
குறள் –௭௱௯௰௧(அச்சில் உள்ளவாறு).
“நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.”
நாடாது = ஆராயாது.
நட்டலின் = நட்புகொள்வதைவிட.
நட்டபின் = நட்பானபின். விடு+இல்லை → வீடு+இல்லை → வீடில்லை = விடுதலில்லை, விலகுதலில்லை.
நட்பாள்பவர் = நட்புவேண்டுபவர்.
“நட்பாள்பவர்க்கு நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நட்புவேண்டுபவர்க்கு ஆராயாது நட்புகொள்வதைவிட கேடில்லை நட்பானபின் விலகுதலில்லை” என்பதாம்.
‘நட்டலின்’ என்பதண்கண் ஒப்புப்பொருளில் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘நட்டல்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.”
குறள் –௭௱௯௰௨(அச்சில் உள்ளவாறு).
“ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்.”
கேண்மை = நட்பு.
கடைமுறை = இறுதியில்.
சாம் = இறப்பு.
சாந்துயரம் → சாகும் துயரம் = இறப்பு அல்லது இறப்புக்கொப்பான துன்பம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஆய்ந்தாய்ந்து கேண்மை கொள்ளாதான் கடைமுறை தான் சாந்துயரந்தரும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஆய்ந்தாய்ந்து நட்புகொள்ளாதானின் நட்பு இறுதியில் அவனுக்கு இறப்பு அல்லது இறப்புக்கொப்பான துன்பத்தைத்தரும்” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் –௭௱௯௰௩(அச்சில் உள்ளவாறு).
“குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா
வினனு மறிந்தியாக்க நட்பு.”
குணனும் = நற்குணமும்.
குடிமையும் = நற்குடிப்பிறப்பும்.
குன்றா இனனும் = குற்றமற்ற நட்பும்.
யாக்க = செய்க.
“குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா இனனும் அறிந்து நட்புயாக்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒருவரது நற்குணமும் நற்குடிப்பிறப்பும் குற்றமும் குற்றமற்ற நட்பும் அறிந்து நட்பினைச்செய்க” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் பொருள்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதிவும்மையான ‘குன்றாவினமும்’ என்பது வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா
வினனும் அறிந்தியாக்க நட்பு.”
குறள் –௭௱௯௰௪(அச்சில் உள்ளவாறு).
“குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு.”
குடிப்பிறந்து = நற்குடியில் பிறந்து.
நாணுவானை = அஞ்சுவானை.
கொடுத்தும் = பொருள்கொடுத்தும்.
“குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவானைக்கொடுத்தும் நட்புகொளல் வேண்டும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நற்குடியில் பிறந்து தனக்கு நேரும் பழிகளுக்கு அஞ்சுவானை பொருள்கொடுத்தும் நட்பாக கொள்ளவேண்டும்” என்பதாம்.
‘தன்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பழிநாணுவானைக்கொடுத்தும்’ என்பது பொருளற்ற புணர்ச்சி. ‘பழிநாணுவானை விலையாக கொடுத்து’ என்றவாறு பொருந்தாப்பொருளை இப்புணர்ச்சி தருகிறது.
‘கொடுத்தும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘வேண்டும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானை
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.”
குறள் –௭௱௯௰௫ (அச்சில் உள்ளவாறு).
“அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்.”
அழ = வருந்தியுணர.
அல்லது = (உலகவழக்குக்கு) பொருந்தாதது.
இடித்து = கடிந்து.
வழக்கு = உலகநடைமுறை.
ஆய்ந்து = அறிந்து.
“அல்லது அழச்சொல்லியிடித்து வழக்கறிய வல்லாரறிந்து நட்புகொளல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பொருந்தாததைச்செய்யுங்கால் மனம் வருந்தியுணர கடிந்து உலகநடைமுறையைக்கூறவல்லாரை அறிந்து நட்பாக கொள்க”
என்பதாம்.
‘சொல்லி’ என்னும் வினையெச்சம் ‘அல்லது’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்.”
குறள் –௭௱௯௰௬ (அச்சில் உள்ளவாறு).
“கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்.”
கேடு = துன்பம்.
உறுதி = தெளிவு, நல்லறிவு.
கிளைஞரை = நண்பரை.
நீட்டி = ஆய்ந்தறிந்து.
அளப்பது = கணிப்பது.
கோல் = அளவுகோல்.
“கேட்டினும் ஓருறுதி உண்டு கிளைஞரை நீட்டியளப்பதோர் கோல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“துன்பத்திலும் ஒரு தெளிவு கிட்டும். நண்பரை ஆய்ந்தறிந்து கணிப்பதற்கு ஓரளவுகோலாகும் அத்துன்பம்” என்பதாம்.
‘கேட்டினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘உண்டு’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கேட்டினும் உண்டு*ஓ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் –௭௱௯௰௭ (அச்சில் உள்ளவாறு).
“ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை யொரீஇ விடல்.”
ஊதியம் = பேறு, பயன்.
பேதையார் = அறிவற்றோர்.
கேண்மை = நட்பு.
ஒரீஇ = விலக்கி.
விடல் = நீங்கல்.
“ஒருவற்கு ஊதியமென்பது பேதையார்கேண்மையொரீஇ விடல் ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒருவற்குக்கிட்டும் பேறு/பயனென்பது அறிவற்றோரது நட்பினை விலக்கி நீங்கல்” என்பதாம்.
‘ஒருவற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘பேதையார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“ஊதிய மென்பது* ஒருவற்கு பேதையார்
கேண்மை யொரீஇ விடல்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் –௭௱௯௰௧௮ (அச்சில் உள்ளவாறு).
“உள்ளற்கவுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
வல்லற்க ணாற்றறுப்பார் நட்பு.”
உள்ளற்க = எண்ணற்க.
உள்ளம் = ஊக்கம்.
சிறுகுவ = குன்றுவ, குறைப்பன.
அல்லற்கண் = துன்பத்தின்கண்.
ஆற்றறுப்பார் = இடையில்
யில் கைவிடுவார்.
“உள்ளம் சிறுகுவ உள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார்நட்பு கொள்ளற்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஊக்கத்தை குன்றச்செய்வனவற்றை எண்ணவேண்டா. துன்பத்தின்கண் இடையில் கைவிடுவாரது
நட்பினைக்கொள்ளற்க” என்பதாம்.
‘உள்ளற்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘உள்ளஞ்சிறுகுவ’ என்பதில் ‘உள்ளம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘கொள்ளற்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அல்லல்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அல்லல்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.”
குறள் –௭௱௯௰௧௯ (அச்சில் உள்ளவாறு).
“கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
உள்ளினு முள்ளஞ் சுடும்.”
கெடுங்காலை = கேடுற்றகாலத்து.
கேண்மை = நட்பு.
அடுங்காலை = உயிர் நீங்குங்காலத்து, இறுதிக்காலத்து .
உள்ளினும் = நினைப்பினும்.
சுடும் = துன்புறும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கேடுற்ற காலத்தில் கைவிடுவாரது நட்பினை உயிர் நீங்குங்காலத்தில் நினைப்பினும் உள்ளம் துன்புறும்” என்பதாம்.
‘கெடுங்காலத்தில்’ என்னும் பொருள்தரும் ‘கெடுங்காலை’ என்னும் ஏழாம்வேற்றுமைப்பொருளையேற்ற சொல் ‘கைவிடுவார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. ஏழாம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘கேண்மையடுங்காலை’ என்னும் புணர்மொழி ‘கேண்மையை அடுங்காலை’ எனவிரியும். ‘அடுங்காலை’ என்பது காலயிடப்பெயர். இரண்டாம்வேற்றுமை பெயருடன் புணராது; வினையுடன்மட்டுமே புணரும். ‘அடுங்காலை’ என்பது இடைப்பிறவரல். ‘கேண்மையை உள்ளினும்’ என்றவாறு சொற்கள் தழுவும்.
‘உள்ளினும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
‘உள்ளஞ்சுடும்’ என்பதில் ‘உள்ளம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கெடுங்காலை கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.”
குறள் – ௮௱ (அச்சில் உள்ளவாறு).
“மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து
மொருவுக வொப்பிலார் நட்பு.”
மருவுக = தழுவுக.
மாசற்றார் = குற்றமில்லார்.
கேண்மை = நட்பு.
ஈத்து = கொடுத்து.
ஒருவுக = விலக்குக.
ஒப்பிலார் = பொருந்தார்.
“மாசற்றார்கேண்மைமருவுக ஒன்றீத்தும் ஒப்பிலார்நட்பொருவுக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘கேண்மை’ என்னுமிடத்து ஒரு கருத்து முடிகிறது. செய்யுளில் ‘கேண்மை’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருளைத்தருகின்றது.
முற்றுப்பொருளைத்தருமிடங்கள் புணரா.
‘ஈத்தும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘ஒருவுக’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




