
கம்மாலை என்ற சொல்லிற்கான விளக்கம்!
கம்மம் + ஆலை
கம்மம் செய்பவர்கள் கம்மியர் . கம்மியர் என்றால் ஒரு கலைப் பொருளைப் பார்த்தால் , பார்த்தது போலவே செய்யக்கூடிய பொற்கொல்லர் வேலை .
இலக்கியப்பயன்பாடு : கண்டதே செய்பவாம் கம்மியர்; (விளம்பிநாகனார் நான்மணிக்கடிகை பாடல்-38)
“கம் ” என்னும் சொல்லின் பொருள் “கம்மியர் தொழில்” என்று நன்னூல் சங்கர நமச்சிவாயர் விருத்தியுரைக் கூறுகிறது.
“கம்” என்ற சொல்லிலிருந்து பிறந்த பல சொற்கள் உள . அவை பின்வருமாறு :
கம்மியன், கம்மாளன், கம்மியர் , கம்பலை, கம்மி , கம்மல், கம்பு,கம்மம், , கம்மன், கம்மி, கம்மக்குடம், கம்மாலை, கம்மசாலை, கம்மாலைமூட்டு, கம்மாலைவை, கம்மியம், கம்மாய், கம்முதல்.
கம்மம்
பொருள் கம்மம்(பெ) தச்சு, மரவேலை, பொன், இரும்பு போன்ற உலோகவேலை முதலிய கம்மியர்தொழில்; கம்மியம் கம்மஞ்செய் மாக்கள் (நாலடி, 393).
கம்மியர் என்ற சொல் தரும் இலக்கியப் பயன்பாடுகளைப் பார்ப்போம் ..
1. செம்பினாலான பானையை வனைவர் கம்மியர் எனப்பட்டனர்.
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி – நற்
2. மண் திணிந்த இந்த உலகம் ஒளிர்ந்துவிளங்க, கொல்லர் கடையும்போது
செம்புப்பொறிகளைச் சொரியும் பானையைப் போல மின்னலிட்டு,
3. நெசவுத்தொழில் செய்வோரும் கம்மியர் எனப்பட்டனர்.
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ –
சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,
சிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு,
4. வேலைப்பாடு மிக்க விசிறிகளைச் செய்பவர்களும் கம்மியர் எனப்பட்டனர்.
கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் சுருக்கி – நெடு
கை(வேலைப்பாட்டில்) சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த
சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு
5. மரவேலை செய்யும் தச்சர்களும் கம்மியர் எனப்பட்டனர்
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 85,86
6. கைத்தொழில் வல்ல தச்சன்
(ஆணிகளை நன்றாக)முடுக்கியதனால் இடைவெளியற்று,
வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய,
7. முத்துக்களைக் கொண்டு அணி செய்வோரும் கம்மியர் எனப்பட்டனர்
கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ
மண்ணா பசு முத்து ஏய்ப்ப – நற் 94/4,5
கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத
தூய்மைசெய்யாத பசுமுத்தைப் போல
8. பொற்கொல்லர்களும் கம்மியர் எனப்பட்டனர்
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப – நற் 313/2
கம்மாலை என்பதில் கம் என்பது கம்மியர் தொழில் செய்யும் ஆலை என்று பொருள் கொள்ளும் .
கம்மி என்ற சொல் பாரசீகத்தில் குறைவு என்ற பொருள் கொண்டது .
கிந்தியில் கம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதுமுண்டு .
கம்மல் என்ற சொல்லுக்குத் தொங்கல் அல்லது மாட்டல் என்ற சொற்கள் தமிழில் உள .
வேர்ச்சொல் ஆய்வாளர்கள் சிலர் இதைத் தமிழ் சொல் என்று சொல்வார்கள் . கமம் என்ற உழவுத்தொழில் கூட கம்மம் என்ற சொல் மருவி வந்ததாக உரைப்பர் .
அதே போல் காமம் என்பது சிற்றூரைக்குறிக்கும் தமிழ்ச் சொல் என்பதும் ஆய்வாளர்கள் கூற்றே.
மெக்கானிக் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இப்போது பொறிமுறையாளர் / பழுது பார்ப்பவர் என்ற சொற்கள் உண்டு . ஆனால் இலக்கியப் படைப்புகளில் வரும் கம்மியர் என்ற சொல்லானது மெக்கானிக் என்பதற்கான சொல்லே ..!
தமிழ் ஒரு மூத்த மொழி எனும் பார்வையில் கம் என்ற வேர்ச்சொல்லில் இருந்து இச் சொற்கள் தோன்றியிருக்கலாம் என்று சொல்லிலும் மிகத் தெளிவுற அறிதல் எளிதாக இல்லை . ஏனெனில் , இச் சொற்கள் பிறமொழியிலும் பயில்கின்றன .
சங்கம் மருவிய காலத்து இலக்கியப்பயன்பாடுகளில் பிறமொழிச் சொற்களின் ஆளுமை உள்ளதனால் ஐயமுற்றே நிறைவு செய்கிறேன்.



