இலக்கணம்சொல்விளக்கம்தமிழ்பிறமொழி/தமிழ்

அணுப்புதல் / அனுப்புதல் என்பவற்றில் எச்சொல் சரியான தமிழ்ச்சொல் ?!

அணுப்பு என்பதே சரியானது .

அணு (னு)  ‘னு’ என்னும் எழுத்தைப்பயன்படுத்தாமல் ‘ணு’ என்பதைப்பயன்படுத்துவதே சரியாகும். 

சற்று விளக்கமாகச்சொல்வதென்றால், 

“அ” எனும் எழுத்தைத்தொடர்ந்து ‘னு’ என்னும் எழுத்தைப் பயன்படுத்துவது பிழையாகும். ஆனாலும், பல்லாண்டுகளாகப் பயன்படுத்திவருகிறோம். அதேவேளையில், தமிழ்நாட்டில் தனித்தமிழ்ப்பற்றாளர்களாகிய சிலர்  ‘அனுப்புதல்’ என்பதைத்தவிர்த்து ‘விடுதல்/விடல்/விடுநர்’ எனும் செற்களைப்பயன்படுத்திவந்துளர். 

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் வழிவந்த வேர்ச்சொல்லாய்வாளரான சொல்லாய்வறிஞர் அருளியார் ஐயாவின் அண்மைய ஆய்வின்படி, அனுப்புதல் என்னும் அந்தச்சொல்லைத்தவிர்க்காதீர்; ‘னு’ என்னும் எழுத்தை நீக்கிவிட்டு ‘ணு’ எனும் எழுத்தை அவ்விடத்திலிட்டு “அணுப்புதல்/அணுப்புநர்” என எழுதவேண்டிவலியுறுத்தியுள்ளார்.

அணுகு/அணுகுதல் என்றால் ஒருவரிடம் சென்று அதாவது ஒருவரிடத்தில் நெருங்கி என்பது பொருளாகும். 

அணுகிப்பேசு > ஒருவரிடத்தில் சென்று பேசு; நெருங்கிச்சென்றுபேசு. 

அண்முதல் என்றால் அண்ணுதல் , கிட்டுதல்

அண்மு_தல் என்பதே இச்சொல் .

௧.

அண்மை :

அண் – என்ற அடிச்சொல் அடுத்திருத்தலைக் குறிக்கும்.

அண்+ அம் =   அணம்.

அண் > அண்முதல் /அண்மித்தல்.
அண் > அண்டை. ( அண்டை நாடு = அடுத்திருக்கும் நாடு)
அண்டு தல் > அணுகுதல் = கிட்டுதல் , நெருங்குதல்.
அண் > அண்மை.
அண்டை / அண்மை – என்றால் அருகில் இருப்பது.

அணுக்கன் – நெருங்கியவன் நெருங்கியவன்

அண்முதல் – சேர்தல்,அணுகல்.

அண்முவர் – சேர்ந்தின்புறுவர்

அண்மினார் -அணுகினார் .

அணம் என்ற  தொழிற்பெயர் விகுதியனது தமிழில் பலசொற்களில் வருகிறது. அவற்றுள் சிலவற்றைப்பார்ப்போம்.  வினை யல்லாதனவும் இவ்விகுதியைப்பெறுதலுண்டு. இவ்விகுதி பெற்ற சொற்கள்சில பிறமொழிகளிலும்  சென்று ஆட்சி பெற்றுள்ளன.

ப ட்டணம் , ஆரணம்,கட்டணம்,ஏரணம்,காரணம்

(சாரணம்)>   சாரணர்,தோரணம்,வாரணம்

என்று அவைபலவாம்.

இங்கு  ”அணம்” என்ற விகுதியைமட்டும் ஆய்வு செய்வோம்.

௨. அ என்பது சுட்டு. இச்சுட்டு அந்த, அது போன்ற தொடக்கத்துப்பலவற்றின் மூலமாகவுளது.

அ >  அண்.

அண் > அண்முதல்.  அண்மித்தல்.

அண் > அண்டை.

அண் > அண்மை.

அண்> அணிமை.

அண்> அணை.

அண் >  அணைத்தல்.

அண் >  அணை>    அணைக்கட்டு.

அண் > அணி >   அணிதல்.

உடலை அடுத்து நிற்பது ஒருவன் ஆடையும் அணிகலன்களுமே.

சேலை முதலியன உடலையணைத்துக்கொண்டு நிற்பன.  சேலையானது இடையையும் கால்களையும்  அணைத்துநிற்பது.

அனு பற்றிய செய்திகளையும் பார்க்கலாம் .

“அனு” என்பதற்கு தமிழில் எப்பொருளும் இல்லை .

அந்”என்ற முன்னொட்டானது சங்கதத்தின் எதிர்மறைச்சொற்களுக்காக இடப்படும் ஒன்றாகவுள.

ஒருசில சங்கதச்சொற்களை இங்கே பார்க்கலாம் .

அந்நியர் ,அனுபவம்,அனுபூதி,அனுகூலம் ,அனுக்கிரஹம், அனுஷ்டானம் , அனுமதி , அநீதி , அந்தம் , அந்தாதி போன்ற மிகுதியான சொற்கள் வடமொழியெனும் சங்கதத்தில் உள்ளதைக்காணலாம் .

சில வேர்ச்சொல்லாய்வாளர்கள் அனுப்பு என்பது வினைச்சொல் சங்கத முன்னொட்டான “அனு”விற்கும் தமிழிலுள்ள வினைச்சொல்லான அனுப்பிற்கும் தொடர்புல்லை என்று கூறினாலும் அவர்களால் சரியான சான்று பகர முடியவில்லை .

ஒருவரைச் சென்றையடைய அல்லது ஒருவரிடத்தில் நெருங்கிப் போகச்செய்கிற வேர்ச்சொல்லாட்சிகளைக்கொண்ட அணுகு என்னும் சொல்லிலுள்ள (முச்சுழி ணகர உகரமே) ‘ணு’ என்னும் எழுத்தே அணுப்பு / அணுப்பியமை என்பதிலும் எழுதப்படவேண்டும் என்பதே சரி. 

தமிழில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டிச்சான்று பகிரினும் யாரும் அவற்றை மாற்றியமைத்து மொழிக்கு உயிர்ப்பு கொடுக்க முயல்வதில்லை . மக்கள் மீது எவராலும் குற்றங்கூறமுடியாது . இது தமிழ்த்துறை ஆய்வாளர்களின் பணி . அவர்கள் சான்றொடு மக்களுக்குக்கொடுத்தாக வேண்டுமெனிலும் அவை சரியானமுறையில் செயற்படுத்தப்படாமல் உள்ளது .

தனிமாந்தச்செயற்பாட்டால் எந்தளவிற்கு இந்தப்பணியைச்செய்ய முடியுமோ அந்தளவிற்கு முயல்கிறோம் .

பிறமொழிச்சொற்களை வழியணுப்பிவைத்துவிட்டு தமிழ்ச்சொற்களை ஐயமுறப்பயன்படுத்தி எம்தமிழின் தொன்மையைக்காத்து நிற்போம்.

நன்றி ..

வாழ்கதமிழ் .

எழுத்து : துளிவானொலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button