பிறமொழி/தமிழ்

துளி வானொலி நடாத்தும் போட்டி நிகழ்வுகள் பற்றிய முழுச்செய்திகள்!

பா/ திருக்குறள் / தொல்காப்பியம்

(போட்டி எண் :௧(1)
“பா” புனைதல்
தலைப்பு:தாலாட்டு
போட்டி நிகழ்வில் பங்கு பெறும் போட்டியாளர்கள்
௧ )உங்கள் பெயர்
௨ )முகவரி
போன்றவற்றைக் குறிப்பிட மறவாதீர்.

🌟2000 போட்டிகளில் வெற்றிச்சான்றிதழ் பெற்ற பட்டறிவு மிக்க நடுவரால் கணிப்புச் செய்யப்பட்டு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்.
⭐️இப்போட்டிகளில் பங்கேற்பவர்களில் ஒருவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் . மிகச் சிறந்த படைப்புகளுக்குச் சான்றிதழ் வழங்கப்படும் .
⭐️குறிப்பிட்ட நாளுக்குள் உங்கள் படைப்புகள் எங்களை வந்தடைய வேண்டும் .
⭐️குடம் , 29 -ஆம் நாள் ( 12/03/2024) பாக்களை எழுதி அனுப்ப வேண்டிய கடைசிநாள்.
⭐️உங்கள் படைப்புகளை எழுதி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : thulipotti@gmail.com
👩‍🍼போட்டிக்கான பாவின் தலைப்பு : “தாலாட்டு“ ( குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்)

💥போட்டியில் பங்கு பெறும் பாவலர்களுக்கான போட்டியின் நெறி :

௧ ) உங்கள் புலமையில் உருவான படைப்பாக இருத்தல் வேண்டும்.
௨ ) தனித்தமிழில் இருத்தல் வேண்டும்.( பிறமொழிக்கலப்பு முழுமையாக உன்னிக்கப்படும்)
௩ ) பொருள் சிதைவுறாமல் இருத்தல் வேண்டும்.
௪ ) ஒற்றெழுத்துகள் , சேர்த்தல் , பிரித்தல் போன்றன சரியாக இருத்தல் வேண்டும்.
௫ ) எதுகை , மோனை போன்றவற்றைப் பொருத்தமான இடங்களில் அமைத்து எழுத வேண்டும்.
௬ ) ஒரே அளவொத்த சீர்கள் ; முதல் நான்கு அடிகளில் வர வேண்டும் . ( ஏனைய அடிகளிலும் அளவொத்த சீர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்)
௭ ) ஒரு அடியில் இரண்டு சொற்களில் மோனை என்னும் முதலெழுத்து மற்றும் இரண்டு சொற்களில் எதுகை என்னும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரின் சிறப்பு ‌.
௮ ) 16 அடிகளைக் கொண்டவையாக இருத்தல் வேண்டும்.
௯ )நேர்மறைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் .
௰ ) நாளைய குமுகாயத்திற்கு கையளிக்கும் சிறப்பான படைப்புகளாக இருத்தல்
வேண்டும்.

வெற்றியாளர் தேர்வானபின் அனைவரின் படைப்புகளும் துளியின் இணையத்தளம் மற்றும் எமது குமுகாய வலைத்தளங்கள் அனைத்திலும் பகிரப்படும் .
“பா” புனையக் காத்திருக்கும் புலவர்கள் அனைவர்க்கும் இனிய நற்றமிழ் வாழ்த்துரித்தாகட்டும் .
நன்றி .
ஒருங்கமைப்பு : துளிவானொலி

வாழ்க தமிழ் .. !

💥போட்டி எண்: ௨ (02)

🌟திருக்குறள்

௧ )போட்டி நிகழ்வில் பங்கு பெறும் போட்டியாளர்கள்
௧ )உங்கள் பெயர்
௨ )முகவரி
௩ ) அடையாள அட்டை
போன்றவற்றை அனுப்பிவைக்க வேண்டிய
மின்னஞ்சல் முகவரி: thulipotti@gmail.com.

( மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் தரவுகளை அனுப்பிவைத்தால் மட்டுமே , போட்டியில் எவ்வாறு கலந்துகொள்ள முடியும் என்ற செய்தி உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.)
௨ ) போட்டி நடைபெறும் நாள்: மீனம் 10 ( 23/03/2024)

👦🧒அகவை வரம்பு :
௩-ய௧ (03-11) அகவை உடைய போட்டியாளர்கள்:
ஒன்று முதல் ஐந்து வரை உள்ள குறளும் , அத்துடன் உங்களுக்குப் பிடித்த ஒரு குறளுக்கான பொருளும் மனப்பாடம் செய்து கூறல் வேண்டும் .

👧👦அகவை வரம்பு :
௰௨-௰௮ (12-18) அகவை உடைய போட்டியாளர்கள்:
ஒன்று முதல் 5 வரை உள்ள குறளும் , ஒவ்வொரு குறளுக்குமான பொருளும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும் .

🌟எல்லா அகவையினருக்குமான பொது நெறி :

🌸ஒவ்வொரு குறளிலும் உள்ள சொற்களுக்கான பொருள் குறளின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . அவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் . உங்களைத் திறனாய்வு செய்பவர்கள் கேட்பின் சொல்லல் வேண்டும் .

🌸குறள் எண்,பால் ,இயல்,தலைப்பு போன்றவற்றையும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
🌸குறளைத் தெளிவுற ஒப்பிக்க வேண்டும்.
🌸பலுக்கல் சரியாக ஒலித்தல் வேண்டும் .
🌸குழந்தைகள் அருகில் பெரியவர்கள் இருந்து அவர்களுக்கு இடையூறு கொடுக்கக் கூடாது .
🌸போட்டியில் வெற்றிபெறும் ஒரு வெற்றியாளருக்கு பரிசிலும் பங்குபற்றியவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்படும்.

🌟திருக்குறள்

🟡௧ . (01)

குறள் எண்: ௬௱௫௰௪ (654)
பால் : பொருட்பால்
இயல்: அமைச்சியல்
தலைப்பு :வினைத்தூய்மை

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

இடுக்கண் படினும்- துன்பப் பட்டாலும் அதை தீர்க்கும் பொருட்டு
இளிவந்த செய்யார் – இளிவான செயல்களைச் செய்ய மாட்டார்
நடுக்கற்ற- துளக்கம் அற்ற
காட்சியவர்- தெளிவினை உடையவர்

பொருள்:
கலக்கம் இல்லாத அறிவை உடையவர்கள், தாம் இடையூறுகளுக்கு உட்பட நேர்ந்த காலத்திலும், இழிவான செயல்கள் எதையுமே செய்ய மாட்டார்கள் .

🟡௨ .(02)
குறள் எண்: ௮௱௨௰௮ ( 828)
பால்:பொருட்பால்
இயல்:நட்பியல்
தலைப்பு: கூடா நட்பு

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

தொழுத : தொழுதல் , வணங்கல்
கையுள்ளும்: கைக்குள்ளும்
படை – சேனை
ஒடுங்கும்: ஒடுங்குதல் – அடங்குதல், குறைதல்,சுருங்குதல்,குவிதல்,சோர்தல்,கீழ்ப்படிதல்,
பதுங்கல்,ஒதுங்குதல்,ஒளிமங்குதல்.
ஒன்னார்: பகைவர்
அனைத்து:அவ்வளவு ,அத்தன்மையது ,எல்லாம்
அனைய :அத்தன்மையான,ஒத்த

பொருள்:
நம்மைத் தொழும்போது கூடப் பகைவரது கையினுள் கொல்வதற்கான படை மறைக்கப்பட்டிருக்கும்;
பகைவர் அழுதுவடிக்கும் கண்ணீரும் அந்தத் தன்மையதே!

🟡௩.(03)
குறள் எண்: ௩௱௬௰௭ (367)
பால்:அறத்துப்பால்
இயல்: துறவியல்
தலைப்பு: அவா அறுத்தல்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும் .
அவாவினை ஆற்ற: விருப்பங்களை முழுதாய்
அறுப்பின்: இல்லாமல் செய்தால்
தவாவினை : நல்வினை
தான்வேண்டு: அவன் விரும்பியபடியே
மாற்றான் வரும் : நெறிப்படிவரும்

பொருள்:
ஒருவன் அவாவினை முழுவதும் அறுத்து விட்டால், கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள், தான் விரும்பியபடியே வந்து ஒருவனுக்கு வாய்க்கும்.


🟡௪.(04)

குறள் எண்: ௬௱௪௰௮ (648)
பால்:பொருட்பால்
இயல்:அமைச்சியல்
தலைப்பு: சொல்வன்மை

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

விரைந்து தொழில் கேட்கும் : ஞாலம் உடனடியாக ஏற்கும்
நிரந்து: நிரையாக
இனிது சொல்லுதல்:இனிமையாகச் சொல்லுதல்
வல்லார்ப் பெறின்: திறனுள்ளவர்களைப் பெற்றுவிட்டால்

பொருள்:
சொல்ல வேண்டியவற்றை ஒழுங்குபடுத்தி இனிதாகச் சொல்லும் ஆற்றல் உடையாரைப் பெற்றால் உலகம் விரைந்து தாம் செய்ய வேண்டிய பணி யாதென்று கேட்கும்.

🟡௫ .(5)
குறள் எண்: ௬௱௨௰௩ ( 623)
பால்:பொருட்பால்
இயல் : அரசியல்
தலைப்பு:இடுக்கண் அழியாமை

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

இடும்பைக்கு:துன்பத்திற்கு
இடும்பை படுவர்: வருந்தாதவர்
இடும்பை படாதவர்: துன்பப் படாதவர்

பொருள்:
துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.

போட்டியாளர்அனைவர்க்கும் இனிய நற்றமிழ் வாழ்த்துரித்தாகட்டும்..!
நன்றி .
ஒருங்கமைப்பு : துளிவானொலி

💥போட்டி எண்: ௩( 03)

🌟 “தொல்காப்பியம்”

௧ ) போட்டி நிகழ்வில் பங்கு பெறும் போட்டியாளர்கள்;
௧ )உங்கள் பெயர்
௨ )முகவரி
௩ ) அடையாள அட்டை
போன்றவற்றை அனுப்பிவைக்க வேண்டிய
மின்னஞ்சல் முகவரி: thulipotti@gmail.com.

( மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் தரவுகளை அனுப்பிவைத்தால் மட்டுமே ,
போட்டியில் எவ்வாறு கலந்துகொள்ள முடியும் என்ற செய்தி உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.)

௨ ) போட்டி நடைபெறும் நாள்: மீனம் 17 ( 30/03/2024)

🟪👦🧒அகவை வரம்பு :
௩-ய௧ (03-11) அகவை உடைய போட்டியாளர்கள்:
🔸ஒன்று முதல் பத்து வரையுள்ள அனைத்துப் பாடல்களையும் மனப்பாடம் செய்திருத்தல் வேண்டும்.

🟪👧👦அகவை வரம்பு :
௰௨-௰௮ (12-18) அகவை உடைய போட்டியாளர்கள்:
🔸ஒன்று முதல் பத்து வரையுள்ள அனைத்துப் பாடலும் அதற்கான பொருளும் மனப்பாடம் செய்திருத்தல் வேண்டும்.உரை விளக்கம் தெரிந்திருக்க வேண்டும்.

⭐️எல்லா அகவையினருக்குமான பொது நெறி :

♦️பாடலைத் தெளிவுற ஒப்பிக்க வேண்டும்.
♦️பலுக்கல் சரியாக ஒலித்தல் வேண்டும் .
♦️குழந்தைகள் அருகில் பெரியவர்கள் இருந்து அவர்களை இடையூறு செய்தல் கூடாது .
♦️போட்டியில் வெற்றிபெறும் ஒரு வெற்றியாளருக்கு பரிசிலும் பங்குபற்றியவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்படும்.

௧ . எழுத்தியல்
௧ . நூன் மரபு
௧ . எழுத்துகளின் வகை

🌟௧ . (01)
எழுத்தெனப்படுவ
அகரமுதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே.

விளக்க உரை
எழுத்து எனப்படுப – எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன,
அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப – அகரம் முதல் னகரம் இறுதியாக முப்பதுமாம் என்பர்.
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடை – சார்ந்து வருதலாகிய இலக்கணத்தினையுடைய மூன்றும் அல்லாவிடத்து.
மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று சொல்வர் என்றவாறு..
எடுத்துக்காட்டு :
அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஒள; க்-ங்-ச்-ஞ்-ட்-ண்-த்-ந்-ப்-ம்-ய்-ர்-ல்-வ்-ழ்-ள்-ற்-ன் என வரும்.

பொருள்:
எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, சார்ந்து வருதலாகிய இலக்கணத்தினையுடைய மூன்றும் அல்லாவிடத்து, “அ”கரம் முதல் ”ன” இறுதியாக முப்பதென்று சொல்வர்.
அச்சார்பெழுத்துகள் மூன்றும் சேர்ந்தவழி , எழுத்துகள் முப்பத்து மூன்றாம்.

🌟சார்பெழுத்துகள்
௨ . (02)

அவைதாம்,
குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும்,
எழுத்து ஓரன்ன.

விளக்க உரை :
அவைதாம் – மேற் சார்ந்துவரும் எனப்பட்டவை தான்,
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் – குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும்
என்ற முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன – (அவை) என்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை மேற்சொல்லப்பட்ட முப்பது எழுத்தோடு ஒரு தன்மைய.

பொருள்:
சார்ந்து வரும்மென்று மேலே சொல்லப்பட்ட குற்றியலிகரம் ,குற்றியலுகரம், ஆய்தம் என்று சொல்லப்பட்ட மூன்று வகைப் புள்ளியிட்ட எழுத்துகளும் மேற்கூறப்பட்ட முப்பது எழுத்துகளோடு ஒரு தன்மையாய் வழங்கும்.

🌟௩ . (03)

அவற்றுள், அ ,இ, உ,எ, ஒ என்னும்
அப் பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப.

விளக்க உரை
அவற்றுள் – மேற்கூறப்பட்ட எழுத்தினுள்,
அ – இ – உ – எ – ஒ என்னும் அப்பால் ஐந்தும் – அ-இ-உ-எ-ஒ என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஐந்தும், ஓர் அளபு இசைக்கும் (ஒரோவொன்று) ஓர் அளபாக இசைக்கும், குற்றெழுத்து என்ப – குற்றெழுத்தென்னும் குறிய என்று சொல்லுவர்.

பொருள்:
மேலே கூறப்பட்ட முப்பதெழுத்தினுள்,அ-இ-உ-எ-ஒ என்று கூறப்பெறுகின்ற அப்பகுதிகள் ஐந்தும் ஒரு மாத்திரை ஒலிக்குங் குற்றெழுத்து என்று கூறுவர் புலவர் . ( மாத்திரை என்றால் எழுத்துகள் ஒலிக்கும் காலத்தின் அளவு )

🌟இரண்டு மாத்திரை நெட்டுயிர்

௪ . (04)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும்
அப்பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும், ‘நெட்டெழுத்து’ என்ப.

விளக்க உரை

ஆ, ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஒள என்னும் அப்பால் ஏழும் – ஆ , ஈ , ஊ , ஏ , ஐ ,ஓ , ஒள என்று சொல்லப்படுகின்ற அக் கூற்று ஏழும்,
ஈர் அளபு இசைக்கும் – (ஒரோவொன்று) இரண்டு மாத்திரையாக ஒலிக்கும்,
நெட்டெழுத்து என்ப – (அவைதாம்) நெட்டெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர் (புலவர்).

பொருள்:
அவற்றுள் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் அக்கூற்று எழுத்து ஏழும் , ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரையளவினதாக ஒலிக்கும்.அதனால் அவற்றை நெட்டெழுத்து எனப் பெயரிட்டுக் கூறுவர்.

🌟ஓரெழுத்தே மூன்று மாத்திரை ஒலிக்காமை
௫ . (05)
மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே .

🔸பொருள்:
ஓர் எழுத்து மட்டுமே நின்று மூன்று மாத்திரை கால அளவுக்கு ஒலித்தல் என்பது இயல்பில் ஒரு எழுத்திற்கும் இல்லை .

🌟மாத்திரை நீளுதல்:

௬ .(06)
நீட்டம் வேண்டின், அவ்வள புடைய
கூட்டி `எழூஉதல்’ என்மனார் புலவர்.

உரை விளக்கம்:
நீட்டம் வேண்டின் – நீண்ட மாத்திரையையுடைய அளபெடை எழுத்துப்பெற வேண்டின்,
அ அளபு உடைய கூட்டி எழூஉதல் – மேற்கூறிய இரண்டளபுடைய நெடிலையும் ஓர் அளபுடைய குறிலையும் (பிளவுபடாமற்) கூட்டி யெழூஉக, என்மனார் புலவர் – என்று சொல்லுவர் புலவர்.

பொருள்:
வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் ஓசையும் பொருளும் பெறுதல் காரணமாக,
இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து நீண்ட ஒலித்தலை விரும்பினால், தாங் கருதிய மாத்திரையைத் தருதற்கு உரிய எழுத்துக்களைக் கூட்டி அவ்வொலிகளை எழுப்புகவென்று கூறுவர் புலவர்.

🌟மாத்திரைக்கு அளவு:

௭. (07)
கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.

உரை விளக்கம்:
கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை -கண்ணிமையெனவும் நொடியெனவும் அவ்விரண்டே
எழுத்தின் மாத்திரைக்கு அளவு,
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே -நுண்ணிதாக நூலிலக்கணத்தை உணர்ந்த ஆசிரியர் கண்டநெறி என்றவாறு.

பொருள்:
கண் இமைத்தற்குரிய கால எல்லையும், கைந் நொடித்தற்குரிய கால எல்லையும் ஆகிய அளவையே ஒரு மாத்திரையின் அளவாகும் என்பது ஓசையளவினை நுட்பமாக உணர்ந்தோர் கண்டுரைத்த நெறியெனக் கூறுவர் புலவர்.

🌟௮ . (08)

ஔகார இறுவாய்ப் பன்னீர் எழுத்தும் உயிரென மொழிப.

உரை விளக்கம்:

ஒளகார இறுவாய்ப் பன்னீர் எழுத்தும்= ஒளகாரமாகிய இறுதியையுடைய பன்னிரண்டு எழுத்தினையும்,
உயிர் என மொழிப= உயிர் என்னும் குறியினையுடைய என்று சொல்லுவர்.

பொருள்:
அகரம் தொடக்கம் ஔகாரம் வரையுள்ள பன்னிரெண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகள் என்று புலவர் கூறுவர் .

🌟பதினெட்டு மெய்

௯ .(09)

னகார இறுவாய்ப்
பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப.
பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப.

உரை விளக்கம்:
னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும்= னகரமாகிய இறுதியையுடைய் பதினெட்டு எழுத்தினையும்,
மெய் என மொழிப. மெய்யென்னும் குறியினையுடைய என்று சொல்லுவர்.

பொருள்:
“க”காரம் முதல் “ன” காரம் இறுதிவரையுள்ள பதினெட்டு எழுத்தினையும் மெய்யெழுத்துகள் என்று புலவர் கூறுவர்.

🌟உயிர் மெய்க்கு அளவு
ய . (10)
மெய்யோ டியையினு முயிரிய றிரியா.
மெய்யோடு இயையினும் உயிர் இயல் திரியா.

உரை விளக்கம்:
மெய்யோடு இயையினும்= (உயிர்மெய்யாவன) மெய்களோடு உயிர் இயையப் பிறந்த நிலைமையவாயினும்;
உயிர் இயல் திரியா= (அவ்வுயிர்கள் அவ்வியைபின்கண்ணே வேறு ஓர் எழுத்தாய் நின்றமையின், மெய்யோடு இயைபின்றி நின்ற) உயிர்களது இயல்பில் திரியா.

பொருள்:
பன்னிரெண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய்யெழுத்துகளோடுங் கூடி நின்றனவாயினும் , தம்முடைய உயிரெழுத்துகளுக்குரிய இலக்கணத்திலிருந்து அவை மாறுபட மாட்டா .

போட்டியாளர்அனைவர்க்கும் இனிய நற்றமிழ் வாழ்த்துரித்தாகட்டும்..!
ஒருங்கமைப்பு : துளிவானொலி
நன்றி .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button