இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு- ௱௪. உழவு.

குறள் – ௲௩௰௧(அச்சில் உள்ளவாறு).

“சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
லுழந்து முழவே தலை.”

சுழன்றும் = எத்தொழிலைக்கருதினாலும்.
ஏர் = உழவு.
பின்னது = சார்ந்தது.
உழந்தும் = வருத்தந்தந்தாலும்.
தலை = முதன்மையானது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“எத்தொழிலைக்கருதினாலும் உழவினைச்சார்ந்தே உலகம் இயங்குகிறது. அதனால் வருத்தந்தந்தாலும் உழவே முதன்மையானது” என்பதாம்.

‘சுழன்றும்’ என்னும் வினையெச்சம் ‘ஏர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘உலகம்’ என்பது பெயர்ப்பயனிலையாய் முற்றுப்பொருளைதருகிறது. முற்றுப்பொருள்தருமிடங்கள் புணரா.

‘அதனால்’ என்னும் காரணச்சுட்டு தனக்கு முன்நின்ற சொற்றொடரைச்சுட்டும். ‘அதனாலுழந்தும்’ என்பது பொருத்தாப்புணர்ச்சி.

‘உழந்தும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.”

 

குறள் – ௲௩௰௨ (அச்சில் உள்ளவாறு).

“உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து.”

ஆணி = அச்சாணி, கடையாணி.
அஃது ஆற்றாது = உழவினைச்செய்யாது.
எழுவார் = பிற தொழில்கள்செய்வார்.
பொறுத்து = தாங்கி.

“அஃது (உழவு) ஆற்றாது எழுவாரையெல்லாம் பொறுத்து உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“உழவினைச்செய்யாது பிற தொழில்கள்செய்வாரைத்தாங்கும் உழவர் உலகத்தார்க்கு அச்சாணி” என்பதாம்.

‘உழுவார்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

‘உலகத்தார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘ஆணி’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

‘ஆணி’ என்பது முற்றுப்பொருள்தரும் பெயர்ப்பயனிலை. முற்றுப்பொருள்தருமிடம் புணராது.

‘ஆற்றாது’ என்னும் வினையெச்சம் ‘எழுவார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“உழுவார் உலகத்தார்க்கு* ஆணிஅஃ தாற்றாது*
எழுவாரை யெல்லாம் பொறுத்து.”

*குற்றியலுகரங்களாகிய குகரமும் துகரமும் அலகுபெறா.

 

குறள் – ௲௩௰௧ (அச்சில் உள்ளவாறு).

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்.”

மற்றெல்லாம் = பிற தொழிலாளர்.
தொழுது = அடிபணிந்து, வணங்கி, போற்றி.
பின் = அடியொற்றி, தொடர்ந்து.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“உழவுசெய்து உணவுண்டு வாழ்வாரே வாழ்வார். பிறதொழிலாளர் பிறரை அடிபணிந்து அதனால் உண்டு அவரைப்பின் தொடர்ந்து செல்பவர்” என்பதாம்.

‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.”

 

குறள் – ௲௩௰௪ (அச்சில் உள்ளவாறு).

“பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப
ரலகுடை நீழ லவர்.”

பலகுடை = பல்தொழிலும்.
நீழலும் = அதன் சார்புகளும் பயன்களும்
தங்குடைக்கீழ் = தமது உழவாகிய குடையின்கீழ்.
அலகு = ஏர்கருவி.
நீழலவர் = பயனளிப்பவர்.

“பலகுடை நீழலும் அலகுடைநீழலவர் தங்குடைக்கீழ் காண்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பல்தொழிலும் அதன் சார்புகளும் பயன்களும் ஏர்கருவியால் பயனளிப்பவரான உழவர் தமது குடையின்கீழ் காண்பர்” என்பதாம்.

‘பலகுடைநீழலும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

‘தங்குடைக்கீழ்’ என்பதன்கண் முன்னின்ற ‘தம்’ என்னும் மறுபெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘தம்குடைக்கீழ்’ என்பதன்கண் வந்த ‘கீழ்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘குடை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘காண்பர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பலகுடை நீழலும் தம்குடைக்கீழ் காண்பர்
அலகுடை நீழ லவர்.”

 

குறள் – ௲௩௰௫ (அச்சில் உள்ளவாறு).

“இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.”

இரவார் = பிறரிடம் வேண்டார்.
இரப்பார்க்கு= வேண்டுவார்க்கு.
ஈவர் = கொடுப்பர்.
கரவாது = மறைக்காது.
கைசெய்து = முயன்று.
ஊண் = உணவு (உழவின் பயன்).
மாலையவர் = இயல்பினர், குணத்தார்.‌

“கைசெய்தூண் மாலையவர் (உழவர்) இரவார். இரப்பார்க்கு கரவாது ஒன்றீவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“முயன்று உணவை விளைவிக்கும் உழவர் பிறரிடம் வேண்டார்; தம்மிடம் ஒன்றனை வேண்டுவார்க்கு மறைக்காது கொடுப்பர்” என்பதாம்.

‘இரவார்’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘இரப்பார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘ஒன்று’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“இரவார் இரப்பார்க்கு*ஒன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௩௰௬ (அச்சில் உள்ளவாறு).

“உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை.”

கைமடங்கின் = செய்தலை நீங்கின்.
விழைவதூஉம் → விழைவதும் = விரும்பும் உணவும்.
விட்டேம் = நீங்கினோம்.
விட்டேமென்பார்க்கும் = துறவோர்க்கும்.
நிலை = நிலைத்தல், வாழ்வு‌.

“உழவினார் கைம்மடங்கின் விழைவதூஉம் விட்டேமென்பார்க்கும் நிலை இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“உழவர் உழவுசெய்தலை நீங்கின் யாவரும் விரும்பும் உணவும், துறந்தோர் துறவறத்தில் நிலைத்தலும் இல்லை” என்பதாம்.

‘என்பார்க்கும்’ என்னும் உம்மைபெற்ற விளக்கயிடைச்சொல் ‘விட்டேம்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.”

 

குறள் – ௲௩௰௭ (அச்சில் உள்ளவாறு).

“தொடிப்புழுதி கஃசா வுணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.”

தொடிப்புழுதி = ஓரலகு எடையளவுள்ள வயல்மண்.
கஃசா = ஓரலகு எடையின் காற்பங்கு.
கஃசாவுணக்கின் = கஃசா அளவு ஆகுமாறு காய் விடுவானாயின்.
பிடித்தெருவும் = கைப்பிடியளவு எருவும்.
சாலப்படும் = மிகவிளையும்.

“தொடிப்புழுதி கஃசாவுணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும் ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஓரலகு எடையளவுள்ள வயல்மண்கட்டியை உலர்த்தி காற்பங்கு எடையளவுள்ள புழுதியாக உழுதால் அவ்வயல் கைப்பிடியளவு எருவும் வேண்டாது மிகவிளையும்” என்பதாம்.

செம்மைவடிவம் —
“தொடிப்புழுதி கஃசா வுணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.”

 

குறள் – ௲௩௰௮ (அச்சில் உள்ளவாறு).

“ஏரினு நன்றா லெருவிடுதல் கட்டபி
னீரினு நன்றதன் காப்பு.”

ஏரினும் = உழுதலினும்.
நன்றால் → நன்று = நல்லது. ஆல் என்பது அசைச்சொல்.
கட்டபின் = களைகளைந்தபின்.
காப்பு = காத்தல்.

“எருவிடுதல் ஏரினும் நன்று. கட்டபின்
நீரினும் நன்று அதன் காப்பு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“எருவிடுதல் உழுதலினும் நன்மைதரும். களைகளைந்தபின் நீர்பாய்ச்சுதலினும் பயிரைக்காத்தல் நன்மைதரும்” என்பதாம்.

‘ஏரினும்’, ‘நீரினும்’ என்பன இறந்தது தழீஇய எச்சவும்மை. எச்சவும்மை எதனுடனும் புணராது.

‘நன்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘நன்று’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கட்டபின்’ என்பதன்கண் வந்த ‘பின்’ என்னும் காலயிடைச்சொல் ‘கட்ட’ என்னும் வினையெச்சத்துடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.”

 

குறள் – ௲௩௰௯ (அச்சில் உள்ளவாறு).

“செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந்
தில்லாளி னூடி விடும்.”

செல்லான் (முற்றெச்சம்) = செல்லாது.
கிழவன் = நிலவுரிமையாளன்.
இருப்பின் = இருந்தால்.
புலந்து = (மனம்) வேறுபட்டு.
இல்லாளின் = மனைவியைவிட.
ஊடி = பிணங்கி, வெறுத்து.

“நிலவுரிமையாளன் பயிர்விளையும் நிலத்திற்குச்செல்லாது இருந்தால் தன்மனைவியைவிட பிணங்கி வளங்குன்றும்” என்பதாம்.

‘கிழவன்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

‘இருப்பின்’ என்னும் வினையெச்சம் ‘நிலம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘புலந்து’ என்னும் வினையெச்சம் ‘இல்லாள்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘இல்லாளின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஒப்புப்பொருளில் வந்த ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘இல்லாள்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து*
இல்லாளின் ஊடி விடும்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௪௰ (அச்சில் உள்ளவாறு).

“இலமென் றசைஇ இருப்பாரைக் காணி
னிலமென்னு நல்லா ணகும்.”

இலமென்று = இல்லையென்று. அசைஇ = செயல்படாது, முயலாது.
காணின் = கண்டால்.
நல்லாள் = பெண்.
நகும் = முறுவலிக்கும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“தம்மிடம் ஏதுமில்லையென்று முயலாது இருப்பாரைக்கண்டால் நிலமென்னும் பெண் முறுவலிக்கும்” என்பதாம்.

‘என்று’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘இலம்’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘காணின்’ என்னும் வினையெச்சம் ‘நிலம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘நிலம்’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நல்லாள்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இலமென்று* அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.”

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button