ பயன் என்பதன் ஈற்றுப்போலி.
இன்றே = இல்லையே.
மெய்யுணர்வு = உண்மையை உணரும் அறிவு.
“மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐயுணர்வு எய்தியகண்ணும் பயம் (பயன்) இன்றே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உண்மையை உணரும் அறிவிலாதார்க்கு தொடுவுணர்வு முதலான ஐந்துவகை உணர்வுகளைப்பெற்றிருந்தும் அவற்றால் பயனில்லையே” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௩௫௫ (அச்சில் உள்ளவாறு).
“எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண்ப அறிவு.”
தன்மை = இயல்பு, குணம்.
பொருண் = பொருள்.
மெய்ப்பொருள்= உண்மையியல்பு, உண்மைக்குணம்.
“எப்பொருள் எவ்வகை இயல்பைக்கொண்டிருந்தாலும் அவ்வியல்பைக்கடந்து அதனுள் இலங்கும் மெய்யியல்பைக்காண்பது அறிவுடைமையாகும்” என்பதாம்.
‘எத்தன்மை’ என்னும் வினா வருமொழியாகி புணராது தனித்துநின்று தனது வினாப்பொருளைச்சிறப்பிக்கும்.
‘அப்பொருள்’ என்னும் சுட்டு வருமொழியாகி புணராது தனித்துநின்று தனது சுட்டுப்பொருளைச்சிறப்பிக்கும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருண்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”
குறள் – ௩௫௬ (அச்சில் உள்ளவாறு).
“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.”
ஈண்டு = இங்கு (இப்பிறவியில்).
கற்று = மெய்யுணர்ந்து.
தலைப்படுவர் = முதன்மையுறுவர்.
மற்று = அசைச்சொல்.
வாரா நெறி = பிறவாமை.
“ஈண்டு கற்று மெய்ப்பொருள்கண்டார் மற்றீண்டு வாராநெறிதலைப்படுவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க
“இப்பிறப்பில் மெய்யுணர்ந்து மெய்பொருளைக்கண்டவர் பிறவாமையென்னும் நெறியில் முதன்மையுறுவர்” என்பதாம்.
‘கற்று’ என்னும் வினையெச்சம் ‘ஈண்டு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“கற்று*ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று*ஈண்டு வாரா நெறி.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௩௫௭ (அச்சில் உள்ளவாறு).
“ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.”
ஓர்த்து = ஆராய்ந்து.
உள்ளம் = நெஞ்சம்.
உள்ளது = உண்மை.
ஒருதலையா(க) = உறுதியாக.
பேர்த்து = பின்னும், மேலும்.
உள்ள = எண்ண, நினைக்க.
வேண்டா = வேண்டாது, விரும்பாது.
“உள்ளம் ஒருதலையாவோர்த்து உள்ளது உணரின் பேர்த்து பிறப்புள்ள வேண்டா” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உள்ளமானது உறுதியாக ஆராய்ந்து உண்மையை உணரின் மேலும் பிறப்பதை நினைக்க விரும்பாது” என்பதாம்.
‘ஓர்த்து’ என்னும் வினையெச்சம் ‘உள்ளம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது. ‘ஒருதலையாவோர்த்து’ என்பதே தழுவும்சொற்கள்.
‘உணரின்’ என்னும் வினையெச்சம் ‘ஒரு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘ஒருதலையாப்பேர்த்து’ என்பது ஒன்றையொன்று தழுவும் சொற்களல்ல. ‘ஒருதலையா ஓர்த்து’ என இயையுமென்கிறார் பரிமேலழகனார். தழுவும் சொற்களே புணரும். எனவே பகரமெய் மிகாது.
‘பேர்த்துள்ள’ என்பது ஒன்றையொன்று தழுவும் சொற்களல்ல. தழுவுஞ்சொற்களே புணரும். ‘உள்ள’ என்பது ‘பிறப்புள்ள’ (பிறப்பதை நினைக்க) என்றவாறு சென்று கூடும்.
செம்மைவடிவம் —
“ஓர்த்து*உள்ளம் உள்ள துணரின் ஒருதலையா
பேர்த்து*உள்ள வேண்டா பிறப்பு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௩௫௮ (அச்சில் உள்ளவாறு).
“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.”
பேதைமை= மயக்கம், அறியாமை. சிறப்பு = முதன்மை, தலைமை.
செம்பொருள் = செவ்விய உண்மை.
“பிறப்பென்னும் அறியாமை நீங்க பிறவிக்கான முதற்காரணமான செவ்விய உண்மையை காண்பது அறிவுடைமையாகும்” என்பதாம்.
‘நீங்க’ என்னும் வினையெச்சம் ‘சிறப்பு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘சிறப்பு’ என்ற பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மை வடிவம் —
“பிறப்பென்னும் பேதைமை நீங்க சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு.”
குறள் – ௩௫௯ (அச்சில் உள்ளவாறு).
“சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.”
சார்பு = தொடர்பு.
கெட = நீங்க.
ஒழுகின் = கடைப்பிடித்தால்.
மற்று = அசைச்சொல்.
நோய் = துன்பம்.
“சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்று சார்தருநோயழித்து சார்தரா” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“துன்பங்கள் தரும் தொடர்புகளை உணர்ந்து அத்தொடர்புகள் நீங்க ஒழுகின் அவ்வொழுக்கம் தொடர்புகள் தந்த நோயினை அழித்து அத்தொடர்புகளைத்தரா” என்பதாம்.
‘அழித்து’ என்னும் வினையெச்சம் ‘சார்பு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்து
சார்தரா சார்தரு நோய்.”
குறள் – ௩௬௦ (அச்சில் உள்ளவாறு).
“காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற னாமங் கெடக்கெடு நோய்.”
காமம் = பேரவா, பெருவிருப்பு.
வெகுளி = சினம்.
மயக்கம் = அறியாமை.
நாமம் = குணங்கள்.
கெட = நீங்க.
நோய் = துன்பம்.
‘இவை’ என்னும் சுட்டுப்பெயர் வருமொழியாகி புணராமல் தனித்து நிற்கும்.
‘கெடும்’ என்பதும் பெயரெச்சம். ‘கெடும் நோய்’ என்பது பெயரெச்சத்தொடர். முதலில் புணரும் இப்பெயரெச்சத்தொடர் ‘கெட’ என்னும் பெயரெச்சத்தின் முடிக்கும் தொடராகும். எனவே விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
‘கெடும்’ என்னும் பெயரெச்சத்தின் ஈற்றுமகரம் நீங்காது; நீங்கின் ஏவல்வினையாகும். பொருள்மயங்குபுணர்ச்சி நிகழா.
‘நாமம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது. மேலும் இத்திரிபில்பெயர்ச்சொல் ‘கெட’ என்னும் வினையெச்சத்துடன் புணராது. பெயர்ச்சொல் வினைச்சொல்லுடன் புணராது.
செம்மைவடிவம் —
“காமம் வெகுளி மயக்கம் இவைமூன்ற
னாமம் கெடகெடும் நோய்.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!




