
குறள் – ௲௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு).
“ பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.”
அற்றே = போன்றதே.
பணிமொழி = மென்மொழி, பணிவான சொல்.
வால் = தூயவெண்மை.
எயிறு = பற்கள் பதியும் நிணம் (தசை).
நீர் = உமிழ்நீர்.
“பணிமொழி வாலெயிறூறிய நீர் பாலொடு தேன் கலந்தற்றே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மென்மொழியாளாம் இவளது தூயநிணத்தில் ஊறிய உமிழ்நீர் பாலொடு தேன் கலந்தது போன்று சுவைமிக்கது” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௲௱௨௰௨ (அச்சில் உள்ளவாறு).
“உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு.”
என்ன = எத்தன்மையது.
மற்று = அசைச்சொல்.
அன்ன = அத்தன்மையது.
மடந்தை = பெண், தலைவி.
எம்மிடை = எம்மொடு.
நட்பு = உறவு, தொடர்பு.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உடம்போடு உயிர்க்குள்ள உறவு எத்தன்மையதோ அத்தன்மையது இப்பெண்ணோடு எனக்குள்ள உறவு (பிரிவற்றது)” என்பதாம்.
‘உடம்பொடு’ என்பதன்கண் வந்த ’ஒடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ’உடம்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘உயிரிடை’ என்பதன்கண் வந்த ‘இடை’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘உயிர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உடம்பொடு* உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு* எம்மிடை நட்பு.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௨௰௩ (அச்சில் உள்ளவாறு).
“கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழுந்
திருநுதற் கில்லை யிடம்.”
போதாய் = போவாய்.
யாம் = நாம்.
வீழும் = விரும்பும்.
திருநுதற்கு = அழகிய நெற்றியாளுக்கு.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“எனது கண்களின் கருமணியில் தங்கியிருக்கும் பாவையே நீ அவ்விடத்திலிருந்து செல்க. யான் விரும்பும் அழகிய நெற்றியாள் தங்கியிருக்க பொருத்தமான வேறிடம் இல்லை” என்பதாம்.
கருமணியில்’ என்பதன்கண் வந்த ‘‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘கருமணி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘வீழும் திருநுதல்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘இல்லை’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கருமணியில் பாவாய்நீ போதாய்யாம் வீழும்
திருநுதற் கில்லை இடம்.”
குறள் – ௲௱௨௰௪ (அச்சில் உள்ளவாறு).
“வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத
லதற்கன்ன ணீங்கு மிடத்து.”
வாழ்தல் = கூடியிருத்தல்.
உயிர்க்கன்னள் = உயிரை ஒத்தவள், உயிர் போன்றாள்.
ஆயிழை = ஆய்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவள்.
அதற்கு = வாழ்தலுக்கு.
சாதலன்னள் = உயிர்பிரிவுக்கு ஒப்பு.
நீங்குமிடத்து = பிரியும்போது.
“ஆயிழை வாழ்தல் உயிர்க்கன்னள் நீங்குமிடத்து அதற்கு சாதலன்னள்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஆய்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளைக்கூடியிருத்தல் உயிர்க்கு உடம்பொடு கூடியிருத்தல் போன்றது. அவளை நீங்கியிருப்பது வாழ்தலுக்கு இறப்பைப்போன்றது” என்பதாம்.
‘வாழ்தல்’, ‘சாதல்’ என்னும் தொழிற்பெயர்கள் புணராது தனித்துநின்று விட்டிசைத்து தம்பொருளைச்சிறப்பிக்கும்.
‘அன்னள்’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து.”
குறள் – ௲௱௨௰௫ (அச்சில் உள்ளவாறு).
“உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க் கண்ணாள் குணம்.”
உள்ளுவன்மன் = நினைப்பேன். ‘மன்’ என்பது அசைச்சொல்.
மறப்பின் = மறந்தால்.
மறப்பறியேன் = மறத்தலை அறியேன்.
ஒள்ளமர்க்கண்ணாள் = ஒளிமிகுந்து விரும்பும் கண்ணினை உடையாள்.
குணம் = இயல்பு.
“ஒள்ளமர்க்கண்ணாள்குணம் யான் மறப்பின் உள்ளுவன்மன் மறப்பறியேன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒளிமிகுந்து விரும்பும் கண்ணினை உடையாளது இயல்பினை யான் மறந்தாலன்றோ நினைப்பேன். ஆனால் மறத்தலை அறியேன் (நினைப்பதற்கான காரணம் மறத்தல்)” என்பதாம்.
‘மறப்பறியேன்’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.”
குறள் – ௲௱௨௰௬ (அச்சில் உள்ளவாறு).
“கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்
நுண்ணியரெங் காத லவர்.”
பருவரார் = வருந்தார்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கண்களுக்குள்ளே போகார் கண்களிலே இருப்பார். கண்கள் இமைப்பதால் வருந்தார். அத்துணை நுண்மையானவர் எமது காதலர்” என்பதாம்.
‘உள்ளின்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘கண்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘போகார்’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
இமைப்பின், பருவரார் என்பன வேறுவேறு வினைமுதல்களின் வினைகளாதலால் புணரா.
‘நுண்ணியர்’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எங் காத லவர்.”
குறள் – ௲௱௨௰௭ (அச்சில் உள்ளவாறு).
“கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு
மெழுதேங் கரப்பாக் கறிந்து.”
கண்ணுமெழுதேம் = கண்ணுக்கு மையும் தீட்டேம்.
கரப்பாக்கு = மறையுமென.
“கண்ணுள்ளார் காதலவராக கரப்பாக்கறிந்து மையும் எழுதேம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எம்காதலர் எப்போதும் கண்ணில் உள்ளார். கண்ணுக்கு மைதீட்டினால் காதலர் மறைவதை அறிந்து மையும் தீட்டோம்” என்பதாம்.
‘காதலவராக’ என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் ‘காதலவர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கண்ணும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘எழுதேம்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கண்ணுளார் காத லவராக கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.”
குறள் – ௲௱௨௰௳௮ (அச்சில் உள்ளவாறு).
“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட
லஞ்சுதும் வேபாக் கறிந்து.”
வெய்துண்டல் = வெம்மையாக உண்ணல்,
சூடாக உண்ணல்.
வேபாக்கு = சுடுமென.
“காதலவர் நெஞ்சத்தாராக வேபாக்கறிந்து வெய்துண்டல் அஞ்சுதும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“காதலர் நெஞ்சிலிருப்பதால் உணவின் சூடு அவரை துன்புறுத்துவதை அறிந்து சூடாக உண்டலை/ உண்ணவும் அஞ்சுவோம்” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௲௱௨௰௯ (அச்சில் உள்ளவாறு).
“இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே
யேதில ரென்னுமிவ் வூர்.”
கரப்பாக்கு = மறையுமென.
அறிவல் = அறிவேன்.
அனைத்திற்கே = அவ்வளவிற்கே.
ஏதிலர் = அயலார், அன்பிலார்.
ஊர் = ஊரார்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இமைப்பின் கண்ணுள்ள காதலர் மறைதலை அறிந்து இமையேன். இமையாததால் இவளுக்கு துயிலா நோய்தந்தார் அன்பிலரென ஊரார் சொல்வர்” என்பதாம்.
இது நிகழ இது நிகழும் என்னும் பொருள்படவரும் செயினென்னும் வாய்பாட்டு எதிர்காலவினையெச்சமான ‘இமைப்பின்’ என்பது புணராது தனித்துநின்று தனது காரணப்பொருளை வெளிப்படுத்தும். மேலும் இமைத்தலும், கரபாக்கும் வேறுவேறு வினைமுதல்களின் வினைகளாதலால் புணரா.
‘அறிவல்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அனைத்திற்கே’ என்பது அறுதியிடும் தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
‘ஏதிலர்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘என்னும்’ என்பது செய்யுமென்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. மேலும் இவ்வினைமுற்று ‘ஏதிலர்’ என்னும் பெயருடன் புணர்ந்தால் விளக்கயிடைச்சொல்லாய் மயங்கும்.
‘இவ்வூர்’ என்னும் சுட்டுச்சொல் புணராது தனித்துநின்று சுட்டினை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“இமைப்பின் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.”
குறள் – ௲௱௩௰ (அச்சில் உள்ளவாறு).
“உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ
ரேதில ரென்னுமிவ் வூர்.”
உவந்து = விரும்பி.
உறைவர் = வாழ்வார், தங்குவார்.
என்றும் = எப்பொழுதும். இகந்துறைவர் = நீங்கி இருப்பார்.
ஏதிலர் = அன்பிலார், அயலர்.
என்னும் = எனச்சொல்வர்.
இவ்வூர் = இவ்வூரார்.
“என்றும் உள்ளத்து உவந்து உறைவர். இகந்து உறைவர் ஏதிலார் என்னும் இவ்வூர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எப்பொழுதும் என்னுள்ளத்தில் காதலர் விரும்பி வாழ்கின்றார். அவர் அன்பிலாது என்னை நீங்கினாரென இவ்வூரார் சொல்வர்” என்பதாம்.
‘உறைவர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘என்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘ஏதிலர்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘என்னும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மை வடிவம் —
“உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.”
தொகுத்தெழுதியவர்; முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.



