இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

காமத்துப்பால். இயல் — கற்பியல். தலைப்பு - ௱௨௰௫. நெஞ்சொடு கிளத்தல். ஆற்றாமை மீதூர தலைமகள் தன்னெஞ்சொடு பேசுதல்.

குறள் – ௲௨௱௪௧ (அச்சில் உள்ளவாறு).

“நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்று
மெவ்வநோய் தீர்க்கு மருந்து.”

எனைத்தொன்றும் = யாதொன்றும்.
எவ்வநோய் = தீராநோய், நீங்காத்துன்பம் (கணவனைப்பிரிந்திருத்தல்).
தீர்க்கும் = நீக்கும், போக்கும்.

“எவ்வநோய் தீர்க்கும் மருந்து எனைத்தொன்றும் நெஞ்சே நினைத்தொன்று சொல்லாயோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பிரிவினால் யானுற்ற இந்நீங்காத்துன்பத்தை நீக்கும் மருந்து யாதானுமொன்றை நெஞ்சே நீ கண்டறிந்து சொல்லாயோ” என்பதாம்.

‘நெஞ்சே’ என்னும் விளிச்சொல் புணரின் விளிப்பொருட்செறிவு குன்றுவதால் புணராது. மேலும் விளியையடுத்து விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடம் புணராது.

‘எனைத்தொன்றும்’ என்னும் முற்றும்மைச்சொல் புணரின் முற்றும்மைபொருட்செறிவு குன்றும். முற்றும்மை எதனுடனும் புணராது.

‘தீர்க்கும் மருந்து’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.”

 

குறள் – ௲௨௱௪௨ (அச்சில் உள்ளவாறு).

“காத லவரில ராகநீ நோவது
பேதைமை வாழியென் னெஞ்சு.”

அவர் = அன்பர் (கணவர்).
காதல் = அன்பு.
இலராக = இல்லாதபோது.
நீ = ஈண்டு நெஞ்சைக்குறித்தது.
நோவது = வருந்துவது.
பேதைமை = மடமை, அறிவின்மை.
வாழி = வாழ்ந்து போ. இக்குறிப்பு வைதல் பொருட்டு.

“அவர் காதல் இலராக நீ நோவது பேதைமை வாழி என்னெஞ்சு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அன்பர் அன்புசெய்தல் இலராக நீ வருந்துவது அறிவின்மை. எனது நெஞ்சே வாழ்ந்து போ” என்பதாம்.

‘காதலவர்’ என்பதன்கண் வந்த ‘அவர்’ என்னும் சுட்டுப்பெயர் எழுவாயாம். எழுவாய் எதனுடனும் புணராது. வருமொழியாகவும் புணராது.

‘வாழி’ என்பது வியங்கோள்வினனைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“காதல் அவர்இல ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் னெஞ்சு.”

 

குறள் – ௲௨௱௪௩ (அச்சில் உள்ளவாறு).

இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்க ணில்.”

உள்ளி = நினைத்து.
பரிதல் = வருந்தல்.
பரிந்துள்ளல் = இரங்கி நினைத்தல்.
பைதனோய் = துன்பநோய்.
செய்தார்கண் = தந்தாரிடத்து.
இல் = இல்லை.

“நெஞ்சே இருந்துள்ளி பரிதல் என் பைதனோய்செய்தார்கண் பரிந்துள்ளல் இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நெஞ்சே நீ என்னுடனிருந்து நினைந்து வருந்தல் ஏன்.
இத்துன்பநோயை தந்தார் என்மாட்டு இரங்கி நினைத்தல் இல்லை” என்பதாம்.

‘உள்ளி’ என்னும் வினையெச்சம் ‘என்’ என்ற வினாப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘பரிதனெஞ்சே’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. இவ்வகையான நெஞ்சு எதுவுமில்லை. இருசொல்லும் கொண்டுகூட்டில் வேறோரிடஞ்செல்லும். இதற்கு ஏதுவாக புணராமலிருத்தல் செம்மை.

‘செய்தார்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘செய்தார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்கண் இல்.”

 

குறள் – ௲௨௱௪௪ (அச்சில் உள்ளவாறு).

“கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
தின்னு மவர்க்காண லுற்று.”

கண்ணும் கொள = கண்களையும் உடன்கொண்டு.
சேறி = செல், சென்றடை.
இவை = இக்கண்கள்.
தின்னும் = உண்ணும்.
அவர் = கணவர்.
காணலுற்று = காண விரும்பி.

“நெஞ்சே கண்ணும் கொளச்சேறி இவை அவர்காணலுற்று என்னைத்தின்னும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நெஞ்சே கணவரைக்காண செல்வதாயின் இக்கண்களையும் உடன்கொண்டு செல்க. இக்கண்கள் அவரைக்காட்டுமாறு என்னைத்தின்னும்” என்பதாம்.

‘கண்ணும்’ என்பது எதிரது தழீஇய எச்சவும்மைச்சொல் புண்ணின் எச்சவும்மைப்பொருட்செறிவு குன்றும். எச்சவும்மை எதனுடனும் புணராது.

‘நெஞ்சே’ என்னும் விளிச்சொல் புணரின் விளிப்பொருட்செறிவு குன்றும். மேலும் விளியையடுத்து விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடம் புணராது.

‘தின்னும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘அவரைக்காணலுற்று’ எனவிரியும் ‘அவர்காணலுற்று’ என்னும் இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும்; ஒற்றுமிகாது. இடைவெளிநீக்கமும் ஒருசொன்னீர்மையும் தொகையாற்றலை உணர்த்தும்.

‘இவை’ என்னும் சுட்டுப்பெயர் எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத்
தின்னும் அவர்காண லுற்று.”

 

குறள் – ௲௨௱௪௫ (அச்சில் உள்ளவாறு).

“செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா
முற்றா லுறாஅ தவர்.”

செற்றார் = வெறுத்தார்.
கைவிடல் = நீக்குதல்.
உற்றால் ‌= விரும்பினால்.
உறாஅதவர் → உறாதவர் = விரும்பாதவர்.

“யாம் உற்றால் உறாஅதவர்செற்றாரென கைவிடல் உண்டோ நெஞ்சே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“யாம் விரும்பி எம்மை விரும்பாதவரை வெறுத்தவரென நீங்குதல் உண்டோ நெஞ்சே” என்பதாம்.

‘என’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘செற்றார்’ என்னும் பெயருடன் கூடி விளக்கி அதன்முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘யாம்’ என்னும் எழுவாயாம் மறுபெயர்ச்சொல் ‘உற்றால்’ என்னும் வினையெச்சத்துடன் புணராது. எழுவாய் எதனுடனும் புணராது.

‘உற்றால்’ என்பது மனையாளின் வினை. ‘உறாதவர்’ என்பது கணவனின் வினை. இருவேறு வினைமுதல்களின் வினைகள் புணரா.

செம்மைவடிவம் —
“செற்றா ரெனகை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.”

 

குறள் – ௲௨௱௬ (அச்சில் உள்ளவாறு).

“கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு.”

கலந்து உணர்த்தும் = ஒன்றுகூடி அன்பினை உணர்த்தும்.
புலந்துணராய் = ஊட அறியாய், பிணங்க அறியாய்.
காய்வு = கடிதல்.
காய்தி = வெகுளுதல்.‌

“நெஞ்சே கலந்துணர்த்தும் காதலர்கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தி என்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நெஞ்சே பிணக்குநீக்கி கூடி அன்புசெய்யும் காதலரைக்கண்டால் ஊடி பின் கூட உணராய். அவ்வாறிருக்க பொய்வெறுப்பைக்காட்டி வெகுள்வது ஏன்” என்பதாம்.

‘உணர்த்தும் காதலர்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘காதலர்கண்டால்’ என்னும் இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும்; ஒற்றுமிகாது. இடைவெளி நீக்கமும் ஒருசொன்னீர்மையும் தொகையை உணர்த்தும்.

கண்டால், புலந்து என்னும் இருவேறு வினைகள் தம்முள் புணராது தனித்துநின்று தத்தம் வினையை உணர்த்தும்.

‘காய்தி’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கலந்துணர்த்தும் காதலர் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.”

 

குறள் – ௲௨௱௪௭ (அச்சில் உள்ளவாறு).

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.”

காமம்விடு = காதலை நீங்கு .
ஒன்றோ = அல்லது, இரண்டிலொன்று.
நாண்விடு = நாணத்தை நீங்கு.
பொறேன் = ஆற்றேன், தாங்கேன்.

“நன்னெஞ்சே காமம்விடு ஒன்றோ நாண்விடு யானோ இவ்விரண்டு(ம்) பொறேன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. முற்றும்மை தொக்குநின்றது.

“நன்னெஞ்சே காதலை விடு அல்லது நாணத்தை விடு. யானோ இவ்விரண்டையும் தாங்கும் ஆற்றல் இல்லாதவள்” என்பதாம்.

‘விடு’, ‘பொறேன்’ என்பன வினைமுற்றுகள். வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.”

 

குறள் – ௲௨௱௪௮ (அச்சில் உள்ளவாறு).

“பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் னெஞ்சு.”

பரிந்து = இரங்கி.
அவர் = கணவர்.
நல்காரென்று = அன்புசெய்யாரென்று.
ஏங்கி = தவித்து.
பிரிந்தவர் = பிரிந்து சென்றவர்.
பின் = பின்னால்.
பேதை = அறிவிலி.

“பேதை(யாம்) என்னெஞ்செ அவர் பரிந்து நல்காரென்று ஏங்கி பிரிந்தவர்பின் செல்வாய்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. விளி தொக்குநின்றது.

“அறிவில்லா எனது நெஞ்சு அவர் தாமே இரங்கி அன்புசெய்யாரென்று ஏங்கி பிரிந்தவர்பின் செல்கின்றது” என்பதாம்.

‘பரிந்தவர்’ என்பது பொருண்மயங்குபுணர்ச்சி. இதன்கண் வந்த ‘அவர்’ என்பது எழுவாயாம் சுட்டுப்பெயர். எழுவாய் வருமொழியாகி புணராது.

‘என்று’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘நல்கார்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஏங்கி’ என்னும் வினையெச்சம் ‘பிரிந்தவர்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘பேதை’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பரிந்து*அவர் நல்காரென்று* ஏங்கி பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் னெஞ்சு.”

*குற்றியலுகரங்களாகிய துகரமும் றுகரமும் அலகுபெறா

குறள் – ௲௨௱௪௯ (அச்சில் உள்ளவாறு).

“உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு.”

உள்ளத்தார் = நெஞ்சத்தார்.
காதலவர் = அன்பர்
உள்ளி = நினைத்து ‌.
யாருழை = யாரிடம்.
சேறி = செல்கிறாய்.

“காதலவர் உள்ளத்தவராக உள்ளி என்னெஞ்சு நீ ‌யாருழை சேறி ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“எம்மிடம் அன்புசெய்வார் நெஞ்சிலே குடியிருப்பவராக நெஞ்சே யாரை நினைத்து புறத்தே தேடிச்செல்கிறாய்” என்பதாம்.

‘காதலவராக’ என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் ‘காதலவர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘உழை’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘யார்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘சேறி’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழை சேறிஎன் னெஞ்சு.”

 

குறள் – ௲௨௱௫௰ (அச்சில் உள்ளவாறு).

“துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
வின்னு மிழத்துங் கவின்.”

துன்னா = கலவாது, பொருந்தாது. துறந்தாரை = நீங்கியாரை. உடையேமா = உடையேமாக என்பதன் கடைக்குறை.
இன்னும் = மேலும்.
இழத்தும் = இழப்போம்.
கவின் = அழகு, வனப்பு.

“துன்னாத்துறந்தாரை நெஞ்சத்து உடையேமா(க) இன்னும் கவின் இழத்தும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கலவாது நீங்கியாரை நெஞ்சத்து உடையேமாக முன்னர் இழந்த புறக்கவினேயன்றி அகக்கவினும் இழப்போம்” என்பதாம்.

‘நெஞ்சத்து’ என்பதன்கண் வந்த ‘அத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நெஞ்சு’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘உடையேமா’ என்பதன்கண் கடையெழுத்து குறைந்து நின்ற ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் ‘உடையேம்’ என்னும் வினைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘இன்னும்’ என்னும் எதிரது தழீஇய எச்சவும்மைச்சொல் புணரின் எச்சவும்மைப்பொருட்செறிவு குன்றும். எச்சவும்மை எதனுடனும் புணராது

‘இழத்தும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து* உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button