இலக்கணம்சொல்விளக்கம்தமிழ்

தவற்றுக்கு வருந்துவதா? தவறுக்கு வருந்துவதா?

இலக்கண வரையறை மீறலாகா…

தவற்றுக்கு வருந்துவதா? தவறுக்கு வருந்துவதா?

தமிழில் டு , று  போன்ற  குற்றியலுகரங்கள்‌ வந்து, தொடராகும்‌ போது அவற்றிலுள்ள மெய்யெழுத்துக்கள்‌ இரட்டிப்பது ஒரு தமிழ்‌ வழக்காறு.

நூறு + ஒன்று = நூற்றொன்று

நாறு + கால்‌- நாற்றுக்கால்‌, நாற்றங்கால்‌.

ஆறு + வழங்கல்‌ =ஆற்றுவழங்கல்‌.

ஆடு + குட்டி -ஆட்டுக்‌ குட்டி.

தேடு + அம்‌ – தேட்டம்‌. அதாவது தேடப்படும்‌ செல்வம்‌.

வயிறு + பசி = வயிற்றுப்‌ பசியாகுமே தவிர வயிறுப்‌ பசி ஆகாது. சோறு + பானை =சோற்றுப்‌ பானையானால்‌ நல்லது. சோறுப்பானையென்றால்‌ பொருள்தராது. பள்ளிக்கூடங்களில்‌ ‘நாட்டுத்‌ தொண்டுத்‌ திட்டம்‌’ உள்ளது. அதை ‘நாடு தொண்டுத்‌ திட்டம்‌’ என்று கூறுவதில்லை.

இவ்வாறே‌ வீட்டைக்‌ காக்கும்‌, சேமிப்பு நாட்டைக்‌ காக்கும்‌” என்றுதானே கூறுவோம் .வீடைக்‌ காக்கும்‌, நாடைக்‌ காக்கும்‌ என்பதில்லையே . வீடு + ஐ = வீடை ஆகாமல்‌ வீட்டை ஆவதை‌ உன்னியுங்கள்‌.

அதேபோல்‌ தவறு + ஐ = தவறை ஆகாமல்‌ தவற்றை என்றுதான்‌ வர வேண்டும்‌. ஆனால்‌ தவற்றைச்‌ செய்யாதே. தவற்றுக்கு வருந்துகிறோம்‌ என்று எழுதாமல்‌ தவறைச்‌ செய்யாதே, தவறுக்கு வருந்துகிறோம்‌ என்றுதான்‌ எழுதுகிறார்கள்‌.

தமிழில்‌ ‘உறழ்ச்சி என ஓர்‌ இலக்கணம்‌ இருக்கிறது. பெரும்பான்மையான நெறிக்கு மாறாகச்‌ சில இடங்களில்‌ மாறியும்‌ வரும்‌. அவ்வாறு‌ சிறிய அளவில்‌ மட்டும்‌ மாறி வருவதைப்‌ புறனடை என்பர்‌. சில சொற்கள்‌ இரண்டு விதமாக எழுதப்பட்டு, இரண்டும்‌ தவறல்ல என ஏற்கப்பட்டால்‌ அதற்கு உறழ்ச்சி என்று பெயர்‌. அப்படியும்‌ வரலாம்‌. அல்லாவிட்டால்‌ இப்படியும்‌ வரலாம்‌ என ஏற்பது அது. நாடு கிழவோன்‌, காடு கிழாள்‌ என்று முற்காலத்திலேயே வழங்கியுள்ளது. முறைப்படி இவை நாட்டுக்‌ இழவோன்‌, காட்டுக்‌ கிழாள்‌ என்று வரவேண்டும்‌. நாட்டிற்கு உரிமையுடைய தலைமகனை நாடு கிழவோன்‌ என்கிறோம்‌. வீடு + தோட்டம்‌ = வீட்டுத்‌ தோட்டம்‌ அதேபோல்‌ நாடு+ கிழவோன்=‌ நாட்டுக்‌ கிழவோன்‌ ஆகவேண்டுமல்லவா?

ஆயினும்‌ பலுக்கலுக்கு இனிமையின்மையால்‌ ‘நாடு கிழவோன்‌! என்றே ஆளலாயினர்‌. இவ்வாறே‌ ஒரு சொல்லிற்கு மட்டும்‌ மாறிவருவதால்‌, இதைப்‌ “புறனடை” என்போம்‌. இதனையே இரண்டு விதமாகவும்‌ வரலாம்‌ என ஏற்கும்‌ போது ‘உறழ்ச்சி’

ஆகிறது.’தவறுக்கு’ என எழுதுவதைப்‌ புறனடை என ஏற்கலாம்‌. அதற்காக ஒருவர்‌ ‘தவற்றுக்கு’ என

எழுதியிருந்தால்‌ அதைத்‌ தவறு எனலாமா? கூடாது.

எனவே ‘உறழ்ச்‌சி’ முறைப்படி சில இடங்களில்‌ இரண்டு வகையாக‌ வரலாம்‌ எனக்‌ கொள்ளவேண்டும்‌. அதற்காக எல்லா இடத்திலும்‌ புறனடை வரலாம்‌, உறழ்ச்சி வரலாம்‌ என்று நம்‌ விருப்பம்போல்‌ மாற்றிக்‌ கொண்டிருக்கக்கூடாது.

பொருள்‌ அமையாமல்‌ இருக்குமிடங்களிலும்‌ ஒலி இனிமை தருமிடங்களிலும்‌ மட்டுமே இவை ஏற்கப்படும்‌.

பிற்குறிப்பு :

சொல்லியல் இனிமைக்காகவே இப்புறநடை உளதே அன்றி அது சரியான வடிவம் அன்று . நெறிவிலக்கு என்பது ஒரு சிலவற்றுக்கு மட்டுமே . புறனடை , உறழ்ச்சி என்பன மிகப் பொருத்தமான  இடத்தில் மட்டுமே அமையவேண்டும் . பலுக்கல் இனிமைக்காக இலக்கண அமைப்பை மாற்றுவதென்பதை ஏற்கக்கூடாது . ஏனெனில் இவையே மொழிச்சிதைவிற்கு முக்கிய காரணியாக இருக்கின்றன .

முடிவு : தவற்றுக்கு வருந்துகிறேன் ,தவற்றைத் திருத்துகிறேன் என்பதே சரியான இலக்கண வடிவம்.

உசாத்துணை :பிழைதிருத்தும் மனப்பழக்கம்( தமிழண்ணல்)எழுத்து : துளிவானொலி

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button