
குறள் – ௮௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு).
“பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்
டூதியம் போக விடல்.”
பேதைமை = மடமை.
ஏதம் = கேடு.
ஊதியம் = பயன்.
போகவிடல் = கைவிடல்
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“மடமை என்பதொன்று யாதெனின் கேட்டினைக்கைக்கொண்டு பயனைக்கைவிடல்” என்பதாம்.
‘ஒன்று’ என்னும் சுட்டுப்பெயர் ‘என்பது’ என்னும் விளக்கயிடைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘எனின்’ என்னும் காரணயிடைச்சொல் ‘யாது’ என்னும் வினாப்பெயருடன் புணர்ந்து அதன்முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கொண்டு’ என்னும் வினையெச்சம் ‘ஊதியம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“பேதைமை யென்பதொன்று* யாதெனின் ஏதங்கொண்டு*
ஊதியம் போக விடல்.”
*குற்றியலுகரங்களாகிய றுகரமும் டுகரமும் அலகுபெறா.
குறள் – ௮௱௩௰௨ (அச்சில் உள்ளவாறு).
“பேதைமையுள் ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.”
பேதைமை = மடமை.
காதன்மை = காதல், பெருவிருப்பம்.
கை = ஒழுக்கம்.
கையல்லதன் = ஒழுக்கமற்றதன்.
“பேதைமையுள்ளெல்லாம் பேதைமை கையல்லதன்கண் காதன்மை செயல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மடமையுளெல்லாம் மடமையாவது ஒழுக்கமற்றதன்கண் பெருவிருப்பங்கொண்டு அவற்றை செயல்” என்பதாம்.
‘கையல்லதன்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அதன்’ என்னும் சுட்டுப்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பேதைமையுள் ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.”
குறள் – ௮௱௩௰௩ (அச்சில் உள்ளவாறு).
“நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.”
நாணாமை = வெட்கப்படாமை.
நாடாமை = ஆராயாமை.
நாரின்மை = அன்பின்மை.
பேணாமை = போற்றாமை, காவாமை. பேதை = அறிவிலி.
தொழில் = செயல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“வெட்கப்படவேண்டியதற்கு வெட்கப்படாமை, எதனையும் ஆராயாமை, யாரிடமும் அன்பின்மை, எதனையும் போற்றிக்காவாமை முதலியன அறிவிலியின் செயல்” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௮௱௩௰௪ (அச்சில் உள்ளவாறு).
“ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்.”
ஓதி = கற்று.
அடங்கா = (கற்றதற்கு) அடங்கி ஒழுகா.
பேதை = அறிவிலி.
இல் = இல்லை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கற்றுணர்ந்தும் கற்றதை பிறர்க்கு உரைத்தும் அவற்றுள் தன்னை அடக்கி ஒழுகா அறிவிலியினும் அறிவிலி இல்லை” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் பொருள்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. எனவே பிறர்க்குரைத்தும் என்னும் உம்மை புணராது.
‘பிறர்க்குரைத்துந்தான்’ என்னும் புணர்ச்சியில் ‘தான்’ என்னும் மறுபெயர்ச்சொல், இடைச்சொல்லாகவும் மயங்கும். பொருள்மயங்குபுணர்ச்சி மொழியில் இல்லை.
‘பேதையில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பேதை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பேதையாரில்’ என்னும் புணர்ச்சியில் ‘இல்’ என்பது ‘இல்லை’ என்னும் குறிப்புவினைமுற்று, வேற்றுமைவுருபாகவும் மயங்கும். பொருள்மயங்குபுணர்ச்சி மொழியில் இல்லை.
செம்மைவடிவம் —
“ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையில் பேதையார் இல்.”
குறள் – ௮௱௩௰௫ (அச்சில் உள்ளவாறு).
“ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு.”
ஒருமை = ஒருபிறவி.
பேதை = அறிவிலி.
தான் = ஒருவன்.
எழுமையும் = எழுபிறவியிலும்.
புக்கு = நுழைந்து.
அழுந்தும் = துன்புறும்.
அளறு = கேடுலகு (நரகம்).
“எழுமையும் அளறுபுக்கு தானழுந்தும் (துன்பம்) பேதை ஒருமை செயலாற்றும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எழுபிறவியிலும் கேடுலகிற்கு (நரகத்திற்கு) சென்று ஒருவன் படும் துன்பத்தை அறிவிலி ஒருபிறவியில் அடையும்படி செயலாற்றுவான்” என்பதாம்.
‘ஒருமை’ என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் ‘செயலாற்றும்’ என்னும் வினைச்சொல்லுடன் புணராது. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘பேதை’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘எழுமையும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.
‘அழுந்தும் அளறு’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“ஒருமை செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.”
குறள் – ௮௱௩௰௬ (அச்சில் உள்ளவாறு).
“பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.”
பொய்படும் = நிறைவேறாது.
ஒன்றோ = அதுமட்டுமன்று.
புனை = கால்விலங்கு.
புனைபூணும் = ஒறுத்தற்கு (தண்டனைக்கு) ஆளாகும்.
கையறியா = செய்யும் வகையறியா.
பேதை = அறிவிலி.
வினை = செயல்.
“கையறியாப்பேதை வினைமேற்கொளின் பொய்படுமொன்றோ புனைபூணும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“செய்யும் வகையறியா அறிவிலி செயல்படுங்கால் அச்செயல் நிறைவேறாததுடன் அவன் ஒறுத்தற்கும் (தண்டனைக்கும்) ஆளாவான்” என்பதாம்.
‘பூணும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பொய்படு மொன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.”
குறள் – ௮௱௩௰௭ (அச்சில் உள்ளவாறு).
“ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை.”
ஏதிலார் = அயலார்.
ஆர = பசியார, நுகர, மிகுபயன்பெற.
தமர் = சுற்றமும் நட்பும்.
பேதை = அறிவிலி.
உற்றக்கடை = அடைந்தவிடத்து.
“பேதை பெருஞ்செல்வமுற்றக்கடை ஏதிலார் ஆர தமர் பசிப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அறிவிலி பெருஞ்செல்வத்தை அடைந்தவிடத்து அயலார் பசியார அவனது சுற்றமும் நட்பும் பசித்திருப்பர்” என்பதாம்.
‘ஏதிலார்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘ஆர’ என்னும் வினையெச்சம் ‘தமர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஏதிலார் ஆர தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை.”
குறள் – ௮௱௩௰௮ (அச்சில் உள்ளவாறு).
“மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்.”
மையல் = மயக்கம்.
களிப்பு = மதுவுண்ணல்.
பேதை = அறிவிலி.
கையொன்றுடைமை = கைப்பொருளுடைமை.
“பேதை தன்கையொன்றுடைமை பெறின் மையலொருவன் களித்தற்றால்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அறிவிலியின் கையில் பொருள் இருந்தால் மயங்கியவன் மதுவுண்டதைப்போல்வதாம்” என்பது.
‘அற்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் உவமவுருபுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“மைய லொருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்.”
குறள் – ௮௱௩௰௯ (அச்சில் உள்ளவாறு).
“பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
பீழை தருவதொன் றில்.”
பெரிதினிது = மிகயினியது. பேதையார் = அறிவிலார்.
கேண்மை = நட்பு.
பீழை = துன்பம்.
இல் = இல்லை.
“பிரிவின்கண் பீழை தருவதொன்று இல் (ஆதலால்) பேதையார் கேண்மை பெரிதினிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘ஆதலால்’ என்பது சொல்லெச்சம்.
“பிரியும்போது துன்பம் தருவதொன்று இன்மையால் அறிவிலாரது நட்பு மிகவும் இனிது” என்பதாம்.
‘பிரிவின்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இன்’ என்னும் சாரியைபெற்று ‘பிரிவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தருவதொன்றில்’ என்னும் புணர்ச்சியில் ‘இல் (இல்லை)’ என்னும் குறிப்புவினைமுற்று புணர்ச்சியால் வேற்றுமைவுருபாகவும் மயங்கும். பொருள்மயங்குபுணர்ச்சி மொழியில் இல்லை.
செம்மைவடிவம் —
“பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று* இல்.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௮௱௪௰ (அச்சில் உள்ளவாறு).
“கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.”
கழாஅக்கால் = கழுவாத கால்.
பள்ளி = பஞ்சனை.
அற்று = போன்றது.
ஆல் = அசைச்சொல்.
குழாஅத்து = அவையுள்
பேதை= அறிவிலி.
“சான்றோர்குழாஅத்து பேதை புகல் கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“சான்றோரது அவையுள் பேதை புகுவது கழுவாத கால்களை பஞ்சனையில் வைத்தது போன்றது” என்பதாம்.
‘வைத்தற்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் உவமவுருபுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘குழாஅத்து’ என்பதன்கண் வந்த ‘அத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பேதை’ என்னும் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் பெயருடன் புணராது. ஏழாம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்து பேதை புகல்.”
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.



