இலக்கணம்சொல்விளக்கம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — அறத்துப்பால். இயல் — துறவறவியல். தலைப்பு - ௨௮. கூடாவொழுக்கம்.

குறள் – ௨௱௭௧. (அச்சில் உள்ளவாறு)

“வஞ்ச மனத்தான் படிற் றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்.”

படிறு = குற்றம்.
படிற்றொழுக்கம் = குற்றநடத்தை.
அகம்= மனத்துள்.

“வஞ்சமனத்தான் படிற்றொழுக்கத்தைக்கண்டு பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்“ என்பதாம். ‘கண்டு’ என்பது சொல்லெச்சம்.

‘பூதங்களைந்தும்’ என்பது மயங்குபுணர்ச்சி. இதனை ‘பூதம் களைந்தும்’ எனவும் பிரிக்கலாம். மயங்குபுணர்ச்சியைத்தவிர்க்க.

‘ஐந்தும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.”

குறள் – ௨௱௭௨. (அச்சில் உள்ளவாறு).

“வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தஞ்னெஞ்சந்
தானறி குற்றப் படின்.”
தோற்றம் = நிலை.
படின் = செய்யின்.

“தன்னெஞ்சம் தானறிகுற்றப்படின் வானுயர் தோற்றம் எவன் செய்யும்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“தன்னெஞ்சம் குற்றமென தானே அறிந்ததை செய்யின் தானடைந்த வானுயர்நிலையால் பயனனென்; பயனில்லை“ என்பதாம்.

‘வானுயர்தோற்றம்’ என்பது இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘செய்யும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘தன்னெஞ்சம்’ இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின்.”

குறள் – ௨௱௭௩. (அச்சில் உள்ளவாறு).

“வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.”

வலியில் = வலிமையில்லா.
வல்லுருவம் = வலியுடைவேடம்.
பெற்றம் = ஆ (பசு).
அற்று = போல.

“வலிமையில்லார் வலிமையுடையார்வேடந்தரித்தல் ஆ (பசு) புலியினது தோலைப்போர்த்தி மேய்வது போல” என்பதாம். ‘தரித்தல்’ சொல்லெச்சம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

குறள் – ௨௱௭௪. (அச்சில் உள்ளவாறு).

“தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.”

அல்லவை = தவமல்லாதவை.
புதன் = புதர்.
புள் = பறவை.
சிமிழ்த்தல் = கைப்பற்றுதல்.
அற்று = அதுபோல.

“தவத்தின்கண் மறைந்து (தவவேடமணிந்து) தவமல்லாதவை செய்தல் புதரில் மறைந்து வேட்டுவன் பறவைகளைப்பிடிப்பது போலாகும்” என்பதாம்.

‘மறைந்து’ என்னும் வினையெச்சம் ‘அல்லவை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“தவமறைந்து* அல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௨௱௭௫. (அச்சில் உள்ளவாறு).

“பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்.”

அற்றேம் = நீங்கினோம்.
படிறு = குற்றம்.
எற்று = எதற்கு.
ஏதம் = வருத்தம், துன்பம்.

“பற்றுகளிலிருந்து நீங்கினோமென்பாரது பொய்யொழுக்கம் ஏன் செய்தோம், ஏன் செய்தோமென்று வருந்தும் துன்பம் பலவுந்தரும்” என்பதாம்.

‘படிற்றொழுக்கம்’ என்பது இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘ஏதம்’ என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநின்று தன்பொருளைத்தரும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“பற்றற்றே மென்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று*
ஏதம் பலவுந் தரும்.”

*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

குறள் – ௨௱௭௬. (அச்சில் உள்ளவாறு).

“நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வண்கணா ரில்.”

துறவார் = துறவாது.
வண்கணார் = கொடியோர், கன்னெஞ்சினார்.

குறள் தன்னளவில் விளங்குகிறது.

‘இல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘நெஞ்சு’ என்பதுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘வன்கணாரில்’ என்பதில் வரும் ‘இல்’ ‘இல்லை’ என்னும் எதிர்மறைக்குறிப்புவினைமுற்று. புணரின் இது வேற்றுமைவுருபாய் மயங்கும். மயங்குபுணர்ச்சியைத்தவிர்க்க.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வண்கணார் இல்.”

குறள் – ௨௱௭௭. (அச்சில் உள்ளவாறு).

“புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து.”

அனையரேனும் = ஒத்தவரேனும்.
அகம் = நெஞ்சம்.
குன்றி = குன்றிமணி.
கரியார் = குற்றமுடையார்.

‘குன்றிமணியின் செந்நிறம்போல் புறத்தோற்றம் உடையரேனும் அவர்தம் அகம் அக்குன்றிமணிமூக்கின் கருமையிலும் கரியார்’ என்பதாம்.

‘புறம் குன்றி கண்டனையரேனும் அகம் குன்றிமூக்கின் கரியார் (கருமை) உடைத்து’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘புறம்’, ‘அகம்’ என்பன இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொற்கள். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள் எதனுடனும் புணரா.

புறம் குறித்த விளக்கம் மூன்றாஞ்சீரில் முடிந்து அகம் குறித்த விளக்கம் தொடங்குகிறது. இவ்விடத்தில் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.

செம்மைவடிவம் —
“புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து.”

குறள் – ௨௱௭௮. (அச்சில் உள்ளவாறு).

“மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.”

மாசு = குற்றம்.
மாண்டார் = மாண்புடையார்.

‘மனமானது குற்றமுடையதாக மாண்புடையோராய் நீராடி மறைந்தொழுகும் மாந்தர் பலர்’ என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

குறள் – ௨௱௭௯. (அச்சில் உள்ளவாறு).

“கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.

கோடு = வளைவு.
செவ்விது = செம்மையானது. ஆங்கன்ன = அவ்வாறு.
வினை = செயல்.
பால் = தன்மை.

‘அம்பு வடிவால் செவ்விதாயினும் செயலால் கொடியது. யாழ் வடிவால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது. அதுபோன்று தவத்தோரது வடிவத்தைக்கருதாது செய்யும் செயலால் கொள்க’ என்பதாம்.

‘கொடிது’ என்னும் பயனிலை அம்பினைத்தழுவும்; யாழினைத்தழுவாது. தழுவாச்சொற்கள் புணரா; தழுவுஞ்சொற்களே புணரும்.

செவ்விது என்பது பொருள்முடிக்குஞ்சொல்லாம் பயனிலை. முடிக்குஞ்சொல் எதனுடனும் புணராது.

‘பால்’ என்பதுடன் ’ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“கணைகொடிது யாழ்கோடு செவ்விது*ஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௨௱௮௦. (அச்சில் உள்ளவாறு).

“மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்.”

மழித்தல் = நீக்குதல்.
நீட்டல் = வளர்த்தல்.
விடின் = கைவிடின்.

‘உலகம் பழியெனக்கூறி பழித்தவற்றை ஒழித்து அவற்றைக்கைவிடின் மயிரை நீக்கவும் வளர்க்கவும் வேண்டா’ என்பதாம்.

“உலகம் பழித்தது ஒழித்துவிடின் மழித்தலும் நீட்டலும் வேண்டா” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘வேண்டா’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“மழித்தலு நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.”

தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button