இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு - ௪௩. அறிவுடைமை.

குறள் – ௪௱௨௧ (அச்சில் உள்ளவாறு).

“அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்க லாகா வரண்.”

அற்றம் = அழிவு.
செறுவார் = பகைவர்.
அரண் = காவல்.
உள்ளரண் = உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண்.

“அறிவு அற்றங்காக்கும் கருவி செறுவார்க்கும் அழிக்கலாகா உள்ளரண்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அறிவு அழிவிலிருந்து நம்மைக்காக்கும் கருவி. நமக்கு உள்ளரணாம் அறிவை பகைவராலும் அழிக்கயியலாது” என்பதாம்.

‘அறிவு’ என்பது எழுவாயாம் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘செறுவார்க்கும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘உள்ளழிக்கலாகா’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்பது ‘உள்ளரண்’ என வேறிடம்சென்று கூடும். வேறோரிடம்சென்று பொருந்தும் சொற்களைப்புணர்த்தலாகாது.

‘அரண்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். கொண்டுகூட்டில் ‘உள்ளரண்’ என்றாகும். இதற்கு ஏதுவாக புணராமல் தனித்திருத்தல் நன்று. புணர்ந்த சொற்களைப்பிரித்தால் புணர்ச்சி தானே மறையுமன்றோ.

செம்மைவடிவம் —
“அறிவு*அற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்க லாகா அரண்.”

*முற்றியலுகரமாகிய வுகரம் அலகுபெறாது.

குறள் – ௪௱௨௨ (அச்சில் உள்ளவாறு).

“சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.”

செலவிடா = செல்லவிடாது (‘விடாது’ என்பது கடையெழுத்து குறைந்து நின்றது).
ஒரீஇ (ஒருவி என்பதன் சொல்லிசையளபெடை) = விலக்கி.
உய்ப்பது = செலுத்துவது.

“உள்ளத்தை அது செல்லுமிடத்தின்கண் (அதன்போக்கில்) செல்லவிடாமல் தீமையிலிருந்து விலக்கி நன்மையின்பால் செலுத்துவது அறிவு“ என்பதாம்.

‘இடத்தால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்ற வேற்றுமைவுருபு ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்த வேற்றுமைவுருபுமயக்கம். இவ்வேற்றுமைவுருபு ‘அத்து’ என்னும் சாரியைபெற்று ‘இடம்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நன்றின்பால்’ என்பதன்கண் வந்த ‘பால்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இன்’ என்னும் சாரியைபெற்று ‘நன்று’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த நிரலில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“சென்ற யிடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.”

குறள் – ௪௱௨௩ (அச்சில் உள்ளவாறு).

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”

பொருள் = கருத்து, செய்தி.
மெய்ப்பொருள் = மெய்த்தன்மை, உண்மைநிலை.

‘யார்யார்வாய்’ என்பதன்கண் வந்த ‘வாய்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘யார்யார்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘யார்யார்வாய் கேட்பினும்’ என்பதன்கண் முற்றும்மை வந்துள்ளது.‌ முற்றும்மை எதனுடனும் புணராது.

‘எப்பொருளைக்குறித்து யார்யார்வாய் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளைக்காண்பது அறிவு’ என விரியும்.

இக்குறளில் சீர்களமைந்த நிரலில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”

குறள் – ௪௱௨௪ (அச்சில் உள்ளவாறு).

“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.”

எண் = எளிமை.
பொருள் = கருத்து, செய்தி.
செல → செல்ல = ஏற்குமாறு.
நுண்பொருள் = நுண்ணிய கருத்து.

“தான் சொல்லும் கருத்துகளை கேட்போர் ஏற்குமாறு எளிமையாக சொல்லி, பிறர்கூறும் கருத்துகளின் நுண்பொருளைக்காண்பது அறிவு” என்பதாம்.

‘ஆக’ என்னும் எச்சம் வருமொழியுடன் புணராது .

‘சொல்லி’ என்னும் வினையெச்சம் ‘தான்’ என்னும் மறுபெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது. ‘தான்’ என்னும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது. இது வேற்றுமைவுருபேற்காத எழுவாயாம். எழுவாய் தனித்துநிற்கும்.

இக்குறளில் சீர்களமைந்த நிரலில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“எண்பொருள வாக செலச்சொல்லி தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.”

 

குறள் – ௪௱௨௫ (அச்சில் உள்ளவாறு).

“உலகந்‌ தழீஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.”

உலகம் = உயர்ந்தோர்.
தழீஇயது = தழுவிக்கொள்வது.
ஒட்பம் = நன்மை, மேன்மை.
மலர்தல் = மிகைத்தல் (மிகை).
தளர்தல் = குறைத்தல் (குறைவு).

“உலகந்தழீஇயது ஒட்பம் (அவ்வொட்பத்தில்) மலர்தலும் கூம்பலும் இல்லாதது அறிவு.”
“உயர்ந்தோரைத்தழுவி நடப்பது மேன்மையானது. உயர்ந்தோரிடத்து மிகைப்படவும், குறைவுபடவும் நடவாமல் ஒருநிலைப்பட்டு நிற்றல் அறிவு” என்பதாம்.

‘தழீஇய’ என்னும் வினையெச்சம் ‘ஒட்பம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘ஒட்பம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘மலர்தலுங்கூம்பலும்’ என்னும் எண்ணும்மை தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த நிரலில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“உலகந்‌ தழீஇயது* ஒட்பம் மலர்தலுங்
கூம்பலும் இல்ல தறிவு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௪௱௨௬ (அச்சில் உள்ளவாறு).

“எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.”

எவ்வது = எவ்வாறு.
உறைவது = ஒழுகுவது.
உலகம் = உயர்ந்தோர்.
அவ்வது = அவ்வாறு.

“உலகம் எவ்வது உறைவது அவ்வது உலகத்தோடு உறைவது அறிவு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றதோ அவ்வாறு உயர்ந்தாரோடு ஒழுகுவது அறிவு” என்பதாம்.

‘உலகம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘உலகத்தோடு’ என்பதன்கண் வந்த ‘ஓடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘அத்து’ என்னும் சாரியைபெற்று ‘உலகம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த நிரலில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“எவ்வ துறைவது* உலகம் உலகத்தோடு*
அவ்வ துறைவ தறிவு.”

*குற்றியலுகரமாகிய துகரமும் டுகரமும் அலகுபெறா.

குறள் – ௪௱௨௭ (அச்சில் உள்ளவாறு).

“அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்.”

ஆவதறிவார் = வருவதை முன்னறிவார்.
அறிகல்லாதவர் = (வருவதை) முன்னறியார்.

‘அறிவுடையார்’ என்பது திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

‘அறிவார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘அறிவிலார்’ என்பது திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

“அறிவுடையார் வருவதை முன்னறிவார். அறிவிலார் வருவதை முன்னறியார்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த நிரலில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.”

குறள் – ௪௱௨௮ (அச்சில் உள்ளவாறு).

“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்.”

பேதைமை = அறிவின்மை.
அஞ்சல் = அஞ்சுதல்.
அறிவார் = அறிவுடையார்.
தொழில் = செயல்.

‘பேதைமை’ என்பது முற்றுப்பொருள்தரும் பெயர்ப்பயனிலை. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

‘அஞ்சுவது’ என்னும் பொருளில்வரும் ‘அஞ்சல்’ என்னும் வினையெச்சம் ‘அறிவார்’ (அறிவுடையார்)என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

“அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைமை. அஞ்சுவதற்கு அஞ்சுவது அறிவுடையாரது செயல்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.”

குறள் – ௪௱௨௯ (அச்சில் உள்ளவாறு).

“எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்.”

எதிரதா = எதிர்வரும்.
அதிர = நடுங்க.
நோய் = துன்பம்.

“அதிர வருவதோர் நோய் எதிரதாக்காக்கும் அறிவினார்க்கில்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நடுங்குமாறு வருவதொரு துன்பம் எதிர்வருவதை முன்னறிந்து காக்கும் அறிவினார்க்கு இல்லை” என்பதாம்.

‘காக்குமறிவினார்க்கு’ என்பது ஒலிக்கவியலாப்புணர்ச்சி. இப்புணர்ச்சியில் நிலைமொழியீற்றுமகரம் கெடவில்லை. நிலைமொழியீற்றுமகரத்தை ஒலித்தால் புணர்ச்சி தானே நீங்கும்.

‘இல்லை’ என்பது குறிப்பு வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.”

குறள் – ௪௱௩௦ (அச்சில் உள்ளவாறு).

“அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்.”

என்னுடையரேனும் = எவைவுடையரேனும்.

‘அறிவுடையார்’ என்பது எழுவாயாம் திரிபில்பெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.

‘எல்லாமுடையார்’ என்பது ஒலிக்கவியலாப்புணர்ச்சி. ‘எல்லாம்’ என்பதன் மகரயீறு கெடவில்லை. தமிழில் ஒலியாயெழுத்து ( silent letter) இல்லை. நிலைமொழியீற்றுமகரத்தை ஒலித்தால் புணர்ச்சி தானே நீங்கும்.

‘உடையார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘அறிவிலார்’ என்பது எழுவாயாம் திரிபில்பெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.

‘உடையரேனும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

“அறிவுடையார் எல்லாம் உடையவர். அறிவிலார் எல்லாம் உடையவரேனும் எதுவும் இல்லார்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த நிரலில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.”

தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button