பிறமொழி/தமிழ்

ராயீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல் நலக் குறைவால் உயிரிழப்பு : சென்னை ராயீவ் மருத்துவமனை அறிக்கை!

மகனைப் பார்க்கக் காத்திருந்த தாயாருக்கு என்ன விடை சொல்லப்போகிறது தமிழினம்!

ஈழத்தில் சாந்தனுக்காகக் காத்திருக்கும் தாயாருக்கு தமிழினம் என்ன மறுமொழி சொல்லப்போகிறது ? எல்லாவற்றையும் போல இதுவும் காற்றில் கலந்து காணாமல் போகப்போகும் ஒரு கதை . அவ்வளவு தானா?!

ராயீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார்.

முன்னாள் முதல்வர் ராயீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு சாவு ஒறுப்பு வழங்கப்பட்ட பின்னர் வாழ்நாள் ஒறுப்பாகக் குறைக்கப்பட்டது. 32 ஆண்டுகளுக்கு மேலாக 7 பேரும் சிறை ஒறுப்பு பெற்றுவந்த வந்த நிலையில், அவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு நிறைவேற்றியது. இதனை ஆளுநர் ஏற்கவில்லை. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை ஆய்வு செய்த உச்சவழக்காடு மன்றம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்தது.

விடுதலையான சாந்தன், சென்னை ராயீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயர் மருத்துவக் கண்காணிப்பில் மருத்துவம் பெற்று வந்த நிலையில் இன்று 28.02.2024 காலை காலமானார். கல்லீரல் செயலிழப்பால் நோயுற்ற அவர், கடந்த சுறவத்திங்கள் முதல் ராயீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த நிலையில், இன்று விடியற்காலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ராயீவ் காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் ஒறுத்துப் பெற்று வேலூர் நடுவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச வழக்காடுமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு இடைத்தங்கல் இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த சுறவத் திங்கள் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து உயர் மருத்துவத்திற்காகச் சென்னை ராயீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சாந்தன் மறைவு குறித்து ராயீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராயன் கூறுகையில், “சாந்தன் திருச்சி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சென்னை – ராயீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக ஒப்புவிக்கப்பட்டார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் மருத்துவப் பிரிவில் உயர்விரைவு மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் மருத்துவம் அளித்து வந்தனர். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம். அதன் காரணமாக பயாப்சி ஆய்வு மேற்கொள்ள முயன்றோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

கிரிப்டோயெனிக் சிரோசிசு் பாதிப்பு காரணமாக சில சமயங்களில் தன்நினைவு குன்றி, இயல்பு நிலைக்கு திரும்புவார். அதன் காரணமாக உயர் கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு நேற்று இரவு உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. தன்நினைவை இழந்தார். செயற்கை மூச்சு பொருத்தி மருத்துவர்கள் மருத்துவம் அளித்தனர்.

இந்நிலையில், இன்று விடியற்காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நுரையீரல் புத்துயிர் மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் மருத்துவம் கைகூடததால் இன்று காலை உயிரிழந்தார்” என்றார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு இடைத்தங்குமிடத்தில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு முதல்வர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேசு்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் நாடு திரும்ப அண்மையில் நடுவன் அரசு ஒப்புதல் வழங்கி இருந்தது. அதற்குள் அவரது உயிர் பிரிந்துள்ளது.

சிறையில் 32 ஆண்டுகள் இருந்த சாந்தன் விடுவிக்கப்பட்ட போதும் ,இலங்கைக்குச் செல்ல முடியவில்லை . கடந்த ஆண்டு இந்திய நாட்டின் முதல்வர் நரேந்திர மோடிக்கு சாத்தனின் தாயார் மகனைப் பார்க்க வேண்டி எழுதிய கடிதத்திற்கான முடிவு சற்று நாட்களுக்கு முன்தான் வழங்கப்பட்டது . அதற்குள் சாந்தன் உயிர்நீத்துவிட்டார் . தமிழன் வாழ்வியலானது எப்போதும் இப்படி ஒரு வியப்பைக் கொடுக்கிறது இயல்பாகவே உள்ளது . உடல் நலக் குறைவால் உயிர் பிரிந்தது என்ற ஒற்றை அறிக்கையுடன் முடிக்கப்படும் இம்மாதிரியான சாவுகளையே எதிர்கொள்ள வேண்டியுள்ளது .

உடன்பாடற்ற சாவுகளை நிறுத்த வழிதேட வேண்டும் . தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இதற்கான வழிசமைக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button