
குறள் – ௩௱௩௧ (அச்சில் உள்ளவாறு).
“நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை.”
நில்லாதன = நிலையற்றன.
நிலையின = நிலைத்தன.
புல்லறிவு = சிற்றறிவு.
கடை = இழிவு.
“நிலையற்றவற்றை நிலைத்தனவாக உணரும் சிற்றறிவு இழிவானது” என்பதாம்.
நிலையின+என்றுணரும் → நிலையின+வ்+என்றுணரும் → நிலையின+(வ்+எ)+ன்றுணரும் →நிலையின+வெ+ன்றுணரும் → நிலையினவென்றுணரும். இப்புணர்ச்சியில் வகரவுடம்படுமெய் இடம்பெறுகிறது. ‘உடம்படுமெய் உருபுகொளல் வரையார்’ என்பது தொல்காப்பியம். உயிரையும் உயிரையும் உடம்படுத்தும்போது ஒலியொப்புக்குரிய மெய்யொலியை இடவேண்டுமென்பது. தொல்காப்பியத்தின் செய்தி. பிற்காலத்தில் தோன்றிய நன்னூலில் உடம்படுமெய் வரையறுக்கப்பட்டது. இது தொல்காப்பியத்திற்கு மாறானது. ஆனாலும் திருக்குறளை அச்சிட்டோர் நன்னூலின் உடம்படுமெய்க்கொள்கையையே கடைப்பிடித்தது தவறு. நிலையின+என்றுணரும் → நிலையின+ய்+என்றுணரும் → நிலையின+(ய்+எ)+ன்றுணரும் →நிலையின+யெ+ன்றுணரும் → நிலையினயென்றுணரும் என்றவாறு யகரவுடம்மடுமெய்யை இட்டால் எகரவுயிரொலியும் (எ), யெகரவுயிரொலியும் (யெ) ஒலியொப்புமைபெறக்காணலாம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“நில்லாத வற்றை நிலையின யென்றுணரும்
புல்லறி வாண்மை கடை.”
குறள் – ௩௱௩௨ (அச்சில் உள்ளவாறு).
“கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று.”
குழாம். = கூட்டம்.
அற்றே = அது போன்றதே.
போக்கும் = நீங்குவதும்.
விளிதல் = கலைதல்.
அற்று = போல.
“பெருஞ்செல்வம் கூத்தாட்டவைக்குழாத்தற்றே (அப்பெரும் செல்வத்தின்) போக்கும் அது (குழாம்) விளிந்தற்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கூத்தாட்டம் நடக்கும் அவையில் கூட்டம் கூடுவதுபோன்றதே பெருஞ்செல்வம் சேர்வது. அப்பெருஞ்செல்வம் நீங்குவது கூத்து முடிந்ததும் கூடிய கூட்டம் விரைந்து கலைந்துசெல்வதுபோல” என்பதாம்.
“போக்குமது” என்பது பொருந்தாப்புணர்ச்சி. ‘போக்கும்’ என்பது பெருஞ்செல்வம் நீங்குவதைக்குறிக்கும். ‘அது’ என்பது குழாத்தைக்(கூட்டத்தைக்)குறிக்கும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.”
குறள் – ௩௱௩௩ (அச்சில் உள்ளவாறு).
“அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்.”
அல்கா → அற்கா = நிலையற்ற.
இயல்பிற்று = இயல்புடையது.
அல்குப → அற்குப = நிலைப்பன.
செயல் = செய்க.
“அற்காயியல்பிற்று செல்வம் அதுபெற்றால் ஆங்கே அற்குப செயல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நிலையில்லா இயல்புடையது செல்வம். அதனைப்பெற்றால் அப்போதே நிலைப்பனவற்றை செய்க” என்பதாம்
‘செல்வம்’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருளைத்தருகிறது. முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
‘பெற்றால்’ என்பதில் வந்த ‘ஆல்’ என்னும் இடைச்சொல் ‘பெற்று’ என்பதுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அற்குப’ என்பது ‘ஆங்கே’ என்னும் காலச்சுட்டுப்பெயரை அவாவி நிற்கவில்லை. ‘அற்குப’ என்பது ‘செயல்’ என்னும் வினைமுற்றைத்தழுவி முற்றுப்பொருளைப்பெறும் ‘அற்குபவாங்கே’ என்பது தழுவாப்புணர்ச்சி. தழுவும் சொற்களே புணரும்.
செம்மைவடிவம் —
“அற்கா யியல்பிற்று செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.”
குறள் – ௩௱௩௪ (அச்சில் உள்ளவாறு).
“நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.”
நாள் = காலம் (ஒருநாள்).
ஈரும் = அறுக்கும்.
வாள் = அறுக்குங்கருவி (இரம்பம்).
உணர்வார்ப்பெறின் = உணர்வார் இருப்பின்.
“ஒவ்வொரு நாளையும் ஒன்றுபோல காட்டும் காலத்தை உணர்வார்க்கு அஃது உயிரை (வாழ்நாளை) அறுக்குங்கருவி (இரம்பம்) ஆகும்” என்பதாம். “பகலிரவென நடக்கும் நாள் மாறாது ஒன்றுபோல தோன்றினாலும் ஒவ்வொருநாளும் நம்வாழ்நாளின் ஒருநாளை அறுத்துச்செல்லும் வாள் என்பதை உணர்வுடையார் அறிவர்” என்பதாம்.
‘காட்டி’ என்னும் வினையெச்சம் ‘உயிர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘ஒன்றுபோல்’ என்பதில் வந்த ‘போல்’ என்னும் உவமவுருபு ‘ஒன்று’ என்பதனை விளக்கி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘வாளது’ என்னுமிடத்தில் முற்றுப்பொருள் கிட்டுகிறது. முற்றுப்பொருள் வருமிடங்கள் புணராது விட்டிசைக்கும்.
செம்மைவடிவம் —
“நாளென வொன்றுபோல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின்.”
குறள் – ௩௱௩௫ (அச்சில் உள்ளவாறு).
“நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும்.”
நா = நாக்கு.
செற்று = ஒடுங்கி.
நாச்செற்று = நாவினை ஒடுக்கி (பேச்சினை ஒடுக்கி).
விக்குள்= விக்கல்.
மேற்சென்று = நாடி, தேடி.
“பேச்சினை ஒடுக்கி விக்கல் மேலெழுந்து வாராமுன் (இறக்கும்முன்) நல்வினையை நாடி செய்க” என்பதாம்.
‘நாச்செற்று’ என்பது ‘நாவினைச்செற்று’ என இரண்டாம்வேற்றுமைவிரியாகும்.
‘விக்குண்மேல்’ என்பதில் ‘விக்குள்’ எழுவாயாக நிற்கிறது. எழுவாய் என்பது திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது. விக்குளுடன் புணர்ந்த ‘மேல்’ என்பது இடப்பொருளில்வந்த வேற்றுமைவுருபன்று. ‘விக்குண்மேல்’ எனப்புணர்த்தினால் எது வாராமுன் என்பதற்கு விடை கிட்டாது. ‘மேல்’ என்பது ‘வாராமுன்’ என்பதனை விளக்கும். நாவினை (பேச்சினை) ஒடுக்கி விக்கல் மேலே வாராமுன் என்பதாக ‘வாரா’ என்னும் வினைக்கு அடையாகவரும்.
‘வாராமுன்’ என்பதில் வந்த ‘முன்’ என்னும் காலயிடைச்சொல் ‘வாரா’ என்னும் வினைநிகழ்வை விளக்கி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.”
குறள் – ௩௱௩௬ (அச்சில் உள்ளவாறு).
“நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.”
நெருநல் = நேற்று.
உளன் = இருந்தான்.
இன்றில்லை = இன்று இறந்தான்.
பெருமை = நிலையாமையாகிய பெருமை (இழிவுக்குறிப்பு).
உடைத்து = உடையது.
‘நெருநல்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘உளன்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘உடைத்து’ (உடையது) என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஒருவன்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது. தனது இயல்புப்பொருளை இழந்து திரிபடையாத நிலையில் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
“ஒருவன் நெருநல் உளன் (அவன்) இன்றில்லையென்னும் பெருமையுடைத்து இவ்வுலகு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நேற்று இருந்த ஒருவன் இன்றில்லையென்னும் நிலையாமையாகிய பெருமையை உடையது இவ்வுலகு” என்பதாம்.
செம்மைவடிவம் —
“நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை யென்னும்
பெருமை யுடைத்து*இவ் வுலகு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௩௱௩௭ (அச்சில் உள்ளவாறு).
“ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.”
ஒருபொழுது = நாளின் பாதி (பகற்பொழுது, இரவுப்பொழுது).
கருதுப = கருதுவன, எண்ணுவன.
“ஒருபொழுது காலவளவிற்குங்கூட உயிரோடிருப்போமா என்பதை அறியாதார் கருதுவன கோடியுமல்ல பலகோடி” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௩௱௩௮ (அச்சில் உள்ளவாறு).
“குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு.”
குடம்பை = பறவைமுட்டை.
புள் = பறவை . பறவைக்குஞ்சு என்பது இடப்பொருள்.
அற்றே = அது போன்றதே.
நட்பு = தொடர்பு.
“பறவைமுட்டைக்குள் வளரும் குஞ்சு வெளிவரும்நிலைக்கு வளர்ந்ததும் முட்டையினை உடைத்து முட்டையோட்டினைத்தனித்துவிட்டு பறந்து செல்வதுபோன்றதே உடம்புக்கும் உயிர்க்கும் இடையேயுள்ள தொடர்பு” என்பதாம்.
‘ஒழிய’ என்னும் வினையெச்சம் ‘புள்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘புட்பறந்து’ என்ற புணரச்சியில் புள் என்பது திரிபில்பெயர்ச்சொல்லாகும். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘அற்று’ என்னும் உவமவுருபு ‘புள்பறந்து’ என்னும் சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது. மேலும் உவமவுருபின் ஈற்றில்நின்ற தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
‘உடம்பொடுயிரிடை’ என்பதில் வந்த ‘ஒடு’ என்னும் வேற்றுமைவுருபு ‘உயிர்’ என்னும் பெயருடன் புணரும் இன்றியமையாமை இல்லை. தொடரொலிப்பின்பொருட்டு நிகழும் பொருள்திரியாப்புணர்ச்சி இலக்கணமுடையது. இதுபோன்ற இடங்களை ஒலித்து அறிக.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“குடம்பை தனித்தொழிய புள்பறந் தற்றே
உடம்பொ டுயிரிடை நட்பு.”
குறள் – ௩௱௩௯ (அச்சில் உள்ளவாறு).
“உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.”
சாக்காடு = இறப்பு, சாவு.
‘உறங்குவதுபோலும்’ என்பதில் வரும் ‘போலும்’ என்னும் உவமவுருபு உறங்குவதை ஒப்பிட்டு தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘சாக்காடு’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ப்பயனிலையாம். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“உறங்குவது போலும் சாக்காடு* உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௩௱௪௰. (அச்சில் உள்ளவாறு).
“புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு.”
புக்கில் = புக்கு இல் = புகுந்து வாழும் இல்லம் .
அமைந்தின்று = அமையவில்லை.
கொல்லோ= கொல், ஓ அசைச்சொற்கள்.
துச்சில் = ஒதுங்குதல்
துச்சி = ஒதுங்கி.
“உடம்பினுள் ஒதுங்கியிருந்த உயிர்க்கு புகுந்து வாழும் நிலைத்த இல்லம் அமையவில்லை” என்பதாம்.
“உடம்பினுள்
துச்சிலிருந்த உயிர்க்கு புக்கில் அமைந்தின்று கொல்லோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘இல்’ (இல்லம்) என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் ‘அமைந்து’ என்னும் வினையெச்சத்துடன் புணராது. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
ஓகாரயீறுபெற்ற ‘கொல்லோ’ என்னும் அசைச்சொல் புணராது தனித்து நிற்கும்.
‘உடம்பினுள்’ என்பதில் வந்த ‘உள்’ என்னும் வேற்றுமைவுருபு ‘உடம்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இருந்தவுயிர்க்கு’ என்பதில் ‘இருந்த’ என்பது பெயரெச்சம். பெயரெச்சம் பெயர்ச்சொல்லை முடிக்கும் சொல்லாக கொள்ளும்; புணராது.
செம்மைவடிவம் —
“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு.”
தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.



