இலக்கணம்தமிழ்

திரிபுற்ற பெயர்ச்சொற்களின் புணர்ச்சி.

“புணர்ச்சியிலக்கணம்”

திரிபுற்ற பெயர்ச்சொற்களின் புணர்ச்சி.

இயல்புப்பொருளென்னும் முற்றுப்பொருள்தரும் பெயர்ச்சொற்களாம் திரிபில்பெயர்ச்சொற்கள்  புணராதெனக்கண்டோம். திரிபில்பெயர்ச்சொற்கள் வேற்றுமைவுருபு முதலான இடைச்சொற்களையேற்று தம்பொருளில் வேறுபடும். தம்பொருளில் வேறுபடுமென்பது தம்முற்றுப்பொருளை இழந்து பொருள்முடிவிற்காக மற்றொரு சொல்லை நாடிநின்று/அவாவி அவற்றுடன் புணர்ந்து பொருள்முடிவினைப்பெறுவதாம். பெயர்ச்சொற்கள் வேற்றுமைவுருபேற்று  பொருள்முடிவினைப்பெறுவதை நன்னூற்சூத்திரம் 319 விளக்குகின்றது. அச்சூத்திரம் வருமாறு. (சீரமைப்பின்றி சொல்லமைப்பில்)

“எல்லை இன்னும் அதுவும் பெயர் கொள்ளும்

அல்ல வினைகொள்ளும் நான்கும்ஏழும் இருமையும் புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்.”

புணர்ச்சியிலக்கணத்தில் இப்பொறி(சூத்திரம்) குறிப்பிடத்தக்கது எனவே இதனை விரிவாக கற்போம்.

தெளிவுரை — “எல்லைப்பொருளில்வரும் ஐந்தாம்வேற்றுமை ‘இன்’ உருபும், ஆறாம்வேற்றுமை ‘அது’ உருபும் பெயரைக்கொண்டு முடியும். ஏனைய வேற்றுமைகள் வினையைக்கொண்டு முடியும். நான்காம்வேற்றுமையும் ஏழாம்வேற்றுமையும் வினையைக்கொண்டு முடிவதன்றி வினையொடுபொருந்தும் பெயரையும் கொண்டு முடிவது பெரும்பான்மை வழக்கென்பர் புலவோர்.”

விளக்கம் — “ஐந்தாம்வேற்றுமையின் பொருள்களுள் ஒன்றான எல்லைப்பொருளில்வரும் ‘இன்’ உருபு பெயரைக்கொண்டு முடியும். ஏனைய நீங்கல், ஒப்பு, ஏதுப்பொருள்களில்வரும்  ‘இன்’ உருபு வினையைக்கொண்டு முடியும்.

‘பெரும்பாலும்’ என்றதனால் வினையைக்கொண்டு முடிதற்குரிய வேற்றுமைகள் சிறுபான்மை தொழிற்பெயரையும் வினையாலணையும்பெயரையும் கொண்டு முடிதலும், எழுவாய்வேற்றுமை வினையைக்கொண்டு முடிதலேயன்றி சிறுபான்மை பெயரையும் வினாவையும் கொண்டு முடிதலும் கொள்க.”  எ-டு.

• ‘கருவூரின் கிழக்கு புலியூர்.’ எல்லைப்பொருளில்வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘கிழக்கு’ என்னும் பெயரை ஏற்றது; ‘புலியூர்’ என்னும் பெயரைக்கொண்டு முடிந்தது.

• ‘முருகனது கை உயர்ந்தது.’ ‘அது’ என்னும் ஆறாம்வேற்றுமைவுருபு ‘கை’ என்னும் பெயரை ஏற்றது; ‘உயர்ந்தது’ என்னும் வினையைக்கொண்டு முடிந்தது.

★ எல்லை ‘இன்’ உருபும், ஆறன் ‘அது’வும் அல்லாதன  வினையைக்கொண்டு முடியும்வகை.

• முருகன் வந்தான் — முதலாம்வேற்றுமை வினையையேற்று வினையைக்கொண்டுமுடிந்தது.

• முருகன் சிற்பத்தைச்செதுக்கினான்— இரண்டாம்வேற்றுமை வினையையேற்று வினையைக்கொண்டு முடிந்தது.

• முருகன் தூரிகையால் வரைந்தான் — மூன்றாம்வேற்றுமை வினையையேற்று வினையைக்கொண்டுமுடிந்தது.

• முருகன் வளவனுக்குக்கொடுத்தான் — நான்காம்வேற்றுமை வினையுடன் புணர்ந்து முடிந்தது.

• வளவன் நோயின் நீங்கினான் — ஐந்தாம்வேற்றுமை நீங்கல் பொருளில் வினையையேற்று வினையைக்கொண்டு முடிந்தது.

• காக்கையின் கரிது குயில் — ஐந்தாம்வேற்றுமை ஒப்புப்பொருளில் வினையையேற்று பெயரைக்கொண்டு முடிந்தது.

• முருகன் கல்வியில் பெரியன் — ஐந்தாம்வேற்றுமை ஏதுப்பொருளில் குறிப்புவினைமுற்றையேற்று  குறிப்புவினைமுற்றைக்கொண்டு முடிந்தது.

• முருகன் அவையின்கண் இருந்தான் — ஏழாம்வேற்றுமை வினையையேற்று வினையைக்கொண்டு முடிந்தது.

• முருகா கொடு — எட்டாம்வேற்றுமை வினையையேற்று வினையைக்கொண்டு முடிந்தது.

★ நான்கு, ஏழாம்வேற்றுமைகள் வினையைக்கொண்டு முடிந்ததுடன் பெயரையும்கொண்டு முடியும்வகை.

• கூலிக்கு நெல் – நெல் என்னும் பெயர் நேரடியாக குவ்வுருபேற்ற சொல்லுடன் தொடர்புபெறாது. ‘கூலிக்குக்கொடுத்த நெல்’ என்றவாறு கொடுத்த என்னும் வினையுடன் பொருந்தி குவ்வுருபுடன் தொடர்பு கொள்கின்றது. எனவே இத்தொடரில் நெல் என்பது வினையொடுபொருந்தும் பெயராகும்.

• முகத்தின்கண் மலர்ச்சி – மலர்ச்சி என்னும் பெயர் நேரடியாக கண்ணுருபேற்ற சொல்லுடன் தொடர்புபெறாது. ‘முகத்தின்கண் நிலவுகின்ற மலர்ச்சி’ என்றவாறு நிலவுகின்ற என்னும் வினையுடன் பொருந்தி கண்ணுருபுடன் தொடர்பு கொள்கின்றது. எனவே இத்தொடரில் மலர்ச்சி என்பது வினையொடுபொருந்தும் பெயராகும்.

வினையொடுபொருந்தும்பெயர் என்பதனைக்கூர்ந்து கற்றுத்தெளிக. இக்காலத்தில் குவ்வுருபினையடுத்து வல்லினமுதலெழுத்துச்சொல் வந்தால் வல்லினமெய்யிடுகின்றனர். அது தவறு. முருகனுக்கு கண்ணன் தோழன் என்பதில் வலி மிகாது. கண்ணனுக்குத்தோழன் முருகன் என்பதில் வலிமிகும். ஏன். முருகன், கண்ணன் என்பனபோன்று வினைமுதலாக தோழன் என்னும் பெயர்ச்சொல் இல்லை. தோழன் என்பது ஓர் உறவு. அவ்வுறவு கொள்ளும்போது/அவ்வுறவு நிலவும்போது தோழன். எனவே தோழன் என்பது வினையொடுபொருந்தும் பெயராகிறது.

★ முதலாம் , இரண்டாம்வேற்றுமைகள் சிறுபான்மை வினையல்லாதனவற்றை ஏற்றல்.

• முருகன் வருதல் நன்மையே — முருகன் என்னும் எழுவாய் வருதல் என்னும் தொழிற்பெயரையேற்று நன்மை என்னும் பெயர்ப்பயனிலைகொண்டு முடிந்தது.

• குடத்தை சுமந்தவள் வள்ளி — குடத்தை என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்றசொல் சுமந்தவள் என்னும் வினையாலணையும்பெயரையேற்று முடிந்தது.

• முருகன் அவன் — முருகன் என்னும் எழுவாய் அவன் என்னும் சுட்டுச்சொல்லையேற்று முடிந்தது.

• முருகன் யாவன் — முருகன் என்னும் எழுவாய் யாவன் என்னும் வினாச்சொல்லையேற்று முடிந்தது.

★ இரண்டாம்வேற்றுமை ஐயுருபு வினையைமட்டுமே ஏற்கும்;  பெயர்ச்சொற்களை ஏற்காது; புணராது. ஐயுருபினையடுத்துவரும் பெயர்ச்சொற்கள் புணராது தனித்துநிற்கும். எ-டு.

• திருக்குறளை திருவள்ளுவர் இயற்றினார் என்பது செம்மை.

• திருக்குறளைத்திருவள்ளுவர் இயற்றினார் என்பது பிழை.

இக்காலத்தில் ஐயுருபினையடுத்து வல்லினமுதலெழுத்துப்பெயர் வந்தால் வல்லினத்தை மிகுப்பது வழக்கமாக இருக்கின்றது.

வேற்றுமையென பொதுப்படக்கூறியதால் இம்முடிவுகள் வேற்றுமைவிரிபுணர்ச்சிக்கும் வேற்றுமைத்தொகைப்புணர்ச்சிக்கும் ஒக்குமென அறிக.

தொடர்வோம்.

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.

நன்றி.

வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button