வரலாற்று மாந்தர்கள்

தனிநாயகம் அடிகள்: ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர்!

” தனிநாயகம் அடிகள்”

-இரா.காமராசு.

தமிழ்மொழியின் இலக்கியச் செழுமைகளை,கலைகளை ஒருமுகப்படுத்தியதுடன் தம் பயணங்கள் மூலம் உலகம் முழுக்க பரவச்செய்து மொழிக்கு வளமை சேர்த்தவர் தனிநாயகம் அடிகள். உலகத்தமிழர்களை தமிழால் ஒன்றிணைத்த அடிகள் வாழ்க்கை சுருக்கத்தை சிறுநூல் வடிவில்  இரா.காமராசு படைத்தளித்துள்ளார்.

புதிய நூற்றாண்டு நூல் நிறுவனம்( என் .சி.பி. எச்) இதனை வெளியிட்டுள்ளது.

1913 ஆம் ஆண்டு இலங்கை , நெடுந்தீவு கரம்பொன்னில் பிறந்த இவர் இத்தாலியிலும் இங்கிலாந்திலும் இறையியல் கல்வி பயின்றார். திருவனந்தபுரம் பேராயரின் பரிந்துரையால் கூரோமை நகர உர்பன் பல்கலையில் சமய உயர்கல்வி பயிலச்சென்ற அடிகள் அங்கே லத்தீன் இசு்பானிசு் உள்பட ஒன்பது மொழிகளைக் கற்றறிந்தார். முதலில் திருநெல்வேலி பள்ளியில் துணைத் தலைமையாசிரியராக பணியாற்றினார். அப்போது தமிழ் இலக்கண , இலக்கியங்கள் மீது மிகை நாட்டம் கொண்டார். உடனே அண்ணாமலை பல்கலையில் தமிழ் மாணாக்கராய்ச் சேர்ந்தார். அங்கு தெ.பொ.மீனாட்சிசுந்தரம் ஆசிரியராகவும் நண்பராகவும் விளங்கித் தமிழைக் கற்பித்தார்.

தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி தேவாரம் திருவாசகம் என்று மூழ்கி திளைத்து நமக்கு அடிகளார் அளித்ததுதான் ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ எனும் ஆய்வேடு. ‘சேவியர்’ என்ற தன் பெயரை தனி நாயகம் என்று மாற்றிக் கொண்டார். 1949,50 களில் தமிழில் கலை இலக்கியம் பண்பாடு பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்த உலகம் முழுக்க பயணங்கள் மேற்கொண்டார். அமெரிக்க ஒன்றிய நாடுகளில் ஒரே ஆண்டுமட்டும் 200-க்கும் மேற்பட்ட தமிழிலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் என்பது போற்றவேண்டிய செய்திகளில் ஒன்று.

இப்படியாக ‘உலக தமிழ்த்தூது’ விடுத்த அடிகளார் 1952 இல் தமிழாய்வுக்காகவே இலக்கியக் கழகத்தின் சார்பில் ‘Tamil Culture’ எனும் முத்திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கினார். இந்த இதழ் 1966 வரை வெளிவந்தது. தமிழின் அரிய சிறப்புகளை ஆங்கில கட்டுரைகள்வழி பரப்பிட இவ்விதழ் கலங்கரை விளக்காயிற்று. இத்துடன் அச்சேறிய முதல் தமிழ் நூல்களைத் தேடிக் கண்டு தமிழ் வரலாற்றில் பதிவு செய்தவர் தனி நாயகம் அடிகள். மேலும் இவர் தமிழ் இலக்கியக் கல்வியில் மேன்மை முறைமைகளை அறிமுகப்படுத்தினார்.

அடிகளாரின் பெருமுயற்சியினால் 07/01/1964 அன்று தொடங்கப்பட்ட உலகத் தமிழாறாய்ச்சிக் கழகத்தை அவரே பொறுப்பேற்று நடத்தினார். இக்கழகம் உலகத் தமிழறிஞர்களை ஒருங்கிணைக்கவும் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தவும் தொடங்கியது. 1966 ல் முதல் மாநாட்டைக் கோலலம்பூரில் தனிநாயகம் அடிகளே பொறுப்பேற்றுச் சிறப்பாக நடத்திக்காட்டினார். தொடர்ந்து சென்னை (1968) பாரிசு் (1970) யாழ்ப்பாணம் (1974) போன்ற உலகத்தமிழ் மொழி மாநாடுகள் அடிகளின் பங்களிப்பால் சிறப்படைந்தன.

உலகநாடுகள் மட்டுமல்ல தான் பிறந்த இடமான இலங்கையிலும் தமிழர்,சிங்களர்,பௌத்தர் தம் தொடர்புறவுகளை விளக்கி இனசார்,சமயசார் பிரிவினைகளுக்கு எதிராக களப்பணியாற்றினார். சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்னும் அரசின்சட்டத்திற்கு எதிராக 1961 ல் அறப்போராட்டத்திலும் ஈடுபட்டார் தனிநாயகம் அடிகளார்.

கணக்கற்ற சொற்பொழிவுகள், 137 கட்டுரைகள் எழுதியளித்த அடிகள் தமிழியலை வளர்த்ததில் தலைமையானவராகத் திகழ்கிறார்.

உலகப் பற்றுகளைத் துறந்தாலும் மேன்மைமிகு தமிழ்ப்பற்றால் நம் சிந்தையில் நிலைத்த தனிநாயகம் அடிகள் 01/09/1980 அன்று இலங்கை யாழ்பாணத்தில் இயற்கை எய்தினார்.

கட்டுரை வடிவம்

திரு.பூங்காற்று தனசேகர் அவர்கள்.

(சிறுகதையாசிரியர், மூத்த நாழிதழாளர்)

பிறமொழிச்சொற்கள் நீக்கப்பட்டு  தனித்தமிழுக்கு மாற்றியமைத்ததற்கான பொறுப்பை ஏற்கிறது   துளிவானொலி..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button