தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி: தலைப்பு – ௮. அன்புடைமை.

கசடற மொழிபயில்!

பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோரும், தாளில் (காகிதத்தில்) அச்சிட்டோரும் செய்தவை.

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௮.
அன்புடைமை.
குறள் – ௭௰௧.

“அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்.”

“அன்பிற்கும் அடைக்குந்தாழ் உண்டோ. ஆர்வலரது புன்கண்ணீர் பூசல் தரும்” எனவிரியும். அவ்வாறே கொண்டுகூட்டி பொருள்காண்க. ‘அன்புடையாரது சிறுகண்ணீர் அவருற்ற துன்பத்தை காட்டிவிடும்’ என்பது கருத்து.

‘அன்பிற்கும்’ என்பது சிறப்பும்மை. சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘உண்டோ+அடைக்குந்தாழ் → உண்டோவடைக்குந்தாழ்’ எனும் புணர்ச்சியை நோக்குக. உண்டோ என்பதனை ஒலித்தபின் ‘அடைக்குந்தாழ்’ என்போமா அல்லது ‘வடைக்குந்தாழ்’ என்போமா. உறுதியாக ‘அடைக்குந்தாழ்’ என்போம். அவ்வாறானால் வகரமெய் ஏன் வரவேண்டும். வகரம் ஒலியாயெழுத்தா. தமிழுக்கு அவ்வாறான இலக்கணம் இல்லை. எழுதப்படும் எழுத்தின் ஒலி விடுபடாமல் ஒலிக்கும் இயல்புடையது தமிழ். ‘வடைக்குந்தாழ்’ எனயெழுதி ‘அடைக்குந்தாழ்’ என எவ்வாறு ஒலிக்கமுடியும். எவ்வாறு ஒலிக்கிறோமோ அவ்வொலிக்குரிய எழுத்தினை எழுதவேண்டும். விட்டிசை எனும் இலக்கணம் இம்முரணை நீக்கும். விட்டிசைக்கும் இடங்கள் புணரா.

‘தாழார்வலர்’ என்பது தழுவாச்சொற்கள்.‌ ‘ஆர்வலர்’ என்பது ‘புன்கண்ணீர்’ என்பதுடன் தொடர்புடையது. தழுவுஞ்சொற்களே புணரும்.

‘அடைக்குந்தாழ்’ என்றயிடத்தில் வினா முடிகிறது; முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.”

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௮.
அன்புடைமை.
குறள் – ௭௰௨.

“அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
ரென்பு முரியர் பிறர்க்கு.”

‘உரியர்’ என்பது முற்றுச்சொல். முற்றுச்சொல் எதனுடனும் புணராது.

இருகருத்துகள் சொல்லப்பட்டன. அன்பிலார், அன்புடையார் எனும் இரு எழுவாய்கள்.

என்பும் என்பது சிறப்பும்மை. சிறப்பும்மை எதனுடனும் புணராது.

“அன்பிலாதவரது உடைமைகள் எல்லாம் அவர்க்கே உரியன. அன்புடையாரது என்பும் பிறர்க்கு உரியது“ எனவிரியும்.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர். அன்புடையார்
என்பும் பிறர்க்கு உரியர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

செம்மைவடிவம் –
“அன்பிலா ரெல்லாந் தமக்குரியர் அன்புடையா
ரென்பு முரியர் பிறர்க்கு.”

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௮.
அன்புடைமை.
குறள் – ௭௰௩.

“அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு.”

“ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு அன்போடு இயைந்த வழக்கு என்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘ஓடு’ எனும் மூன்றாம்வேற்றுமைவுருபு எதனுடனும் புணராது. எனினும் யாப்புக்கான வழுவமைதியாக கொள்க.

‘என்ப’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு.”

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௮.
அன்புடைமை.
குறள் – ௭௰௪.

“அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு.”

“அன்பு ஆர்வமுடைமையை ஈனும். அது (ஆர்வமுடைமை) நண்பு (நட்பு) என்னும் நாடாச்சிறப்பினை ஈனும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

அன்பு என்பது வேற்றுமையுருபினை ஏற்காது நிற்கும் எழுவாய். இது திரிபில்பெயர்ச்சொல் எனப்படும். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘ஈனும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. மேலும் ‘அன்பீனும் ஆர்வமுடைமை’ எனும்போது ஆர்வமுடைமை அன்பு ஈனுவதாக பொருள்தருகிறது. குறளின் கருத்து இதுவென்று. அன்புதான் ஆர்வமுடைமையை ஈனுகிறது. அந்த ஆர்வமுடைமை நட்பு எனும் நாடாச்சிறப்பை ஈனுகிறது.
வேறோரிடத்தில் சென்று பொருந்தி பொருள்தருஞ்சொல்லை அதற்கேதுவாக புணர்த்தாமல் நிறுத்தவேண்டும்.

‘அது’ எனும் சுட்டுச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அன்பு*ஈனும் ஆர்வ முடைமை அதுஈனும்
நண்பென்னு நாடாச் சிறப்பு.”

*குற்றியலுகரம் புவ்வானது அலகு பெறாது ஒற்றாம் தன்மைபெறும்.

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௮.
அன்புடைமை.
குறள் – ௭௰௫.

“அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு.”

“வையகத்தின்புற்றார் எய்தும் சிறப்பு அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘வையகத்தின்புற்றார்’ என்பது நெடுந்தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றார் எய்துஞ் சிறப்பு.”

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௮.
அன்புடைமை.
குறள் – ௭௰௬.

“அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை.”

“அறியார் அறத்திற்கே அன்பு சார்பு (உடையது) என்ப. மறத்திற்கும் அஃதே துணை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘அறத்திற்கே’ எனும் தேற்றேகாரச்சொல் எதனுடனும் புணராது.

‘என்ப’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘மறத்திற்கும்’ என்பது சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை. எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் –
“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.”

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௮.
அன்புடைமை.
குறள் – ௭௰௭. 

“என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை யறம்.”

“எலும்பு இல்லாதவற்றை வெயில் காய்வதுபோல அன்பு இல்லாதாரை அறம் காயும்” எனவிரியும். ‘காயும்’ என்பது ஈரிடத்தும் சென்று பொருந்தி பொருள்தரும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவமும் இதுவே.

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௮.
அன்புடைமை.
குறள் – ௭௰௮.

“அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று.”

“அன்பு அகத்தில் இல்லா உயிரின் வாழ்க்கை வறண்ட நிலத்தில் உயிரற்ற மரம் தளிர்ப்பதைப்போன்றது” எனவிரியும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவமும் இதுவே.

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௮.
அன்புடைமை.
குறள் – ௭௰௯.

“புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு.”

“யாக்கையின் அகத்துறுப்பில் அன்பு இல்லாதவர்க்கு புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘எல்லாம்’ எனும் முற்றுச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு.”

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௮.
அன்புடைமை.
குறள் – ௮௰.

“அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு.”

‘உயிர்நிலை’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.

‘அஃதிலார்க்கு’ என்பது குவ்வுருபேற்ற நான்காம்வேற்றுமைச்சொல். நான்காம்வேற்றுமை வினை வேண்டும்பெயரை ஏற்கும். ‘எலும்பு’ என பொருள்படும் ‘என்பு’ ஒருவினைச்சொல்லைச்சார்ந்து தன்பொருளை உணர்த்தும்நிலையில் இல்லாது தானே ஒரு பொருளை அறிவிக்கும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மை வடிவம் —
“அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு*
என்புதோல் போர்த்த வுடம்பு.”

*குற்றியலுகரம் குவ்வானது அலகு பெறாது ஒற்றாம் தன்மைபெறும்.

நன்றி.
-முத்தையா சுப்பிரமணி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button