
குறள் – ௯௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு).
“ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளிவொருவற்
கஃதிறந்து வாழ்து மெனல்.”
ஒளி = பெருமை, புகழ்.
வெறுக்கை = செல்வம்.
இளி = இழிவு.
இறந்து = இழந்து.
வாழ்தும் = வாழ்வோம்.
“ஒருவற்குள்ள வெறுக்கை ஒளி. அஃதிறந்து வாழ்துமெனல் ஒருவற்கு இளி” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒருவரிடத்து உள்ள செல்வம் பெருமையாகும். அதனை இழந்து வாழ்வோமென்பது ஒருவற்கு இழிவாகும்” என்பதாம்.
இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்களாம் ‘ஒளி’, ‘இளி’ என்பன எதனுடனும் புணரா.
செய்யுளில் ‘வெறுக்கை’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருளைத்தருகிறது. பொருள்முடிவினைத்தருமிடங்கள் புணரா.
‘அஃது’ என்பது ‘வெறுக்கை’யை சுட்டும் சொல். ’அஃது’ என்பது ‘ஒருவற்கு’ என்னுஞ்சொல்லைத்தழுவாது. தழுவுஞ்சொற்களே புணரும்.
செம்மைவடிவம் —
“ஒளிஒருவற் குள்ள வெறுக்கை இளிஒருவற்கு*
அஃதிறந்து வாழ்து மெனல்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௯௱௭௰௨ (அச்சில் உள்ளவாறு).
“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”
ஒக்கும் = ஒத்தது, ஒத்த தன்மையது.
ஒவ்வா = வேறுபடும், ஒத்திராது.
தொழில் = வினை.
செய் = செய்யும் வகை.
வேற்றுமையான் = மாறுபாட்டால்.
“எல்லாவுயிர்க்கும் பிறப்பு ஒக்கும். தொழில்செய் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எல்லாவுயிர்களுக்கும் பிறப்பென்பது ஒத்த தன்மையது. வினையைச்செய்யும் வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு மாறுபடும்” என்பதாம்.
‘ஒக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘எல்லாவுயிர்க்கும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘பிறப்பு’, ‘சிறப்பு’ என்பன இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பிறப்பு*ஒக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பு*ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”
*குற்றியலுகரமாகிய புகரம் அலகுபெறாது.
குறள் – ௯௱௭௰௩ (அச்சில் உள்ளவாறு).
“மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்.”
மேலிருந்தும் = செல்வம் மிகுந்திருந்தும்.
மேலல்லார் = பெருமைமிகு குணநலனில்லார்.
மேலல்லர் = மேன்மையரல்லர்.
கீழிருந்தும் = வறுமையில் வாடினும்.
கீழல்லார் = இழிகுணமில்லார்.
கீழல்லவர் = இழிந்தோரல்லர்.
“மேலல்லார் மேலிருந்தும் மேலல்லர். கீழல்லவர் கீழிருந்தும் கீழல்லார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பெருமைமிகு குணநலனில்லார் செல்வம் மிகுந்திருந்தும் மேன்மையரல்லர். இழிகுணமில்லார் வறுமையில் வாடினும் இழிந்தோரல்லர்” என்பதாம்.
மேலிருந்தும், கீழிருந்தும் என்பன தெரிநிலைவும்மைச்சொற்கள். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.”
குறள் – ௯௱௭௰௪ (அச்சில் உள்ளவாறு).
“ஒருமை மகளிரே போலப் பெருமையுந்
தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு.”
ஒருமை = கற்பு.
தன்னைத்தான் = ஆடவர் தன்னைத்தான்.
கொண்டு = கடைப்பிடித்து.
ஒழுகின் = வாழின், வாழ்ந்தால்.
“ஒருமை மகளிரே போல தன்னைத்தான் கொண்டொழுகின் பெருமையும் உண்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கற்புநெறியில் நின்ற மகளிர்போல ஆடவர் தாமும் அந்நெறியைக்கடைபிடித்து வாழின் பெருமையும் உண்டு” என்பதாம்.
‘போல’ என்னும் உவமவுருபு ‘மகளிர்’ என்னும் பெயருடன் சார்ந்து ஒப்புப்பொருள்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பெருமையும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு.”
குறள் – ௯௱௭௰௫ (அச்சில் உள்ளவாறு).
“பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி
னருமை யுடைய செயல்.”
பெருமை = சிறப்பு, மேன்மை.
ஆற்றுவார் = செய்வார்.
ஆற்றின் = செய்வதாயின்.
அருமை = அரிய
செயல் = வினை.
“பெருமையுடையவர் ஆற்றின் அருமையுடைய செயலாற்றுவார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“சிறந்தோர் செய்வதாயின் செயற்கரிய வினைகளைச்செய்வார்” என்பதாம்.
‘பெருமையுடையவர்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘ஆற்றுவார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஆற்றின்’ என்னும் வினையெச்சம் ‘அருமை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்.”
குறள் – ௯௱௭௰௬ (அச்சில் உள்ளவாறு).
“சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னு நோக்கு.”
சிறியார் = உயர்பண்பிலார்.
உணர்ச்சியுள் = உணர்வில்.
பேணி = போற்றி.
நோக்கு = குறிக்கோள்.
“பெரியாரைப்பேணிக்கொள்வேமென்னும் நோக்கு சிறியாருணர்ச்சியுள் இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அருமையோரைப்போற்றி ஏற்போமென்னும் குறிக்கோள் உயர்பண்பிலாரது உணர்வில் இல்லை” என்பதாம்.
‘உணர்ச்சியுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘உணர்ச்சி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘கொள்வேம்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“சிறியா ருணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.”
குறள் – ௯௱௭௰௭ (அச்சில் உள்ளவாறு).
“இறப்பே புரிந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்.”
இறப்பு = அளவிலாச்செருக்கு.
புரிந்த = உடைய.
தொழிற்றாம் → தொழிற்று +ஆம் = தன்மையது ஆகும்.
சிறப்புந்தான் = பெருமையுந்தான். சீரல்லவர்கண் = சிறுமையோரிடத்து.
படின் = சேரின்.
“சிறப்புந்தான் சீரல்லவர்கண் படின் இறப்பே புரிந்த தொழிற்றாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பெருமையும் சிறுமையோரிடத்து சேரின் அளவிலாச்செருக்கின் தன்மையது ஆகும்” என்பதாம்.
‘தொழிற்றாம்’ என்பதன் ஈற்றில் ‘ஆம் (ஆகும்)’ என்னும் குறிப்புவினைமுற்று நிற்கின்றது. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘சீரல்லவர்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘சீரல்லவர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.”
குறள் – ௯௱௭௰௮ (அச்சில் உள்ளவாறு).
“பணியுமா மென்றும் பெருமை சிறுமை
யணியுமாந் தன்னை வியந்து.”
பணியுமாம் = கீழ்ப்படியுமாம்.
சிறுமை = கீழ்மை.
அணியுமாம் = தற்பெருமைகொள்ளும்.
“பெருமை என்றும் பணியுமாம். சிறுமை தன்னை வியந்து அணியுமாம்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பெருமை எப்போதும் கீழ்ப்படியும். சிறுமை தன்னைத்தானே வியந்து தற்பெருமைகொள்ளும்” என்பதாம்.
பணியுமாம், அணியுமாம் என்பனவற்றின் ஈற்றில் ‘ஆம் (ஆகும்)’ என்னும் குறிப்புவினைமுற்று நிற்கின்றது. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘சிறுமை’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.”
குறள் – ௯௱௭௰௯ (அச்சில் உள்ளவாறு).
“பெருமை பெருமித மின்மை சிறுமை
பெருமித மூர்ந்து விடல்.”
பெருமிதம் = செருக்கு.
இன்மை = இல்லாமை.
ஊர்ந்துவிடல் = கலந்துவிடல், ஒன்றாதல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பெருமையென்பது செருக்கின்மை. சிறுமையென்பது செருக்காகிவிடல்”
என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௯௱௮௰ (அச்சில் உள்ளவாறு).
“அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.”
அற்றம் = மறைக்கத்தக்க குறை, பிழை, இழிவு முதலான.
“பெருமை அற்றமறைக்கும் சிறுமைதான் குற்றமே கூறிவிடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பெருமையானது குறை, பிழை, இழிவு முதலான மறைக்கத்தக்கனவற்றை பிறிரிடம் கூறாது மறைத்துவிடும். சிறுமையோ குற்றங்குறைகளையே கூறும்” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.



