
குறள் – ௭௱௭௧ (அச்சில் உள்ளவாறு).
“என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்.”
ஐ = தலைவன்.
தெவ்விர் = பகைவர்.
கல் = நடுகல்.
கன்னின்றவர் = இறந்து நடுகல்லாய் நின்றவர்.
நில்லன்மின் = நில்லாதீர்.
“என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் என்ஐமுன் நின்று கன்னின்னவர் பலர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“என்னுடைய தலைவன்முன் நில்லாதீர் பகைவர்களே என்னுடைய தலைவன்முன் நின்று போரிட்டு மடிந்து நடுகல்லின்கண் நின்றவர் பலர்” என்பதாம்.
‘என்னுடைய தலைவன்’ எனவிரியும் ‘என்ஐ’ என்பதை ‘என்னை’ எனப்புணர்த்தினால் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற மறுபெயர்ச்சொல்லாகவும் மயங்கும்.
‘நில்லன்மின்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘பலரென்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. வேறுவேறு வினைமுதல்களைச்சுட்டும் ’பலர்’ என்னும் படர்க்கைப்பெயரும் ‘என்’ என்னும் தன்மைப்பெயரும் புணரா.
செம்மைவடிவம் —
“என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐ
முன்நின்று கன்னின் றவர்.”
குறள் – ௭௱௭௨ (அச்சில் உள்ளவாறு).
“கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.”
கான = கானகத்து.
பிழைத்த = குறி தவறிய.
இக்குறளில் சீர்களமைந்த நிரலில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கானகத்து முயலின்மேல் தப்பாது எய்த அம்பினை ஏந்தலிலும் யானைமேல் எய்து தப்பிய வேலினை ஏந்தல் இனிமையானது” என்பதாம்.
‘எய்தவம்பினில்’ என்பது ‘எய்த அம்பினில்’ என்னும் பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.”
குறள் – ௭௱௭௰௩ (அச்சில் உள்ளவாறு).
“பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றகா
லூராண்மை மற்றத னெஃகு.”
பேராண்மை = பெருமைமிகு ஆண்மை.
ஒன்றுறுதல் = துன்பமுறுதல்.
தறுகண் = அச்சமற்ற வீரம். ஊராண்மை = உதவுதல்.
மற்று = அசைச்சொல்.
எஃகு = கூர்மை.
“தறுகண் பேராண்மை என்ப ஒன்றுற்றகால் ஊராண்மை மற்றதனெஃகு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க
“அச்சமற்ற வீரத்தை பெருமைமிகு ஆண்மை என்பர். பகைவர் துன்புற்றவிடத்து உதவுதல் பெருமைமிகு ஆண்மையினது கூர்மை” என்பதாம்.
‘பேராண்மை’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘தறுகண்’ என்பது பெயர்ப்பயனிலை. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது. ‘என்ப தறுகண்’ என்பது முன்பின் முறைமாறிவந்த வினைமுற்றுத்தொடர்.
‘உற்றக்கால்’ என்னும் வினையெச்சம் ‘பேராண்மை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றகால்
ஊராண்மை மற்றத னெஃகு.”
குறள் – ௭௱௭௰௪ (அச்சில் உள்ளவாறு).
“கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.”
கைவேல் = கையிலுள்ள வேல்.
களிறு = போர்யானை.
போக்கி = எறிந்து.
மெய்வேல் = உடம்பில் தைத்த வேல்.
பறியா = பறித்து.
நகும் = சிரிப்பான்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கையிலிந்த வேலினை போர்யானையின் மேலெறிய அவ்வேல் அக்களிற்றொடு போக, எதிர்வந்த மற்றொரு யானையை எதிர்கொள்ள தனது உடம்பில் தைத்த வேலினைப்பறித்து கையிலேந்தி சிரிப்பான். எதிர்வரும் யானையைக்கொல்ல வேல் கிட்டியதால் சிரித்தான்” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௭௱௭௰௫ (அச்சில் உள்ளவாறு).
“விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
னோட்டன்றோ வன்க ணவர்க்கு.”
விழித்த கண்= இமைகள் விரிந்த கண்.
அழித்து இமைப்பின் = விரிந்த நிலை அழிய சுருங்கின்.
ஓட்டு = புறங்காட்டல்.
வன்கணவர் = மிகுவன்மைவீரர்.
அன்றோ = அல்லவோ.
“வேல்கொண்டெறிய விழித்த கண்ணழித்திமைப்பின் வன்கணவர்க்கு ஓட்டன்றோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தம்மை நோக்கி எறியப்பட்ட வேல்களைக்கண்டு இமைகள் விரிந்தகண்கள் விரிநிலை அழிய சுருங்கல் மிகுவன்மைவீரர்க்கு புறங்காட்டல் அன்றோ” என்பதாம்.
‘விழித்த கண்ணழித்திமைப்பின்’ என்றவாறு கொண்டுகூடி ‘விழித்த கண்களை அழித்து இமைப்பின்’ என்னும் பொருள்தரும். ‘ஏறியவழித்திமைப்பின்’ எனப்புணர்த்தினால் ‘விழித்த கண்’ யாண்டு சென்றுகூடும். புணர்மொழிகள் பிரியாது பொருள்தரும். பிரிப்பதாயின் புணர்த்த வேண்டா.
‘இமைப்பின்’ என்னும் வினையெச்சம் ‘ஓட்டு’ (புறங்காட்டல்) என்னும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.”
குறள் – ௭௱௭௰௬ (அச்சில் உள்ளவாறு).
“விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து.”
விழுப்புண் = முகத்தினும் மார்பினும் படும்புண்.
வழுக்கினுள் = குறைபட்ட.
தன்னாள் = தான் வாழ்ந்த நாள்.
“தன்னாளை விழுப்புண் படாதநாளெல்லாம் எடுத்து வழுக்கினுள் வைக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. இரண்டாம்வேற்றுமைவுருபு ஐகாரம் ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்து ‘வாழ்ந்த நாளில்’ என பொருள்படும்.
“தான் வாழ்ந்த நாள்களில் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் எடுத்து குறைப்பட்ட (வீணான) நாள்களாக வீரர் வைப்பர்” என்பதாம்.
‘வைக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம்—
“விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் னாளை யெடுத்து.”
குறள் – ௭௱௬௰௭ (அச்சில் உள்ளவாறு).
“சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.”
இசை = புகழ்.
சுழலுமிசை = உயிர்ப்புடன் கூடிய புகழ். எஞ்ஞான்றும் பரவும் புகழ்.
கழல் = காலில் அணியும் வீரக்கழல்.
யாப்பு = அணிவது.
காரிகை = அழகு.
நீர்த்து = தன்மையது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“எஞ்ஞான்றும் பரவும் புகழை விரும்பி உயிரை விரும்பாதார் வீரக்கழலணிதல் அழகாம் தன்மையது” என்பதாம்.
‘சுழலுமிசை’ என்பது ‘சுழலும் இசை’ என்ற செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘கழல்யாப்புக்காரிகை நீர்த்து’ என்பது ‘கழலினை அணிவது அழகு தன்மையது’ எனப்பொருள்படும். யாப்பு என்னும் வினையெச்சம் காரிகை என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மை வடிவம் —
“சுழலும் இசைவேண்டி வேண்டா வுயிரார்
கழல்யாப்பு காரிகை நீர்த்து.”
குறள் – ௭௱௬௰௮ (அச்சில் உள்ளவாறு).
“உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ்சீர் குன்ற லிலர்.”
உறின் = போர்புரியின்.
உயிரஞ்சா = உயிரை இழக்க அஞ்சா.
மறவர் = வீரர்.
இறைவன் = மன்னன்.
செறினும் = வருந்தச்செயினும் (இடப்பொருள்).
சீர் = சீர்மை, நெறி.
குன்றலிலர் = குறையார்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“போர்புரியின் உயிரை இழக்க அஞ்சா மறவர் தமது மன்னன் தம்மை வருந்தச்செயினும் நெறியில் குறையார்” என்பதாம்.
‘உறின்’ என்னும் வினையெச்சம் ‘உயிர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘மறவரிறைவன்’ என்பது பொருளற்ற புணர்ச்சி. மறவர், மன்னன் ஆகிய இருவேறு வினைமுதல்கள் புணரா.
‘செறினுஞ்சீர்’ என்பது பொருளற்ற புணர்ச்சி. ‘செறினுஞ்சீர்’ என்றவொரு சீர்மை இல்லை. செறிதல் மன்னர்க்கானது. சீர் மறவர்க்கானது. இருவேறுவினைமுதலுக்குரியவை புணரா.
செம்மைவடிவம் —
“உறின்உயி ரஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்ற லிலர்.”
குறள் – ௭௱௬௰௯ (அச்சில் உள்ளவாறு).
“இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.”
இழைத்தது = வஞ்சினம் உரைத்தது. இகவாமை = நிகழாமை.
சாவாரை = உயிர்நீப்பாரை.
யாரே = யாவரே.
பிழைத்தது = தவறியதற்கு (வஞ்சினத்தை நிறைவேற்றாமைக்கு).
ஒறுக்கிற்பவர் = இகழ்வார்.
“இழைத்தது இகவாமைச்சாவாரை பிழைத்தது ஒறுக்கிற்பவர் யாரே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வஞ்சினம் உரைத்து அது நிகழாததால் உயிர்நீப்பாரை அல்லது அதனை நிகழ்த்துங்கால் உயிர்நீப்பாரை வஞ்சினத்தை நிகழ்த்தாதாரென இகழ்வார் யாவரே” என்பதாம்.
‘இழைத்தது’ என்னும் வினையெச்சம் ‘இகவாமை’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘பிழைத்தது’ என்னும் வினையெச்சம் ‘ஒறுக்கிற்பவர்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“இழைத்தது* இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது* ஒறுக்கிற் பவர்.”
*குற்றியலுகரமாகிய துகரங்கள் அலகுபெறா.
குறள் – ௭௱௮௰ (அச்சில் உள்ளவாறு).
“புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
டிறந்துகோட் டக்க துடைத்து.”
புரந்தார் = பேணியவர்.
சாக்காடு = இறப்பு.
இரந்து = வேண்டி.
கோள் தக்கது = பெறத்தக்கது (கொள்ளுதல் ‘கோள்’ என வந்தது).
உடைத்து = தகுதியை உடையது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பேணியவர் கண்ணீர்மல்க இறப்பின் அவ்விறப்பு வேண்டி பெறத்தக்க தகுதியை உடையது” என்பதாம். அகரச்சுட்டு அவாய்நிலையான் வந்தது.
‘கண்ணீர்மல்குதல்’ புரந்தாரின் வினை. ‘சாதல்’ மறவரின் வினை. இருவேறுவினைமுதல்களின் வினைகள் புணரா.
‘சாகிற்பின்’ என்பதன்கண் வந்த ‘பின்’ என்னும் இடைச்சொல் ‘சாகின்’ என்னும் வினையெச்சத்தை சிறப்பித்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘சாக்காடிரந்து’ எனப்புணராது. ‘அச்சாக்காடு’ என்றவாறு சுட்டுப்பெயராய் நிற்கும். ‘சாக்காடிரந்து’ என்னும் புணர்மொழியில் எதுவும் தொகாததால் புணராது.
செம்மைவடிவம் —
“புரந்தார்கண் ணீர்மல்க சாகிற்பின் சாக்காடு*
இரந்துகோட் டக்க துடைத்து.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




