இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௱௮. கயமை.

குறள் – ௲௭௰௧ (அச்சில் உள்ளவாறு).

“மக்களே போல்வர் கயவ ரவரன்ன
வொப்பாரி யாங்கண்ட தில்.”

கயவர் = கீழோர்.
அன்ன = போன்ற.
ஒப்பாரி = ஒப்பார், ஒத்தார்.
இல் = இல்லை.

“கயவர் மக்களே போல்வர் அவரன்ன ஒப்பாரி யாம் கண்டது இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கீழோர் மக்களே போன்றோர். அவரைப்போல் மக்களுடன் ஒத்தாரை யாம் கண்டது இல்லை” என்பதாம்.

செய்யுளில் ‘கயவர்’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருள்தருகிறது. முற்றுப்பொருள்தருமிடம் புணராது.

‘அன்ன’ என்னும் உவமவுருபு ‘அவர்’ என்னும் பெயருடன் புணர்ந்து ஒப்புப்பொருள்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘யாம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

‘கண்டதில்’ என்பதன்கண் வந்த ‘இல் (இல்லை)’ என்னும் குறிப்புவினைமுற்று புணர்ச்சியால் வேற்றுமைவுருபாகவும் மயங்குவதால் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்டது* இல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௭௰௨ (அச்சில் உள்ளவாறு).

“நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்.”

நன்று = நன்னெறி.
கயவர் = கீழோர்.
திருவுடையர் = மகிழ்வுடையர்.
அவலம் = கவலை.
இலர் = இல்லாதார்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“நன்னெறிகளை அறிந்தாரைவிட அவற்றை அறியாத கீழோர் மகிழ்வுடையர்; நெஞ்சில் கவலையில்லாதார்” என்பதாம்.

‘அறிவாரில்’ என்பதன்கண் ஐந்தாம்வேற்றுமையின் ஒப்புப்பொருளில் வந்த ‘இல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘அறிவார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நெஞ்சத்து’ என்பதன்கண் வந்த ‘அத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நெஞ்சு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“நன்றறி வாரில் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து* அவல மிலர்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௭௰௩ (அச்சில் உள்ளவாறு).

“தேவ ரனையர் கயவ ரவருந்தா
மேவன செய்தொழுக லான்.”

அனையர் = ஒப்பர்
‌கயவர் = கீழோர்.
மேவன = விரும்பியன.
ஒழுகலான் = வாழ்வதால்.

“கயவர் தேவரனையர் அவரும் தாம் மேவன செய்தொழுகலான்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கீழோர்ம தாம் விரும்பியன செய்து வாழ்வதால் அவரும் தேவரையொப்பர்” என்பதாம்.

செய்யுளில் ‘கயவர்’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருள்தருகிறது. முற்றுப்பொருள்தருமிடம் புணராது.

‘அவரும்’ என்பது எச்சவும்மைச்சொல். எச்சவும்மை எதனுடனும் புணராது.

‘தாம்’ என்னும் இடைச்சொல் ‘அவரும்’ என்னும் சுட்டுப்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“தேவ ரனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.”

 

குறள் – ௲௭௰௪ (அச்சில் உள்ளவாறு).

“அகப்பட்டி யாவாரைக் காணி னவரின்
மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்.”

அகப்பட்டி = செருக்குமிக்கு விரும்பியவாறு ஒழுகுவார்.
காணின் = கண்டால்.
கீழ் = கீழோர்.
மிகப்பட்டு = மிகையாகி.
செம்மாக்கும் = செருக்கடைவர்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“செருக்குமிக்கு விரும்பியவாறு ஒழுகுவாரை கீழோர் கண்டால் அவரைவிட மிகையாக செருக்குற்று ஒழுகுவார்” என்பதாம்.

‘காணின்’ என்னும் வினையெச்சம் ‘அவர்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது.‌ வினையெச்சம் பெயருடன் புணராது.

‘செம்மாக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அகப்பட்டி யாவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.”

 

குறள் – ௲௭௰௫. (அச்சில் உள்ளவாறு).

“அச்சமே கீழ்கள தாசார மெச்ச மவாவுண்டே லுண்டாஞ் சிறிது.”

அச்சம் = ஒறுத்தலுக்கு (தண்டனைக்கு) ஆளாவோமென அஞ்சுதல்.
கீழ்களது = கீழோரது.
ஆசாரம் = வாழ்முறை.
எச்சம் = அச்சத்திற்கு எஞ்சிய ஒழுக்கம்.
அவா உண்டேல் = விருப்பம் உண்டானால்.
உண்டாம் = உண்டாகும்.

“அச்சமே கீழ்களது ஆசாரம் அவா உண்டேல் எச்சம் சிறிது உண்டாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஒறுத்தலுக்கு (தண்டனைக்கு) ஆளாவோமென அஞ்சுவதே கீழோரது வாழ்முறை. விருப்பம் உண்டாகும்போது அச்சத்திற்கு எஞ்சிய ஒழுக்கம் சிறிது உண்டாகும்” என்பதாம்.

‘அது’ என்னும் ஆறாம்வேற்றுமைவுருபு வெளிப்பட்டு நிற்கும் ‘கீழ்களது’ என்னுஞ்சொல் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடம் புணராது.

‘ஆசாரம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது. மேலும் செய்யுளில் பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருள்தருகிறது. முற்றுப்பொருள்தருமிடம் புணராது.

‘எச்சமவா’ என்பது பொருளற்ற புணர்ச்சி. ‘எச்சம்’ என்பது அச்சத்திற்கு எஞ்சிநிற்கும் ஒழுக்கத்தைச்சுட்டும்; அவாவை அன்று. ‘எச்சம்’ வேறோரிடம் சென்று பொருந்தி பொருள்தரும்.

‘அவாவுண்டேல்’ என்பதன்கண் வந்த ‘அவா’ இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இப்புணர்மொழியை விரித்தால் இடையில் எதுவும் தொகவில்லை. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘உண்டேலுண்டாகும்’ என்பது உணர்ச்சியற்ற புணர்ச்சி. புணர்ச்சி பொருளுணர்ச்சிக்கானது. மேலும் ‘உண்டாகும் சிறிது’ என்பது முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அச்சமே கீழ்களது* ஆசாரம் எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௭௰௬. (அச்சில் உள்ளவாறு).

“அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.”

அறைபறை = அறைந்து அறிவிக்கும் பறைமேளம்.
அன்னர் = போல்வர்.
கயவர் = கீழோர்.
மறை = மறைக்கும் செய்திகள். உய்த்து = மறைக்காது.
உரைக்கலான் = சொல்வதால்.

“தாம் கேட்ட மறை பிறர்க்கு உய்த்துரைக்கலான் அறைபறையன்னர் கயவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க

“தாம் கேட்ட மறைவான செய்திகளை மறைக்காது பிறர்க்கு சொல்வதால் கீழோர் அறைந்து அறிவிக்கும் பறைமேளம்‌போன்றோர்” என்பதாம்.

‘தாம்’ என்பது எழுவாயாம் மறுபெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அறைபறை யன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.”

 

குறள் – ௲௭௰௭ (அச்சில் உள்ளவாறு).

“ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு.”

கொடிறு = கன்னம், தாடை.
கூன்கையர் = அடிக்க விரல்கள் மடக்கிய கையினர்.
ஈர்ங்கை = எச்சிற்கை.
விதிரார் = சிதறார்.

“கொடிறுடைக்கும்
கூன்கையரல்லாதவர்க்கு கயவர் ஈர்ங்கைவிதிரார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கன்னத்தை உடைக்கும் விரல்கள் மடக்கிய கையினரல்லார்க்கு கீழோர் தமது எச்சிற்கையிலுள்ள உணவுதுகள்களையும் கொடார். கீழோர் யாருக்கும் மனம் உவந்து உதவார்” என்பதாம்.

‘கொடிறுடைக்கும் கூன்கையர்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு.”

 

குறள் – ௲௭௰௮ (அச்சில் உள்ளவாறு).

“சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப் பயன்படுங் கீழ்.”

சொல்ல = கேட்க.
பயன்படுவர் = உள்ளதைக்கொடுப்பர்.
சான்றோர் = மேன்மையோர்.
கொல்ல = நறுக்கிப்பிழிய.
பயன்படும் = உள்ளதைக்கொடுப்பர்.
கீழ் = கீழோர்.

“சொல்லப்பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப்பயன்படும் கீழ்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கேட்ட அளவில் தம்மிடமுள்ளதைக்கொடுப்பர் மேன்மையோர். ஆலையிலிட்ட கரும்புபோல் நறுக்கிப்பிழிய தம்மிடமுள்ளதைக்கொடுப்பர் கீழோர்“ என்பதாம்.

‘போல்’ என்னும் உவமவுருபு ‘கரும்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘பயன்படும் கீழ்’ என்பது முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.”

 

குறள் – ௲௭௰௯ (அச்சில் உள்ளவாறு).

“உடுப்பதூஉ முண்பதூஉங் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ்.”

வடு = குற்றம்.
வற்றாகும் = வல்லமையாகும்.
கீழ் = கீழோர்.

“உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பிறர் உடுக்கவும் உண்ணவும் கீழோர் கண்டால் அவர்மீது குற்றமில்லாதபோதும் ஒருகுற்றத்தைத்தோற்றுவிக்க வல்லார்” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் பொருண்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையாம் ‘உண்பதூஉம்’ என்பது புணராது.

‘காணின்’ என்னும் வினையெச்சம் ‘பிறர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘வடுக்காண’ என்பது ’வடுவைக்காண’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகையாகும். இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ‌வருமொழி இயல்பாகும். இடைவெளி இன்மையும், ஒருசொன்னீர்மையும் தொகையாற்றலை அறிவிக்கும்.

‘வற்றாகும் கீழ்’ என்பது முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“உடுப்பதூஉ முண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுகாண வற்றாகும் கீழ்.”

 

குறள் – ௲௮௰ (அச்சில் உள்ளவாறு).

“எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.”

எற்றிற்கு = எதற்கு.
உரியர் = தகுந்தவர்.
ஒன்றுற்றக்கால் = ஒருதுன்பமடைந்தபோது.
விற்றல் = தன்னையிழத்தல், ஒப்படைத்தல்.

“கயவர் ஒன்றுற்றக்கால் விரைந்து விற்றற்குரியர் எற்றிற்குரியர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஒருதுன்பமடைந்தபோது கயவர் தம்மையிழந்து ஒப்படைத்துவிடுவர். வேறெதற்கு தகுந்தவர். வேறெதற்கும் தகுந்தவரல்லர்” என்பதாம்.

‘கயவர்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“எற்றிற் குரியர் கயவர்ஒன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.”

பொருட்பால் முற்றிற்று.

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button