
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௰௩.
அடக்கமுடைமை.
- குறள் – ௱௨௧. (அச்சில் உள்ளவாறு.)
“அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை யாரிரு ளுய்த்து விடும்.“
“அடக்கம் அமரருள் உய்த்துவிடும். அடங்காமை ஆரிருளுள் உய்த்துவிடும்” எனவிரித்து ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘அடக்கம்’, ‘அடங்காமை’ என்பன இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘அமரருள்’ என்பதிலுள்ள ‘உள்’ ஏழாம்வேற்றுமைவுருபு. இவ்வுருபு அமரர் எனும் பெயருடன் புணர்ந்து பெயரின் பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்தது. அதன்பின் எதனுடனும் புணரும் வேலை வேற்றுமைவுருபிற்கு இல்லை.; புணரின் புணரின் உருபாந்தன்மை கெடும்.
இருகருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. ஒருகருத்து முடியுமிடத்து புணர்ச்சி நிகழாது. மேலும் ‘உய்க்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிரு ளுய்த்து விடும்.“
- குறள் – ௱௨௨ (அச்சில் உள்ளவாறு.)
“காக்க பொருளா வடக்கத்தை யாக்க
மதனினூங் கில்லை யுயிர்க்கு.”
பொருள் = செல்வம்.
‘அடக்கத்தை பொருளாக காக்க’ என்பது கருத்து. ‘பொருளாக’ என்பதன் கடையெழுத்துக்குறைந்து ‘பொருளா’ எனநின்றது. இதனை உணர அவ்விடத்தில் விட்டிசைக்கவேண்டும். விட்டிசையால் புணர்ச்சி நிகழாது.
‘அடக்கத்தை’ என்பதன் ஐகாரம் உறுதிபடுத்தும் இடைச்சொல். குறளில் இது பெயர்ப்பயனிலையாக நின்று முற்றுப்பொருள்தருகிறது. முற்றுச்சொல் எதனுடனும் புணராது.
‘ஆக்கம்’ தன்னையறிவித்து இயல்புப்பொருளில்வந்த பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘அதன்’ எனும் சுட்டுச்சொல் முன்பின் புணர்ச்சிபெறாது தனித்துநிற்கும்.
அதனினூம் என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். கிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘சிறப்பு’ எனும் பொருள்படும் ‘ஊங்கு’ எனும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘இல்லை’ என்பது குறிப்பு வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘உயிர்க்கு’ எனுஞ்சொல் ‘அதனினூஉங்கு ஆக்கம் உயிர்க்கு இல்லை’ என்றவாறு வேறோரிடம்சென்று பொருந்தி பொருள்தரும். இதற்கேதுவாக அச்சொல் புணராமல் தனித்திருக்கவேண்டும். புணர்ந்த சொற்கள் பிரியா.
“அடக்கத்தை பொருளாக காக்க. உயிர்க்கு ஆக்கம் அதனினும் ஊங்கு இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
செம்மைவடிவம் —
“காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு* இல்லை உயிர்க்கு.”
*குற்றியலுகரமாம் குகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.
- குறள் – ௱௨௩. (அச்சில் உள்ளவாறு.)
“செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்.”
அறிவு = அடக்கமுடைமை.
செறிவு = தன்னடக்கம்.
சீர்மை = சிறப்பு.
அறிவு = அடக்கமுடைமை.
ஆற்றின் = நெறியின்.
“அறிவுடைமை அறிவாவது அறிந்து (அந்)நெறியில் அடங்கப்பெறின் (அத்)தன்னடக்கத்தை அறிந்தோரால் சிறப்பு பயக்கும்” எனவிரித்து பொருள்கொள்க.
‘பயக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘‘அறிவறிந்து’ என்பது ‘அறிவாவது அறிந்து’ எனவிரியும். ‘ஆவது’ என்பது எழுவாய்சொல்லுருபு. அறிவு எழுவாய்த்தன்மை நீங்காது நிற்கிறது. எழுவாய் எதனுடனும் புணராது. அறிவு என்பதை ‘அடக்கமுடைமை அறிவாவது அறிந்து’ என பரிமேலழகனார் விளக்குகிறார். ‘அறிவறிந்து’ என்பது ‘அறிவையறிந்து’ எனும் விரிநிலையின் தொகையாகவும் கொள்ளலாம்.
‘ஆற்றின்’ என்பது ‘நெறியில்’ எனும் பெயர்ச்சொல். இப்பெயர்ச்சொல் ‘அறிந்து’ எனும் வினையெச்சத்துடன் புணராது.
‘ஆற்றின்’ என்பது ஏழாம்வேற்றுமையின் இன்னுருபு பெற்றது. இவ்வுருபு புணர்ந்து தனது பணியை முடித்தது.; மீளவும் புணர்ந்தால் பொருள் மயங்கும்
செம்மைவடிவம் —
“செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.”
- குறள் – ௱௨௪. (அச்சில் உள்ளவாறு.)
“நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம்
மலையினு மாணப் பெரிது.”
நிலை = நெறி. அதிகாரமுறையான் அடக்கமுடைமை என்பதாம்.
தோற்றம் = உயர்ச்சி என்பது பரிமேலழகனார் கொண்ட பொருள்.
எளிமையாக புகழ் எனவும் கொள்ளலாம்.
மாண = மிக.
‘அடங்கியவனது உயர்ச்சி’ என விரிக்கின்றார். எனவே ‘திரியாது’ எனுஞ்சொல் ‘நிலையில்’ எனும் சொல்லுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.
‘நிலையில்’ என்பதில் வந்த ஏழாம்வேற்றுமை இல்லுருபு ‘நிலை’ என்பதுடன் புணர்ந்து தன்பணியை முடித்தது. மீளவும் மற்றொரு சொற்கு நிலைமொழியாகி புணர்ந்தால் உருபுதன்மை மயங்கும்.
‘மலையினும்’ என்பது சிறப்பும்மை. சிறப்பும்மை எதனுடனும் புணராது.
“நிலையில் திரியாது அடங்கியானது தோற்றம் மலையினும் மாணப்பெரிது” எனவிரித்து ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“நிலையில் திரியாது* அடங்கியான் றோற்றம்
மலையினும் மாணப் பெரிது.”
*குற்றியலுகரமாம் துகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகுபெறாது.
- குறள் – ௱௨௫. (அச்சில் உள்ளவாறு.)
“எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.”
தகைத்து = தகுதியானது.
‘எல்லார்க்கும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘பணிதல்’ என்பது முற்றுப்பொருள்தரும் பெயர்ப்பயனிலை. முற்றுச்சொல் எதனுடனும் புணராது.
‘அவர்’ என்பது சுட்டுச்சொல். சுட்டுச்சொல் முன்பின் புணராது தனித்து நிற்கும்.
‘அவருள்ளும்’ என்பது சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மைச்சொல் எதனுடனும் புணராது.
“பணிதல் எல்லார்க்கும் நன்றாம். அவருள்ளும் செல்வர்க்கே (அது) செல்வமாகும் தகுதியானது“ எனவிரித்து அவ்வாறே கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.”
- குறள் – ௱௨௬. (அச்சில் உள்ளவாறு.)
“ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து.”
ஏமாப்பு = அரண்.
‘ஒருமையுள்’ எனும் ஏழாம்வேற்றுமைவுருபேற்ற சொல்லில் ‘உள்’ எனும் உருபு தன்பணியை முடித்தது. வேற்றுமைவுருபுகள் இடைச்சொற்களாகும். இடைச்சொற்கள் வருமொழியாகி புணர்ந்து தம்பணியை முடித்தபின் மீளவும் புணர்ந்தால் உருபின்தன்மை மயங்கும். மறுதலையாக சொல்வதானால் தனிக்கென தனித்த பொருளற்ற உருபுகள் நிலைமொழியாக நின்று எதனுடனும் புணராது.
‘போல்’ எனும் உவமவுருபு எதனுடனும் புணராது.
‘ஆற்றின்’ என்பது ‘இன்’ விகுதிபெற்ற வினையெச்சம். ‘எழுமை’ என்பது பெயர்ச்சொல். வினையெச்சம் பெயருடன் புணராது.
‘எழுமையும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.”
- குறள் – ௱௨௭. (அச்சில் உள்ளவாறு.)
“யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”
கா = காத்தல்.
சோகாப்பர் = துன்புறுவர்.
இழுக்கு = குற்றம்.
‘ஆயினும்’ என்பது ‘இன்’ எனும் வினையெச்சவிகுதியுடன் சிறப்பும்மைப்பெற்றது. சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘காவாக்கால்’ என்பதில் ‘கால்’ எனும் ஏழாம்வேற்றுமைவுருபு காலயிடப்பொருளில் வந்தது. இடைச்சொற்களாம் வேற்றுமைவுருபுகள் புணர்ந்து தம்பணியை முடித்தபின் மீளவும் புணரா.
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சொல்லிழுக்குப்பட்டு சோகாப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
எதைக்காவாராயினும் நாவினைக்காக்க. (நாவினைக்)காவாக்கால் சொற்குற்றம் நிகழ்ந்து துன்புறும் என்பதாம்.
செம்மைவடிவம் —
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”
-
குறள் -௱௨௯. (அச்சில் உள்ளவாறு.)
“ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும்.”
‘ஒன்றானும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மைச்சொல் எதனுடனும் புணராது.
‘தீச்சொற்பொருட்பயன்’ பெயர்ச்சொல். இது ‘உண்டாயின்’ எனும் வினையெச்சத்துடன் புணர பெயர்ச்சொல் வேற்றுமையுருபேற்று பொருள் வேறுபடவேண்டும். அவ்வாறு நிகழவில்லை. திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘உண்டாயின்’ என்பது ‘இன்’ விகுதிபெற்ற வினையெச்சம். ‘நன்று’ என்பது ‘நன்மை’ எனும் பொருள்தரும் பெயர்ச்சொல். வினையெச்சம் பெயருடன் புணராது.
‘நன்று’ என்பது திரிபில்பெயர்ச்சொல். ‘ஆகாது’ என்பது வினைமுற்று. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
“தீச்சொற்பொருட்பயன் ஒன்றானும் உண்டாயின் நன்று ஆகாதாகிவிடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
ஒருவன் சொல்லும் தீச்சொற்களால் மற்றொருவனுக்கு தீமை ஒன்று உண்டானாலும், பிற அறங்களால் பெற்ற நன்மைகளும் தீதாய்விடுமென பரிமேலழகனார் விரிக்கின்றார்.
செம்மை வடிவம் —
“ஒன்றானும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின்
நன்று*ஆகா தாகி விடும்.”
* குற்றியலுகரமாம் றுகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகுபெறாது.
- குறள் – ௱௨௯. (அச்சில் உள்ளவாறு.)
“தீயினாற் சுட்டபுண் ணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.”
‘தீயினால்’ என்பதில் மூன்றாம்வேற்றுமையின் ஆலுருபு புணர்ந்து தன்பணியை முடித்தது. மீளவும் புணர்ந்தால் உருபுதன்மை மயங்கும்.
‘புண்ணுள்’ எனும்போது ‘உள்’ எனும் வேற்றுமைவுருபு பெயர்ச்சொல்லாம் புண்ணினது பொருளை வேறுபடுத்துகிறது. இவ்வேற்றுமையவுருபு ’ஆறும்’ எனும் வினை நிகழுமிடத்தைச்சுட்டுகிறது. ஓரே வேற்றுமைவுருபு பெயரின் பின்னொட்டாகவும் வினையின் முன்னொட்டாகவும் வராது. வேற்றுமைவுருபேற்காத திரிபில்பெயர்ச்சொல்லாக ‘புண்’ நிற்கிறது. திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘ஆறும்’ என்பது வினைமுற்று. ‘ஆறாது’ என்பதும் வினைமுற்று. இரண்டும் வேறுவேறு செயல்களுக்குரிய வினைமுற்றுகள். எனவே இவை புணரா. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘நாவினால்’ என்பதில் மூன்றாம்வேற்றுமையின் ஆலுருபு புணர்ந்து தன்பணியை முடித்தது. மீளவும் புணர்ந்தால் உருபுதன்மை மயங்கும்.
“தீயினால் சுட்ட புண் ஆறும். நாவினால் சுட்ட வடு உள்ளாறாதே“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘ஏ’ என்பது தேற்றேகாரம்.
நாவினால் சுட்டது வடுவைத்தோற்றுவிக்காது. தீயினால் சுட்டது வடுவைத்தோற்றுவிக்கும். எனினும் இது மாற்றிச்சொல்லப்பட்டதை ஆறும், ஆறாது எனும் வினைகளின்பால் சொல்லப்பட்ட ‘வேற்றுமை அலங்காரம்’ என்பது பரிமேலழகனாரின் விளக்கம்.
செம்மைவடிவம் —
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.”
- குறள் – ௱௩௦. (அச்சில் உள்ளவாறு.)
“கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.”
கதம் = வெகுளி.
அடங்கல் = அடக்கமுடைமை.
செவ்வி = தகுந்த காலம்.
“கதங்காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவானை அடையும் வழியில் தகுந்த காலத்தை அறம் பார்த்திருக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
‘அறம்’ என்பது திரிபில்பெயர்சொல்லாகும். செவ்வியறம் என்பது தழுவாப்புணர்ச்சி. இல்லறம், துறவறம் என்பனபோன்று செவ்வியறம் எனும் அறப்பிரிவு இல்லை. ‘தன்குறை கூறுதற்கேற்ற மனமொழிமுகங்கள் இனியனாம் காலம்’ என செவ்விக்கு பரிமேலழகனார் பொருள்கூறுகிறார். ‘இப்பெற்றியானை அறம் தானே சென்றடையு’மென முடிக்கிறார். அறம் புணராது தனித்திருக்கும்.
‘பார்க்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கதங்காத்து கற்றடங்க லாற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றி னுழைந்து.”
நன்றி.
எழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.




