இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௬௰௯. தூது.

குறள் – ௬௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு).

“அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
புண்புடைமை தூதுரைப்பான் பண்பு.”

ஆன்ற = மாட்சிமையுள்ள.
அவாம் → அவாவும் = விரும்பும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“அன்புடைமை, மாட்சிமையுள்ள குடிபிறப்பு , வேந்தன் விரும்பும் பண்புடைமை ஆகியன தூதுரைப்பான் பண்புகள்” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் புணருமாயினும் பொருள்மயங்காவண்ணம் புணரும். புணர்மொழி புணர்ந்த ஒருசொன்னீர்மையிலேயே பொருள்தரும். புணர்ச்சியைப்பிரித்து பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா; விட்டிசைத்துச்செல்க.

செம்மைவடிவம் —
“அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.”

 

குறள் – ௬௱௮௰௨ (அச்சில் உள்ளவாறு).

“அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று.”

“அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை ஆகிய மூன்றும் தூதுரைப்பார்க்கு இன்றியமையாதன” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

எண்ணும்மைகள் தம்முள் புணருமாயினும் பொருள்மயங்காவண்ணம் புணரும். புணர்மொழி புணர்ந்த ஒருசொன்னீர்மையிலேயே பொருள்தரும். புணர்ச்சியைப்பிரித்து பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா; விட்டிசைத்துச்செல்க.

‘தூதுரைப்பார்க்கின்றியமையாதன’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி. இதனை ‘தூதுரைப்பார்க்கின்றி யமையாதன’ எனப்பிரித்தால் ‘தூதுரைப்பார்க்கின்றி ஏனையோர்க்கு அமையாதன’ எனவும் பொருள்தரும்.

செம்மைவடிவம் —
“அன்பு*அறிவு† ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு*
இன்றி யமையாத மூன்று.”

*குற்றியலுகரங்களாகிய புகரமும் குகரமும் அலகுபெறா.

† முற்றியலுகரமாகிய வுகாரம் குற்றியலுகரமாம் தன்மையில் அலகுபெறாது.

 

குறள் – ௬௱௮௰௩ (அச்சில் உள்ளவாறு).

“நூலாரு ணூல்வல்ல னாகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.”

நூலாருள் = நூலறிவோருள்.
வேலாருள் = வேற்படையுடைய வேற்றரசரிடம்.
வென்றி வினை → வெற்றியைத்தரும் வினை (தூது).

“வேலாருள் வென்றிவினையுரைப்பான் பண்பு நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“வேற்படையுடைய வேற்றரசரிடம் தம்மரசர்க்குரிய வெற்றிவினையை உரைப்பானது பண்பு நூலறிவோருடன் நூலறிவில் வல்லவனாகுதல்” என்பதாம்.

‘நூலாருள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நூலார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“நூலாருள் நூல்வல்ல னாகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.”

 

குறள் – ௬௱௮௰௪ (அச்சில் உள்ளவாறு).

“அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.”

அறிவு = இயற்கையறிவு.
உரு = கண்டார் விரும்பும் தோற்றம்.
ஆராய்ந்த கல்வி = பலரோடும் ஆராயப்பட்ட கல்வி.
செறிவு = நிறைவு.
வினைக்கு = (அதிகாரமுறையான்) தூதிற்கு.

“அறிவு உரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றன் செறிவுடையான் வினைக்கு செல்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“இயற்கையாக அமைந்த அறிவு, கண்டார் விரும்பும் தோற்றம், பலருடனும் ஆராய்ந்து தெளிந்த கல்வி ஆகிய இம்மூன்றன் நிறைவினை உடையான் தூதிற்குச்செல்க” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் புணருமாயினும் பொருள்மயங்காவண்ணம் புணரும். புணர்மொழி புணர்ந்த ஒருசொன்னீர்மையிலேயே பொருள்தரும். புணர்ச்சியைப்பிரித்து பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா; விட்டிசைத்துச்செல்க.

இகரச்சுட்டு வருமொழியாகிப்புணராது.

செம்மைவடிவம் —
“அறிவு*உரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.”

*முற்றியலுகரமாகிய வுகாரம் குற்றியலுகரமாம் தன்மையில் அலகுபெறாது.

குறள் – ௬௱௮௰௫ (அச்சில் உள்ளவாறு).

 

“தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.”

தொகச்சொல்லி = தொகுத்துச்சொல்லி.
தூவாத → தூவாதன = கடுஞ்சொற்கள்.
நகச்சொல்லி = மகிழக்கூறி.
நன்றி = நன்மை.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“காரணவகையால் தொகச்சொல்லி, கடுஞ்சொற்களை நீக்கி, மகிழும்வண்ணம் சொல்லி நன்மையை தருவதாம் தூது” என்பதாம்.

‘சொல்லி’ என்னும் வினையெச்சம் ‘தூவாத(ன)’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘பயப்பதாம்’ என்பதன்கண் நின்ற ‘ஆம்’ (ஆகும்) என்பது செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“தொகச்சொல்லி தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.”

 

குறள் – ௬௱௮௰௬ (அச்சில் உள்ளவாறு).

“கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற்
றக்க தறிவதாந் தூது.”

கண்ணஞ்சான் = (சினப்)பார்வைக்கு அஞ்சான்.
செலச்சொல்லி = எற்குமாறு சொல்லி.
காலத்தால் = காலத்திற்கேற்ப.
தக்கது = தகுந்த வழிகள்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“கல்வியறிவுடன், பகைவரது சினப்பார்வைக்கு அஞ்சாது, அவர்மனம் ஏற்குமாறு சொல்லி சூழலுக்கேற்ற வழிகளை அறிவதாம் தூது” என்பதாம்.

வேறுவேறு வினைகளான கற்றலும் கண்ணஞ்சாமையும் தம்முள் புணரா. தனித்துநின்று தத்தம் வினையை உணர்த்தும்.

‘சொல்லி’ என்னும் வினையெச்சம் ‘காலம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘காலத்தால்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘காலம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘அறிவதாம்’ என்பதன்கண் நின்ற ‘ஆம்’ (ஆகும்) என்பது செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கற்றுகண் ணஞ்சான் செலச்சொல்லி காலத்தால்
தக்க தறிவதாம் தூது.”

 

குறள் – ௬௱௮௰௭ (அச்சில் உள்ளவாறு).

“கடனறிந்து காலங் கருதி யிடனறிந்
தெண்ணி யுரைப்பான் றலை.”

கடன் = கடமை.
காலம் = ஏற்ற காலம்.
இடன் = பொருத்தமான இடம்.
எண்ணி = கருதி. ய
தலை = தலைமையானவன்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“தனது கடமையை உணர்ந்து, அக்கடமையை நிறைவேற்ற ஏற்ற காலத்தைக்கருதி, அதற்குரிய பொருத்தமான இடத்தையும் தெரிவுசெய்து உரைப்பானே தூதில் தலைமையானவன்” என்பதாம்.

வினையெச்சங்கள் தம்முள் புணருமாயினும் வேறுவேறு நிலைகளில் நிகழ்வன தம்முள் புணராது விட்டிசைத்து பொருட்டெளிவைத்தரும். புணர்த்தி பிரித்து பொருளறிவதாயின் புணர்த்தவேண்டா. விட்டிசைக்குமிடம் புணராது.

பெயர்ப்பயனிலையாகும் ‘தலை’ என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் வருமொழியாகி புணராது. ‘உரைப்பான்றலை’ என்னும் புணர்மொழியில் ‘தலை’ என்னும் பயனிலை ஏழாம்வேற்றுமைவுருபாகவும் மயங்கும்.

செம்மைவடிவம் —
“கடனறிந்து காலங் கருதி இடனறிந்து*
எண்ணி யுரைப்பான் தலை.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௬௱௮௰௮ (அச்சில் உள்ளவாறு).

“தூய்மை துணைமை துணிவுடைமை யிம்மூன்றன்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.”

வாய்மை = அரசனது வாய்மொழி (செய்தி).
துணைமை = துணையைப்பெறும் இயல்பு.
துணிவு = அஞ்சாமை, உறுதி.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“தூய்மை, தூதுரைக்குமிடத்திலும் துணையைப்பெறும் இயல்பு, வினைவுறுதி ஆகிய இம்மூன்றும் அரசனது வாய்மொழியை (செய்தியை) உரைக்கும் தூதனின் பண்புகள்” என்பதாம்.

இகரச்சுட்டு வருமொழியாகிப்புணராது.

செம்மை வடிவம் —
“தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றன்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.”

 

குறள் – ௬௱௮௰௯ (அச்சில் உள்ளவாறு).

“விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்கண வன்.”

மாற்றம் = சொல் (செய்தி).
விடுமாற்றம் = விடுத்த செய்தி.
வடு = கேடு.
வடுமாற்றம் = தன்னிலைக்கு மாற்றம் (தனக்கு கேடு).
வாய்சோரா = சொல்லில் தடுமாறாத.
வன் → வன்மை → வன்கணவன் = திண்மையோன்.

“வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் விடுமாற்றம் வேந்தர்க்குரைப்பான்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“தானுறும் கேட்டினைக்கருதி சொல்லில் தடுமாறாத திண்மையுடையவன் தன்வேந்தனது செய்தியை பகைவேந்தனுக்கு உரைப்பான்” என்பதாம்.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

 

குறள் – ௬௱௯௰ (அச்சில் உள்ளவாறு).

“இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாந் ‌தூது.”

இறுதி = இறப்பு.
எஞ்சாது = முழுமையாக.
இறைவன் = மன்னவன்.
உறுதி = ஏற்ற பணியை முடிப்பது (மன்னது செய்தியை முழுவதும் சொல்லல்).

‘இறுதிபயப்பினும்’ என்பது ஏதிர்மறைவும்மைச்சொல். ஏதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.

‘இறைவற்கு’ என்னும் குவ்வுருபேற்ற சொல் ‘உறுதி’ என்னும் வினைசாராது பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் மட்டுமே புணரும்.

‘எஞ்சாது’ என்னும் வினையெச்சம் ‘இறைவன்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘பயப்பதாம்’ என்பதன்கண் வந்த ஆம் (ஆகும்) என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இறுதி பயப்பினும் எஞ்சாது* இறைவற்கு*
உறுதி பயப்பதாம் ‌தூது.”

குற்றியலுகரங்களாகிய துகரமும் குகரமும் அலகுபெறா.

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button