சொல்விளக்கம்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் “சொல்லாய்வுக் கட்டுரைகள்“ நூலில் உள்ள தாவரம் பற்றிய அரிய செய்தி .

அடி /கிளை/கொழுந்து /பூ/குலை //தோல்/

மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின்

“சொல்லாய்வுக் கட்டுரைகள்”

நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் .

அடி வகை.

ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.

தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி.

தண்டு : கீரை,வாழை முதலியவற்றின் அடி,

கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி,

தூறு : குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி,

தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி,

கழி : கரும்பின் அடி,

கழை : மூஙகிலின் அடி

அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி..

கிளைப்பிரிவுகள்:

தாவரங்களின் அடியிலிரு்நது பிரி்ந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்கள்.

கவை : அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;

கொம்பு அல்லது கொப்பு : கவையின் பிரிவு;

கிளை: கொம்பின் பிரிவு;

சினை: கிளையின் பிரிவு;

போத்து : சினையின் பிரிவு;

குச்சு: போத்தின் பிரிவு;

இணுக்கு: குச்சியின் பிரிவு.

காய்ந்த அடியும் கிளையும் பெயர்பெறுதல்:

காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள் .

சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி);

வி்றகு :காய்ந்த சிறுகிளை;

வெங்கழி : காய்ந்த கழி;

கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.

கொழுந்து வகை.

தாவரத்தின் நுனிப்பகுதிகளைக் குறிக்கும் சொற்கள் .

துளிர் அல்லது தளிர் : தெல், புல் முதலியவற்றின் கொழுந்து;

முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து,குருத்து : சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து

கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி.

பூவின் நிலைகள்:

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்.

அரும்பு: பூவின் தோற்றநிலை;

போது : பூ விரியத் தொடஙகும் நிலை;

மலர்(அலர்): பூவின் மலர்ந்த நிலை;

வீ: மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை;

செம்மல்: பூ வாடின நிலை.

பிஞ்சு வகை

தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்கள்.

பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு;

பிஞ்சு: இளம் காய்;

வடு: மாம்பிஞ்சு;

மூசு: பலாப்பிஞ்சு;

கவ்வை : எள்பிஞ்சு;

குரும்பை : தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு;

முட்டுக் குரும்பை :

சிறு குரும்பை ;

இளநீர்: முற்றாத தேங்காய்;

நுழாய்: இளம்பாக்கு;

கருக்கல்: இளநெல்;

கச்சல்: வாழைப்பிஞ்சு.

குலை வகை:

தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான (காய்களையோ/ கனிகளையோ) சொற்கள்:

கொத்து:

அவரை, துவரை முதலியவற்றின் குலை

குலை : கொடி முந்திரி போன்றவற்றின் குலை ;

தாறு: வாழைக் குலை ;

கதிர்: கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்;

அலகு அல்லது குரல்: நெல், தினை முதலியவற்றின் கதிர்;

சீப்பு: வாழைத் தாற்றின் பகுதி.

கெட்டுப்போன காய்கனி வகை:

கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கும் சொற்கள்:

சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்;

சிவியல்: சுருங்கிய பழம்; ‌

சொத்தை : புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி;

வெம்பல்: சூட்டினால் பழுத்த பிஞ்சு;

அளியல்: குளுகுளுத்த பழம்;

அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்;

சொண்டு: பதராய்ப் போன மிளகாய்.

கோட்டான் காய் அல்லது கூகைக்காய்: கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய்;

தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்;

அல்லிக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்;

ஒல்லிக்காய்: தென்னையில் கெட்டகாய்

பழத்தோல் வகை:

பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள்:

தொலி: மிக மெல்லியது;

தோல்: திண்ணமானது;

தோடு: வன்மையானது;

ஓடு: மிக வன்மையானது;

குடுக்கை : சுரையின் ஓடு;

மட்டை : தேங்காய் நெற்றின் மேற்பகுதி;

உமி: நெல்,கம்பு முதலியவற்றின் மூடி;

கொம்மை : வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button