இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௭௰௩. அவையஞ்சாமை.

குறள் – ௭௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு).

“வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
றொகையறிந்த தூய்மை யவர்.”

வகை = கூறுபாடு.
வல்லவை = வல்லோரது அவை.
தொகை = தொகுத்துக்கூறல்.
தூய்மையவர் = நேரியர்.
சோரார் = வழுப்படார், தடுமாறார்.
வாய்சோரார் = சொல்வதில் வழுப்படார்.

“சொல்லின்வகையறிந்து தொகையறிந்த தூய்மையவர் வல்லவைவாய்சோரார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“சொற்களினது கூறுபாடுகளை அறிந்து தொகுத்துக்கூறலை அறிந்த நேரியர் வல்லோரது அவையின்கண் சொல்வதில் வழுப்படார்” என்பதாம்.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

 

குறள் – ௭௱௨௰௨ (அச்சில் உள்ளவாறு).

“கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற்
கற்ற செலச்சொல்லு வார்.”

செல = ஏற்குமாறு.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“கற்றாருள் கற்றாரெனப்படுவர் கற்றார்முன் தாம் கற்றதை கற்றார் ஏற்குமாறு சொல்லுவார்” என்பதாம்.

‘கற்றாருள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘கற்றார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கற்றார்முன்’ என்பதன்கண் வந்த ‘முன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘கற்றார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“கற்றாருள் கற்றா ரெனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.”

 

குறள் – ௭௱௨௰௩ (அச்சில் உள்ளவாறு).

“பகையகத்துச் சாவா ரெளிய ரரிய
ரவையகத் தஞ்சா தவர்.”

பகையகத்து = போர்களத்து.
சாவார் = இறப்பார்.
எளியர் = பலர்.
அரியர் = சிலர்.
அவையகத்து = அவையின்கண்.

“பகையகத்து சாவார் எளியர்
அவையகத்து அஞ்சாதவர் அரியர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“போர்க்களம்சென்று அஞ்சாது போரிட்டு மடிவோர் பலர். எனினும் அவையகத்து அஞ்சாது செல்வோர் சிலரே” என்பதாம்.

‘பகையகத்து’ என்பதன்கண் வந்த ‘அகத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பகை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘எளியர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘அரியர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘அவையகத்து’ என்பதன்கண் வந்த ‘அகத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அவை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“பகையகத்து சாவார் எளியர் அரியர்
அவையகத்து* அஞ்சா தவர்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௭௱௨௰௪ (அச்சில் உள்ளவாறு).

“கற்றாற்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருண் மிக்க கொளல்.”

செல = ஏற்குமாறு.
மிக்காருண் → மிக்காருள் = மிகுகல்வி பெற்றாருள்.
மிக்க = மேன்மை.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“கற்றார்முன் தான் கற்றதை ஏற்குமாறு சொல்லி தான் கற்றதினும் மிகுதியாக கற்றாரிடமுள்ள மேன்மையைக்கற்க” என்பதாம்.

‘கற்றாருள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘கற்றார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘தான்’ என்னும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது. எழுவாய் எதனுடனும் புணராது.

‘மிக்காருண்’ என்பதன்கண் வந்த ‘உண் → உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘மிக்கார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“கற்றார்முன் கற்ற செலச்சொல்லி தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.”

 

குறள் – ௭௱௨௰௫ (அச்சில் உள்ளவாறு).

“ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.”

மாற்றம் = மறுமொழி, மாற்றுக்கருத்து.
ஆற்றின் = சொல்லின்.
கற்க = சொல்லுக.

“அவையஞ்சா மாற்றங்கொடுத்தற்பொருட்டு ஆற்றின் அளவறிந்து கற்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அவைக்கு அஞ்சாது மாற்றுக்கருத்துகளை வழங்க சொல்லின் அளவு அறிந்து சொல்லுக. அளவிறந்து சொல்லற்க” என்பதாம்.

‘ஆற்றின்’ என்னும் வினையெச்சம் ‘அளவு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கற்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.”

 

குறள் – ௭௱௨௰௬ (அச்சில் உள்ளவாறு).

“வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ
னுண்ணவை யஞ்சு பவர்க்கு.”

வன்கண்ணர் = மனவுறுதியுடையர். அல்லார் = இல்லார்.
நுண்ணவை = நுண்ணறிஞரவை.

“வன்கண்ணரல்லார்க்கு வாளொடு என். நுண்ணவவையஞ்சுவார்க்கு நூலொடு என்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மனவுறுதி இல்லார்க்கு வாளோடு தொடர்பு எதற்கு. நுண்ணறிஞரவையை அஞ்சுவார்க்கு நூலோடு தொடர்பு எதற்கு” என்பதாம்.

‘நூலொடென்’ என்பதன்கண் வந்த ‘என்’ என்னும் வினாச்சொல் வினாப்பயனிலையாகி முற்றுப்பொருளைத்தருகின்றது. முற்றுப்பொருளைத்தருமிடங்கள் புணரா.

செம்மைவடிவம் —
“வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை யஞ்சு பவர்க்கு.”

 

குறள் – ௭௱௨௰௭ (அச்சில் உள்ளவாறு).

“பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்.”

பகையகத்து = போர்க்களத்து.
பேடி = பெண்தன்மை மிக்க ஆண்.
பேடிகை = வீரமற்றவன்.
ஒள்வாள் = ஒளிமிகு வாள்.
அவையகத்து = அறிஞரவையின்கண்.

“அவையகத்து அஞ்சும் அவன் கற்ற நூல் பகையகத்து பேடிகையொள்வாள் (ஒக்கும்)” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘ஒக்கும்’ என்பது சொல்லெச்சம்.

“அறிஞரவையின்கண் நின்று சொல்லாட அஞ்சுபவன் கற்ற கல்வி போர்க்களத்து வீரமற்றவன்கையிலுள்ள ஒளிமிகுவாளை ஓக்கும்” என்பதாம்.

பகையகம்+அத்து →பகையகத்து. ‘அத்து’ என்னும் சாரியை ‘பகையகம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

அவையகம்+அத்து →அவையகத்து. ‘அத்து’ என்னும் சாரியை ‘அவையகம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“பகையகத்து பேடிகை யொள்வாள் அவையகத்து*
அஞ்சு மவன்கற்ற நூல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௭௱௨௰௮ (அச்சில் உள்ளவாறு).

“பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு
ணன்கு செலச்சொல்லா தார்.”

பல்லவை = பலவற்றை.
பயம் ← பயன் என்பதன் ஈற்றுப்போலி.
நல்லவை = நல்லறிஞரவை.
செல = ஏற்குமாறு.

“நல்லவையுள் நன்கு செலச்சொல்லாதார் பல்லவைகற்றும் பயமிலரே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘நல்லவையுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அவை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.”

 

குறள் – ௭௱௨௰௯ (அச்சில் உள்ளவாறு).

“கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து
நல்லா ரவையஞ்சு வார்.”

நல்லாரவை = நல்லோரவை, நல்லறிஞரவை.
கடை → கடையர் = கீழ்நிலையர்.

“கற்றறிந்தும் நல்லாரவையஞ்சுபவர் கல்லாதவரில் கடையென்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கற்றறிந்தும் நல்லோர்குழாத்தில் சொல்லாட அஞ்சுபவர் கல்லாதவரில் கீழ்நிலையர் எனப்படுவர்” என்பதாம்.

‘கல்லாதவரில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘கல்லாதவர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“கல்லா தவரில் கடையென்ப கற்றறிந்து
நல்லா ரவையஞ்சு வார்.”

 

குறள் – ௭௱௩௰ (அச்சில் உள்ளவாறு).

“உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.”

உளர் = (கல்வியறிவு) உடையர்.
இலர் = (கல்வியறிவு) இல்லாதார்.
ஒப்பர் = ஒத்தார்.
களன் → களம் = அவை.
செல = ஏற்குமாறு.

“களனஞ்சி கற்ற செலச்சொல்லாதவர் உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அவையைக்கண்டு அஞ்சி கற்றதை கேட்போர் ஏற்குமாறு சொல்லாதார் கல்வியறிவிருந்தும் கல்வியறிவில்லாதாரை ஒத்தார்” என்பதாம்.

‘எனினும்’ என்னும் காரணயிடைச்சொல் ‘உளர்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘இல்லாரொடு’ என்பதன்கண் வந்த ‘ஒடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘இல்லார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

வினையெச்சங்கள் தம்முள் புணருமாயின் பொருள்மயங்காவண்ணம் புணரும். ‘அஞ்சிக்கற்ற’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி. ‘அச்சத்துடன் கற்ற’ என முரண்பொருள்படும்.

செம்மைவடிவம் —
“உளரெனினும் இல்லாரொடு* ஒப்பர் களனஞ்சி
கற்ற செலச்சொல்லா தார்.”

*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button