
குறள் – ௮௱௯௰௧ (அச்சில் உள்ளவாறு).
“ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை.”
ஆற்றுவார் = வினைவல்லார். ஆற்றல் = வலிமை.
இகழாமை = இழிவாக பேசாமை. போற்றுவார் = தற்காவலைப்பேணுவார்.
போற்றல் = விரும்பல்
தலை = முதன்மை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“வினைவல்லாரது வலிமையை இழிவாக பேசாமை தற்காவலைப்பேணுவார் விரும்பும் காவல்களுள் முதன்மையானது” என்பதாம்.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாம் தலை.”
குறள் – ௮௱௯௰௨ (அச்சில் உள்ளவாறு).
“பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேணா விடும்பை தரும்.”
பெரியாரை = ஆன்றோரை.
பேணாது = போற்றாது.
ஒழுகின் = செயல்படின்.
பேணா = காக்கவியலா.
இடும்பை = துன்பம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஆன்றோரைப்போற்றாது செயல்படின் அவ்வான்றோராலும் காக்கவியலா துன்பத்தை அடைவான்” என்பதாம்.
‘ஒழுகின்’ என்னும் வினையெச்சம் ‘பெரியார்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘பெரியாரால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘பெரியார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பேரா விடும்பை’ என்னும் புணர்ச்சியில் வகரவுடம்படுமெய் நீங்காமல் ‘இடும்பை’ என்னும் பொருளை உணரமுடியாது. புணர்ச்சியை நீக்கி பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா.
செம்மைவடிவம் —
“பெரியாரைப் பேணா தொழுகின் பெரியாரால்
பேணா இடும்பை தரும்.”
குறள் – ௮௱௯௰௩ (அச்சில் உள்ளவாறு).
“கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி
னாற்று பவர்க ணிழுக்கு.”
கெடல் = கெடுதல்.
அடல் = அழிய.
ஆற்றுபவர் = வினைவல்லார்.
இழுக்கு = தீங்கு, குற்றம்.
“(வினை) கெடல்வேண்டின் கேளாது செய்க. அடல்வேண்டின்
ஆற்றுபவர்கண் இழுக்கு செய்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘வினை’ என்பது அவாய்நிலையான் வந்தது. ‘செய்க’ என்பது ஈற்றிலும் நின்றுபொருந்தி பொருள்தரும்.
“செய்யும் வினை கெடல்வேண்டின் வினைவல்லாரைக்கேளாது செய்க. அழிதல் வேண்டின் வினைவல்லார்க்கு தீங்கு செய்க” என்பதாம்.
‘செய்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘வேண்டின்’ என்னும் வினையெச்சம் ‘ஆற்றுபவர்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘ஆற்றுபவர்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘ஆற்றுபவர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.”
குறள் – ௮௱௯௰௪ (அச்சில் உள்ளவாறு).
“கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல்.”
கூற்றம் = கூற்றுவன், காலன், எமன்.
விளித்தல் = அழைத்தல்.
அற்று = போன்றது.
ஆல் = அசைச்சொல்.
ஆற்றுவார் = வினைவல்லார்.
ஆற்றாதார் = வினையியலாதார். இன்னா = தீங்கு.
“ஆற்றாதார் ஆற்றுவார்க்கு இன்னா செயல் கூற்றத்தை கையால் விளித்தற்றால்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வினையியலாதார் வினைவல்லார்க்கு தீங்கு செய்வது கூற்றுவனைக்கைகாட்டி அழைத்தது போன்றது” என்பதாம்.
‘கூற்றத்தை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற பெயர் ‘கை’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
‘விளித்தற்றால்’ என்பதன்கண் வந்த ‘அற்று’ என்னும் உவமவுருபுடன் ‘ஆல்’ என்னும் அசைச்சொல் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஆற்றுவார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற பெயர் ‘ஆற்றாதார்’ என்னும் எழுவாயுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘ஆற்றாதார்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கூற்றத்தை கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு*
ஆற்றாதார் இன்னா செயல்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௮௱௯௰௫ (அச்சில் உள்ளவாறு).
“யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.”
யாண்டும் = எங்கும்.
உளராகார் = வாழார்.
வெந்துப்பு = மிகுவலிமை,
பெருவலிமை.
வேந்து = வேந்தன்.
செறு = சினம்.
செறப்பட்டவர் = சினத்திற்கு ஆளானவர்.
“வெந்துப்பின் வேந்துசெறப்பட்டவர் யாண்டுச்சென்றும் யாண்டும் உளராகார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மிகுவலிய வேந்தனது சினத்திற்கு ஆளானவர் எங்கே சென்றாலும் எங்கும் வாழார்” என்பதாம்.
‘யாண்டுசென்று’ என்பது ‘யாண்டுசென்றும்’ எனவிரியும். உம்மை தொக்கு வந்தது.
‘யாண்டும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.”
குறள் – ௮௱௯௰௬ (அச்சில் உள்ளவாறு).
“எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.”
எரி = தீ.
உய்வு = மீட்சி.
உய்யார் = மீளார்.
பிழைத்து = தீங்கிழைத்து.
“எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்.
பெரியார்பிழைத்தொழுகுவார் உய்யார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தீயினால் சுடப்படினும் மீட்சி உண்டாகும். பெரியார்க்கு தீங்கிழைத்து நடப்பவர் மீளார்” என்பதாம்.
‘எரியால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘எரி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘சுடப்படினும்’ என்பதன்கண் வந்தது அழிவுப்பொருளில் வந்த உயர்வுச்சிறப்பும்மை. சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘உண்டாம்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘பெரியார்பிழைத்தொழுகுவார்’ என்பது ‘பெரியாரைப்பிழைத்தொழுகுவார்’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும். இடைவெளிநீக்கம் தொகையாற்றலை அறிவிக்கும்.
செம்மைவடிவம் —
“எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்தொழுகு வார்.”
குறள் – ௮௱௯௰௭ (அச்சில் உள்ளவாறு).
“வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாந்
தகைமாண்ட தக்கார் செறின்.”
வகை = அமைப்பு.
மாண்ட = மாண்புற்ற.
வான்பொருள்= திரண்ட பெருஞ்செல்வம்.
என்னாம் = எதற்கும் உதவாது.
தகை = பண்பு.
தக்கார் = தகுதிமிக்கார்.
செறின் = சினந்தால்.
“தகைமாண்ட தக்கார் செறின் வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மாண்புற்ற பண்புகளால் தகுதிமிக்கார் சினந்தால் மாண்புற்று அமைந்த வாழ்க்கையும் திரண்ட பெருஞ்செல்வமும் எதற்கும் உதவாது” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் பொருள்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. ‘வான்பொருளும்’ என்னும் இறுதியெண்ணும்மை புணராது தனித்துநிற்கும்.
‘என்னாம்’ என்பதன் ஈற்றில் நின்ற ‘ஆம் (ஆகும்)’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.”
குறள் – ௮௱௯௰௮ (அச்சில் உள்ளவாறு).
“குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.”
குன்று அன்னார் = குணக்குன்று ஆனார்.
குன்ற = குறைத்து.
மதிப்பின் = கருதின்.
குடியொடு= குலத்தொடு.
நின்ற அன்னார் = நிலைத்து வாழ்பவர்.
மாய்வர் = அழிவர்.
நிலத்து = உலகில்.
“நிலத்து நின்ற அன்னார் குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு மாய்வர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உலகில் நிலைபெற்று வாழ்வார் போன்றோரும் குணக்குன்றான ஆன்றோரை குறைத்து மதித்தால் குலத்தோடு அழிவர்” என்பதாம்.
‘மதிப்பின்’ என்னும் வினையெச்சம் குடி’ என்னும் பெயருடன் புணராது. ‘வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மை வடிவம் —
“குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.”
குறள் – ௮௱௯௰௯ (அச்சில் உள்ளவாறு).
“ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.”
ஏந்திய = உயரிய, சீரிய.
கொள்கையார் = கொள்கையாளர்.
சீறின் = சினப்பின்.
இடைமுரிந்து = அறுபடும்.
வேந்தனும் = அரசனும்.
வேந்து = அரசு, அரசுரிமை.
கெடும் = நீங்கும், அழியும்.
“ஏந்திய கொள்கையார் சீறின் வேந்தனும் வேந்து இடைமுரிந்து கெடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உயரிய, சீரிய கொள்கையாளர் சினப்பின் அரசனுக்கும் அரசுரிமை அறுபட்டு நீங்கும்” என்பதாம்.
‘சீறின்’ என்னும் செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம் காரணப்பொருளில் வருவதால் புணராது தனித்துநின்று தனது காரணப்பொருளை வெளிப்படுத்தும்.
செம்மைவடிவம் —
“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.”
குறள் – ௯௱ (அச்சில் உள்ளவாறு).
“இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.”
இறந்தமைந்த = அளவிறந்து அமைந்த.
சார்பு = துணைவர்.
உய்யார் = மீளார்.
சீரார் = செம்மையோர்.
செறின் = சினப்பின்.
“சிறந்தமைந்த சீரார் செறின் இறந்தமைந்த சார்புடையராயினும் உய்யார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“சிறந்தமைந்த செம்மையோர் சினப்பின் அளவிறந்து அமைந்த துணைவுடையராயினும் மீளார்” என்பதாம்.
‘சார்புடையராயினும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.”
தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.



