இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௮௰௨. தீநட்பு.

குறள் – ௮௱௰௧ (அச்சில் உள்ளவாறு).

“பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்ற லினிது.”

பருகுவார் = உட்கொள்வார்.
கேண்மை = நட்பு.
குன்றல் = குறைதல், தேய்தல்.
இனிது = நன்று.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“விருப்பத்தால் நம்மை முழுவதும் உட்கொள்வார் போலினும் பண்பிலாரது நட்பு வளர்தலில் தேய்தல் நன்று” என்பதாம்.

‘பெருகலில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பெருகல்’ என்னும் தொழிற்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலில் குன்ற லினிது.”

 

குறள் – ௮௱௰௨ (அச்சில் உள்ளவாறு).

“உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை
பெறினு மிழப்பினு மென்.”

உறின் = பயன்பெறின்.
நட்டு = நட்பாகி.
அறின் = பயன்பெறாவிடின்.
ஒரூஉம் = நீங்கும்.
ஒப்பிலார் = பொருந்தார்.
கேண்மை = நட்பு.
பெறினும் = பெற்றாலும்.
என் = யாது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“பயன்பெறின் நட்பாகி பயன்பெறாவிடின் நீங்கும் பொருந்தாரது நட்பினைப்பெற்றாலும் இழந்தாலும் யாது பயன்” என்பதாம்.

உறினட்டு, அறினொரூஉம் ஆகிய இரண்டும் எதிர்மறைப்பொருள் கொண்டன. எனவே இவை புணராது தனித்துநின்று தத்தம்பொருளை உணர்த்தும்.

‘ஒரூஉம் ஒப்பிலார்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர்.
பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

எண்ணும்மைகள் தம்முள் பொருள்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணராது. இறுதிவும்மையான ‘இழப்பினும்’ என்பது புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“உறினட்டு* அறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினு மிழப்பினும் என்.”

*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௮௱௰௩ (அச்சில் உள்ளவாறு).

“உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது கொள்வாருங் கள்வரு நேர்.”

உறுவது = அடைவது.
சீர்தூக்கும் = அளந்து பார்க்கும், எதிர்பார்க்கும்.
நட்பும் = நண்பரும்.
நேர் = ஒப்பு.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“அடையும் பயன்களை அளந்து பார்க்கும் நண்பரும், கொடுப்பவரைக்கருதாது பெறுவதைக்கருதுவாரும், கொள்ளையிடும் கள்வரும் தந்நலம் கருதலில் ஒப்பானவர்” என்பதாம்.

‘சீர்தூக்கும் நட்பும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘கொள்வாருங்’ என்னுஞ்சொல்லின் ஙகரமெய்யீற்றை ஒலித்து ‘கொள்வாரும்’ எனவுணர இயலாது. புணர்ச்சியை நீக்கி பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா.

‘கள்வரு நேர்’ என்பது பொருளற்ற புணர்ச்சி. புணர்ச்சியில் நீங்கிய மகரமெய் தோன்றினாலொழிய ‘கள்வரும்’ என்னும் இனத்தை உணரவியலாது. புணர்ச்சியை நீக்கி பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா.

செம்மைவடிவம் —
“உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.”

 

குறள் – ௮௱௰௪ (அச்சில் உள்ளவாறு).

“அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
தமரிற் றனிமை தலை.”

அமரகத்து = போர்க்களத்து.
ஆற்றறுக்கும் = பின்வாங்கும்.
கல்லா மா = பயிற்சியில்லாக்குதிரை.
அன்னார் = போன்றார்.
தமரின் = நட்பின்.
தலை = மேலானது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“போர்க்களத்தில் பின்வாங்கும் பயிற்சியில்லாக்குதிரையை போன்றாரது நட்பினைவிட தனிமை மேலானது” என்பதாம்.

‘அமரகத்து’ என்பதன்கண் வந்த ‘அகத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அமர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஆற்றறுக்கும் கல்லாமா’ என்பதன்கண் ‘ஆற்றறுக்கும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். முடிக்குஞ்சொல்லான கல்லாமா என்பது இயல்புப்பொருள்தரும் ஈறுகெட்டயெதிர்மறைப்பெயர்ச்சொல். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘அன்னார்’ என்பது உவமப்பொருளில் வந்த சுட்டுப்பெயர்ச்சொல் ‘தமரின்’ என்பதுடன் புணர்ந்து ‘அன்னார்தமரின்’ தொகைச்சொல்லாகும். இது அன்னாரது நபரின் (போன்றாரது நட்பின்) எனவிரியும். தழுவுஞ்சொற்களே புணரும்.

‘தமரின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘தமர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“அமரகத்து* ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௮௱௰௫ (அச்சில் உள்ளவாறு).

“செய்தேமஞ் சாராச் சிறியோர் புன்கேண்மை
யெய்தலி னெய்தாமை நன்று.”

செய்து = நட்புசெய்தும் (சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது).
ஏமம் = காவல், காப்பு.
சாரா = செய்யா.
புன்கேண்மை = இழிநட்பு.
எய்தலின் = அடைதலின்.
எய்தாமை = அடையாமை.
நன்று = நன்மை.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“நட்புசெய்தும் காவல் செய்யாச்சிறியோரது இழிநட்பினை அடைதலின் அடையாமை நன்மை” என்பதாம்.

நட்புசெய்தலும், ஏமஞ்சாராமையும் இருவேறு வினைமுதல்களின் வினைகள். இருவேறு வினைமுதல்களின் வினைகள் புணரா.

‘எய்தலின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘எய்தல்’ என்னும் தொழிற்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“செய்து*ஏமஞ் சாராச் சிறியோர் புன்கேண்மை
யெய்தலின் எய்தாமை நன்று.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௮௱௰௬ (அச்சில் உள்ளவாறு).

“பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா
ரேதின்மை கோடி யுறும்.”

பேதை = அறிவிலி.
பெருங்கெழீஇ நட்பின் = மிகுந்த நட்பு, நெருங்கிய நட்பு.
ஏதின்மை = பகைமை.
கோடி = அளவிறந்த, மிக்க.
உறும் = நன்மைதரும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“அறிவிலியினது நெருங்கிய நட்பினைவிட அறிவுடையாரது பகைமை அளவிறந்த நன்மைதரும்”
என்பதாம்.

‘நட்பின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நட்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையா
ரேதின்மை கோடி யுறும்.”

 

குறள் – ௮௱௰௭ (அச்சில் உள்ளவாறு).

“நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்
பத்தடுத்த கோடி யுறும்.”

நகை = ஏளனம்.
பத்தடுத்த = பதின்மடங்கு.
உறும் = நன்மைதரும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“பிறரால் எள்ளப்படும் நட்பினைவிட பகைவரால் பதின்மடங்கு கோடி நன்மை வரும்” என்பதாம்.

‘நட்பின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நட்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘பகைவரால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘பகைவர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்.”

 

குறள் – ௮௱௰௮ (அச்சில் உள்ளவாறு).

“ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.”

ஒல்லும் = இயலும், செய்யும்.
கருமம் = வினை, செயல்.
உடற்றுபவர் = கெடுப்பவர்.
கேண்மை = நட்பு.
சொல்லாடார் = உறவாடார்.
சோரவிடல் = கைவிடுக, தவிர்க்க.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“செய்யும் வினையை கெடுப்பவரது நட்பினை உறவாடார்; கைவிடுக” என்பதாம்.

‘ஒல்லும் கருமம்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.”

 

குறள் – ௮௱௰௯ (அச்சில் உள்ளவாறு).

“கனவினு மின்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.”

இன்னாது = துன்பந்தரும்.
மன்னோ = அசைச்சொல்.
வினை = செயல்.
வேறு = மாறுபாடு.
தொடர்பு = உறவு (நட்பு).

“வினைவேறு
சொல்வேறுபட்டார்தொடர்பு கனவினும் இன்னாது மன்னோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“செயலும் சொல்லும் வேறுபட்டாரது தொடர்பு கனவிலும் துன்பந்தருமன்றோ” என்பதாம்.

‘கனவினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.”

குறள் – ௮௱௨௰ (அச்சில் உள்ளவாறு).

“எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.”

எனைத்தும் = முழுதும்.
குறுகுதல் = நீக்குக.
ஓம்பல் = காக்க.
மனைக்கெழீஇ = மனையின்கண் நட்பு.
மன்று = அரங்கு, பொதுவெளி.

“மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார்தொடர்பு எனைத்துங்குறுகுதல் ஓம்பல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மனையின்கண் நட்பாகி பொதுவெளியில் பழிப்பாரது தொடர்பினை முழுதும் நீக்கி காத்துக்கொள்க” என்பதாம்.

‘எனைத்தும்’ என்பது முற்றும்மை . முற்றும்மை எதனுடனும் புணராது.

‘ஓம்பல்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘மன்றில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘மன்று’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“எனைத்தும் குறுகுத லோம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.”

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button