
குறள் – ௲௯௱௧ (அச்சில் உள்ளவாறு).
“இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.”
நோக்கு = கருத்து தோன்ற காணுதல்.
இருநோக்கு = இருவகைநோக்கு.
உண்கண் = மைதீட்டிய கண்கள்.
நோய் = துன்பம்.
“இவளுண்கண் இருநோக்கு உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கு ஒன்று அந்நோய்மருந்து” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“இவளது மைதீட்டிய கண்களுள் இருவகைநோக்கு உள்ளன. ஒன்று நோய்தருவது; மற்றொன்று அந்நோய்க்கு மருந்து” என்பதாம்.
‘நோக்கு’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘உள்ளது’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஒன்று’ என்னும் இயல்புப்பொருள்தரும் எண்ணுப்பெயர் எதனுடனும் புணராது. மேலும் முன்சொன்ன கருத்துக்கு மறுகருத்து தொடங்குகிறது. கருத்துமாற்றம் நிகழுமிடங்கள் புணரா.
செம்மைவடிவம் —
“இருநோக்கு* இவளுண்கண் உள்ளது* ஒருநோக்கு
நோய்நோக்கு*ஒன்று* அந்நோய் மருந்து.”
*குற்றியலுகரங்களாகிய குகரமும் துகரமும் றுகரமும் அலகுபெறா.
குறள் – ௲௯௱௨ (அச்சில் உள்ளவாறு).
“கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.”
களவு = உள்ளங்கவர்தல்.
சிறுநோக்கம் = அருகிய நோக்கம். குறுநோக்கம்.
காமத்தின் = காதலின்.
செம்பாகம் = ஒத்த பாதியளவு.
அன்று = ஆகாது.
“உள்ளங்கவரும் இவளது கண்கள் மேற்கொள்ளும் குறுநோக்கம் காதலின் ஒத்த பாதியளவு ஆகாது; அதனினும் பெரிது” என்பதாம்.
‘கண்களவுகொள்ளுஞ்சிறுநோக்கம்’ என்பது பல்லடைபெற்ற நெடுந்தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘காமத்தில்’ என்பதன்கண் வந்த ’இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘காமம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாக மன்று பெரிது.”
குறள் – ௲௯௱௩ (அச்சில் உள்ளவாறு).
“நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்.”
இறைஞ்சினாள் = வேண்டினாள்.
யாப்பினுள் = அன்புப்பயிருக்கு. அட்டிய = வார்த்த.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“தலைவி நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள். அஃது அன்புப்பயிருக்கு அவள் வார்த்த நீர்” என்பதாம்.
‘நோக்கினாள்’, ‘இறைஞ்சினாள்’ ஆகியன வினைமுற்றுகள். வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அஃது’ என்பது நோக்கியதைக்குறிக்கும். ‘அவள்’ என்பது தலைவியைக்குறிக்கும். ‘அவள்’ என்பது எழுவாயாகும். எழுவாய் எதனுடனும் புணராது.
‘யாப்பினுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘யாப்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“நோக்கினாள் நோக்கி யிறைஞ்சினாள் அஃது*அவள்
யாப்பினுள் அட்டிய நீர்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௯௱௪ (அச்சில் உள்ளவாறு).
“யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற்
றானோக்கி மெல்ல நகும்.”
நோக்குங்காலை → நோக்குங்கால் = கருத்து தோன்றக்காணும்போது. ‘ஐ’ என்பது அசைநிலை.
நிலனோக்கும் = நிலத்தை நோக்குவாள்.
நோக்காக்கால் = (யான்) நோக்காதபோது.
நகும் = மகிழும், முறுவலிக்கும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“யான் அவளை நோக்கும்போது என்னை நோக்காது நிலத்தை நோக்குவாள். யான் அவளை நோக்காதபோது என்னை நோக்கி மெல்ல முறுவலிக்கும்” என்பதாம்.
‘யான்’ என்பது எழுவாயாம் மறுபெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
மூன்றாஞ்சீரில் வந்த ‘நோக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘நோக்காக்கால்’ என்னும் வினையெச்சம் ‘தான்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மை வடிவம் —
“யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”
குறள் – ௲௯௱௫ (அச்சில் உள்ளவாறு).
“குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.”
குறிக்கொண்டு = கருத்து தோன்ற.
சிறங்(க்)கணித்தல் = சுருங்குதல்.
சிறக்கணித்தாள் → சிறங்கணித்தாள் என்பதன் வலித்தல் விகாரம் = கண்களைச்சுருக்கிப்பார்த்தாள்.
நகும் = மகிழும், முறுவலிக்கும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கருத்து தோன்ற நோக்கவில்லையேயன்றி ஒருகண்ணினைச்சுருக்கிப்பார்த்தாள் போல முறுவலிப்பாள்” என்பதாம்.
‘அல்லால்’ என்னும் வினையெச்சம் ‘நோக்காமை’ என்னும் தொழிற்பெயருடன் உறவாகும். ‘ஒரு’ என்னும் எண்ணுப்பெயர்த்திரிபுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“குறிக்கொண்டு நோக்காமை யல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.”
குறள் – ௲௯௱௬ (அச்சில் உள்ளவாறு).
“உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ
லொல்லை யுணரப் படும்.”
உறாஅதவர் → உறாதவர் = நொதுமலர் போல, அறிமுகமற்றவர் போல.
செறாஅர்சொல் = வெறுக்காதார்ச்சொல்.
ஒல்லை = விரைந்து.
உணரப்படும் = அறியப்படும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“விருப்பு வெறுப்பில்லார் போல் சொன்னாலும் வெறுக்காதார்சொற்றன்மை விரைந்து உணரப்படும்” என்பதாம்.
‘போல்’ என்னும் உவமவுருபு ‘உறாதவர்’ என்னும் பெயரைச்சார்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘சொலினும்’ என்பது ‘சொல்லார்’ என்னும் பொருள்தரும் எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
‘செறார்சொல்லொல்லை’ என்னும் புணர்மொழி ‘செறாரது சொல் ஒல்லை’ எனவிரியும். ‘ஒல்லை’ என்னுஞ்சொல் புணர்வதற்கான காரணம் இல்லை. ‘ஒல்லை’ என்பது ‘உணரப்படும்’ என்னும் வினைமுற்றுடன் உறவாகும் வினையடை.
செம்மைவடிவம் —
“உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப் படும்.”
குறள் – ௲௯௱௭ (அச்சில் உள்ளவாறு).
“செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு
முறாஅர்போன் றுற்றார் குறிப்பு.”
செறாஅ → செறா = வெறுக்காத.
செற்றார் = வெறுத்தார்.
நோக்கும் = கருத்து தோன்றக்காணுதலும்.
உறாஅர்போல் = விரும்பார்போல்.
உற்றார் = விரும்புவார்.
குறிப்பு = மனக்கருத்து.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“வெறுப்பில்லாச்சிறுசொல்லும் வெறுத்தார்போல் நோக்குதலும் விரும்பாதாரைபோல் விரும்புவாரது மனக்கருத்து” என்பதாம்.
‘சிறுசொல்லும்’ என்பது பயனை நோக்கிய உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘போல்’ என்னும் உவமவுருபு ‘செற்றார்’ என்னும் பெயர்சார்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘செற்றார்போல் நோக்கும்’ என்னுமிடத்தில் ஒருகருத்து முடிந்து மறுகருத்து தொடங்குகிறது. கருத்துமாற்றம் நிகழுமிடங்கள் புணரா.
‘போன்று’ என்னும் உவமவுருபு ‘உறார்’ என்னும் பெயர்சார்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று* உற்றார் குறிப்பு.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௯௱௮ (அச்சில் உள்ளவாறு).
“அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப்
பசையினள் பைய நகும்.”
அசையியற்கு = மெல்லியளுக்கு.
உண்டு = உள்ளது.
ஆண்டு = அப்போது.
ஓரேஎர் ← (ஓர்+ஏர்) → ஓரேர் = அழகிய குறிப்பொன்று.
நோக்க = கருத்து தோன்ற காண.
பசையினள் = ஈரமுள்ளவள், அன்பினள்.
பைய = மெல்ல.
நகும் = முறுவலிக்கும், மகிழும்.
“யான் நோக்க பைய நகும் பசையினள் அசையியற்கு ஆண்டு ஓரேஎர் உண்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“யான் நோக்க மெல்ல நகும் அன்பினள் மெல்லியளாளின் அந்நகையில் அழகியதோர் மனக்கருத்து உண்டு” என்பதாம்.
‘உண்டு’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘யான்’ என்பது எழுவாயாம் மறுபெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
‘நோக்க’ என்னும் வினையெச்சத்துடன் ‘பசையினள்’ என்னும் வினையாலணையும்பெயர் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“அசையியற் குண்டு*ஆண்டோ ரேஎர்யான் நோக்க
பசையினள் பைய நகும்.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௯௱௯ (அச்சில் உள்ளவாறு).
“ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலர் கண்ணே யுள.”
ஏதிலார் = அயலார், முன்னறியாதார்.
பொதுநோக்கு = காரணங்கருதாது காணல்.
கண்ணே = இடத்து.
உள = உள்ளது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“முன்னறியாத அயலார் போல காரணங்கருதாது காணல் காதலரிடத்து உள்ளது” என்பதாம்.
‘போல’ என்னும் உவமவுருபு ‘ஏதிலார்’ என்னும் பெயர்சார்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கண்ணே’ என்பது அறுதியிடும் தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஏதிலார் போல பொதுநோக்கு நோக்குதல்
காதலர் கண்ணே உள.”
குறள் – ௲௱ (அச்சில் உள்ளவாறு).
“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க ளென்ன பயனு மில.”
கண்ணொடு = தலைவனின் கண்களொடு.
கண்ணிணை = இணையும் தலைவியின் கண்கள்.
நோக்கு = கருத்து தோன்றக்காணல்.
ஒக்கின் = ஒத்திருப்பின்.
வாய்ச்சொற்கள் = பேசும் சொற்கள்.
இல = இல்லை.
“காதலுக்குரிய இருவரது கண்களின் நோக்கம் ஒத்ததாயின் பேசும் சொற்களால் எப்பயனுமில்லை” என்பதாம்.
‘என்ன’ என்னும் வினாப்பெயர் வருமொழியாகி புணராது தனித்துநின்று வினாப்பொருளை உணர்த்தும்.
‘என்ன பயனும்’ என்பது முற்றும்மைத்தொடர். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




