பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோராலும், தாளில் (காகிதத்தில்) அச்சிட்டோராலும் செய்தவை.
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௭.
மக்கட்பேறு.
குறள் – ௬௰௧.
“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.”
இக்குறளுக்கான பரிமேலழகனாரின் உரைவருமாறு. “ஒருவன் பெறும்பேறுகளுள் அறியவேண்டுவன அறிதற்குரிய மக்களைப்பெறுதல்லது பிற பேறுகளை யாம் மதிப்பதில்லை. ‘அறிவு’ என்பது ‘அறிதலை’ செய்வதென அத்தொழிலின்மேல் நின்றது. ‘அறிவறிந்த’ என்றதான் ‘மக்கள்’ என்னும் பெயர் ‘பெண்’ ஒழித்து நின்றது. இதனால் ‘புதல்வர்பேற்றினது’ சிறப்பு கூறப்பட்டது.”
பரிமேலழகனாரின் இவ்வுரை குறளின் பொருளுக்கு மாறானதென்பதால் இதனை ஒழித்துவிடலாம்.
“பெறுமவற்றுள் அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற யாம் அறிவதில்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
“பெறத்தக்கபேறுகளுள் அறிவறிந்த மக்கட்பேறன்றி பிறவற்றை யாம் அறிந்ததில்லை“ எனவிரியும்.
‘இல்லை’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் –
“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௭.
மக்கட்பேறு.
குறள் – ௬௰௨.
“எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.”
‘எழுபிறப்பும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.
“பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் எழுபிறப்பும் தீயவை தீண்டா” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
செம்மைவடிவம் —
“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௭.
மக்கட்பேறு.
குறள் – ௬௰௩.
“தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்.”
“தம்மக்கள் தம்பொருள் என்ப. அவர்தம்பொருள் (அவர்)தம் வினையான் வரும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க. ‘அவர்’ எனும் மறுபெயர்ச்சொல் ஈரிடத்தும் சென்றுநின்று நேர்பொருளைத்தரும்.
‘மக்கள்’ என்பது முற்றுப்பொருள்தரும் பெயர்ப்பயனிலை. ஒரு முற்றுச்சொல் எதனுடனும் புணராது.
‘தம்’ எனும் மறுபெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“தம்பொரு ளென்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௭.
மக்கட்பேறு.
குறள் – ௬௰௪.
“அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.”
‘அமிழ்தினும்’ என்பது சிறப்பும்மை. சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘ஆற்றவினிதே’ என்பதில் ‘மிக’ என பொருள்தரும் ‘ஆற்ற’ எனுஞ்சொல்லையடுத்து விட்டிசை நிகழும். விட்டிசைக்கும் இடத்தில் புணர்ச்சி நிகழாது.
“தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் அமிழ்தினும் ஆற்ற இனிதே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
செம்மைவடிவம் —
“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௭.
மக்கட்பேறு.
குறள் – ௬௰௫.
“மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு.”
‘மற்று’ என்பது அசைச்சொல். “மக்களது மெய்யினைத்தீண்டல் உடற்கு இன்பம். மற்று அவர் சொற்களைக்கேட்டல் செவிக்கு இன்பம்” எனவிரியும்.
“மக்கள்மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டல் செவிக்கு இன்பம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
‘மக்கண்மெய்’ என்பது மயங்குபுணர்ச்சி; வேண்டாதது. இது ‘மக்களது மெய்’ எனவிரியும். ஆறாம்வேற்றுமைத்தொகையில் நிலைமொழியீறு திரியாது; இடைவெளி நீங்கி தொகையைக்காட்டும்.
‘இன்பம்’ என்பது ஈரிடத்தும் பெயர்ப்பயனிலையாகும் முற்றுச்சொல். முற்றுச்சொல் எதனுடனும் புணராது.
மெய்தீண்டல், சொற்கேட்டல் என்பன முதன்மையான சொற்கள். இச்சொற்கள் விட்டிசையின்றி படுத்தலோசையில் தொடர்ந்தொலித்தால் செப்பலோசை கெடும்; உணர்ச்சியிருக்காது.
செம்மைவடிவம் —
“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௭.
மக்கட்பேறு.
குறள் – ௬௰௬.
“குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழழைச்சொற் கேளா தவர்.”
“தம்மக்கள் மழழைச்சொல் கேளாதவர் குழலினிது யாழினிது என்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
“தமது மக்களின் மழழைச்சொல்லினை கேளாதவர் குழலிசை இனிமையானது; யாழிசை இனிமையானது என்பர்” எனவிரியும்.
‘இனிது’ எனும் வினைச்சொல் ‘யாழ்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. ‘இனிதியாழ்’ என்றொரு யாழ்வகை இல்லை.
‘மழழைச்சொல்லினை கேளாதோர்’ என்பதன் தொகை நிலையே ‘மழழைச்சொல்கேளாதோர்’ என்பது. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் புணர்ச்சி இடைவெளிநீக்கத்தால் உணர்த்தப்படும்; நிலைமொழியீற்றுத்திரிபாலன்று. இரண்டாம்வேற்றுமைவிரியில் வல்லொற்றுமிகும். நிலைமொழியின் லகரத்தை றகரமாக திரித்தது புணர்ச்சியினாலன்றி வேறு எதனால்.
செம்மைவடிவம் —
“குழலினிது யாழினி தென்பதம் மக்கள்
மழழைச்சொல் கேளா தவர்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௭.
மக்கட்பேறு.
குறள் – ௬௰௭.
“தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.”
‘ஆற்றும்’ என்பது உம்மீற்றுப்பெயரெச்சம். பெயரெச்சம் பெயர்ச்சொல்லுடன் புணருமென்றாலும் ‘ஆற்றுநன்றி’ ‘ஆற்றும் நன்றி’ ஆகிய இரண்டில் பின்னதில் ஓரழுத்தம் இருக்கிறது.
‘அவையத்து’ எனுஞ்சொல் ‘முந்தியிருப்பச்செயல்’ என்பதுடன் பொருள் தொடர்புகொண்டது. ‘நன்றி’ என்பது தந்தையுடன் பொருள் தொடர்புகொள்ளும். இவையிரண்டும் புணரா. பொருள் தொடர்புபெறும் சொற்களே புணருமன்றி நிலைமொழியீறும் வருமொழிமுதலும் புணர்ச்சிக்குரியன என்பதால் புணரா.
‘இருப்ப’ என்பது பெயரெச்சம். பெயரெச்சத்தின்முன் வல்லொற்று மிகாது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்ப செயல்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௭.
மக்கட்பேறு.
குறள் – ௬௰௮.
“தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.”
‘தம்’ மறுபெயர்ச்சொல். மறுபெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“தம்மில்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௭.
மக்கட்பேறு.
குறள் – ௬௰௯.
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்.”
‘பொழுதிற்பெரிது’ என்பதில் ஏழாம்வேற்றுமையின் இடப்பொருளில் ‘இல்’ வந்தது. ஏழாம்வேற்றுமை வினைவேண்டாப்பெயருடன் புணராது. பெரிது என்பதை பண்பாயினும் பருப்பொருளாயினும் வினைச்சொற்சார்பின்றி நம்மால் உணரமுடியும். எனவே இவ்விடத்து புணராது.
‘பெரிதுவக்குந்தன்மகன்’ எனும் புணர்மொழி மகன் உவகைகொள்வதாக பொருள்தருகிறது. மேலும் ‘உவக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘மகனைச்சான்றோன்’ என்பதில் இரண்டாம்வேற்றுமைவுருபு வெளிப்பட்டது. இரண்டாம்வேற்றுமை வினைச்சொல்லுடன்மட்டுமே புணரும்; பெயர்ச்சொல்லுடனன்று.
“தன் மகனை சான்றோன் எனக்கேட்டதாய் ஈன்ற பொழுதில் பெரிதும் உவப்பாள் (உவக்கும்)“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
செம்மைவடிவம் —
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோ னெனக்கேட்ட தாய்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௭.
மக்கட்பேறு.
குறள் – ௭௰.
“மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்நோற்றான் கொல்லெனுஞ் சொல்.”
இக்குறளின் எழுவாய் மகன் என்பது. மகன்றந்தை என்பது பொருளற்ற புணர்ச்சி. வேற்றுமைவுருபினை ஏற்காத ‘மகன்’ எனும் திரிபில்பெயர்ச்சொல்லான எழுவாய் எதனுடனும் புணராது.
உடல்மேல் உயிர் ஏறுதல் இயல்பென்றாலும் எல்லாயிடத்தும் இது நிகழ்ந்தேயாக வேண்டியதில்லை. ‘ஆற்றுமுதவி’, ‘ஆற்றும் உதவி’ ஆகிய இரண்டில் பின்னதில் செப்பலோசையும், அழுத்தமும் இருக்கின்றன.
‘யிவன்றந்தை’ என்பதும் ‘மகன்றந்தை’ என்பதைப்போல பொருளற்ற புணர்ச்சி. ‘இவன்’ எனும் மறுபெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
முப்பத்துமூன்று எழுத்துகள் உள்ளன. இவற்றுள் மூன்று நெடில். இக்குறளில் புணர்த்தாதசீர்களே இல்லை. இக்குறளை புணர்த்தியபடி தொடர்ந்தொலிக்க முப்பத்தாறுமாத்திரைக்குரிய காலம் வேண்டும். இயல்பான ஒலிப்புக்காலம் பன்னிரண்டுமாத்திரைக்குரிய காலமே. இஃது இயலுமா? கேட்போரும் படிப்போரும் பொருளுணர்வாரா.
‘கொல்’ என்பது அசைச்சொல். இந்த அசைச்சொல் ‘நோற்றான்’ எனும் வினைக்குரியது. ‘கொல்லெனுஞ்சொல்’ என்பது தழுவும் சொற்களன்று. இப்புணர்ச்சி அசைச்சொல்லுக்கு ஏவல்வினைப்பண்பைத்தந்து மயங்கும்.
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான்கொல் எனும் சொல்” எனவிரிந்து ஆற்றொழுக்காக பொருள்தரும்.
செம்மைவடிவம் —
“மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனுஞ் சொல்.”
நன்றி.
முத்தையா சுப்பிரமணி.




