
குறள் – ௮௱௭௰௨ (அச்சில் உள்ளவாறு).
“பகையென்னும் பண்பி லதனை யொருவ
னகையேயும் வேண்டற்பாற் றன்று.”
பண்பிலதனை = தீயகுணத்தை.
நகையேனும் = விளையாட்டினும்.
வேண்டற்பாற்று = விரும்பும் தன்மையது.
அன்று = ஆகாது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பகையென்னும் தீக்குணம் ஒருவன் விளையாட்டினும் விரும்பும் தன்மையது ஆகாது” என்பதாம்.
‘அதனை’ ‘என்னும் இரண்டாம்வேற்றுமையுருபேற்ற சொல் ‘ஒருவன்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
‘ஒருவனகையேயும்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. ‘ஒருவன்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.”
குறள் – ௮௱௭௰௨ (அச்சில் உள்ளவாறு).
“வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.”
ஏர் = உழுபடை. கருவி என்பது இடப்பொருள்.
வில்லேருழவர் = போரிடுவோர்.
சொல்லேருழவர் = அறிஞர்.
“வில்லேருழவர்பகைகொளினும் சொல்லேருழவர்பகைகொள்ளற்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வில்லினை படைக்கருவியாக கொண்ட போர்வீரரின் பகையைக்கொண்டாலும் சொல்லினை படைக்கருவியாக கொண்ட அறிஞர்தம் பகையைக்கொள்ளற்க” என்பதாம்.
‘கொள்ளினும்’ என்பது ‘கொள்ளலாகாது’ என்னும் பொருளில் வந்த எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.”
குறள் – ௮௱௭௰௩ (அச்சில் உள்ளவாறு).
“ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.”
ஏமுற்றவர் = தன்னிலைத்திரிந்தார், பித்தர்.
ஏழை = பேதை, அறிவிலி.
தமியன் = தனியன்.
பல்லார் = பலர்.
“தமியனாய் பல்லார்பகைகொள்பவன் ஏமுற்றவரினும் ஏழை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தனியனாய் நின்று பலரது பகையை கொள்பவன் பித்தரினும் அறிவிலி” என்பதாம்.
‘ஏமுற்றவரினும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
‘தமியனாய்’ என்பதன்கண் வந்த ‘ஆய்’ என்பது ‘ஆகி’ என்பதுபோன்ற உருவகயிடைச்சொல்லாகும். இவ்வுருவகயிடைச்சொல் ‘தனியன்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்
பல்லார் பகைகொள் பவன்.”
குறள் – ௮௱௭௰௪ (அச்சில் உள்ளவாறு).
“பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
றகைமைக்கட் டங்கிற் றுலகு.”
பகை = பகைவர்.
தகைமை = இயல்பு, தன்மை.
தங்கிற்று = நிலைபெற்றது.
“பகைநட்பாக்கொண்டொழுகும் பண்புடையாளன்தகைமைக்கண் உலகு தங்கிற்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“இயலுமாயின் பகைவரையும் நண்பராக்கிக்கொண்டு செயல்படும் பண்பாளனது இயல்பின்கண் உலகு நிலைபெற்றது” என்பதாம்.
‘தகைமைக்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘தகைமை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தங்கிற்று உலகு’ என்பது முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று* உலகு.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௮௱௭௰௫ (அச்சில் உள்ளவாறு).
“தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.”
“தன்றுணையின்றால் தானொருவன் பகையிரண்டால் அவற்றினொன்று இன்றுணையாக்கொள்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தனக்கு துணையில்லாததால் தனியனான ஒருவனுக்கு பகை இரண்டானால் அவற்றுள் ஒன்றனை இனிய துணையாக கொள்க” என்பதாம்.
‘இன்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல் (ஆனால்)’ என்னும் காரணயிடைச்சொல் ‘இன்று’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இரண்டால்’ என்பதன்கண் வந்த ‘ஆல் (ஆனால்)’ என்னும் காரணயிடைச்சொல் ‘இரண்டு’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இன்றுணை’ என்பது இடைபிறவரலாக நின்றது; வேறோரிடஞ்சென்று கூடும். வேறோரிடஞ்சென்று கூடுஞ்சொற்கள் அதற்கேதுவாக புணராது தனித்து நிற்கும். புணரின் பிரியா. பிரிப்பதாயின் புணர்த்த வேண்டா.
‘கொள்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. இருப்பினும் யாப்பு கருதி புணர்ந்து.
வழுவமைதியாக கொள்க.
‘அவற்றின்’ என்பதன்கண் வந்த ’இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு வற்றுச்சாரியைபெற்று ‘அவை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“தன்றுணை யின்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.”
குறள் – ௮௱௭௰௬ (அச்சில் உள்ளவாறு).
“தேறினுந் தேறா விடினு மழிவின்கட்
டேறான் பகாஅன் விடல்.”
தேறினும் = தெளிந்தாலும்.
தேறாவிடினும் = தெளியாவிடினும்.
பகாஅன் → பகான் = வகைப்படுத்தான்.
தேறான் = தாழ்ந்தான்.
விடல் = விடுக.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பகைவரை தமக்கு நட்பாக தேறினும் தேறாவிடினும் தாம் கேடுற்று தாழ்ந்தவிடத்து வகைப்படுத்தாது விடுக; நடுநிலையாக நிற்க” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் பொருள்மயங்காவண்ணம் புணரும்; எண்ணும்மைகளில் இறுதிவும்மையான ‘தேறாவிடினும்’ என்பது புணராது.
‘அழிவின்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இன்’ என்னும் சாரியைபெற்று ‘அழிவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.”
குறள் – ௮௱௭௰௭ (அச்சில் உள்ளவாறு).
“நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.”
நோவற்க = சொல்லற்க.
நொந்தது = நைந்தது, நிலைகெட்டது.
மேவற்க = மேலிட்டு காட்டவேண்டா.
மென்மை = வலிமையின்மை.
“நொந்ததறியார்க்கு நோவற்க பகைவரகத்து மென்மைமேவற்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நைந்ததை அறியார்க்கு அதனைச்சொல்லற்க. பகைவரிடத்து வலிமையின்மையை மேலிட்டு காட்டவேண்டா”
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௮௱௭௰௮ (அச்சில் உள்ளவாறு).
“வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கட் பட்ட செருக்கு.”
வகையறிந்து = செயல்வகையறிந்து.
தற்செய்து = தன்னை வலியனாக்கி.
தற்காப்ப = தன்னைக்காக்க.
மாயும் = அழியும்.
செருக்கு = தன்முனைப்பு, இறுமாப்பு.
“வகையறிந்து தற்செய்து தற்காப்ப
பகைவர்கண் பட்ட செருக்கு மாயும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“செயல்வகையறிந்து தன்னை வலியனாக்கி தன்னைக்காக்க பகைவரிடத்து ஏற்பட்ட தன்முனைப்பு அழியும்” என்பதாம்.
‘பகைவர்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பகைவர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.”
குறள் – ௮௱௭௰௯ (அச்சில் உள்ளவாறு).
“இளைதாக முண்மரம் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.”
இளைதாக = வளராமுன்.
முண்மரம் = முள்மரம்.
கொல்க = அழிக்க.
களையுநர் = அழிப்போர், வெட்டுவோர்.
கைகொல்லும் = கையை மிகவருத்தும்.
காழ்த்தவிடத்து = முற்றியபோது.
“இளைதாக முண்மரம் கொல்க காழ்த்தவிடத்து களையுநர்கைகொல்லும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வளராமுன் இளையதாக உள்ளபோதே முள்மரத்தை வெட்டுக. அம்மரம் முற்றியபோது வெட்டினால் வெட்டுவோரது கையை மிகவருத்தும்” என்பதாம்.
‘கைகொல்லும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இளைதாக முண்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.”
குறள் – ௮௱௮௰ (அச்சில் உள்ளவாறு).
“உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.”
உயிர்ப்ப = உயிரோட்டத்துடன்.
உளரல்லர் = இருப்பவரல்லர்.
மன்ற = உறுதியாக.
செயிர்ப்பவர் = பகைப்பவர்.
செம்மல் = தருக்கு, தன்முனைப்பு.
சிதைத்தல் = அழித்தல்.
“செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் உயிர்ப்பவுளரல்லர் மன்ற” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பகைப்பவரின் தன்முனைப்பினை அழிக்காதவர் உயிரோட்டத்துடன் இருப்பவரல்லர் உறுதியாக“ என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




