இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௯௰௪. சூது (சூதாடுதல்).

குறள் – ௯௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு).

“வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.”

வேண்டற்க = விரும்பற்க.
சூதினை = சூதாட்டத்தை.
வென்றதூஉம் = வென்றதும்.
தூண்டிற்பொன் = தூண்டில் முள். [பொன் என்பது தாது (உலோகம்) என்னும் பொருளது].
அற்று = ஒக்கும், போன்றது.

“வென்றிடினும் சூதினை வேண்டற்க. வென்றதூஉம்
தூண்டிற்பொன்மீன் விழுங்கியற்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“வென்றாலும் சூதாட்டத்தை விரும்பற்க. சூதில் வென்றதும் இரையால் மறைக்கப்பட்ட தூண்டில்முள்ளை மீன் விழுங்கியதை ஒக்கும்” என்பதாம். தனக்கே அழிவென்பது கருத்து.

‘வென்றிடினும்’ என்பது ‘இயலாது’ என்னும் பொருளில்வந்த எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.

‘வென்றதூஉம் (வென்றதும்)’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.”

 

குறள் – ௯௱௩௰௨ (அச்சில் உள்ளவாறு).

“ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ
னன்றெய்தி வாழ்வதோ ராறு.”

எய்தி = அடைந்து.
உண்டாங்கொல் = உள்ளதோ.
நன்றெய்தி = நன்மையடைந்து.
ஓராறு = ஒருவழி.

“ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் நன்றெய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஒன்றனை அடைந்து நூற்றினை இழக்கும் சூதாடுவோர்க்கும் நன்மையடைந்து வாழ்வதற்கு ஒருவழி உண்டோ” என்பதாம்.

‘இழக்கும் சூதர்’’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘உண்டாங்கொல்’ என்னும் வினா புணராது தனித்துநின்று தனது வினாப்பொருண்மையைச்சிறப்பிக்கும்.

செம்மைவடிவம் —
“ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோ ராறு.”

 

குறள் – ௯௱௩௰௩ (அச்சில் உள்ளவாறு).

“உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.”

ஆயம் = சூதாடுங்கருவி. (வல், வட்டு முதலியன).
ஓவாது = இடைவிடாது.
கூறின் = பணயப்பொருளாககூறல், ஈட்டினைச்சொல்லல்.
பொருளாயம் = பொருட்குவியல், திரண்ட செல்வம்.
போஒய் → போய் = நீங்கி.
புறம் = எதிரி, அயலார்.
படும் = சென்றடையும்.

“ஓவாது உருளாயங்கூறின் பொருளாயம் போஒய் புறமே படும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஓயாது வல்லக்காய்களின் பணயப்பொருளைக்கூறி சூதாடின் திரண்ட செல்வம் நீங்கி அயலாரையே சென்றடையும்” என்பதாம்.

‘கூறின்’ என்னும் வினையெச்சம் ‘பொருளாயம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘போஒய் (போய்)’ என்னும் வினையெச்சம் ‘புறம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“உருளாய மோவாது கூறின் பொருளாயம்
போஒய் புறமே படும்.”

 

குறள் – ௯௱௩௰௪ (அச்சில் உள்ளவாறு).

“சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்
வறுமை தருவதொன் றில்.

சிறுமை = இழிவு.
சீரழிக்கும் = பெருமையை அழிக்கும்.
இல் = இல்லை.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“சூதாடுவோர்க்கு இழிவுகள் பலதந்து பெருமைகளை அழிக்கும் சூதுபோல வறுமையைத்தருவது எதுவுமில்லை” என்பதாம்.

‘சீரழிக்கும் சூது’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘தருவதொன்றில்’ என்பதன்கண் வந்த ‘இல் (இல்லை)’ என்னும் குறிப்பு வினைமுற்று புணர்ந்ததால் வேற்றுமைவுருபாகவும் மயங்குவதால் புணராது.

செம்மைவடிவம் —
“சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று* இல்.”

*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௯௱௩௰௫ (அச்சில் உள்ளவாறு).

“கவறுங் கழகமுங் கையுந் தருக்கி
யிவறியா ரில்லாகி யார்.”

கவறும் = சூதாட்டமும்.
கழகமும் = சூதாடுமிடமும்.
கையும் = சூதாடுந்திறமையும்.
தருக்கி = பெருமைபாராட்டி. இவறியார் = கைவிடாதார், விரும்பியார்.
இல்லாகியார் = (செல்வத்தை) இழந்தாரானார்.

“சூதாட்டத்தையும் சூதாடுமிடத்தையும் சூதாடுந்திறமையையும் பெருமைபாராட்டி அவற்றைக்கைவிடாதார் செல்வத்தை இழந்தாரானார்” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் பொருண்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘கையும்’ என்பது புணராது.

‘தருக்கியிவறியார்’ என்பது தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கவறுங் கழகமுங் கையும் தருக்கி
யிவறியார் இல்லாகி யார்.”

 

குறள் – ௯௱௩௰௬ (அச்சில் உள்ளவாறு).

“அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னு
முகடியான் மூடப்பட் டார்.”

அகடு = வயிறு.
ஆர்தல் = நிரம்புதல்.
அகடாரார் = வயிறார உண்ணப்பெறார்.
அல்லல் = துன்பம்.
உழப்பார் = உழல்வார்.
முகடி = மூதேவி.
மூடப்பட்டார் = ஆளப்பட்டார், ஆளானார்.

“சூதென்னும் முகடியால் மூடப்பட்டார் அகடாரார் அல்லலுழப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“சூதென்னும் மூதேவியால் ஆளப்பட்டார் வயிறார உண்ணப்பெறார்; துன்பத்தில் உழல்வர்” என்பதாம்.

‘அகடாரார்’, ‘உழப்பர்’ என்பன வினைமுற்றுகள். வினைமுற்று எதனுடனும் புணராது.

‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘சூது’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது. ஈ

செம்மைவடிவம் —
“அகடாரார் அல்ல லுழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.”

 

குறள் – ௯௱௩௰௭ (அச்சில் உள்ளவாறு).

“பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.”

பழகிய செல்வம். = தொல்வரவாக வந்த செல்வம், மூத்தோர்செல்வம்.
பண்பும் = நற்குணங்களும்.
கெடுக்கும் = அழிக்கும்.
கழகத்துக்காலை = சூதாடுமிடத்து.
புகின் = புகுந்தால், நுழைந்தால்.

“கழகத்துக்காலை புகின் பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“சூதாடுமிடத்து புகுந்து சூதில் காலத்தைக்கழிப்பது முன்னோரது செல்வத்தினையும், தனது நற்குணங்களையும் அழிக்கும்” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் பொருண்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘பண்பும்’ என்பது புணராது.

செம்மைவடிவம் —
“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.”

 

குறள் – ௯௱௩௰௮ (அச்சில் உள்ளவாறு).

“பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத்
தல்ல லுழப்பிக்குஞ் சூது.”

கெடுத்து = அழித்து.
மேற்கொளீஇ= மேற்கொள்ளின்.
அல்லல் = துன்பம்.
உழப்பிக்கும் = வருத்தும், உழலச்செய்யும்.
சூது = சூதாட்டம்.

“சூது பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லலுழப்பிக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“சூது செல்வத்தையழித்து பொய்யை மேற்கொள்ளச்செய்து அருளையும் அழித்து துன்பத்தில் உழலச்செய்யும்” என்பதாம்.

‘கெடுத்து’ என்னும் வினையெச்சம் ‘பொய்’ என்னும் பெயருடன் புணராது. ‌ வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கொளீஇ (செய்து)’ என்னும் வினையெச்சம் ‘அருள்’ என்னும் பெயருடன் புணராது. ‌ வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கெடுத்து’ என்னும் வினையெச்சம் ‘அல்லல்’ என்னும் பெயருடன் புணராது. ‌ வினையெச்சம் பெயருடன் புணராது.

‘உழப்பிக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து*
அல்ல லுழப்பிக்கும் சூது.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௯௱௩௰௯ (அச்சில் உள்ளவாறு).

“உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
மடையாவா மாயங் கொளின்.”

உடை = ஆடை.‌
ஊண் = உணவு.
ஒளி = மேன்மை.
அடையாவாம்‌ = சேராவாம்.
ஆயம் = சூதாட்டம்.
கொளின் = ஏற்பின்.

“ஆயங்கொளின் உடை, செல்வம், ஊண், மேன்மை, கல்வியென்று ஐந்தும் அடையாவாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“சூதாடுவோரை ஆடை, செல்வம், உணவு, மேன்மை, கல்வியென்று ஐந்தும் சேராவாம்” என்பதாம்.

இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள் புணராது தனித்துநின்று தம்பொருளை அல்ல ஈ வெளிப்படுத்தும். ‘செல்வமூணொளி’ என்பது பொருளற்ற புணர்ச்சி. புணர்ந்த சொற்கள் புணர்ந்த நிலையிலே பொருள்தரும். புணர்ச்சியைப்பிரித்து பொருளுணர்வதாயின் புணர்த்த வேண்டா.

‘என்று’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘கல்வி’யென்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘அடையாவாம்’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.”

 

குறள் – ௯௱௪௰ (அச்சில் உள்ளவாறு).

“இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப
முழத்தோறூஉங் காதற் றுயிர்.”

இழத்தொறூஉம் → இழத்தொறும் = இழக்குந்தொறும்.
காதலிக்கும் = விரும்பும்.
துன்பம் = நோய்.
உழத்தொறூஉம் → உழத்தொறும் = வருந்துந்தொறும்.
காதல் = பெருவிருப்பம்
அற்று = அது போன்றது.

“செல்வத்தை இழக்குந்தொறும் சூதினை விரும்பும் சூதன்போல் நோயுற்று வருந்துந்தொறும் உடலினை உயிர் விரும்பும் தன்மைக்கு” என்பதாம்.

இழத்தொறூஉம் (இழத்தொறும்), உழத்தொறூஉம் (உழத்தொறும்) என்பன தெரிநிலைவும்மைகள். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

‘காதலிக்கும் சூது’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘போல்’ என்னும் உவமவுருபு ‘சூது’ என்னும் பெயருடன் புணர்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘அற்று’ என்னும் உவமவுருபு ‘காதல்’ என்னும் பெயருடன் புணர்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்ப
முழத்தோறூஉம் காதற்று* உயிர்.”

*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button