இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

காமத்துப்பால். இயல் — கற்பியல். தலைப்பு - ௱௨௰௮. குறிப்பறிவுறுத்தல். பிரிந்த தலைவன் திரும்பிவந்தவிடத்து தலைமகன், தலைமகள், தோழி ஆகியோர் ஒருவர்குறிப்பை ஒருவர்க்கு சொல்லுதல். இது பிரிந்துபோன தலைமகன் வந்து கூடியபின் நிகழ்வது.

குறள் – ௲௨௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு).

“கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க
ணுரைக்க லுறுவதொன் றுண்டு.”

கரப்பினும் = மறைப்பினும்.
கையிகந்து = உறுதியிழந்தே, கட்டுப்பாட்டைக்கடந்து.
ஒல்லா(து) = உடன்படா(து).
நின்னுண்கண் = நினது மைதீட்டிய விழிகள்.
உரைக்கலுறுவது = உரைக்க விரும்புவது.
ஒன்று = ஒருகருத்து.
உண்டு= உள்ளது.

இது தலைமகன்கூற்று.
“கரப்பினும் ஒல்லா(து) கையிகந்து நின்னுண்கண் உரைக்கலுருவது ஒன்றுண்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அன்பே நீ மறைத்தாலும் அதற்கு உடன்படாது கட்டுப்பாட்டைக்கடந்து உனது மைதீட்டிய விழிகள் சொல்லவிரும்பும் கருத்து ஒன்றுள்ளது. அதனைக்கூறுக” என்பதாம்.

‘கரப்பினும்’ என்னும் வினையெச்சம் ‘கை (கட்டுப்பாடு)’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘உண்கண்’ என்பது எழுவாயாகும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.

‘உறுவது’ என்னும் வினையெச்சம் ‘ஒன்று’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.‌

செம்மைவடிவம் —
“கரப்பினும் கையிகந் தொல்லாநின் னுண்கண்
உரைக்க லுறுவது*ஒன் றுண்டு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௨௱௭௰௨ (அச்சில் உள்ளவாறு).

“கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது.”

நிறைந்த = நிறைவான.
காரிகை = அழகு.
காம்பு = மூங்கில்.
ஏர் = ஒத்த.
பேதைக்கு = பெண்ணுக்கு.
பெண்ணிறைந்த நீர்மை = பெண்மையின் நிறைவான இயல்புகள் (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு).
பெரிது = மிகுந்தது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

இது தலைமகன்கூற்று.
“கண்களுக்கு நிறைவான அழகும் மூங்கிலை ஒத்த தோள்களும் கொண்ட இப்பெண்ணிற்கு பெண்மையின் நிறைவான இயல்புகள் மிகுந்துள்ளன” என்பதாம்.

‘காரிகைகாம்பேர்தோள்‌’ என்பது உம்மைத்தோகை. இது ‘காரிகையும் மூங்கிலொத்ததோளும்’ எனவிரியும். உம்மைத்தொகையில் ஒற்று மிகாது. இடைவெளிநீக்கமும் ஒருசொன்னீர்மையும் தொகையை உணர்த்தும்.

‘பேதைக்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினைசாராது இயல்புப்பொருள்தரும் ‘பெண்’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“கண்ணிறைந்த காரிகை காம்பேர்தோட் பேதைக்கு
பெண்ணிறைந்த நீர்மை பெரிது.”

 

குறள் – ௲௨௱௭௰௩ (அச்சில் உள்ளவாறு).

“மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை
யணியிற் றிகழ்வதொன் றுண்டு.”

மணியில் = மணிமாலையில்.
திகழ்தரும் = தெரியும், தோன்றுகின்ற.
மடந்தை = பெண் (தலைமகள்).
அணியில் = அணிகலனில்.‌
திகழ்வது = தெரிவது, தோன்றுவது.
ஒன்றுண்டு = ஒருகருத்து உள்ளது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

இது தலைமகன்கூற்று. “மணிமாலையில் தெரியும் நூல் போல தலைமகள் அணிந்த அணிகலன்களில் தோன்றும் கருத்து ஒன்றுண்டு. கழலும் வளையல்கள் மடந்தைமெலிவைக்காட்டுகின்றன” என்பதாம்.

மணியில், அணியில் ஆகியவற்றின்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு மணி, அணி என்னும் பெயர்களுடன் புணர்ந்து அவைகளது பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘தரும் நூல்’ என்பது செய்யுமென்னும் வாய்ப்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘போல்’ என்னும் உவமவுருபு நூல் என்னும் பெயரைச்சார்ந்து உவமைப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘திகழ்வது’ என்னும் வினையெச்சம் ‘ஒன்று’ என்னும் எண்ணுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“மணியில் திகழ்தரும் நூல்போல் மடந்தை
யணியில் திகழ்வது*ஒன் றுண்டு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௨௱௭௰௪ (அச்சில் உள்ளவாறு).

“முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு.”

முகைமொக்குள் = மலர்மொட்டினுள்.
நாற்றம் = நறுமணம்.
பேதை = பெண் (தலைமகள்).
நகைமொக்குள் = முறுவலுள், புன்னகையுள்.
ஒன்றுண்டு = ஒருகருத்து உண்டு.

இது தலைமகன்கூற்று. “முகைமொக்குள் நாற்றம் உள்ளதுபோல் பேதைநகைமொக்குள் உள்ளது ஒன்றுண்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மலர்மொட்டினுள் நறுமணம் மறைந்திருப்பதுபோல் தலைமகளது முறுவலுள் மறைந்திருக்கும் கருத்து ஒன்றுண்டு. ஒன்றென்பது தலைமகளது புணர்ச்சி மகிழ்தல்” என்பதாம்.

முகைமொக்குள், நகைமொக்குள் என்பனவற்றின்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘முகைமொக்கு’, ‘நகைமொக்கு’ என்னும் பெயர்களுடன் புணர்ந்து அவைகளது பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘போல்’ என்னும் உவமவுருபு ‘நாற்றம்’ என்னும் பெயரைச்சார்ந்துநின்று ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

ஈரிடத்தும் வந்த ‘உள்ளது’ என்பது முற்றெச்சம். முற்றெச்சம் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளது*ஒன் றுண்டு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௨௱௭௰௫ (அச்சில் உள்ளவாறு).

“செறிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர்
தீர்க்கு மருந்தொன் றுடைத்து.”

செறிதொடி = கைகளை நெருக்கிப்பிடித்த வளையல்கள்.
செய்து இறந்த = செய்து முடித்த (கழன்று).
கள்ளம் = மறைசெய்தி.
உறுதுயர் (வினைத்தொகை) = உற்ற துன்பம்.
தீர்க்கும் = நீக்கும், போக்கும்.
ஒன்றுடைத்து = ஒன்றனை உடையது.‌

“கைகளுக்கு நெருக்கிப்பிடித்த வளையல்கள் கழன்றதால் வெளிப்பட்ட செய்தியென்பது உற்ற துன்பத்தைப்போக்கும் மருந்து ஒன்றுண்டு” என்பதாம். மறைசெய்தியாவது தலைமகளைப்புணர்ந்து வாட்டம் நீங்க வளையல்கள் மீண்டும் கைகளை நெருக்கிப்பிடிக்குமென்பதாம். நோயும் அவளே. நோய்க்கு மருந்தும் அவளே என்பதுபோல் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தியதும் அது நீங்கியதை வெளிப்படுத்துவதும் வளையல்களே என்பதாம்.

‘இறந்த’ என்னும் வினையெச்சம் ‘கள்ளம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கள்ளம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘தீர்க்கும் மருந்து’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘மருந்து’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்து*ஒன் றுடைத்து.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௨௱௭௰௬ (அச்சில் உள்ளவாறு).

“பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
யன்பின்மை சூழ்வ துடைத்து.”

பெரிதாற்றி = மிக்க துயரைத்தீர்த்து.
பெட்ப = விரும்புமாறு.
கலத்தல் = கூடியிருத்தல்.
அரிதாற்றி = செயற்கரிய செய்தபின்.
அன்பின்மை சூழ்வது = (பிரிவால்) அன்பின்மை நிகழ்வது.
உடைத்து = உடையது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

இது தலைமகள்கூற்று.
“மிக்க துயரைத்தீர்த்து விரும்புமாறு கூடியிருத்தல் செயற்கரிய செய்தபின் அன்பின்மைக்குரிய பிரிவினை நிகழ்துவதன்பொருட்டு” என்பதாம்.

‘பெட்ப’ என்னும் வினையெச்சம் ‘கலத்தல்’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கலத்தல்’ என்னும் தொழிற்பெயர் ‘அரிது’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணராது.

‘ஆற்றி’ என்னும் வினையெச்சம் ‘அன்பின்மை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“பெரிதாற்றிப் பெட்ப கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.”

 

குறள் – ௲௨௱௭௰௭ (அச்சில் உள்ளவாறு).

“தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு ‌
முன்ன முணர்ந்த வளை.”

தண்ணம் = குளிர்ந்த. அன்புடைய என்னும் பொருளது.
துறைவன் = தலைவன்.
தணந்தமை = பிரிந்தமை.
முன்னம் = முன்பே.
உணர்ந்த = அறிந்தன.
வளை = வளையல்

“தண்ணந்துறைவன் தணந்தமை நம்மினும் ‌முன்னம் வளை உணர்ந்த” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

இது தலைவியின் கூற்று.
“அன்புடைய தலைவன் நம்மை மெய்யால் (உடம்பால்) கூடியிருந்தே மனத்தால் பிரிந்ததை நமக்கு முன்பே இவ்வளையல்கள் உணர்ந்தன” என்பதாம்.

‘தண்ணந்துறைவன்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

‘நம்மினும்’ என்னும் உயர்வுச்சிறப்பும்மை புணரின் சிறப்பும்மைச்செறிவு குன்றும். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘முன்னம்’ என்னும் இயல்புப்பொருள்தரும் காலப்பெயர்ச்சொல் ‘உணர்ந்த’ என்னும் வினைமுற்றுடன் புணராது.
இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.”

 

குறள் – ௲௨௱௭௰௮ (அச்சில் உள்ளவாறு).

“நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு
மெழுநாளே மேனி பசந்து.”

நெருநற்று = நேற்றுத்தான்.
காதலர் = அன்பர் (கணவர்).
எழுநாளேம் = எழுநாள்களானோம்.
பசந்து = பசலையுற்று.

இது தலைமகள் கூற்று.
“எங்காதலர் நெருநற்றுச்சென்றார் யாமும் மேனி பசந்து எழுநாளேம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“எனது அன்பர் நேற்று சென்றார். அப்பிரிவிற்கு எம்முடைய உடம்பும் பசலையுற்று எழுநாளானது. இப்பிரிவினையை எழுநாள்களுக்கு முன்பே ஐயுற்றதனால் அன்றே மேனி பசந்தது” என்பதாம்

‘யாமும்’ என்னும் தெரிநிலைவும்மைச்சொல் புணரின் தெரிநிலைப்பொருட்செறிவு குன்றும். தெரிநிலைடவும்மை எதனுடனும் புணராது.

‘சென்றார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.‌

‘எழுநாளேம்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நெருநற்றுச் சென்றார்எங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.”

 

குறள் – ௲௨௱௭௰௯ (அச்சில் உள்ளவாறு).

“தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி
யஃதாண் டவள்செய் தது.”

தொடி = வளையல்.
அஃது = அது.
ஆண்டு = அப்போது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

கணவன் பிரியும்போது மனையாள் பிரிவின்கண் செய்த குறிப்பு.
“பிரிவினால் மென்மையான தோள்கள் மெலியுமானாதால் அதனை நோக்கினாள். மெலிந்த தோள்களால் கழலும் வளையல்களை நோக்கினாள். இவை நிகழாவண்ணம் தடுக்க வேண்டின் கணவனுடன் செல்லவேண்டுமென கால்களை நோக்கினாள். இங்ஙனம் தலைமகள் செய்தது உடன்போக்குக்கு உரியதாயிருந்தது” என்பதாம்.

‘நோக்கி’ என்னும் வினையெச்சம் ‘மென்மை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘மென்றோளும்’ என்பது எண்ணும்மைச்சொல். எண்ணும்மை எதனுடனும் புணராது.

‘நோக்கி’ என்னும் வினையெச்சம் ‘அடி (கால்கள்)’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘நோக்கி’ என்னும் வினையெச்சம் ‘அஃது’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘அஃதாண்டு’ என்பது பொருண்மயங்குபுணர்ச்சி. ‘அதனையாளுதல்’ என்னும் மயங்குபொருளைத்தருவதால் புணராது. ‘ஆண்டு’ என்பது அப்போது என்னும் பொருளது.

‘அவள்’ என்பது எழுவாயாம் மறுபெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி
அஃது*ஆண்டு* அவள்செய் தது.”

* குற்றியலுகரங்களாகிய துகரமும் டுகரமும் அலகுபெறா.

 

குறள் – ௲௨௱௮௰ (அச்சில் உள்ளவாறு).

“பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற்
காமநோய் சொல்லி யிரவு.”

இரவு = இரத்தல், வேண்டுதல்.
உடைத்து = (பெருமையை) அடைவது.‌
என்ப = என்பர்.

“கண்ணினால் காமநோய்சொல்லி இரவு பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கண்ணினால் காதல்நோயை தோழியர்க்கு உணர்த்தி அதனைத்தீர்க்குமாறு அவரை வேண்டாது உடன்போகுமாறு தன்கால்களை வேண்டுதல் பெண்ணினால் பெண்மை பெருமையடைவது என்பர்” என்பதாம்.

‘பெண்ணினால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்‘ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘பெண்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கண்ணினால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்‘ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘கண்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘சொல்லியிரவு’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. ‘இரவு’ என்பது ‘இரத்தல்’ என்னும் தொழிற்பெயராம். ‘சொல்லி‌’ என்னும் வினையெச்சம் ‘இரவு’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“பெண்ணினால் பெண்மை யுடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.”

தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button