இலக்கணம்தமிழ்

புணர்ச்சிநுட்பங்கள் சில.

புணர்ச்சியிலக்கணம்.

புணர்ச்சிநுட்பங்கள் சில.

வேற்றுமைவுருபுகள் உள்ளிட்ட இடைச்சொற்கள் தமக்கென தனிப்பொருளற்றன. பெயரையோ வினையையோ இடனாக கொண்டு அவற்றுடன் சேர்ந்து அவற்றின் பொருளை வேறுபடுத்தும்/விரிக்கும்/தொடர்பினைத்தரும்.

இடைச்சொற்கள் மேற்கூறியவாறு தமது பணியை முடித்தபின் மற்றொரு புணர்ச்சியைப்பெறா. புணர்வதற்கு விதியிருப்பினும் புணர்த்த வேண்டா. உரைநடைகளில் இதனை முழுமையாய் கடைபிடிக்க. தொடரொலிப்பு நிகழ்ந்தாலும் விட்டிசைத்து பொருள் மயக்கத்தைத்தவிர்க்க.

எடுத்துக்காட்டு:

• முருகன் கையால் அடித்தான்→ செம்மை வடிவம்.

• முருகன் கையாலடித்தான்→ மயங்கும் வடிவம்.

★ இக்காலத்தில்  தொகைச்சொற்களையும் குற்றவுணர்வின்றி பிரித்தெழுகின்றனர். ஐயந்திரிபின்றி தொகைச்சொற்களைப்பயிலும்வரை விரித்தெழுத பழகுக.

★ இக்காலத்தில் வல்லினமெய்களை சொல்லீற்றில் நிறுத்தி இடைவெளிவிடுவதற்கு நாணுவதில்லை. இதனைச்சொல்வதற்கு  நாம் நாணுகிறோம். இத்தவற்றை நீவிர் ஒருகாலும் செய்யாதீர். புணர்மொழிகள் எத்துணை நீளினும் வல்லினம் மிகின் இடைவெளியைத்தரவேண்டா.

★ நாம் கருதும் பொருளை ஒரு புணர்ச்சி வெளிப்படுத்தாதபோது,  பொருண்மயக்கத்தைத்தரும்போது அப்புணர்ச்சியைத்தவிர்த்து விரித்தெழுதுக. புணராவிடத்தும் மயங்கற்கிடமான இடத்தும்ம் புணர்த்தவேண்டா. எடுத்துக்காட்டு  — “நிறுத்தக்குறிகளிருக்குமிடத்திற் புணர்ச்சியிராது.“ இத்தொடரில் ‘இல்’ உருபின் லகரமெய்யை றகரமாக திரிக்கவேண்டா.

★ “நிறுத்தக் குறிகளிருக்குமிடத்திற் புணர்ச்சி யிராது, புணர்ச்சி யிருக்குமிடத்தில் நிறுத்தக் குறிகளிரா. ஆனால் புணர்ச்சி யின்றியமையாத இடங்களிலெல்லாம் புணர்த்தே எழுத வேண்டும்.” இப்பத்தி உரைநடையிலக்கணத்தைக்கற்பிக்கும் நூலொன்றனில் அச்சிடப்பட்டவாறே  எடுத்தெழுதப்பட்டது.

• நிறுத்தக்குறி என்பது ஒருபொருளைச்சுட்டும் பெயர்ச்சொல். இச்சொல் பிளவுபடாது.

• றகரமெய் வந்தபின் இடைவெளி உள்ளதால் அச்சொல் றகரமெய்யீற்றுச்சொல் எனப்படும். வல்லினமெய் சொல்லுக்கு ஈறாகாது.

• ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு புணர்ச்சியினால் றகரமாக திரிந்தது. ‘இல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இடம்’ என்னும் சொல்லுக்குரியதா, ‘இராது’ என்னும் வினைமுற்றுக்குரியதா. இவ்வுருபு அத்துச்சாரியைபெற்று ‘இடம்’ என்னும் பெயர்ச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் தொடர்புணர்ச்சிக்கு உட்படாது.

• யகரயிகரம் (யி) மொழிமுதலாகாது. யகரயிரத்திற்கு முன்னால் இடைவெளி ஏன். ‘இராது’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று வருமிடத்தில் பொருள் முற்றுபெற்று தொடரும் முடியும். அவ்வாறிருக்க காற்புள்ளி இடப்பட்டது ஏன். காற்புள்ளி வினைமுற்றின் முற்றுப்பொருளை இழக்கச்செய்யுமோ. காற்புள்ளியின் இலக்கணம் இவ்வாறு கற்பிக்கின்றதா. காற்புள்ளிக்கு மாறாக அரைப்புள்ளி வரும். ஓரெழுவாய் பல பயனிலையென்னும் அமைப்பில் இத்தொடர் அமையும். நிறுத்தக்குறிகள் என்பது எழுவாய்.

• பொருள்திரியாப்புணர்ச்சியாம் உடம்படுமெய்ப்புணர்ச்சி நிகழந்ததால் இடைவெளி நீங்கி ‘புணர்ச்சியிராது’ என்றாகும்.

• ‘ஆனால்’ என்னும் இணைப்புச்சொல் வேண்டாதது. இருவேறு கருத்துகள் சொல்லப்பட்டன. இரண்டாம் கருத்து முதலில்சொல்லப்பட்ட நிறுத்தக்குறிகளின்  தொடர்ச்சியன்று.

• செய்யுளமைப்பில் சொற்களையெல்லாம் புணர்த்தியதால் புணர்மொழிகள் ஒருசொல்தன்மை என்பதால் இடைவெளியின்றி ‘நிறுத்தக்குறிகளிருக்குமிடத்திற்புணர்ச்சியிராது’ என்றே வரவேண்டும். ஏன் மூன்று இடைவெளிகளைத்தரவேண்டும். இத்தொடரை பின்வருமாறு எழுதினால் பிழைகள் நேரா. “நிறுத்தக்குறிகள் இருக்குமிடத்தில் புணர்ச்சியிராது.”

• இரண்டாந்தொடரைக்காண்க. ‘புணர்ச்சி யின்றியமையாத’ என்பதில் உடம்படுமெய்ப்புணர்ச்சி நிகழ்ந்ததால் இடைவெளியின்றி ‘புணர்ச்சியின்றியமையாத’ என்றவாறு ஒருசொல்லாக இருக்கவேண்டும். இப்புணர்மொழி ‘இடம்’ என்பதனை விளக்கிநிற்கும் பெயரடையாகும். பெயரடை பெயருடன் புணர்ந்து நிற்கும். எனவே ‘புணர்ச்சியின்றியமையாதயிடங்களிலெல்லாம்’ என்பது பிரிவற்ற ஒருபொருள்தரும் புணர்மொழியாகும். இப்புணர்மொழியைப்பிரிப்பதேன்.

• ‘எழுத’ என்னும் வினையெச்சம் வினைமுற்றுடன் புணர்ந்து ‘எழுதவேண்டும்’ என்றாகும். இடையில் இடைவெளி இராது.

இலக்கணத்தைக்கற்பிக்கும் தொடரில் இலக்கணமின்மையே  இன்றையநிலை. என் செய்ய.

தொடர்வோம்.

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.

நன்றி.

வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button