
இடைச்சொற்கள்.
ஏகாரயிடைச்சொல்.
தேற்றம், வினா, எண், பிரிநிலை, எதிர்மறை, இசைநிறை, ஈற்றசையென ஏழுபொருளை ஏகாரயிடைச்சொல் தரும். இவ்வரிசையில் எடுத்துக்காட்டுகள் வருமாறு.
• ‘கடவுள் உண்டே.’ இத்தொடரில் கடவுள் உண்டெனும் தேற்றப்பொருளை ஏகாரம் தருவதால் தேற்றம். தேற்றம் = தெளிவு.
• ‘நீயே எடுத்தாய்.’ இத்தொடர் ‘நீயா எடுத்தாய்’ என்னும் வினாப்பொருளைத்தந்தால் வினா. இவ்வழக்கு இக்காலத்தில் நடைமுறையில் இல்லை; இலக்கியவழக்காயிற்று.
• ‘ஒன்றேகால்.’ இத்தொடரில் ஒன்றுடன் காலைக்கூட்டுக என்னும் எண்ணுப்பொருள்தருதலால் எண்.
• ‘அவருள் முருகனே நல்லவன்.’ இத்தொடரில் ஒரு கூட்டத்திலிருந்து ஒருவனைப்பிரித்து நிற்பதால் பிரிநிலை.
• ‘நானே கொண்டேன்.’ இத்தொடரில் ‘நான் கொள்கிலேன்’ என்னும் எதிர்மறைப்பொருளை தந்தால் எதிர்மறை. இவ்வழக்கு இக்காலத்தில் நடைமுறையில் இல்லை; இலக்கியவழக்காயிற்று.
• ‘ஏயே இவள் அழகி’ என்றனர். இத்தொடரில் ஏகாரம் வேறுபொருளன்றி இசைநிறைத்து நிற்றலால் இசைநிறை.
• ‘கடவுளை ஏத்தித்தொழுவோமே.’ இத்தொடரில் ஏகாரம் எப்பொருளின்றி ஈற்றிலே சார்ந்து நிற்றலால் ஈற்றசை.
ஏகாரயிடைச்சொல்லினை வருமொழியொடு புணர்த்தாது பிரித்துநிறுத்துவது உரைநடைக்கு ஏற்றது. இலக்கியநயத்துடன் தொடரொலிப்பின்பொருட்டு பொருள்திரியாது புணர்த்துங்கால் புணரும்; புணர்த்தலாம்.
ஓகாரயிடைச்சொல்.
ஒழியிசை, வினா, சிறப்பு (உயர்வு, இழிவு), எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலையென்னும் எண்வகைப்பொருளில் ஓகாரயிடைச்சொல் (ஓ) வரும். இவ்வரிசையில் எடுத்துக்காட்டுகள் வருமாறு.
• ‘வளவா கற்கவோ வந்தாய்.’ இத்தொடரில் கற்பது ஒழிந்த (கற்பதற்கன்று) விளையாடுவது உள்ளிட்ட செயல்களுக்காய் வந்தாயென பொருள்தருதலால் ஓகாரம் ஒழியிசை.
• ‘வந்தது கந்தனோ கண்ணனனோ.’ இத்தொடரில் வந்தது முருகனா கண்ணனாயென வினாப்பொருள்தருதலால் வினா.
• ‘ஓஓ பெரியன்.’ இத்தொடரில் ஒருவரது பெருமையாகிய உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுச்சிறப்பு. சிறப்பு = மிகுதி.
• ஓஓ கொடியன். இத்தொடரில் ஒருவரது கொடுமையாகிய இழிவின் மிகுதியை விளக்குதலால் இழிவுச்சிறப்பு. சிறப்பு = மிகுதி.
• ‘வளவனோ எடுத்தான்.’ இத்தொடர் ‘வளவன் எடுக்கவில்லை’ என்னும் பொருளைத்தருமிடத்து எதிர்மறை.
• ‘அது பாம்போ கயிறோ அன்று மரக்குச்சி.’ இத்தொடரில் இன்னதென தெரிவித்ததால் தெரிநிலை.
• ‘அய்யோ அறியாரோ.’ இத்தொடரில் ‘அறியாது போனரோ’ என்று கழிந்த செயலுக்காக இரங்குதலால் கழிவு.
• ‘இவனோ எடுத்தான்.’ இத்தொடரில் பலருள் ஒருவனைப்பிரித்து நிற்றலால் பிரிநிலை. இவ்வகை ஓகாரம் வழக்கில்லை.
• ‘காண வருவீரோ.’ இத்தொடரில் ஓகாரம் வேறுபொருளின்றி சார்ந்து நிற்றலால் அசைநிலை.
உரைநடையில் ஓகாரயிடைச்சொல்லினை வருமொழியொடு புணர்த்தாது பிரித்துநிறுத்துக. இடைச்சொற்கள் முதல்புணர்ச்சியுடன் தமது பணியை நிறைவுசெய்கின்றன.
உவமவுருபிடைச்சொல்.
போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய, இன்ன, என்ன, பிறவும் உவமவுருபிடைச்சொற்களாகும். இவற்றுள் ‘போல’ என்னும் ஒன்றுமட்டுமே உரைநடையில் பெரும்பான்மை பயிலுகிறது. பிற இலக்கியவழக்குகளாயின.
சிலயிடங்களில் மேற்கூறிய உவமவுருபிடைச்சொற்களுக்கு மாறாக ஒரு சொல் வந்து உவமவுருபிடைச்சொல்லாக பொருள்தரும். அவை ‘பிறவும்’ என்ற வகையில் அடங்கும். எ-டு.
• ‘மல்லிகை தோற்கும் வெண்மை.’ இத்தொடரில் ‘தோற்கும்’ என்னுஞ்சொல் அப்பொருளைக்குறிக்காது ‘போல’ என்னும் ஒப்புப்பொருளைத்தந்தது.
உவமவுருபிடைச்சொற்களை வருமொழியொடு புணர்த்தாது பிரித்துநிறுத்துக. இடைச்சொற்கள் முதல்புணர்ச்சியுடன் தமது பணியை நிறைவுசெய்கின்றன.
என, என்று ஆகிய இடைச்சொற்கள்.
வினை, பெயர், எண், பண்பு, குறிப்பு, இசை, உவமையென ஏழுபொருளில் என, என்று ஆகிய இடைச்சொற்கள் வரும். இவ்வரிசையில் எடுத்துக்காட்டுகள் வருமாறு.
• ‘மகன் பிறந்தானென தந்தை மகிழ்ந்தான்.’ இத்தொடரில் பிறந்தான் என்னும் வினையொடு சேர்ந்தது.
• ‘தேனென இனிக்கும்.’ இத்தொடரில் தேன் என்னும் பெயரொடு சேர்ந்தது.
• ‘நிலம், நீர், தீ, வளி, வானென பூதங்கள் ஐந்து.’ இத்தொடரில் எண்ணுப்பொருளில் வந்தது. ஈற்றில் நிற்கும் இடைச்சொல் முன்னின்ற பொருள்கள் ஒவ்வொன்றனுடனும் சென்று பொருந்தும்; இடையீடுபட்டும் புணரும்.
• ‘வெள்ளென விடிந்தது.’ இத்தொடரில் ‘வெண்மை’ என்னும் பண்பொடு சேர்ந்தது.
• ‘பொள்ளென வந்தார்.’ பொள் = விரைந்து. இத்தொடரில் ‘விரைவு’ என்னும் குறிப்பொடு சேர்ந்தது.
• ‘பொம்மென வண்டுகள் பறந்தன.’ இத்தொடரில் ‘பொம்’ என்னும் இசையொடு சேர்ந்தது.
• ‘புலியென பாய்ந்தான்.’ இத்தொடரில் ‘புலி’ என்னும் உவமையுடன் சேர்ந்தது.
என்று என்னும் இடைச்சொல்லும் இவ்வாறே அமையும்.
இடைச்சொற்களை வருமொழியொடு புணர்த்தாது பிரித்துநிறுத்துக. இடைச்சொற்கள் முதல்புணர்ச்சியுடன் தமது பணியை நிறைவுசெய்கின்றன.
மேலும் சில இடைச்சொற்கள்.
★ ‘அம்ம’ என்னும் இடைச்சொல் ‘ஒன்று சொல்வேன் கேள்’ என்னும் பொருளிலும், உரையசைப்பொருளிலும் வரும். உரையசை என்பது கட்டுரையில் வரும் அசைநிலை. எடுத்துக்காட்டுகள்.
• ‘அம்ம சான்றோர்வழி நட.’ இத்தொடரில் இடைச்சொல்லாம் ‘அம்ம’ என்பது ‘ஒன்று சொல்வேன்’ கேள்’ என்னும் பொருளில் வந்தது.
• ‘ஆமம்ம.’ இதனில் ‘அம்ம’ என்பது தனிப்பொருளின்றி அசைநிலையில் நின்றது. இதனை உரையசை என்பர்.
★ தொறும், தோறும் என்னும் இடைச்சொற்கள் இடப்பன்மைப்பொருளையும், தொழிற்பயில்வுப்பொருளையும் தரும். எடுத்துக்காட்டுகள்.
• ‘தமிழ்நாட்டில் ஊர்தொறும் கோயில்கள் உள்ளன.’ இத்தொடரில் இடைச்சொல்லாம் ‘தொறும்’ என்பது இடப்பன்மைப்பொருளில் வந்தது.
• ‘கற்குந்தொறும் அறியாமை நீங்கும்.’ இத்தொடரில் இடைச்சொல்லாம் ‘தொறும்’ என்பது தொழிற்பயில்வுப்பொருளில் வந்தது.
இவ்வாறே ‘தோறும்’ என்னும் இடைச்சொல்லும் அமையும்.
★ ‘இனி’ என்னும் இடைச்சொல் காலம், இடம் ஆகிய இரண்டின் எல்லைப்பொருளைத்தரும். எ-டு.
• ‘உடல் நலமடைந்தது. இனி உன்னைக்காண வருவேன்.’ இத்தொடரில் இடைச்சொல்லாம் ‘இனி’ என்பது காலயெல்லைப்பொருளில் வந்தது.
• ‘காடு முடிந்தது. இனி நகரத்தில் நுழையலாம்.’ இத்தொடரில் இடைச்சொல்லாம் ‘இனி’ என்பது இடயெல்லைப்பொருளில் வந்தது.
‘இனி’ என்னும் இடைச்சொல் குறிப்புப்பொருளைப்பெற்றதால் தனித்துநின்றது.
★ முன், பின் என்னும் இடைச்சொற்கள் காலப்பொருளையும் இடப்பொருளையும் தந்து ஏழாம்வேற்றுமைப்பொருள்பட வரும். எடுத்துக்காட்டுகள்.
• ‘வளவன் எனக்குமுன் பிறந்தவன். நம்பி எனக்குப்பின் பிறந்தவன்.’ இத்தொடரில் இடைச்சொற்களாம் ‘முன், பின்’ என்பன காலப்பொருளைத்தந்து ஏழாம்வேற்றுமைப்பொருளையும் தந்தன.
• ‘வரிசையில் முருகன் எனக்குமுன் நின்றிருந்தான்; நம்பி எனக்குப்பின் நின்றிருந்தான்.’ இத்தொடரில் இடைச்சொற்களாம் ‘முன், பின்’ என்பன இடப்பொருளைத்தந்து ஏழாம்வேற்றுமைப்பொருளையும் தந்தன.
முன், பின் என்பன முன்பு, பின்பு எனவும் முன்னை, பின்னை எனவும் முன்னர், பின்னர் எனவும் விகாரப்பட்டும் வழங்கும்.
★ ‘வாளா’ என்னும் இடைச்சொல் பயனின்மைப்பொருளைத்தரும். எ-டு.
• வாளாவிருந்தான்.
இக்காலத்தில் ‘வாளா’ என்பது ‘சும்மா’ என்னும் அயற்சொல்லாக வழங்குகிறது. எ-டு.
• சும்மா பேசாதே.
★ ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச்சொற்கள் விகற்பப்பொருளைத்தரும். அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது விகற்பமாகும்.
• தேவாரமாவது திருவாசகமாவது கொண்டு வா.
• சோறாதல் கூழாதல் கொடு. இப்பயன்பாடு வழக்கிழந்தது.
• வீட்டிலாயினும் கோயிலிலாயினும் இருப்பேன்.
• பொன்னைத்தான் மண்ணைத்தான் கொடுத்தாரா.
★ அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஓஒ என்றாற்போல் வருவன இரக்கப்பொருளைத்தரும் இடைச்சொற்களாம். எ-டு.
• அந்தோ அவன் தொழில் நொடிந்தது.
• அன்னோ இதுகூட அறியானா.
• ஐயோ பொருளை இழந்தேனே.
• அச்சோ வழுக்கி விழுந்தேனே.
• அஆ நிலைப்படியில் இடித்துக்கொண்டேனே.
• ஆஅ தலை வலிக்கிறது.
• ஓஒ ஏமாந்தது நானோ.
இவ்விடைச்சொற்கள் இரக்கப்பொருளைப்பெற்றதால் பெயருடனோ வினையுடனோ புணராது தனித்துநின்றன.
★ சீ, சீசீ, சிச்சீ, சை என்றாற்போல் வருவன இகழ்ச்சிப்பொருளைத்தரும் இடைச்சொற்களாம். எ-டு.
• சீ தொடாதே.
• சீசீ இப்பழம் புளிக்கும்.
• சிச்சீ எனக்குப்பிடிக்காது.
• சை தூரப்போ.
இவ்விடைச்சொற்கள் இகழ்ச்சிப்பொருளைப்பெற்றதால் பெயருடனோ வினையுடனோ புணராது தனித்துநின்றன.
★ கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல் வருவன அச்சப்பொருளைத்தரும் இடைச்சொற்களாம். எ-டு.
• கூ அட நீ தானா. யாரோயென அஞ்சினேன்.
• கூகூ இருளில் கயிற்றை பாம்பென கருதினேன்.
• ஐயோ பாம்பு பாம்பு.
• ஐயையோ தொடர்வண்டியைத்தவற விடுவேனோ.
இவ்விடைச்சொற்கள் அச்சப்பொருளைப்பெற்றதால் பெயருடனோ வினையுடனோ புணராது தனித்துநின்றன.
★ ஆஅ, ஆகா, ஓஒ, ஓகோ, அம்மா, அம்மம்மா என்றாற்போல் வருவன வியப்புப்பொருளைத்தரும் இடைச்சொற்களாம். எ-டு.
• ஆஅ விண்ணைத்தொடும் கட்டிடங்கள்.
• ஆகா என்னவொரு நறுமணம்.
• ஓஒ அவன் வரானா.
• ஓகோ அதுவா செய்தி.
• அம்மா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
• அம்மம்மா தாங்கொணாக்குளிர்.
இவ்விடைச்சொற்கள் குறிப்புப்பொருளைத்தருதலால் — தமக்கென ஒரு பொருளைப் (வியப்பு) பெற்றிருப்பதால் — புணராது தனித்துநின்றன.
★ அம்மென, இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென என்றாற்போல் வருவன ஒலிக்குறிப்புப்பொருளைத்தரும் இடைச்சொற்களாம். எ-டு.
• அம்மென சிறை; இம்மென சிறை. இது நாடன்று.
• கோவென அழுதான்.
• சோவென மழை பெய்தது.
• துடுமென கிணற்றில் குதித்தான்.
• உலரோலைகள் ஒல்லென ஒலித்தன.
• வண்டுகள் கஃறென ஒலியெழுப்பின.
• தீ சுஃறென சுட்டது.
இவ்விடைச்சொற்கள் குறிப்புப்பொருளைத்தருதலால் — தமக்கென ஒரு பொருளைப் (ஒலிக்குறிப்பு) பெற்றிருப்பதால் — புணராது தனித்துநின்றன.
★ துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென என்றாற்போல்வன அச்சக்குறிப்புப்பொருளைத்தரும் இடைச்சொற்களாகும்.
• துண்ணென பேசினான்.
• துணுக்கென தோன்றினான்.
• திட்கென நின்றான்.
• திடுக்கென வந்தான்.
இக்காலத்தில் இவ்விடைச்சொற்களின் பயன்பாடு அருகிவிட்டது. இவ்விடைச்சொற்கள் தமக்கென ஒரு பொருளைப் (அச்சம்) பெற்றிருப்பதால் புணராது தனித்துநின்றன.
★ பொள்ளென, கதுமென, ஞெரேலென என்றாற்போல்வன விரைவுக்குறிப்புப்பொருளைத்தரும் இடைச்சொற்களாகும்.
• பொள்ளென சென்றான்.
(பொள்லென என்பது இக்காலத்து பொருக்கென வழங்குகிறது.)
• கதுமென பிடித்தான்.
• ஞெரேலென மறைந்தான். (ஞெரேலென என்பது இக்காலத்து சரேலென வழங்குகிறது.)
இக்காலத்தில் இவ்விடைச்சொற்களின் பயன்பாடு அருகியது. இவ்விடைச்சொற்கள் தமக்கென ஒரு பொருளைப் (விரைவு) பெற்றிருப்பதால் புணராது தனித்துநின்றன.
தொடர்வோம்.
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




