
குறள் – ௭௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு).
“செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.”
யாவுள = யாவை உள்ளன.
வினை = செயல்.
காப்பு = காவல்.
“நட்பின் செயற்கரிய யாவுள.
அதுபோல் வினைக்கரிய காப்பு யாவுள” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நட்பினைவிட செய்தற்கு அரிய செயல் ஏதுமில்லை . அதுபோல் (நட்பினைப்போல்) செயலுக்கு அரிய காவல் ஏதுமில்லை” என்பதாம்.
கொண்டுகூட்டில் மூன்றாஞ்சீர் முடிவில் ஒரு கருத்து முற்றுப்பெறுகின்றது. கருத்து முடியுமிடங்கள் புணரா. மேலும் அது என்னும் சுட்டுச்சொல் வருமொழியாகிப்புணராது.
செம்மைவடிவம் —
“செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.”
குறள் – ௭௱௮௰௨ (அச்சில் உள்ளவாறு).
“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.”
நிறைநீர = முழுமையாதல்.
நீரவர் = சான்றோர்.
கேண்மை = நட்பு.
பிறைமதி = பிறை நிலா.
பின்னீர = தேய்ந்து மறைதல்.
பேதையார் = அறிவற்றோர்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பிறைமதி நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதி பின்னீர பேதையார் நட்பு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘பிறைமதி’ என்னுஞ்சொல் முன்னும்சென்று பொருள்தரும்.
“பிறைநிலா வளர்ந்து முழுநிலா ஆகுந்தன்மையது சான்றோர்நட்பு. பிறைநிலவு தேய்ந்து மறையும் தன்மையது அறிவற்றோர்நட்பு” என்பதாம்.
‘பிறைமதிப்பின்னீர’ என்னும் புணர்ச்சி பொருளற்றது. பிறைமதி எழுவாயாகும். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதி
பின்னீர பேதையார் நட்பு.”
குறள் – ௭௱௮௰௩ (அச்சில் உள்ளவாறு).
“நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.”
பொருட்டு = காரணம்.
நட்டல் = நட்பு.
மிகுதிக்கண் = நெறிதவறும்போது. மேற்சென்று = முற்பட்டு.
இடித்தல் = கடிதல்.
“நட்டல் நகுதல் பொருட்டன்று மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்பொருட்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நட்பு சிரித்தற்பொருட்டன்று நெறிதவறும்போது முற்பட்டு கடிதல் பொருட்டு” என்பதாம்.
செய்யுளில் ‘நட்டல்’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருளைத்தருகின்றது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.”
குறள் – ௭௱௮௰௪ (அச்சில் உள்ளவாறு).
“நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.”
பொருட்டு = காரணம்.
நட்டல் = நட்பு.
மிகுதிக்கண் = நெறிதவறும்போது. மேற்சென்று = முற்பட்டு.
இடித்தல் = கடிதல்.
“நட்டல் நகுதல் பொருட்டன்று மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்பொருட்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நட்பு சிரித்தற்பொருட்டன்று நெறிதவறும்போது முற்பட்டு கடிதல் பொருட்டு” என்பதாம்.
செய்யுளில் ‘நட்டல்’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருளைத்தருகின்றது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.”
குறள் – ௭௱௮௰௫ (அச்சில் உள்ளவாறு).
“புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும்.”
புணர்ச்சி = கூடுதல்.
உணர்ச்சி = ஒத்தவுணர்வு.
கிழமை = உரிமை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒருவரொடு நட்பாதற்கு கூடிப்பழக வேண்டா. ஒத்தவுணர்ச்சி நட்பாகும் உரிமையைத்தரும்” என்பதாம்.
‘வேண்டா’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘வேண்டாவுணர்ச்சி’ என்பது பொருளை வேறுதிசைக்குச்செலுத்தும்.
‘தான்’ என்னும் இடைச்சொல் ‘உணர்ச்சி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நட்பாங்கிழமை’ என்பது ‘நட்பு ஆகும் கிழமை’ எனவிரியும். ’ஆகும் கிழமை’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் பெயரெச்சம் புணராது.
செம்மைவடிவம் —
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.”
குறள் – ௭௱௮௰௬ (அச்சில் உள்ளவாறு).
“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு.”
நக = மகிழ, மலர.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“முகம் மட்டுமே மலர நட்புகொள்வது நட்பன்று. நெஞ்சின்கண் உள்ளம் மலர நட்புகொள்வது நட்பு” என்பதாம்.
‘முகநக’ என்னும் புணர்ச்சியில் ‘முகம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘நெஞ்சத்து’ என்பதன்கண் வந்த ‘அத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நெஞ்சம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன்.
‘அகநக’ என்னும் புணர்ச்சியில் ‘அகம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து*
அகம்நக நட்பது நட்பு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௮௰௭ (அச்சில் உள்ளவாறு).
“அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க
ணல்ல லுழப்பதா நட்பு.”
அழிவின் = கெடும்போது, கெடின்.
ஆறு உய்த்து = நல்வழியில் செலுத்தி.
அல்லல் = துன்பம்.
உழப்பதாம் = இணைந்து துய்ப்பது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒருவர் கெடும்போது அவற்றை நீக்கி நல்வழியில் செலுத்துவதும் கேடுற்றவிடத்து இணைந்து கேட்டினைத்துய்ப்பதும் நட்பு” என்பதாம்.
‘நீக்கி’ என்னும் வினையெச்சம் ‘ஆறு (வழி)’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘உய்த்து’ என்னும் வினையெச்சம் ‘அழிவு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘அழிவின்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இன்’ என்னும் சாரியைபெற்று ‘அழிவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘உழப்பதாநட்பு’ என்னும் புணர்மொழி ‘உழப்பதாம் நட்பு → உழப்பதாகும் நட்பு’ எனவிரியும். ‘ஆகும்’ என்பது குறிப்புவினைமுற்று. ‘ஆகும் நட்பு’ என்பது முன்பின் மாறிவந்த வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அழிவி னவைநீக்கி ஆறுய்த்து* அழிவின்கண்
அல்ல லுழப்பதாம் நட்பு.”
* குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௮௰௮ (அச்சில் உள்ளவாறு).
“உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
யிடுக்கண் களைவதா நட்பு.”
உடுக்கை = இடையாடை (சூழ்நிலைப்பொருள்).
ஆங்கே = அப்பொழுதே.
இடுக்கண்= துன்பம்.
களைவது = நீக்குவது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இடையாடையை இழந்தவனுக்கு அப்பொழுதே கை சென்றுதவி மானங்காத்தல்போல் நண்பரின் துன்பத்தைக்களைவது நட்பாகும்” என்பதாம்.
‘போல’ என்னும் உவமவுருபு ‘கை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஆங்கே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
‘களைவதாநட்பு’ என்னும் புணர்மொழி ‘களைவதாம் நட்பு → களைவதாகும் நட்பு’ எனவிரியும். ‘ஆகும்’ என்பது குறிப்புவினைமுற்று. ‘ஆகும் நட்பு’ என்பது முன்பின் மாறிவந்த வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.”
குறள் – ௭௱௮௰௯ (அச்சில் உள்ளவாறு).
“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
யொல்லும்வா யூன்று நிலை.”
வீற்றிருக்கை = நிலைத்தன்மை.
கொட்பு = தளர்வு.
ஒல்லும்வாய் = இயலும் வழி.
ஊன்று நிலை → ஊன்றும் நிலை = உதவும் நிலை.
“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்
ஒல்லும்வாய் கொட்பின்றி ஊன்றும் நிலை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நட்பின் நிலைத்தன்மை யாதெனின் இயன்ற வழிகளில் தளர்வின்றி உதவும் நிலை” என்பதாம்.
‘எனின்’ என்னும் காரணயிடைச்சொல் ‘யாது’ என்னும் வினாப்பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இன்றி’ என்னும் வினையெச்சம் ‘ஒல்லும்வாய்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது. ‘ஒல்லும்’ என்பது பெயரடை.
‘ஒல்லும்வாயூன்று நிலை’ என்னும் புணர்ச்சியில் ‘ஒல்லும்வாய்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘ஊன்றும் நிலை’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் பெயரெச்சம் இயல்புப்பொருள்தரும் பெயருடன் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.”
குறள் – ௭௱௮௰ (அச்சில் உள்ளவாறு).
“இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று
புனையினும் புல்லென்னு நட்பு.”
புனையினும் = மேன்மைபடுத்தினும்.
புல்லென்னும் = இழிவுபடும்.
“இவர் எமக்கு இனையர் இன்னம் யாமென்று புனையினும் நட்பு புல்லென்னும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“இவர் எமக்கு இத்துணை அன்பினர் . யாம் இவர்க்கு இத்தன்மையினரென மேன்மைபடுத்தினும் நட்பு இழிவுபடும்” என்பதாம்.
‘இவர்’ என்னும் சுட்டுப்பெயர் வருமொழியாகிப்புணராது.
‘இவர்’, ‘எமக்கு’ என்பன வேறுவேறு வினைமுதல்களைச்சுட்டுவன. வேறுவேறு வினைமுதல்களைச்சுட்டுவன தம்முள் புணரா.
‘எமக்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘இன்னம் (இத்தன்மையினர்)’ எனப்பொருள்படும் வினையாலணையும்பெயருடன் புணராது.
‘புல்லென்னுநட்பு’ என்பதன்கண் வந்த ‘என்னும்’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இனையர் இவர்எமக்கு* இன்னம்யா மென்று
புனையினும் புல்லென்னும் நட்பு.”
* குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




