இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௬௰௫. சொல்வன்மை.

குறள் – ௬௱௪௰௧ (அச்சில் உள்ளவாறு).

“நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
யாநலத் துள்ளதூஉ மன்று.”

நாநலம் = நாவினால் (பேச்சினால்) விளையும் நலம்.
நலன் → நலம் = நன்மை.
உடைமை = செல்வம்.
உள்ளதூஉம் → உள்ளதும் = அடங்கியதும்.
அன்று = அல்ல.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“நாநலமென்னும் பண்பே ஒருவர்க்கு நற்பேறு. அந்நன்மை வேறெந்த நன்மைகளுள்ளும் அடங்குவதன்று” என்பதாம்.

‘உடைமை’ என்பது செய்யுளில் பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருளைத்தருகின்றது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘நலம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘உள்ளதூஉம்’ என்னும் அளபெடையையடுத்து விட்டிசைக்கும். உள்ளதூஉமன்று எனப்புணர்த்தி உடல்மேல் உயிரேறிய புணர்ச்சியைப்பிரித்து ‘அன்று’ என்னும் குறிப்புவினைமுற்றினை உணர்த்துவதாயின் புணர்த்தியதால் பயனில்லை. புணர்ச்சியைப்பிரித்து பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா.

செம்மைவடிவம் —
“நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று.”

 

குறள் – ௬௱௪௰௨ (அச்சில் உள்ளவாறு).

“ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.”

ஆக்கம் = மேன்மை.
கேடு = இழிவு.
ஓம்பல் = போற்றல்.
சோர்வு = தவறு, குற்றம்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“ஆக்கமும் கேடும் சொல்லின்கண் ஏற்படும் குற்றத்தால் வருதலால் அது நிகழாவண்ணம் போற்றிக்காக்க” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. எனவே ‘கேடும்’ என்னும் இறுதியெண்ணும்மை புணராது.

‘வருதலால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘வருதல்’ என்னும் தொழிற்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘சொல்லின்கட்சோர்வு’ என்பது ’சொல்லின்கண் சோர்வு’ என்பதாகும். ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ’இன்’ என்னும் சாரியைபெற்று ‘சொல்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.”

 

குறள் – ௬௱௪௰௩ (அச்சில் உள்ளவாறு).

“கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.”

பிணித்தல் = கவர்தல், தன்வயப்படுத்தல்.
தகையவாய் = தன்மையாய்.
வேட்ப = விரும்ப.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“கேட்பாரை தன்வயப்படுத்துவதாய் கேளாதாரும் கேட்க விரும்பும் தன்மையதாய் அமைவதே சொல் (பேச்சு)” என்பதாம்.

‘கேட்டார்ப்பிணிக்கும்’ என்பது ‘கேட்டாரைப்பிணிக்கும்’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் ஒற்றுமிகாது. பகரமெய் மிகின் இரண்டாம்வேற்றுமையை முதலாம்வேற்றுமையாக மாற்றும்.

‘தகையவாய்’ என்னுஞ்சொல் ‘கேட்டார்’ என்னும் வினையாலணையும்பெயரைத்தழுவும்; ‘கேளார்’ என்னும் எதிர்மறைவினையாலணையும்பெயரைத்தழுவாது. தழுவுஞ்சொற்களே புணரும்.

‘மொழிவதாஞ்சொல்‌’ என்பது ‌‘மொழிவதாம் சொல்’ எனப்பிரிந்துநின்று வினைமுற்றுத்தொடராகி ‘சொல்’ என்னும் பெயர்ப்பயனிலைபெறும்.

செம்மைவடிவம் —
“கேட்டார் பிணிக்குந் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.”

 

குறள் – ௬௱௪௰௪ (அச்சில் உள்ளவாறு).

“திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்
பொருளு மதனினூஉங் கில்.”

திறன் = விளைபயன்.
ஊங்கு = சிறந்தது.
அறன் = அறவினை.
பொருள் = பொருள்வினை.

“சொல்லை திறனறிந்து சொல்லுக அதனினூஉம் அறனும் பொருளும் ஊங்கு இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“சொல்லின் விளைபயன்களை அறிந்து சொல்லுக. அவ்வாறு சொல்வதினும் சிறந்த அறவினையும் பொருள்வினையும் இல்லை” என்பதாம்.

‘சொல்லை’ என்னுஞ்சொல் ‘அறனும்’ என்னுஞ்சொல்லைத்தழுவாது; தழுவுஞ்சொற்களே புணரும். ‘சொல்லை திறனறிந்து சொல்லுக’ என்றவாறு கூடும். மேலும் இரண்டாம்வேற்றுமை ‘அறன்’ என்னும் பெயருடன் புணராது.

எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது. எனவே ‘பொருளும்’ என்னும் இறுதியெண்ணும்மை புணராது.

‘ஊங்கில்’ என்னும் புணர்ச்சி ‘சிறந்ததில்’ எனவும் பொருள்மயங்கி ‘இல்(லை)’ என்னும் வினைமுற்றினை ‘இல்’ என்னும் வேற்றுமைவுருபாக மயக்கும். ஒன்றனைப்பிரித்து பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா.

செம்மைவடிவம் —
“திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு* இல்.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

 

குறள் – ௬௱௪௰௫ (அச்சில் உள்ளவாறு).

“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொ லின்மை யறிந்து.”

இன்மை = இல்லாமை.

“சொல்லும் சொல்லை பிறிதோர்சொல் வெல்லுஞ்சொல் இன்மையறிந்து அச்சொல்லைச்சொல்லுக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘சொல்லும்’ என்பது சொல்லெச்சம்.

‘வெல்லுஞ்சொல்லின்மையறிந்து’ என்னும் புணர்மொழியில் ‘இன்மை’ என்னுஞ்சொல் ‘அறிந்து’ என்னும் வினையெச்சத்தைத்தழுவி ‘இன்மையையறிந்து’ எனவிரியும். தழுவுஞ்சொற்களே புணரும்.

‘சொல்லைப்பிறிதோர்சொல்’என்னும் புணர்மொழியில் ‘சொல்லை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘பிறிது’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘அச்சொல்’ என்னும் சுட்டுப்பெயர் வருமொழியாகி புணராது. ‘பிறிதோர்சொலச்சொல்லை’ என்னும் புணர்மொழியில் புணர்ச்சியை நீக்கியே ‘அச்சொல்’ என்னும் சுட்டுப்பெயரை உணரவேண்டியுள்ளது. புணர்ச்சியைநீக்கி பொருளுணர்வதாயின் புணர்த்த வேண்டா. புணர்மொழிகள் புணர்ந்தநிலையிலேயே மயங்காப்பொருள்தரும். எனவே ‘அச்சொல்’ என்னும் சுட்டுப்பெயர் வருமொழியாகி புணராது.

செம்மைவடிவம் —
“சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து.”

 

குறள் – ௬௱௪௰௬ (அச்சில் உள்ளவாறு).

“வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்.”

வேட்பது= விரும்புமாறு.
மாட்சியின் = பெருமையில், சிறப்பில்.
மாசற்றார் = குற்றமற்றார்.
கோள் = கொள்கை.

“வேட்ப சொல்லி தாம் பிறர்சொற்பயன்கோடல் மாட்சியின் மாசற்றார்கோள்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கேட்போர் விரும்புமாறு சொல்லி தாமும் பிறர்சொல்வனவற்றில் பயனுள்ளவற்றை ஏற்றல் பெருமைகளில் குற்றமற்றாரது கொள்கை” என்பதாம்.

‘வேட்ப’ என்னும் வினையெச்சம் ‘தாம்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘சொல்லி‌’ என்னும் வினையெச்சம் ‘பிறர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘பயன்கோடல்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. அதனால் ‘கோடல்’ என்பதன் ஈற்றுலகரம் னகரமாக திரியாது.

செம்மைவடிவம் —
“வேட்பதாஞ் சொல்லி பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.”

 

குறள் – ௬௱௪௰௭ (அச்சில் உள்ளவாறு).

“சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை
யிகல்வெல்லல் யார்க்கு மரிது.”

சொலல்வல்லன் = சொல்வதில் திறனுடையவன்.
இகல் = மாறுபாடு, வேறுபாடு.
அரிது = இயலாது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

அடுத்தடுத்து வந்து முற்றுப்பொருள்தரும் பண்புப்பெயர்கள் தம்முள் புணராது தனித்துநின்று தம்மை வெளிப்படுத்தும். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது. எனவே ‘சோர்விலன்’, ‘அஞ்சான்’ என்பன புணராது.

“சொற்றிறனுடையான், சோர்வில்லான், அச்சமில்லான் ஆகிய திறனுடையானை வேறுபட்டு வெல்லுதல் யாவர்க்கும் இயலாது” என்பதாம்.

‘அவனை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘இகல்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘யார்க்கும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.”

 

குறள் – ௬௱௪௰௮ (அச்சில் உள்ளவாறு).

“விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.”

ஞாலம் = உலகம், உலகோர்.
நிரந்து = வரிசைப்படுத்தி, முறைப்படுத்தி.

“நிரந்தினிது சொல்லுதல் வல்லார்பெறின் ஞாலம் விரைந்து தொழில்கேட்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“வரிசைப்படுத்தி (முறைப்படுத்தி) இனிதாக சொல்லும் ஆற்றலாளரைப்பெற்றால் உலகோர் அவர்தம் ஏவலை விரைந்து கேட்பர்” என்பதாம்.

‘கேட்கும்’ என்பது ‘கேட்பர்’ என்னும் பொருள்தரும் வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘உலகோர்’ என்னும் பொருள்தரும் ‘ஞாலம்’ எழுவாயாகும். எழுவாய் எதனுடனும் புணராது.

‘வல்லார்ப்பெறின்’ என்பது ‘வல்லாரைப்பெறின்’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகையாம். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் நிலைமொழி இயல்பாகும்; ஒற்று மிகாது.

செம்மைவடிவம் —
“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார் பெறின்.”

 

குறள் – ௬௱௪௰௯ (அச்சில் உள்ளவாறு).

“பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்ல றேற்றா தவர்.”

காமுறுவர் = விரும்புவர்.
மன்ற = உறுதியாக.
தேற்றாதவர் = தேறாதவர், அறியாதவர்.

“மாசற்ற சிலசொல்லல் தேற்றாதவர் பல சொல்லக்காமுறுவர் மன்ற” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“குற்றம்நேராவண்ணம் சிலசொற்களால் சுருங்க விளக்க அறியாதார் பலசொற்களால் விரிக்க விரும்புவர் உறுதியாக”
என்பதாம்.

‘சொல்லறேற்றாதவர்’ என்னும் புணர்மொழியை விட்டிசைக்காமல் ஒலிக்க முடியாது. சொல்ல என்னும் வினையெச்ச்தையடுத்து விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடம் புணராது. பொருள் விளங்குமாறே புணர்த்தல் வேண்டும்.

செம்மைவடிவம் —
“பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்ல தேற்றா தவர்.”

 

குறள் – ௬௱௫௰ (அச்சில் உள்ளவாறு).

“இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார்.”

இணரூழ்த்தும் = கொத்துகொத்தாக மலர்ந்தும்.
நாறா = மணம்தராத, மணக்காத.
அனையர் = ஒப்பர்.
உணர = அறிய
விரித்து = விளக்கி.
உரையாதார் = சொல்லாதார்.

“கற்றது உணர விரித்துரையாதார் இணரூழ்த்தும் நாறா மலரனையர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கற்றதை பிறர் உணருமாறு விளக்கி சொல்லாதார் கொத்துகொத்தாக மலர்ந்தும் மணம்தராத மலரை ஒப்பர்” என்பதாம்.

‘இணரூழ்த்தும்’ என்பது இழிவுச்சிறப்பும்மை. சிறப்பும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார்.”

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button